முகப்பு
தினமணி கதிர்

சிறுகதை: அவரவர் பார்வையில்!

ஜகன்: நேரம் ஆகஆக இதயத்துடிப்பு வேகமாய் அடித்துக்கொண்டது. மனது என்னென்ன நினைவுகளையோ திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்தது. என்னவானாள்? எங்கே போயிருப்பாள்? பதற்றமாக இருந்தது. கல்யாணம் ஆகி இரண்டு வருடம்த

Updated On : 20 செப்டம்பர் 2012, 9:31 pm IST
பகிர்:

ஜகன்:

நேரம் ஆகஆக இதயத்துடிப்பு வேகமாய் அடித்துக்கொண்டது. மனது என்னென்ன நினைவுகளையோ திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்தது. என்னவானாள்? எங்கே போயிருப்பாள்? பதற்றமாக இருந்தது.

கல்யாணம் ஆகி இரண்டு வருடம்தான் ஆகியிருந்தது.

Advertisement

Advertisement

அவளைப் பெண் பார்க்கச் சென்றது இப்போது ஞாபகம் வந்தது. சுஜாவைப் பெண் பார்த்ததும் அவள் முகம் அழகாயிருந்தாலும், அவளின் சற்றே பெருத்த சரீரம் என்னை யோசிக்க வைத்தது.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் என்னை சமாதானப்படுத்த ஆறு மாசம் பிடித்தது. 'எவ்வளவு லஷ்மிகரமாய் இருக்கிறாள். கொஞ்சம் குண்டு. 'ஜிம்'முக்குப் போனால் உடம்பு நார்மலாயிடும்' என்று என்னை மீண்டும் சுஜாவின் பக்கம் இழுத்து தலையாட்ட வைத்தார்கள். அதுவும் அம்மா இல்லாத பெண் என்ற பச்சாதாபம் வேறு அவர்களை ரொம்பவும் இளக வைத்தது.

கல்யாணம் ஆனதிலிருந்து எப்பவும் 'உம்' மென்று இருப்பாள். என்னிடம் கூட சகஜமாகப் பேசமாட்டாள். கேட்ட கேள்விக்கு 'டாண்' 'டாண்' என்று பதில் வரும்.

அம்மாவையும் அப்பாவையும் முகம் பார்த்துகூட பேசியது கிடையாது. அவர்களைச் சொந்த அப்பா, அம்மாவாக பாவித்து அன்போடு பேசியது கிடையாது. அவர்கள்தான் நாசூக்காக தனிவீடு பார்த்து போய் விட்டார்கள்.

அம்மாவுக்கு ஒரே குடும்பமாக மருமகளுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த வேண்டுமென்ற நெடுநாளைய கனவு, நிராசையாய் போனது.

பேத்தி பிறந்ததும், பார்த்துப்பார்த்து பூரித்துப் போனாள் அம்மா. பேத்தியோடே இருந்து காலத்தைக் கழித்துவிட ஆசையிருந்தாலும், சுஜாவின் எதிலும் ஒட்டாத குணாதிசயம், அம்மாவை தூரத்திலேயே இருக்க வைத்தது.

இன்று-

ஞாயிற்றுக்கிழமை...

குழந்தையின் அழுகுரல் கேட்டு முழித்துக் கொண்டேன்.

'பேபிம்மா...பேபிம்மா...'

-வீல் வீலென்று உச்சஸ்தாயில் கதறிக் கொண்டிருந்தாள் பேபி.

குழந்தைக்குப் பசியோ?

'டயபர்' இருந்ததால் சிறுநீர் ஸ்பரிசத் தொல்லை கூட இருக்காதே...

சுஜாவைத் தேடினேன்...

பாத்ரூமிலிருந்து பால்கனிவரை பார்த்துவிட்டேன்.

சுஜாவைக் காணவில்லை.

ஏதாவது வாங்க கடைக்குப் போயிருப்பாளோ? இவ்வளவு சீக்கிரம் கடையெல்லாம் திறப்பதில்லையே...

