ஆப்பிள் தேசம் - 19: ரயில் நிலையத்தின் சோகம்!
அமெரிக்காவில் பூங்கா நாடகங்கள் புகழ் பெற்றவை. பல நகரங்களில் இருக்கும் முக்கியமான பெரிய பூங்காக்களில் நாடக மேடை இருக்கிறது. எதிரே கேலரி போன்ற திறந்தவெளிப் புல்தரை. நாடகத்துக்கு டிக்கட் உண்டு. ஆனால் அவர
தினமணி கதிர்ஆப்பிள் தேசம் - 19: ரயில் நிலையத்தின் சோகம்!
அமெரிக்காவில் பூங்கா நாடகங்கள் புகழ் பெற்றவை. பல நகரங்களில் இருக்கும் முக்கியமான பெரிய பூங்காக்களில் நாடக மேடை இருக்கிறது. எதிரே கேலரி போன்ற திறந்தவெளிப் புல்தரை. நாடகத்துக்கு டிக்கட் உண்டு. ஆனால் அவர
அமெரிக்காவில் பூங்கா நாடகங்கள் புகழ் பெற்றவை. பல நகரங்களில் இருக்கும் முக்கியமான பெரிய பூங்காக்களில் நாடக மேடை இருக்கிறது. எதிரே கேலரி போன்ற திறந்தவெளிப் புல்தரை. நாடகத்துக்கு டிக்கட் உண்டு. ஆனால் அவரவருக்கான நாற்காலிகளை அவரவரே கொண்டு வர வேண்டும். நாற்காலி எப்படி இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. காலை நீட்டும் ஈசிசேர் கூடாது. முதுகு உயரம் 40 அங்குலத்துக்கு மேல் இருக்கக்கூடாது. புல்வெளியில் வரிசையாக சுண்ணாம்புக் கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றின் மீதுதான் நாற்காலிகளை வைக்க வேண்டும். பலரும் மடக்கு நாற்காலிகளையும் முதுகு மெத்தைகளையும் கார் டிக்கியில் போட்டு எடுத்து வந்துவிடுகிறார்கள்.
ரூஸ்வெல்ட் பூங்காவில் நானும் ராஜேஷும் பார்த்த நாடகத்தை மிடில்செக்ஸ் கவுண்ட்டியின் பூங்கா துறை ஏற்பாடு செய்திருந்தது. கோடை காலம் முழுவதும் வாரத்தில் நான்கு நாட்களேனும் பூங்காவில் நாடகங்கள் நடக்கின்றன. மழை வந்து நாடகம் ரத்தானால், அந்த டிக்கட்டை இன்னொரு நாளைக்குப் பயன்படுத்தலாம். நாடகச் செலவை பூங்கா துறை பார்த்துக் கொள்கிறது. நுழைவுக் கட்டணமான ஆறு டாலர் தவிர, நன்கொடைகளும் திரட்டுகிறார்கள்.
பூங்கா நாடகங்களின் நண்பர்கள் என்ற அமைப்பு பணம் திரட்டுகிறது. 500 டாலர் கொடுப்பவர் ஸ்டார், 250 டாலர் தருபவர் தேவதை, என்று நன்கொடை தருபவர்களைக் கூட வகைப்படுத்தியிருக்கிறார்கள். 15 டாலர் முதல் நன்கொடைகள் பெறப்படுகின்றன. நாடகம் பற்றிய கையேட்டில் விளம்பரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு ஐஸ்கிரீம் கடை விளம்பரத்தில், அந்தக் கையேட்டுடன் சென்று ஐஸ்கிரீம் வாங்கினால், விலையில் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தள்ளுபடி பணம் ஐஸ்கிரீம் வாங்குபவருக்கு அல்ல. நாடகக் குழுவுக்கு அனுப்பப்படும்.
நான் பார்த்த நாடகம் விதவிதமான செட்டுகள் போட்ட இசை நாடகம். தலைப்பு: 1776. அமெரிக்க விடுதலைப் பிரகடன ஆண்டு நிகழ்ச்சிகள் பற்றிய வரலாற்று நாடகம், பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெஃபர்சன், ஜான் ஆடம்ஸ் போன்ற வரலாற்று நாயகர்கள் எல்லாம் பாத்திரங்களாகச் சித்திரிக்கப்பட்டனர். மொத்தம் 13 பாடல்களுடன் உள்ள இந்த நாடகம் நியூயார்க் பிராட்வே தியேட்டரில் 1217 முறை நடிக்கப்பட்டிருக்கிறது. இதை 1972-ல் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.
