முரண்சுவை: மோதிலாலின் புத்திர பாசம்!
மோதிலால் நேருவின் தாத்தா கிழக்கிந்திய கம்பெனியாரின் முதல் வக்கீலாக வேலை பார்த்தார். மோதிலாலின் தந்தையின் பெயர் கங்காதர நேரு. அவருக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களில் மூன்றாவது மகன் தான் மோதிலால
தினமணி கதிர்முரண்சுவை: மோதிலாலின் புத்திர பாசம்!
மோதிலால் நேருவின் தாத்தா கிழக்கிந்திய கம்பெனியாரின் முதல் வக்கீலாக வேலை பார்த்தார். மோதிலாலின் தந்தையின் பெயர் கங்காதர நேரு. அவருக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களில் மூன்றாவது மகன் தான் மோதிலால
மோதிலால் நேருவின் தாத்தா கிழக்கிந்திய கம்பெனியாரின் முதல் வக்கீலாக வேலை பார்த்தார். மோதிலாலின் தந்தையின் பெயர் கங்காதர நேரு. அவருக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களில் மூன்றாவது மகன் தான் மோதிலால் நேரு. மோதிலால் நேரு தாயின் வயிற்றில் வளரும்போதே அவருடைய தந்தை கங்காதர நேரு காலமானார். தந்தை இறந்த 1861- ஆம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் தான் மோதிலால் டில்லியில் பிறந்தார். மோதிலாலின் இளமைக் காலத்தில் நிகழ்ந்த சோதனைகள் வேதனைகள் பல. அவருடைய மனைவி, மகன், அண்ணன் ஆகிய மூன்று பேர்களும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் சொரூபராணி. அவர் அழகிய காஷ்மீர் பெண்.
1900- ஆம் ஆண்டில் மோதிலால் நேரு அலகாபாத்தில் ஒரு பெரிய மாளிகையை வாங்கினார். அதில் பல மாறுதல்களைச் செய்தார். அந்த மாளிகையில் ஒரு நீச்சல் குளம் ஒன்றைக் கட்டினார். அதற்கு ஆனந்த பவனம் என்று பெயர் வைத்தார். மோதிலால் நேரு ஆனந்த பவனத்தில் குடியேறியபோது ஜவகர்லால் நேருவுக்கு 10 வயது முடிந்து இருந்தது.
மோதிலால் நேருவுக்கு இளமைப் பருவத்திலேயே மேல்நாட்டு வாழ்க்கை முறையில் மோகம் இருந்தது. ஆனந்த பவனத்தில் சாப்பாடு கூட மேல் நாட்டு முறையில் தான் இருக்கும். கத்தியும், முள் கரண்டியும் வைத்துக் கொண்டு தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டில் அதிகமாக பரிமாறப்படுவது புலால் உணவு வகைகள் தான். இங்கிலாந்திலும், பிரான்சிலும் தைத்த உடைகளையே வாங்கி மோதிலால் நேருவும், ஜவகர்லால் நேருவும் அணிந்தார்கள். சாப்பாட்டின்போது மேல்நாட்டு வழக்கப்படி மதுவகைகள் பரிமாறப்படும்.
ஆனந்த பவனத்தில் தினமும் விருந்தாளிகள் கூட்டம் அதிகமிருக்கும். ஐரோப்பிய பிரமுகர்களும், இந்தியப் பிரமுகர்களும் வீட்டிற்கு வந்த வண்ணம் இருப்பார்கள். ராஜாக்கள், மகாராஜாக்கள், கலெக்டர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் என்று பலரும் தினமும் வருவார்கள். சமையலறைக்குச் சென்று மோதிலால் நேரு உதவி செய்வார். சமைக்கின்ற உணவு ருசியாக இல்லாவிட்டால் வேலைக்காரர்களுக்கும் சமையல்காரர்களுக்கும் தாறுமாறாக அடிவிழும். பிறகு கோபம் அடங்கியதும் அவரே அவர்களைக் கூப்பிட்டு சமாதானம் செய்து கொண்டு வாங்கிய அடிகளுக்குத் தக்கபடி பணம் கொடுப்பார்.