பேபியை சமாதானப்படுத்த குழந்தை உணவை, கரைத்து பாட்டிலில் அடைத்து அவள் வாயில் வைத்தவுடன் சிறிது சமாதானமாகி கண்ணயர்ந்தாள். அவள் கண்களில் குளமாய் தேங்கியிருந்த கண்ணீரை டவலால் துடைத்தேன்.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.

சுஜா எங்கே போயிருப்பாள்?

சமையலறையில் பால் பாத்திரத்தில் இளஞ்சூடாக பால் மட்டும் இருந்ததால், காபி சாப்பிட்டு விட்டுத்தான் சென்றிருக்கிறாள் என்று புரிந்தது. பேபியைப் பார்த்துக்கொள்ள வரும் துளசி ஆயா கூட இன்று மட்டம் போட்டுவிட்டாள்.

நேரம் ஆகஆக, உடம்பும், கைகளும் நடுங்க ஆரம்பித்தன.

மதியம் ஒரு மணிக்குத் திடீரென்று தோன்றியதால் கடலூருக்குப் ஃபோன் செய்து, அவள் அப்பாவிடம் பேசினேன்.

அங்கு அவள் வரவில்லை என்றவர், அவசரப்பட்டு போலீஸþக்குப் போகவேண்டாம் என்றார். ஏதாவது தகராறா என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

அவசியமென்றால் தான்வருவதாகக் கூறி, பேபியை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியப்படுத்தவில்லை. இரண்டு பேருமே இருதய நோயாளிகள். பாவம் வீணாக அவர்களைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.

மாலை ஆகிவிட்டது.

சுஜா எங்கே போனாள்?

பேபி அழுதாள்... அழுதாள்... களைத்துப் போய் தூங்கியே விட்டாள்.

எனக்கும் எத்தனையோ விபரீத எண்ணங்கள் வந்து பயமுறுத்தின. உடம்பு அசந்து போயிற்று. கண்கள் சொருகிக் கொண்டன.

'ட்ரிங்'- காலிங் பெல் சத்தம் கேட்டது.

பசி, மனவேதனை, பயம்-தள்ளாடியவாறே கதவைத் திறந்தேன்...

சுஜா:

எனக்கு எல்லாமே வெறுப்பாய் இருந்தது. எப்போது பார்த்தாலும் நெருஞ்சி முள்ளாய் 'சுள் சுள்'ளென்று விஷ வார்த்தைகளால் காயப்படுத்தும் அம்மா...

என்ன சொன்னாலும் 'ஜடமாய்', கண்டு கொள்ளாத அப்பா...

என்ன வாழ்க்கை இது?

ஒரு வழியாய் அம்மா நோய்வாய்ப்பட்டு போய் சேர்ந்தாள்.

எல்லோரும் சொல்வார்கள்.

'சுஜா.. இவ்வளவு அழகான உன் முகத்தை, ஏன் 'உம்'மென்று வைத்திருக்கிறாய்... கொஞ்சம் சந்தோஷமாய் இரேன்...'

-தேவையில்லை என்று பட்டது எனக்கு.

ஏனோ ஒரு விரக்தியாய் இருந்தது.

என் வயசுப் பெண்களுக்கு இருந்த உடம்பை பற்றின அக்கறையே இல்லாததால்தான் உடம்பு 'புசுபுசு' வென அதுபாட்டுக்கு ஊதிக்கிடக்கிறது...

ஜகன் வந்து பெண் பார்த்தபோதே என்னை நிராகரித்து விடுவார்கள் என்றுதான் எண்ணினேன். ஆனாலும் ஆறு மாதம் கழித்து வந்து 'ஓகே' என்று தலையாட்டிய போது கொஞ்சம் சந்தோஷமாய் இருந்தது. நான் பிறந்து வளர்ந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்குமே.

ஜகன் என்மீது அன்பு காட்டினார்.

ஆனால் சிறுவயது முதல் நான் பார்த்த... பாசமில்லா வார்த்தைகள்... நெருப்பைக் கக்கும் பார்வைகள்... அப்பா அம்மா சண்டை...

மனத்தின் அடித்தளத்தில் கிடந்த கசப்பு... வெறுப்பு...வெறுமை...படிப்படியாய் முழுமையாய் படர்ந்து...