பிரதானப் பாத்திரம் ஜான் ஆடம்ஸ். இவர் எல்லா காலனி நாட்டு பிரதிநிதிகளையும் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக விடுதலைப் பிரகடனம் செய்யச் சம்மதிக்க வைப்பதுதான் கதை. இரண்டே இரண்டு பெண் பாத்திரங்கள். நாடகத்தில் பெஞ்சமின் பிராங்க்ளின், ஜெஃபர்சன் ஆடம்ஸ் எல்லாம் சாதாரண மனிதர்களாகவே கோப தாப உணர்வுகளுடன் காட்டப்பட்டிருக்கிறார்கள். யாரையும் மரியாதைக்குரிய புனிதர்களாகக் காட்டவில்லை. இந்த தொனியில் காந்தி, நேரு, பெரியார், அண்ணா மாதிரி பாத்திரங்களை வைத்து நம் நாட்டில் நாடகம் போட்டால், முதல் காட்சியிலேயே கொட்டகையைக் கொளுத்திவிடுவார்கள்.
நாடகத்துக்குப் பெரிய கூட்டம் வந்திருந்தது. அமெரிக்காவில் வழக்கமான அரங்க நாடகமானாலும் சரி, பூங்கா நாடகமானாலும் சரி, பெரும் திரளாக மக்கள் வருகிறார்கள். குடும்பத்துடன் நாடகம் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. பூங்கா நாடகக் கலாசாரம் அமெரிக்காவின் பெரு நகரமான நியூயார்க்கிலும் துடிப்போடு இருக்கிறது.
அங்கே பிரம்மாண்டமான சென்ட்ரல் பூங்காவில் டெலகார்ட்டே அரங்கு இருக்கிறது. இதில் 55 வருடங்களாக கோடை காலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பப்ளிக் தியேட்டர் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. நுழைவுச் சீட்டுகளை இலவசமாகக் கொடுக்கிறார்கள். காலை 6 மணியிலிருந்தே அதற்கு கியூ நிற்கிறதாம். வருடந்தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நியூயார்க் பூங்காக்களில் நாடகம்
பார்க்கிறார்கள்.
பப்ளிக் தியேட்டர் ஆண்டு தோறும் நாடகப் பயிற்சியும் நடத்துகிறது. நியூயார்க் வட்டாரத்தில் இருக்கும் பொதுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இரு வாரங்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும், நடிப்பு, குரல், அசைவுகள், மேடை உத்திகளிலும் பயிற்சி பெற 2 ஆயிரம் டாலர் கட்டணம். இந்தப் பயிற்சி வகுப்பில் இடம் பெறப் பெரும் போட்டி இருக்கிறது. விண்ணப்பத்துடன் ஏன் பங்கேற்க விரும்புகிறேன் என்று 500 சொற்களில் கட்டுரை எழுதி அனுப்பவேண்டும். நேர்முகத் தேர்வும் உண்டு.
நியூ ஜெர்சியில் ரூஸ்வெல்ட் பூங்காவில் நாடகம் பார்க்க மிகச் சில இந்தியர்களே வந்திருந்தார்கள். ராஜேஷும் நானும் நாடகம் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்குப் போய் தங்கினோம். ராஜேஷ் வீடும் என் வீடு, பாஸ்டன் பாலா வீடு போலவே எதுவும் எங்கும் இருக்கும் என்ற சென்னை பாணியில் இருந்தது. அவர் மனைவி, குழந்தைகள் ஊருக்குச் சென்றிருந்ததால் இருவரும் நிறைய வெளியில் சாப்பிட்டோம். ராஜேஷுக்கு ஒவ்வொரு இந்திய ஓட்டல் சிப்பந்தியையும் தெரிந்திருந்தது. மறு நாள் நியூயார்க் சென்றோம்.
வாஷிங்டன் அமெரிக்காவின் தலைநகராக இருந்தாலும் நியூயார்க்கிற்கு இருக்கும் கவர்ச்சி அதிகம். பட்டணம்தான் போகலாமடி... பணம் காசு பண்ணலாமடி என்று ஒரு பழைய தமிழ்த் திரைப்பாடல் இருக்கிறது. அமெரிக்காவில் அப்படிப்பட்ட பட்டணமாக நீண்ட காலமாகக் கருதப்படுவது நியூயார்க்தான். பிழைத்துக் கொள்ள, முன்னேற வாய்ப்புள்ள நகரம் நியூயார்க் என்ற கருத்தில் அது தி பிக் ஆப்பிள் ( பெரிய ஆப்பிள் பழம்) என்று அழைக்கப்படுகிறது. வளப்பத்தையும் சத்தையும் குறிக்கும் பழம் ஆப்பிள். அமெரிக்காவின் ஆப்பிள் நியூயார்க். உலகத்தின் ஆப்பிள் அமெரிக்கா.
1908-லேயே நியூயார்க்கிற்கு தி பிக் ஆப்பிள் என்ற பெயர் வந்துவிட்டது. எழுபதுகளில் நியூயார்க்கில் சுற்றுலாவைப் பெருக்குவதற்காக மேற்கொண்ட பிரம்மாண்டமான பிரசார விளம்பர நடவடிக்கையில் ஐ லவ் நியூயார்க் வாசகமும் ஆப்பிள் படமும் போட்ட டிஷர்ட்டுகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டன.
நியூயார்க்தான் அமெரிக்காவின் நுழைவாயிலாக இருந்து வந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் இங்குதான் நுழைந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் முதல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட வர்த்தக மையமான இரட்டை கோபுரம் வரை பல முக்கியமான இடங்கள் நியூயார்க்கில்தான் இருக்கின்றன.
இதன் மக்கள் தொகை இப்போது 85 லட்சத்தை தாண்டிவிட்டது. ஹட்சன் ஆற்றங்கரையில் இருக்கும் நியூயார்க் என்பது மூன்று தீவுகள் இணைந்த நகரம். தீவுகளை விரிவுபடுத்த
முடியாது என்பதால் மக்கள் நெரிசல் நியூயார்க்கில் மிக அதிகம்.
இத்தனை நெரிசல் இருந்தும் நியூயார்க் நகரம் சுற்றுச் சூழல் விஷயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கை ஆச்சரியமானது. சான் பிரான்சிஸ்கோ, டலாஸ் முதலிய நகரங்களில் இருப்பவர்களைவிட நியூயார்க் மக்கள் பயன்படுத்தும் மின்சார சராசரி அளவு குறைவு என்பது ஓர் ஆச்சரியம்.
பெட்ரோல் எரி வாயுவைப் பயன்படுத்தும் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் நியூயார்க் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. நியூயார்க்கின் உள்ளூர் ரயில் போக்குவரத்து மிகச் சிறப்பாக இருப்பதால், நிறைய பேர் காரையே பயன்படுத்துவதில்லை. அமெரிக்காவில் கார் இல்லாமல் ஒரு குடும்பம் இருக்க முடியாது என்ற நிலையில், நியூயார்க்கில் 55 சதவிகிதக் குடும்பங்களில் கார் இல்லை என்பதற்குக் காரணம் ரயில் போக்குவரத்துதான். அமெரிக்கா முழுவதும் ரயில் போக்குவரத்தால் மிச்சமாகும் (கார்) எரிவாயுவில் சரிபாதி நியூயார்க்கில் மட்டுமே மிச்சமாகிறது.
ராஜேஷும் நானும் நியூஜெர்சி மிடில்செக்சிலிருந்து கிராண்ட் பார்க் ரயில் நிலையம் சென்று ரயிலைப் பிடித்து நியூயார்க் பென் ரயிலடிக்குச் சென்றோம். நியூயார்க் பென்சில்வேனியா ஸ்டேஷன் என்கிற இந்த ரயில் நிலையத்துக்கு ஒரு சோகமான வரலாறு இருக்கிறது. 1910-ல் இது கட்டி முடிக்கப்பட்டபோது நியூயார்க்கிற்கே அழகு சேர்க்கும் கட்டடமாகக் கருதப்பட்டது. பிரும்மாண்டமான தோற்றத்துடன், பழைய கட்டடக் கலை மரபுகளின்படி அது கட்டப்பட்டிருந்தது. 1950-களில் இந்தக் கட்டடத்தினைப் பராமரிக்கும் செலவு அதிகம் என்று கருதிய ரயில் கம்பெனி அந்த இடத்தின் வான் உரிமைகளை விற்க முடிவு செய்தது.
