முகப்பு
தினமணி கதிர்

சாதனை: 5 நட்சத்திர ஓட்டலை வீட்டுக்குக் கொண்டு வர முடியும்!

சமையற் கலை நிபுணர் தாமோதரன் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சமையற் கலையைக் கற்றுக் கொடுக்கும் 18 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில்  சமையற் கலையைக் கற்றுக் கொடுக்கும் நிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:18 PM
பகிர்:

சமையற் கலை நிபுணர் தாமோதரன் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சமையற் கலையைக் கற்றுக் கொடுக்கும் 18 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில்  சமையற் கலையைக் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சிகளைப் பல ஆண்டுகளாக அவர் நிகழ்த்தி வருகிறார். எனவே எல்லாருக்கும் அவர் தெரிவதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி அவர்  ஓர் உலகச் சாதûனையை நிகழ்த்தி, அதனால் கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றிருக்கிறார். இது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

அதென்ன சாதனை? என்று ஆர்வம் மேலிட அவரிடம் பேசினோம்.

""24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 விநாடிகள் தொடர்ந்து சமையல் செய்து கின்னஸ் உலக சாதனை ரிகார்டில் இடம் பெற்றிருக்கிறேன்'' என்கிறார் பெருமையுடன் தாமோதரன்.

சமையல் துறையில் சாதனை செய்ய வேண்டும் என்று தோன்றியது எப்படி? என்ற கேள்வியுடன் அவரை அணுகினோம்.

""நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே உலக அளவில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். சமையல் கலையை 1974-77 இல் படித்து முடித்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் பயிற்சி பெற்றேன். அதற்குப் பிறகு வேலை செய்ய சென்னைக்கு வந்துவிட்டேன். சிறப்பாக சமையல் செய்வதுடன் மட்டும் நான் திருப்தி அடைந்துவிடவில்லை. நான் கற்றவற்றை -  எனக்குத் தெரிந்த கலையைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் 1986 - இலிருந்து சமையற் கலையைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். 3500 மாணவர்களுக்கு மேல் என்னிடம் இதுவரை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில் சமையற் கலை புத்தகங்களை எழுதவும் ஆரம்பித்தேன். சைவ உணவு வகைகளைச் செய்யக் கற்றுக் கொடுக்கும் 8 புத்தகங்களையும், அசைவ  உணவு வகைகளைச் செய்யக் கற்றுக் கொடுக்கும் 10 புத்தகங்களையும் எழுதினேன். இதனால் நான் ஓரளவுக்குப் பிரபலமடைந்துவிட்டேன். ஆனால் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. சமையற் கலைத் துறையில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு முதுகலை பட்டம் பெறுவது அவசியமாக இருந்தது. நான் வெறும் பி.காம் படித்தவன். எனவே அஞ்சல் வழியில் எம்பிஏ மார்க்கெட்டிங் முடித்தேன். முனைவர் பட்டம் பெறுவதற்காக சென்னை தரமணியில் என்டிடிஆரில் பதிவு செய்தேன். அப்போதுதான் தெரிந்தது இந்தத் துறையில் முனைவர் பட்டத்திற்கு வழிகாட்டும் கெய்டு கிடைப்பது சிரமம் என்று. ஏனென்றால் இந்தத் துறையில் இதற்கு முன்பு யாரும் முனைவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. கடுமையான முயற்சிக்குப் பின்பு கெய்டுகளைத்  தேடிப் பிடித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். சமையல் கலைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியன் நானாகத்தான் இருப்பேன். இதை ஒரு சாதனை என்று கூடச் சொல்லலாம். முனைவர் பட்டம் பெற்ற பின்பும் கூட எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அப்படியே இருந்தது. அதற்குப் பின்பு பல உணவுத் திருவிழாக்களை நடத்தினேன்.'' என்கிறார் பெருமிதத்துடன்.

கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றது எப்படி? என்று கேட்டோம்.

""நான்கு மாதங்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் மாதத்தில்தான் கின்னஸ் உலக ரிக்கார்டில் இடம் பெறும் போட்டிக்காக விண்ணப்பித்தேன். செப்டம்பர் முதல் வாரத்தில்தான் அதற்கு அனுமதி கிடைத்தது. லண்டனில் இருந்து போன் பண்ணிப் பேசினார்கள். லண்டனில் இருந்து லூஸியா இந்தப் போட்டியை நடத்துவதற்காகச் சென்னைக்கு வந்தார்.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமானது. எனது குழுவில் 45 பேர் இருந்தனர். அவர்களை 3 குழுக்களாகப் பிரித்தேன். காய்கறிகளை வெட்ட 15 பேர், அசைவ உணவு வகைகளை வெட்ட 15 பேர் இதர வேலைகளைப் பார்க்க 15 பேர் எனப் பிரித்தேன். இந்தச் சமையல் சாதனைப் போட்டியில் 230 கிலோ மீன், எறால், நண்டு போன்ற கடல்சார் உணவு வகைகளையும், சிக்கன் 60 கிலோவும், மட்டன் 20 கிலோவும், வேறு சமையல் பொருட்கள் 140 கிலோவும் பயன்படுத்தப்பட்டன. ரவா கேசரி, ரவா கிச்சடியுடன் ஆரம்பித்தேன். மொத்தம் 24 மணி நேரம் 30 நிமிடம் 12 விநாடிகள் சமைத்தேன். 617 உணவு வகைகளைச் சமைத்தேன். மொத்தம் 190 கிலோ உணவு தயாரானது. இந்தப் போட்டியில் முக்கியமான நிபந்தனை, சமைக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் சாப்பிடும்படியாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் நான் சமைக்கச் சமைக்க அங்குள்ள அனைவரும் உடனே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டார்கள்'' என்று சிரிப்புடன் சொன்ன அவரிடம், அவ்வளவு நேரம் தொடர்ந்து சமையல் செய்யும்போது களைப்பாகிவிடவில்லையா? என்றோம்.