பேபி பிறந்தபின்னே கொஞ்சம் பிடிப்பு ஏற்பட்ட மாதிரி இருந்தது. ஆனாலும் அதுகூட மேலோட்டமாய் இருந்தது. பேபிக்கு என்னுடைய 'நெகடிவ்' குணாதிசியங்கள் வந்துவிடக்கூடாதென்று நான் 'தாய்ப்பால்' கொடுக்கவே சம்மதிக்கவில்லை.

துளசி ஆயா ரொம்ப நல்லவள். எனக்கு எந்த சிரமமும் கொடுக்க மாட்டாள். பேபியை ரொம்ப நன்றாக கவனித்துக்கொள்வாள்.

அன்று

சனிக்கிழமை இரவு...

ஜகன் 'சுஜா...சுஜா...' என்று அன்பாய் பேசிக்கொண்டே என் அருகில் வந்து கைகளைப் பிடித்து கொண்டான்.

'சுள்' ளென்றது எனக்கு.

மீண்டும் பேய் வந்து என்னை பிடித்துக் கொண்டது.

மனம் போனபடி 'சுருக்சுருக்' கென்று வார்த்தைகளால் ஜகனைத் தைத்தேன். விஷயமே இல்லாமல் அவனைப் புண்ணாக்கினேன். 'உன்னை மனநல மருத்துவரிடம் காட்டணும்' என்று மட்டும் சொல்லிவிட்டு, கண்களில் தளும்பிய கண்ணீருடன் பால்கனியில் போய் நின்று கொண்டான்.

ஜகனை ஏனோ பழி வாங்கணும்னு தோன்றியது.

மறுநாள் காலை ஆறு மணிக்குப் பால் காய்ச்சி காபி போட்டு குடித்தேன். பேபியும், ஜகனும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஜகனைப் பார்த்து 'உனக்கு சரியான பாடம் புகட்டறேன்... என்னை மனநிலை சரியில்லாதவ அப்படின்னு சொல்லிட்ட இல்ல...'

பஸ் ஸ்டாப்பில் அவ்வளவு கூட்டம் இல்லை.

ஏதோ பஸ் வந்தது. ஏறிக்கொண்டேன்.

'அண்ணா சதுக்கத்துக்கு ஒரு டிக்கட்'- யாரோ கேட்டார்கள்.

'முப்பது ரூபா டிக்கட் ரெண்டு கொடுங்க'

இரண்டு இளைஞர்கள் டிக்கட் வாங்கினார்கள்.

'முப்பது ரூபா டிக்கட்னா...' ஒரு முதியவர் கேட்டார்.

'முப்பது ரூபா டிக்கட்ல இன்னிக்கு பூரா எந்த பஸ்ல வேணும்னாலும் போய்க்கலாம்... ஏசி பஸ்ல மட்டும் ஏறக்கூடாது.'- கண்டக்டர்.

'முப்பது ரூபா டிக்கட் ஒண்ணு கொடுங்க'

-வாங்கிக் கொண்டேன்.

நாள் முழுக்க சுத்தலாம்.

பேபி:

நான் பிறந்து பத்து மாதங்கள் ஆயிற்று. பிறந்ததுமே எனக்கு அம்மா ஸ்பரிசம் என்மேல படணும்னு ஆசையாயிருந்தது...

ஒரு நாள் முழுவதும் 'இங்க்குபேட்டரில்' வைத்து சுவாசம் சீரானதும் அம்மா பக்கத்தில் விட்டதும் எனக்கு ஏக்கமாயிருந்தது.

அம்மா முகத்தில் ஏன் சலனமேயில்லை. வேண்டா வெறுப்போடு என்னைப் பெற்றுக் கொண்டாளோ?

ஆனாலும் என்னைத் தொடும்போதெல்லாம் அம்மாவின் ஸ்பரிசம் ரொம்பவும் இதமாகத்தான் இருந்தது.

அம்மாவின் மடியில் தவழ்ந்து அவளின் அன்புப் பெருக்காய் அவளின் தாய்ப்பாலை ருசிக்க ஆசையாய் இருந்தது.

