நலம்: ஆரோக்கிய உணவை ஆதரிக்கும் படை!
கிராமங்கள் ஒவ்வொன்றும் நகரங்களாக உருமாறி வருகின்றன. கால ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விறகு அடுப்புகள் ஓய்வு எடுக்கத் துவங்கியுள்ளன. எரிவாயு அடுப்புகள் அதன் பணியை ஏற்று செயலாற்றி வருகின
தினமணி கதிர்நலம்: ஆரோக்கிய உணவை ஆதரிக்கும் படை!
கிராமங்கள் ஒவ்வொன்றும் நகரங்களாக உருமாறி வருகின்றன. கால ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விறகு அடுப்புகள் ஓய்வு எடுக்கத் துவங்கியுள்ளன. எரிவாயு அடுப்புகள் அதன் பணியை ஏற்று செயலாற்றி வருகின
கிராமங்கள் ஒவ்வொன்றும் நகரங்களாக உருமாறி வருகின்றன. கால ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விறகு அடுப்புகள் ஓய்வு எடுக்கத் துவங்கியுள்ளன. எரிவாயு அடுப்புகள் அதன் பணியை ஏற்று செயலாற்றி வருகின்றன. இருந்தாலும் பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவகங்களின் வருகையால் சில நேரங்களில் வீட்டுச்
சமையல் கூட கேள்விக்குறியாகி வருகின்றது.
இப்படி இயற்கையான மணம், குணம்,சுவை போன்றவைகளின் ஆரோக்கிய கூட்டணி கொஞ்சம், கொஞ்சமாக மாறி நஞ்சுக்கூட்டணி தனது ஆக்கிரமிப்பினை கிராமப்புறங்களிலும் வளர்த்து வருகின்றது.
இதற்கு மத்தியிலும் "இயற்கையாக உணவுப் பொருட்களை தயாரிப்பது எப்படி?' என்பதை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று கற்பித்து கொண்டு வருகிறார் காந்திஜியின் பெயரை தனது சங்கத்தின் பெயராகக் கொண்ட கிராம சேவா சங்கத்தின் செயலர் பாலகிருஷ்ணன்.
சுவை மிக்க உணவுப் பொருட்களை கல்லூரி மாணவிகள் தாங்களாகவே செய்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி வழங்க வேண்டும் என்ற வேட்கையோடு களம் இறங்கியுள்ள கடையநல்லூர்-கிருஷ்ணாபுரம் காந்திஜி கிராம சேவா சங்கத்தின் செயலர் பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். அவரின் கல்லூரிக் கனவு நனவாகியது எப்படி என்று அவரின் வார்த்தைகளில் கேளுங்கள்...
""1993 ஆம் ஆண்டு மத்திய அரசின் காதி அண்ட் வில்லேஜ் இண்டஸ்டிரிஸ் கமிஷன் என்ற ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு காந்திஜி கிராம சேவா சங்கம் கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்துதல், உணவுப் பொருட்களைத் தயாரித்தல், அதனை சந்தைப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட கிராமப்பகுதி பெண்களுக்கு உணவு தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இச்சங்கத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறுவிதமான பயிற்சிகளை எங்கள் சங்கத்தின் மூலம் வழங்குகின்றன.
மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாம்பார் பொடி உள்ளிட்ட பொடி வகைகள் தயாரித்தல், ஊறுகாய் வகைகள் தயாரித்தல், ஜாம் வகைகள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் சங்கரன்கோவில், களக்காடு, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன. இதன் மூலம் 187 பேர் பயிற்சிபெற்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் 108 பயனாளிகளுக்கு அரசு உதவியுடன் பழம் பதனிடுதல், உணவுப் பொருட்களைத் தயாரித்தல் போன்றவை குறித்து 6 மாதப் பயிற்சியினை வழங்கினோம்.
மேலும் தென்காசி பகுதியில், ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 240 பயனாளிகளுக்குப் பழங்கள் உற்பத்தி மற்றும் ஜாம் தயாரிப்பது குறித்த ஒரு நாள் ஆதாரப் பயிற்சியினையும் வழங்கியுள்ளோம். இதுபோன்று சுமார் 6000 பேருக்கு நாங்கள் குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளை அளித்துள்ளோம். தற்பொழுது பாஸ்ட் புட் கலாசாரம் பெருகிவிட்டது. இயற்கையான தயாரிப்புக்கள் சந்தையில் போட்டி போட முடியாமல் தத்தளித்து வருகின்றன. இதனால் மக்களின் உடல் நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பாஸ்ட் புட் கலாசாரம் அதிகம் பரவி வரும் கல்லூரிகளுக்குச் சென்று அவர்களுக்கு இயற்கையாக, எளிமையான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்து பயிற்சி அளித்தால் என்ன என்று தோன்றியதால், கல்லூரி தோறும் சென்று பல்வேறுவிதமான பழக்கூழ்கள், எளிய வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சியளித்து வருகிறோம். இதற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதற்காக குறைந்த கட்டணத்தையே பெறுகிறோம். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி வழங்கியுள்ளோம். தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளுக்கு சென்று பயிற்சியளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் சங்கத்திற்கென்று சொந்தமாகக் கட்டடம் இல்லாததால் பயிற்சிகளை வெளியிடங்களுக்குச் சென்று நடத்தவேண்டிய நிலையுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கட்டட வசதியை ஏற்படுத்தித் தந்தால் ஆயிரக்கணக்கானோருக்கு இப்பயிற்சியை சங்கத்தால் வழங்க முடியும்...'' என்றார் ஆரோக்கிய உணவை ஆதரிக்கும் படைத் தளபதியாக பாலகிருஷ்ணன்!