""1 மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மேலும் என்னை உற்சாகப்படுத்துவதற்காகப் புஷ்பவனம் குப்புசாமி அங்கே வந்து இரவு 10 இலிருந்து 12.30 வரை தனது நாட்டுப் பாட்டுகளைப் பாடினார். அப்புறம் சபரி மலைக்குப் போகிறவர்கள் பூஜை செய்வது போன்று பக்திப் பாடல்களை அங்கிருந்தவர்கள் பாடிக் கொண்டே இருந்தனர். போட்டி மாதிரியே தெரியவில்லை. இருந்தாலும் அதிகாலை 3.00 மணிக்குக் கொஞ்சம் டயர்டாகிவிட்டது. அப்படி இப்படிச் சமாளித்து காலை 6.00 மணிக்குக் குளித்து அசதியை வென்றேன். 9 மணிக்கெல்லாம் போட்டி முடிந்துவிட்டது. கடைசியாகச் செய்தது இளநீர் பாயசம். இந்தப் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், எந்தப் பொருளையும் முதலில் சமைக்கக் கூடாது. காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளலாம். சிக்கன் போன்றவற்றை முதலிலேயே வெட்டி வைத்துக் கொள்ளலாம். 3 அடுப்புகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டும். நான் 6 அடுப்புகளில் சமையல் செய்தேன்.'' என்றார் பெருமையுடன்.

சமையலை எல்லாரும் ஒரு கலை என்றுதான் சொல்கிறார்கள். அது அறிவியலும் அல்லவா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்றோம் கொஞ்சம் சீரியஸôக.

""சமையல் முதலில் கலைதான். கண் பார்க்க வேண்டும். கை செய்ய வேண்டும். அதே நேரத்தில் சமையல் செய்யும் போது அறிவியல் ஆகிவிடுகிறது. சமைக்கும்போது தொழில்நுட்பம் வந்துவிடுகிறது. வீட்டில் பெண்கள் பரபரப்பாக சமையல் செய்வார்கள். அதனால் ஒரு நாள் வருகிற சுவை இன்னொரு நாளில் வராது. கொஞ்சம் பொறுமையாகச் சமையல் செய்தால் சுவையும் நன்றாக இருக்கும். எல்லாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, வேலை செய்வது எதற்காக? நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தானே? பெண்கள் நினைத்தால் 5 நட்சத்திர ஓட்டலை வீட்டிற்கு அழைத்து வரலாம். இப்போது நிறையப் பேர் சாப்பிடவே பயப்படுகிறார்கள். அதைச் சாப்பிட்டால் இந்த வியாதி வந்துவிடும், இதைச் சாப்பிட்டால் அந்த வியாதி வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அப்படியெல்லாம் பயப்படத் தேவையில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உணவு விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதான். சர்க்கரை வியாதி வந்தவர்கள் உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கலாம். ஆனால் சர்க்கரை வியாதி வந்துவிடும் என்று எல்லாரும் பயந்து கொண்டு நன்றாகச் சாப்பிடாமல் இருக்க வேண்டியதில்லை அல்லவா? சிலர் குழந்தைகளுக்குக் கூட சரியான உணவு தருவதில்லை. குழந்தைகள் நன்றாகச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய உடம்பில் தெம்பு இருக்கும். குழந்தைகள் ஓடியாடிக் குதிக்க வேண்டும். ஆனால் குழந்தைகள் இப்போது ஓடினால் சுருண்டு விடுகிறார்கள். காரணம் நல்ல உணவு அவர்களுக்குக் கிடைக்காததே'' என்ற அவரிடம் வீட்டில் சமைப்பீர்களா? என்று கேட்டோம்.

""என் மனைவியும் மகளும் மிக மிக நன்றாகச் சமைப்பார்கள். பிரியாணி மட்டும் நான் சமைப்பேன். எங்கள் வீட்டில் சமையலுக்காக மண் சட்டிகளையே அதிகம் பயன்படுத்துகிறோம். அதில் சமைக்கும்போது உணவின் சுவை அதிகமாக இருக்கும். உணவுகள் சீக்கீரம் கெட்டுப் போகாது'' என்கிறார்.

அடுத்து என்ன சாதனை செய்யப் போகிறீர்கள்? என்றோம்.

""என் கின்னஸ் ரிக்கார்டு சாதனைக்கு உதவிய 40 பேரும் உலகச் சாதனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். நல்ல பிரியாணி என்றால் என்னவென்றே தெரியாத கிராமத்து மக்களுக்கு பிரியாணி சமைத்துத் தர வேண்டும். அந்தக் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஆரம்பித்து வரிசையாக இடைவெளி இல்லாமல் பாத்திரங்களை வைக்க வேண்டும். அதில் 1500 கிலோ சிக்கனும் 1500 கிலோ அரிசியையும் வைத்து செய்த பிரியாணியை நிரப்ப வேண்டும். அதை அந்த ஊர் மக்களுக்கெல்லாம் வழங்க வேண்டும்'' என்கிறார் கண்களில் உறுதியுடன்.

முழு கட்டுரையைப் படிக்க →