பயிற்சி : தேவை: மகளிர் தொழிற்பேட்டை!
வீட்டில் ஆண் மட்டும் சம்பாதித்தால் போதாது; ஆண்,பெண் இருவருமே சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. எப்போதும் ஏறி வரும் விலைவாசி, அதிகரித்துவரும் கல்வி, மருத்துவச் செலவுகள், வாழ்க்கைத்
வீட்டில் ஆண் மட்டும் சம்பாதித்தால் போதாது; ஆண்,பெண் இருவருமே சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. எப்போதும் ஏறி வரும் விலைவாசி, அதிகரித்துவரும் கல்வி, மருத்துவச் செலவுகள், வாழ்க்கைத் தர உயர்வை நோக்கி எந்நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனது என எல்லாம் சேர்ந்து அதிக வருமானத்தை நாடி எல்லாரையும் அலைய வைத்திருக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. வேலைக்குப் போக முடியாத பெண்கள் என்ன செய்வது? வேலைக்குச் செல்வதற்கான போதிய கல்வித் தகுதியோ, குடும்பச் சூழ்நிலையோ இல்லாத பெண்கள் என்ன செய்வது? அவர்களுக்கு உகந்த சொந்தத் தொழில்கள் எவை? என்று ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறார் சந்திரகாந்தா.
அவர் படித்தது பி.ஏ. பொருளாதாரம். அழகுக் கலைப் பயிற்சி, தையல் கலை, நர்சரி பயிற்சி போன்றவை அவர் பெற்ற கூடுதல் தகுதிகள். சொந்த ஊர் வ.உ.சி.மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி. தற்போது சென்னை முகப்பேரில் இருக்கிற அவர், "தென்னிந்திய பெண் தொழில்முனைவோர்கள் சங்கம்' என்ற அமைப்பின் தலைவி.
""பெண்களில் பலர் இப்போது ஆர்வமாகச் சொந்தத் தொழில் தொடங்க முன்வருகிறார்கள். ஆனால் அப்படி வருபவர்களுக்கு என்ன தொழில் தொடங்குவது? என்றே தெரியாமல் இருக்கும். தொழில் தொடங்க முதலீட்டிற்கு என்ன செய்வது? வங்கியில் எவ்வளவு கடன் கொடுப்பார்கள்? அந்தக் கடனைப் பெற என்ன செய்ய வேண்டும்? தொடங்க இருக்கிற தொழிலின் நுட்பங்கள் எவை? அதற்கான பயிற்சிகளை யார் அளிக்கிறார்கள்?
மகளிர் தொழில் முனைவோருக்கு அரசு ஏதாவது திட்டங்களை அறிவித்திருக்கிறதா? அரசு தரும் தொழிற் பயிற்சிகள் எவை? சொந்தத் தொழில் செய்யும் பெண்களுக்கு அரசு ஏதேனும் சலுகைகள் தருகின்றதா? தயாரிக்கும் பொருளுக்கு மார்க்கெட் உண்டா? என்பன போன்ற நிறையக் கேள்விகளுடன் பெண்கள் எங்களிடம் வந்தார்கள். வருகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் 1992}இல் தென்னிந்திய பெண் தொழில் முனைவோர்கள் சங்கத்தை ஆரம்பித்தேன். வெறும் 30 உறுப்பினர்களுடன் ஆரம்பித்த இந்தச் சங்கத்தில் இப்போது 3 ஆயிரம் பேர் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்'' என்கிறார் பெருமையுடன்.
""எங்கள் சங்கத்தின் சார்பாக பல கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறோம். அக் கருத்தரங்குகளில் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அவரவர் துறை சார்ந்த அரசின் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும், அவர்கள் அளிக்கும் பயிற்சிகளைப் பற்றியும் பெண் தொழில்முனைவோரிடம் விளக்கிச் சொல்கின்றனர். மேலும் பெண் தொழில்முனைவோர்கள் நேரடியாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, தங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் முடிகிறது'' என்ற சந்திரகாந்தாவிடம், பெண் தொழில் முனைவோருக்கான தொழிற் பயிற்சிகளை அளிக்கிறீர்களா? என்று கேட்டோம்.
""ஆமாம். இப்போது பெண்களுக்கு மிகவும் வாய்ப்புள்ள தொழிலாக ப்யூட்டி பார்லர் தொழிலைச் சொல்லலாம். இப்போது பலர் ப்யூட்டி பார்லருக்கு ஆர்வத்துடன் செல்கிறார்கள். மணப்பெண் அலங்காரம் செய்வது, மணப் பெண்ணின் கையில் மெகந்தி போடுவது எல்லாம் இப்போது தவிர்க்க முடியாத திருமண நிகழ்வுகளாகிவிட்டன. அழகுக் கலையைக் கற்றுக் கொண்ட பெண்களுக்கு இப்போது நல்ல தொழில் வாய்ப்புகள் உள்ளன. அழகுக் கலைப் பயிற்சிகள் என்றால் முதலில் எல்லாம் குறைந்தது ஆறுமாதங்களாவது கற்க வேண்டும்.
