தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மணிக்கட்டுப் பகுதிகளில் வீக்கம்... வலி­!

என் மருமகள் வெளிநாட்டில் இருக்கிறாள். அவள் கர்ப்பமாக இருக்கும்போது 9 வது மாதத்தில் இரு கைகளின் மணிக்கட்டுகளில் வீக்கம், வலி வந்தன. இப்போது குழந்தைக்கு 11 வது மாதம். 10 வது மாதத்திலிருந்து சுமாராக இருந

எஸ். சுவாமிநாதன்

என் மருமகள் வெளிநாட்டில் இருக்கிறாள். அவள் கர்ப்பமாக இருக்கும்போது 9 வது மாதத்தில் இரு கைகளின் மணிக்கட்டுகளில் வீக்கம், வலி வந்தன. இப்போது குழந்தைக்கு 11 வது மாதம். 10 வது மாதத்திலிருந்து சுமாராக இருந்த வலி மறுபடியும் அதிகமாகியுள்ளது. வலி இருக்கும் இடத்தில் ஒரு சின்ன ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்கிறார். ஆபரேஷனைத் தவிர்க்க ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?

டி.விமலா, நகரி, ஆந்திரா .

மணி பந்தம் ஒரு மர்ம ஸ்தானம். மணிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மர்ம ஸ்தானத்தில் ஏற்படும் பல உபாதைகளில் முக்கியமாக வலி ஏற்படக்கூடும்.  அது நிரந்தரமாக இருக்கக் கூடிய நிலையையும் ஏற்படுத்தலாம். குழந்தையை வயிற்றில் சுமந்தபோது, இரு உள்ளங் கைகளையும் தரையில் நன்கு ஊன்றி எழுந்திருப்பதை அவர் அடிக்கடி செய்திருப்பாரேயானால் இந்த மணி பந்த மர்மம் பாதிப்படைந்திருக்க  நிறைய வாய்ப்பிருக்கிறது.

"கொட்டஞ்சுக்காதி' என்ற பெயரில் ஓர் ஆயுர்வேத சூர்ண மருந்து இருக்கிறது. வெதுவெதுப்பான புளித்த மோரில் இந்த சூர்ண மருந்தைக் குழைத்து, மணிக்கட்டில் வலி மற்றும் வீக்கம் உள்ள பகுதியில் பற்று இடவும். காலை உணவுக்கு முன்பாக, சுமார் ஒரு மணி நேரம் இந்தப் பற்றை இட்டு வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரினால் அலம்பி விட்டுவிடலாம்.

மாலையில் சுமார் 4 முதல் 5 மணி வரை காலையில் குறிப்பிட்ட சூரண மருந்தின் பெயரிலேயே தயாரித்து விற்கப்படும் கொட்டஞ்சுக்காதி என்ற மூலிகைத் தைலத்தை, ஓர் இரும்புக் கரண்டியைச் சூடாக்கி, அதில் விட்டு வெதுவெதுப்பாக்கி, பஞ்சில் முக்கி எடுக்கவும், அதை மணிக்கட்டில் வைத்து, ஒரு துணியால் சுற்றிக் கட்டி வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, கட்டை அவிழ்த்து, வேறு ஒரு துணியில் மணிக்கட்டிலுள்ள எண்ணெய்யைத் துடைத்துவிடவும்.

இப்படியாக சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வர, வீக்கம் மற்றும் வலி நன்றாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. காலையில் தடவப்பட்ட சூரண மருந்தால், அப்பகுதியிலுள்ள தேவையற்ற நீரின் அம்சம்  வற்றி விடுவதால், மாலையில் உபயோகிக்கப்படும் எண்ணெய்யின் வீரியமானது, எளிதில் உள்ளே சென்று, மணிக்கட்டுக்குத் தேவையான நெய்ப்பை ஏற்படுத்தி, எலும்புகளில் ஏற்படும் உரசலைத் தவிர்த்து, வலுவையும் கூட்டும். இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்ளும் நாட்களில், உள்ளங் கைகளை அதிகம் மேலே தூக்குவதையோ, தாழ்த்துவதையோ, அதிகம் வேலை செய்வதையோ தவிர்த்தல் நலம்.

புளிப்பான உணவுப் பொருட்களாகிய தயிர், புளியோதரை, எலுமிச்சம்பழ ஊறுகாய், வற்றல் குழம்பு, நாட்டுத் தக்காளி ரசம், புளித்த மோர் போன்றவற்றைச் சாப்பிடாதிருப்பது நல்லது. இவற்றால் வீக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

வீக்கமிருந்தால் வலியும் குறையாது. குடலில் வாயுவின் சஞ்சாரத்தை அதிகப்படுத்தும் சூடு ஆறிப் போன பருப்பு சாம்பார், வேர்க்கடலை சேர்த்த சட்னி வகையறா, உருளைக் கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், காராமணி, மொச்சை, பீன்ஸ் போன்றவற்றையும் உணவில் தவிர்ப்பது நலமே.

உள் மருந்தாக யோகராஜ குக்குலு எனும் மாத்திரை ஒன்றைக் காலை, மாலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீருடன் சாப்பிடலாம். காலை, இரவு உணவுக்குப் பிறகு ஒரு கை சோர குக்குலு எனும் மாத்திரையைச் சாப்பிட்டு வரலாம்.

நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, உள்ளங்கைப் பகுதிக்குச் சிறிய சிறிய அசையும் பயிற்சிகளைக் கொடுத்து, மணிக்கட்டு சேரும் பகுதியை வலுவாக்கி, வலியிலிருந்து நிரந்தரமாக விடுபடும் முயற்சிகளைச் செய்யலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT