கல்வி: படித்தவுடனேயே வேலை!
எதற்காகப் படிக்கிறீர்கள்? என்று மாணவர்களைக் கேட்டுப் பாருங்களேன். அறிவை வளர்ப்பதற்காக என்று ஒருவர் கூட கூறமாட்டார். வேலைக்குப் போவதற்காக படிப்பு என்பது சமூகத்தின் அடியாழத்தில் பதிந்து கிடக்கிறது. ஆனால
எதற்காகப் படிக்கிறீர்கள்? என்று மாணவர்களைக் கேட்டுப் பாருங்களேன். அறிவை வளர்ப்பதற்காக என்று ஒருவர் கூட கூறமாட்டார். வேலைக்குப் போவதற்காக படிப்பு என்பது சமூகத்தின் அடியாழத்தில் பதிந்து கிடக்கிறது. ஆனால் படித்த எல்லாருக்குமா வேலை கிடைத்துவிடுகிறது? படித்துவிட்டு பல ஆண்டுகள் வேலைவாய்ப்பில்லாமல் வேதனையோடு வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? சிலருக்கோ படித்துக் கொண்டிருக்கும்போதே வேலை கிடைத்துவிடுகிறது. படித்துக் கொண்டிருக்கும்போதே வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்குகிறார் ஏ.சுவாமிநாதன்.
அவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணிபுரிந்தவர். சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வித்துறையின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
""இப்போது கல்வி கற்பதற்கு செலவு அதிகரித்துவிட்டது. பெற்றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். படித்தவர்கள் வேலை கிடைக்காமல் நின்றால் அது எல்லாருக்குமே ஏமாற்றமாக இருக்கிறது. துயரமாக இருக்கிறது. எனவே மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் எனக்குத் தெரிந்ததைச் சொல்லலாம் என்று நினைத்தேன். அதனால், எனது நீண்டகால கல்வித்துறையின் அனுபவத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். வின் டிவி, வசந்த் டிவி போன்றவற்றில் ஆலோசனை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறேன். பள்ளி, கல்லூரியில் அழைத்தால் நேரடியாக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன். பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் படித்தவுடன் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்'' என்கிறார் சுவாமிநாதன்.
கல்லூரி மாணவர்களுக்கு என்ன ஆலோசனை வழங்குகிறீர்கள் என்ற கேள்விக்குக் ""கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பி.இ., பி.காம் படிக்கும் மாணவர்களுக்கு நான் எம்பிஏ டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிறேன். உதாரணமாக பிஇ சிவில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு அதில் கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜ்மென்ட், மற்றும் ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் பாடங்கள் அதில் உள்ளன. இந்தப் பாடங்களில் கான்ட்ராக்ட் எப்படி எடுப்பது, நிலத்தை வாங்குவது எப்படி? அதிலுள்ள சிக்கல்கள் எவை? என்பன போன்ற நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் உள்ளன. இதைப் பயிலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே பில்டர்ஸிடம் பார்ட் டைம் வேலைக்குப் போய்விடலாம். இதற்கான தகவல்கள் இணைய தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
எம்.ஏ., எம்.எஸ்ஸி, எம்.காம். படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளில் ஆசிரியர் வேலை செய்வதற்குத் தேற வேண்டிய தேர்வான ஸ்லெட் தேர்வை, படிப்பு முடித்த பின்புதான் எழுத முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் ஒரு வருடம் வீணாகிவிடும். உண்மையில் இரண்டாமாண்டு படிக்கும்போதே அவர்கள் ஸ்லெட் தேர்வு எழுதலாம். அப்படி எழுதினால் படிப்பு முடிந்ததுமே ஏதாவது கல்லூரியில் உடனே வேலைக்குப் போய்விடலாம். நான் ஸ்லெட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி தருகிறேன்'' என்றார்.
கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? என்ன பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்? என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் கிராமப்புறத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டதாகத்தானே உணர்கிறார்கள்? என்றோம்.