இப்போது நாங்கள் மிகக் குறுகிய காலத்திலேயே - ஒரு மாதத்திற்குள்ளேயே - அழகுக் கலையில் பயிற்சி அளிக்கிறோம். அழகுக் கலையில் ஒரு சிலவற்றை மட்டுமே கற்றுக் கொள்கிறோம் என்று வருகிறவர்களுக்கு 1 வார வகுப்புகள் கூட எடுக்கிறோம்.
பெண்களுக்கு அதிகத் தொழில் வாய்ப்புகளைத் தரும் இன்னொருதுறை டெய்லரிங். தையற் கலையைக் கற்றுக் கொண்ட ஒரு பெண் அதிக சிரமமில்லாமல், வீட்டிலிருந்தபடியே அக்கம்பக்கத்திலுள்ள பெண்களுக்குப் ப்ளவுஸ், சுடிதார் போன்றவற்றைத் தைத்துக் கொடுத்து நல்ல வருமானத்தை பெறலாம். நாங்கள் பெண்களுக்கான தையற்கலைப் பயிற்சிகளை அளிக்கிறோம்.
அடுத்து ஃபேப்ரிக் பெயிண்டிங், ஃபேப்ரிக் பிரிண்டிங், மணி வேலை, எம்ப்பிராய்டரி போன்றவற்றில் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். அதில் பயிற்சி பெற்றவர்கள் பெரிய துணி வணிக நிறுவனங்களிடம், எந்த டிசைனும் இல்லாத பிளைன் புடவைகளைப் பெற்றுக் கொண்டு அவற்றில் அவர்களுடைய கற்பனைத் திறனைப் பயன்படுத்தி பல்வேறு டிசைன்களைப் புடவைகளில் வடிவமைத்துக் கொடுத்தால் நல்ல வருமானம் ஈட்டலாம். புடவையில் அவர்கள் செய்து கொடுத்த வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ஒரு புடவைக்கு குறைந்தது 500 ரூபாயிலிருந்து 1500 ரூபாய், 2000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
மேலும் கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி, ஸ்கிரீன் பிரிண்டிங், சமையற்கலை, ஐஸ் க்ரீம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளை எங்கள் சங்கத்தின் மூலமாக அளிக்கிறோம். இப்போது உடனடி உணவு வகைகள் பிரபலமாகி வருகின்றன. மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி, பருப்புப் பொடி போன்றவற்றைச் செய்யப் பயிற்சி அளிக்கிறோம்.
சென்னையில் திருமுல்லைவாயில், கிண்டி, கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களிலும், விழுப்புரம், விருத்தாசலம், கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் பெண் தொழில் முனைவோருக்கான பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறோம்'' என்கிறார் சந்திரகாந்தா.
பெண்கள் தொழில்களை ஆரம்பிக்க நீங்கள் வேறு எந்த வகைகளில் உதவுகிறீர்கள்? என்று கேட்டோம்.
""முதலில் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தொழிலைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூறுகிறோம். அவர்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்த பின்பு, அந்தத் தொழிலைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறோம். அந்தத் தொழிலைச் செய்யத் தேவையான வங்கிக் கடனைப் பெற உதவி செய்கிறோம். 10 ஆயிரத்துக்குள் கடன் வேண்டுமானால் வங்கி மேலாளர்களிடம் பேசி கடன் வாங்கித் தருகிறோம். வங்கிக் கடன் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் சொல்லிக் கொடுக்கிறோம்.
சில வங்கிகளில் புராஜெக்ட் ரிப்போர்ட் எல்லாம் கேட்பார்கள். அவற்றிற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம்'' என்ற சந்திரகாந்தாவிடம், பெண் தொழில்முனைவோர் தயாரிக்கும் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்புகள் உள்ளனவா? என்று கேட்டோம்.
""இப்போது தொழில் சார்ந்த, சேவை சார்ந்த பல கண்காட்சிகள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அந்தக் கண்காட்சிகளில் உள்ள ஸ்டால்களைப் பெண் தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
அதுபோல பல கல்லூரிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பல கண்காட்சிகள், விழாக்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் பெண் தொழில்முனைவோரின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக பெண் தொழில்முனைவோருக்கான தொழிற்பேட்டைகளை அரசு ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
அதற்கான கோரிக்கை மனுவை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் கூட அளித்திருக்கிறோம். மேலும் 45 வயதைக் கடந்த பெண் தொழில்முனைவோருக்குக் வங்கிக் கடன் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம். ஏனென்றால் 68 வயதான ஓர் அம்மையார் எங்களிடம் பெயிண்டிங் பயிற்சி வகுப்பிற்கு வந்திருக்கிறார்'' என்கிறார் பெருமையுடன் சந்திரகாந்தா.