வான் உரிமைகள் என்பது ஒரு கட்டடத்தின் பரப்பளவுக்கு மேலே இருக்கும் திறந்த வெளி வானில் எதுவும் செய்துகொள்வதற்கான உரிமை. இந்த உரிமையின்படிதான் ஒரு 800 சதுர அடி இருக்கும் ஓட்டு வீட்டை வாங்கினால் இடித்துவிட்டு அங்கேயே மூன்று மாடிக் கட்டடம் கட்டுகிறார்கள்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் வான் உரிமையை விற்றால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்ப்போம். அதைப் பயன்படுத்த நினைப்பவர் எழும்பூர் ரயில் நிலையத்தை இடித்துத்தான் பெரிய கட்டடம் கட்ட முடியும். இதே சோகம்தான் எழும்பூரை விட எழிலும் பிரும்மாண்டமும் மிகுந்த நியூ பென் ஸ்டேஷனுக்கு நடந்தது. கட்டடத்தை இடிக்க முடிவானதும் மக்கள் எதிர்த்தார்கள். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம் இப்படி பாரம்பரியப் பெருமையும் அழகும் உள்ள ஸ்டேஷனை இடிக்கக்கூடாது என்று எழுதின.
ஆனால் ஸ்டேஷன் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரிய வர்த்தக மையக் கட்டடம் எழுப்பப்பட்டுவிட்டது. அந்தக் கட்டடத்தில் பாதாளப் பகுதியில்தான் இப்போதைய நியூயார்க் பென் ஸ்டேஷன் இயங்கிக் கொண்டிருக்கிறது. தெருவிலிருந்து ஸ்டேஷன் தெரியாது. வணிகக் கட்டடம்தான் தெரியும். உள்ளே நுழைந்து கீழே போனால் ஸ்டேஷன். நிமிடத்துக்கு ஆயிரம் பயணிகள் வீதம் தினம் ஆறு லட்சம் பேர் போய்வருகிறார்கள். இங்கே உள்ளூர் ரயில் ஓடுகிறது. பிற நகரங்களுக்குச் செல்லும் இண்ட்டர் சிட்டி ரயிலும் உண்டு. சுரங்க ரயிலும் உண்டு.
நியூ பென் பழைய கட்டட இடிப்பு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பலையைக் கிளப்பியது. இனி பாரம்பரியக் கட்டடங்களைக் காப்பதற்கு தனிச் சட்டங்கள் தேவை என்று பல மாநிலங்களில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட சட்டத்தின் மூலம் நியூயார்க்கிலேயே இருக்கும் இன்னொரு ரயில் நிலையமான கிராண்ட் செண்ட்ரல் ரயில் நிலையக் கட்டடம் காப்பாற்றப்பட்டது. கிராண்ட் செண்ட்ரல்தான் உலகத்திலேயே பெரிய ரயில் நிலையம். அதில் 44 நடைமேடைகள் (பிளாட்ஃபாரம்) உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் எல்லாம் என்னைக் கவர்ந்தது அவற்றின் பிரும்மாண்டம் அல்ல. அவற்றின் தூய்மைதான். எந்தப் பக்கம் பார்த்தாலும் சிறு குப்பை கூட இல்லாமல் ரயில் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் இருக்கிறது. ரயில் நிலையப் புத்தகக் கடைகள் பேருக்குப் புத்தகம் விற்பவையாக இல்லாமல் முழுமையான புத்தகக் கடைகளாக இருக்கின்றன. உணவகங்கள், காப்பி ஷாப் எல்லாம் சுத்தமாகவும் வசதியாகவும் ஸ்டார் ஓட்டல் போல இருக்கின்றன.
நியூ பென்னில் இறங்கி ராஜேஷும் நானும் நியூயார்க் தெருக்களில் நடையோ நடையென்று நடந்தோம். தாங்க முடியாத வெயில்.
(தொடரும்)