பாட்டியும், அப்பாவும், நர்ஸýம் எவ்வளோ கெஞ்சியும்... அம்மா பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்... என் நெஞ்சம் கனத்தது... அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லையோ...

துளசி ஆயா வந்து என்னை தூக்கியதும் தான் எனக்கு ஆறுதலாயிருந்தது.

ஆயா என்னை மிக நன்றாய் கவனித்துக் கொள்வாள். என்னை குளிப்பாட்டி விடுவாள். திருஷ்டி சுத்திப்போடுவாள். எனக்குப் புரியுமோ புரியாதோ என்றில்லாமல் பேசுவாள். எனக்காக சன்னக்குரலில் பாடுவாள். அன்போடு கொஞ்சுவாள். ஆயா கிளம்பினதும் எனக்கு சூன்யமாகிவிட்டதாய் படும்.

அன்று இரவும்...

துளசி ஆயா எனக்கு பால் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.

அரைத்தூக்கத்தில் இருந்த என்னை அம்மாவின் உரத்த குரல் எழுப்பிவிட்டது.

அப்பா பாவம் பேசவேயில்லை.

அம்மா மட்டும் 'கடுகடு' வென ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்- வெறி வந்ததுபோல...

அப்பா பால்கனி பக்கம் போய்விட்டார்.

அம்மா களைத்துப்போய் கண் அசந்து விட்டாள்.

அந்தச் சோகச் சூழ்நிலை என் கண்களையும் உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

மறுநாள்-

வயிறு வலித்தது, பசியால்...தூக்கம் கலைந்தது.

ஆயா வரல்லையோ?...

அப்பா ஏன் இப்படி இங்கேயும் அங்கேயுமாய் அலையறார்?

பக்கத்தில் பார்த்தேன்.

அம்மா எங்கே?

அப்பாவின் முகத்தில் இருந்த பரபரப்பும், துளசி ஆயா இல்லாத சூழ்நிலையும் என்னை பயப்பட வைத்தது.

அழுகையாய் வந்தது. உரக்க அழ ஆரம்பித்தேன்.

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த அப்பா என் அழுகையைக் கேட்டு பால் பாட்டிலை வாயில் வைத்தார்... பசியில் ருசி தெரியாமல் குடித்தேன். அயர்ச்சியில் பாதிவயிறு நிரம்பியதுமே தூங்கிவிட்டேன்.

ரொம்ப நேரம் ஆகியிருக்கும்.

திடீரென்று அந்தக் குரல் கேட்டு விழித்துக்கொண்டேன். அப்பா யாரோடு பேசிக்கொண்டிருக்கிறார்?

துளசி ஆயாவோடா?

ட்யூப் லைட் வெளிச்சத்தில் அந்த பளிச் முகம்... அட... அம்மாவா?

அப்பா சொல்லிக் கொண்டிருந்தார், 'சுஜா... சாரிம்மா. நீ எந்த 'மூட்'ல இருந்தேன்னு தெரியாது. மனநலம் சரியில்லேங்கற மாதிரி சொல்லிட்டேன். சொல்லியிருக்க கூடாதுதான். இன்னும் ஒரு மணி நேரத்தில் நீ வரலன்னா'- அப்பாவுக்குத் தொண்டையை அடைத்தது.

அம்மா பேசவேயில்லை.

அப்பாவை ஏங்க வைத்து, அழ வைத்து ஜெயித்து விட்டதால் உருவான புன்னகையா?

அப்பா மட்டும் தேம்பித் தேம்பி அழுகிறார்.

'சுஜா... டியர்... இனிமேல் நீ இப்படியெல்லாம் செய்யக்கூடாது'...

அம்மா பாறாங்கல் மாதிரி நிற்கிறாள்.

அவள் முகத்தில் ஜெயித்த அந்த ஆணவம்தான்.

அம்மா இந்த ஒரு நாள் பிரிவால் அப்பாவை நீ பழி வாங்கியிருக்கலாம்... ஆனால் நான் என்னம்மா செஞ்சேன்...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.