"" நீங்கள் சொல்வது சரிதான். முதலில் கிராமப்புற மாணவர்கள் பலர் பிளஸ் டூ முடித்தவுடன் உயர் கல்வி கற்க எல்லாம் நம்மால் முடியாது என்று நினைப்பார்கள். அதற்குக் காரணம், மேல் படிப்பு படிக்க பணவசதி இல்லாமல் இருப்பதுதான். அவர்கள் அப்படி நினைக்கத் தேவையில்லை. இப்போது மாணவர்கள் உயர் கல்வி பயில வங்கிகள் கடன் தருகின்றன. அதுவும் 4 லட்ச ரூபாய் வரை எந்தவித ஷ்யூரிட்டியும் தேவைப்படுவதில்லை. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருந்தால் போதும். 18 வயது ஆகியிருக்க வேண்டும். எந்தக் கல்லூரியில் சேர்ந்தார்களோ அதற்கான அனுமதிச் சீட்டையும், மதிப்பெண் பட்டியல்களையும் எடுத்துச் சென்றால் வங்கியில் கல்விக்கான கடன் கொடுத்துவிடுவார்கள். அதிக மார்க் எடுத்தவர்களுக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கும் என்று சில மாணவர்கள் நினைத்துக் கொண்டு வங்கிக் கடனுக்கு முயற்சிக்காமலேயே இருந்துவிடுவார்கள். ஆனால் அதிக மார்க், குறைந்த மார்க் என்றெல்லாம் வங்கிகள் கடன் கொடுக்கும்போது பார்ப்பதில்லை. மாணவர் கல்லூரியில் சேர்ந்ததற்கான அனுமதிச் சீட்டுதான் அவர்களுக்கு முக்கியம். வங்கிக் கடன் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ள மாணவர்கள் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும்போதே அருகில் உள்ள ஒரு வங்கியில் கணக்கைத் தொடங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொண்டு வங்கி மேலாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டால், பின்பு கடன் பெறுவது எளிதாக இருக்கும். படிப்பதற்குத் தேவை பணம். அதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்ற நிலை இருக்கும்போது எந்தப் படிப்பு படிக்கலாம் என்பதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்'' என்கிறார் சுவாமிநாதன் புன்முறுவலுடன்.
எல்லாருமே டாக்டராக, என்ஜியராகத்தானே நினைப்பார்கள்? என்றோம்.
""நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மருத்துவம், பொறியியல் படிக்க நினைப்பதில் தவறில்லை. மரைன் என்ஜினியரிங்கில் பி.இ. படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. கப்பலில் வேலை என்றால் கடலிலேயே காலம் கழிந்துவிடுமே என்று நினைப்பார்கள். உண்மையில் 3 மாதம் கப்பலில் வேலை செய்தால் 3 மாதம் ஃபிரீயாக இருக்கலாம். கப்பலில் வேலை செய்வதால் பல நாடுகளுக்குப் போகும் வாய்ப்புக் கிடைக்கும். பல நாட்டுக்காரர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும். மரைன் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக் கொண்டால், கப்பலில் வேலை செய்யும்போதே கூடுதல் பண வருவாய்க்காக வேறு தொழில்களையும் செய்யலாம். ஒருவேளை கப்பலில் வேலை செய்யாவிட்டாலும், ஏற்கனவே கிடைத்த தொடர்புகளைப் பயன்படுத்தி தொழில்கள் செய்யலாம். பிஇ கட்டிடக் கலை படித்தவர்களுக்கு துபாய், எகிப்து, கெய்ரோ போன்ற நாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. டிரிப்பிள் இ, இஸிஇ படிப்பவர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பிளஸ் டூ வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் ஏதாவது கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். பிஏ பொருளாதாரம் படித்தால் அதற்கடுத்து எம்பிஏ பைனான்ஸ் படித்தால் நல்ல வாய்ப்புகள் உள்ளன. பி.ஏ., பி.எஸ்ஸி படிக்கும்போதே போட்டித் தேர்வுகள் எழுதலாம். இப்போது டிஎன்பிஎஸ்ஸி, ரயில்வே போன்றவற்றிற்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளில் எளிதாகப் பாஸ் பண்ண முடியும். அதற்கு பி.ஏ., பி.எஸ்ஸியில் சேர்ந்தவுடன் முதல் ஆண்டு படிக்கும்போதே இந்தப் போட்டித் தேர்வுகளுக்காகப் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும். நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சப்ஜெக்ட்டைப் படித்து பிறருடன் பகிர்ந்து கொண்டால் மிக விரைவில் போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெறத் தகுதியானவர்களாக ஆகிவிட முடியும். சில மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவார்கள். அவர்கள் டிகிரி படித்துக் கொண்டு இருக்கும்போதே கம்ப்யூட்டரில் ஜாவா, சி, சி ++, டேலி போன்றவற்றையும் படித்துக் கொண்டால், டிகிரி முடித்தவுடன் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிடலாம்.