ஆனந்த பவனத்தில் இருந்த மதுவகைகள் ஐரோப்பியாவிலுள்ள பெரிய மது விடுதிகளில் உள்ளதை விட அதிக விலையுயர்ந்ததாக இருந்தன. சிறு வயதில் அப்பாவுக்குத் தெரியாமல் ஜவகர் ஒரு பேனாவை எடுத்துக் கொண்டார். உண்மை தெரிந்ததும் மோதிலால், ஜவகரை வெளுத்து வாங்கிவிட்டார். பிறகு அடிபட்ட காயங்களுக்கு மருந்தும் கட்டும் போடவேண்டியதாயிற்று. ஜவகரை இங்கிலாந்தில் படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக குடும்பத்துடன் இங்கிலாந்திற்குச் சென்றார். அங்கு புகழ் பெற்ற பழைய பள்ளிக்கூடமான ஹாரோ ஆன்திஹில் என்ற பள்ளியில் 1905- ம் ஆண்டில் ஜவகரைச் சேர்த்தார்.
உலகில் சைக்கிள் கண்டு பிடிக்கப்பட்டு பிரபலமானதும் மோதிலால் உடனே ஒரு சைக்கிளை வாங்கிக் கொண்டார். ஆனந்த பவனத்தில் தான் முதன் முதலாக மின்சாரமும், பம்பாய் முறையில் கட்டப்பட்ட கழிவறையும் அமைக்கப்பட்டன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இரண்டு ஆனந்த பவனத்தில் இருந்தன. வெள்ளையர்களை ஓட்டுனராக வைத்திருந்தார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்டாயம் நூல் நூற்க வேண்டும் என மகாத்மா காந்திஜி கூறினார். இதைக் கேட்ட மோதிலால் நேரு கட்டாயத்துக்கு நான் கட்டுப்படமாட்டேன். எனவே நான் காங்கிரசிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். அவருக்குக்காகவே காந்தி அடிகள் காங்கிரஸ் அங்கத்தினர் நூற்க வேண்டும் அல்லது 4 அணா அபராதம் செலுத்த வேண்டும் என்று விதியைத் தளர்த்தினார்.
ஜவகர்லால் நேரு சிறையில் இருந்தபோது, மோதிலால் நேரு மிகவும் வேதனைப்பட்டார். ஜவகர் எப்படி சிறையில் அந்த உணவைச் சாப்பிட்டு தரையில் படுப்பார் என்று எண்ணி வருந்தினார். அதை நினைத்து மோதிலால் நேரு தரையில் படுத்துப் பார்த்தார். அவரால் தரையில் படுக்க முடியவில்லை. அதனால் பல நாட்கள் தூக்கத்தை இழந்தார்.
1931-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மோதிலால் நேருவின் உடல் நிலை மிகவும் மோசமானது. எக்ஸ்ரே எடுப்பதற்கு கூட உடல் தகுதியில்லாமல் இருந்தது. அந்த நிலையில் அவர் அடிமை நாட்டில் உயிர் துறக்க நான் விரும்பவில்லை. சுதந்திர இந்தியாவில் தான் என் உயிர் பிரிய வேண்டும் என்றார். ஆனால் அது நடக்கவில்லை. காலன் ஒரு பொதுவுடைமைவாதி. அவனுக்கு எல்லோரும் சமம், அவனுக்கு எல்லாக் காலமும் ஒன்றுதான்.
இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் கொண்டு தன்னைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களைப் போய் தூங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிப்ரவரி 6-ம் தேதி காலை சுமார் 6 மணிக்குத் தண்ணீர் கேட்டார். தொண்டை வற்றிவிட்டது. நீர் உள்ளே செல்ல மறுத்தது. அதன் பிறகு 45 நிமிடங்கள் தான் உயிர் இருந்தது. மோதிலால் இறக்கும்போது அவருக்கு வயது 70.
மோதிலாலின் மிகச் சிறந்த பண்பு என்ன? என்று ஒரு நிருபர் மகாத்மா காந்திஜியிடம் கேட்டார். அதற்கு அவர் அவரது புத்திரபாசம் என்றார்.
வாழ்க்கையை ஆங்கிலேய பாணியில் வாழ்ந்துவிட்டு மரணத்தை சுதந்திர நாட்டில் எதிர்பார்த்த மோதிலால்... முரண்சுவை மனிதரல்லவா?
(தொடரும்)