சட்டக் கல்லூரியில் சேர்ந்தும் மாணவர்கள் படிக்கலாம். ஐஏஎஸ் படிப்பதற்கு சிறந்த பாடத்திட்டம் சட்டப் படிப்பில் உள்ள பாடத்திட்டங்களே. எனவே சட்டம் படிப்பவர்கள் எளிதாக ஐஏஎஸ் பாஸ் பண்ண முடியும். ஒருவேளை முடியாவிட்டாலும் அந்தப் பயிற்சியை வைத்து டிஎன்பிஎஸ்ஸி தேர்வு எழுதி வேலைக்குப் போய்விடலாம். வெளிநாடுகளிலும் வழக்கறிஞர்களுக்குத் தேவை இருக்கிறது. பல நிறுவனங்களில் கன்சல்ட்டன்டாக வேலை செய்ய சட்டப் படிப்பு உதவும்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம். கூடவே டூரிஸ்ட் மேனேஜ்மென்ட் படிக்கலாம். அப்படிப் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளைப் யின்றால் ஐரோப்பிய நாடுகளில் வேலைக்குப் போய்விடலாம்.
பிளஸ் டூ முடித்தவுடன் சிஏ படித்தால் வேலை வாய்ப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சிஏ படிக்கும் போதே ஓர் ஆடிட்டரிடம் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால், படிக்கும்போதே வேலைக்குத் தயாராகிவிடுவார்கள்'' என்கிறார்.
பிளஸ் டூ பெயிலான மாணவர்கள் என்ன செய்வது? என்று கேட்டதற்கு, "" அவர்களுக்கும் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன'' என்கிறார் சுவாமிநாதன்.
""பிளஸ் டூ வில் பெயிலான மாணவர்கள் பிளம்பர், எலக்ட்ரிஷியன், ஆட்டோ மொபைல் என்ஜினியரிங், ஏசி மெக்கானிக் போன்ற 3 மாத படிப்புகளைப் படித்துவிட்டு வேலைக்குப் போய்விடலாம். சென்னை கிண்டியிலுள்ள கவர்ன்மென்ட் எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேரில் 1 மாதப் பயிற்சி கொடுக்கிறார்கள். இன்று அந்தப் பயிற்சி பெற்றவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. பி.ஏ., பி.எஸ்ஸி படிப்பவர்கள் கூட கம்ப்யூட்டர் ஹார்ட்வேரில் பயிற்சி பெறலாம். இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எந்த வேலைக்குப் போகிறதாக இருந்தாலும் நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில் தேவை. ரெஸ்யூம் தயாரிப்பதிலிருந்து, இன்டர்வியூவில் பங்கேற்பது வரை மிகவும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அப்படிச் செய்தால் படித்துக் கொண்டிருக்கும்போதே, படித்த உடனேயே நிச்சயமாக வேலை கிடைக்கும்'' என்கிறார் உறுதியாக.