பயிற்சி: குறையொன்றுமில்லை..!
சென்னையின் பரபரப்பான சென்டிரல் ரயில் நிலையப் பகுதிக்குப் பின்புறத்தில் அமைதியே உருவமாய் காணப்படுகிறது மைலேடீஸ் பூங்கா. பூங்காவின் கடைசிப் பகுதியில் சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள அழகான நீச்சல் குளம
தினமணி கதிர்பயிற்சி: குறையொன்றுமில்லை..!
சென்னையின் பரபரப்பான சென்டிரல் ரயில் நிலையப் பகுதிக்குப் பின்புறத்தில் அமைதியே உருவமாய் காணப்படுகிறது மைலேடீஸ் பூங்கா. பூங்காவின் கடைசிப் பகுதியில் சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள அழகான நீச்சல் குளம
சென்னையின் பரபரப்பான சென்டிரல் ரயில் நிலையப் பகுதிக்குப் பின்புறத்தில் அமைதியே உருவமாய் காணப்படுகிறது மைலேடீஸ் பூங்கா. பூங்காவின் கடைசிப் பகுதியில் சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள அழகான நீச்சல் குளம். சிறியவர் முதல் பெரியவர் வரை நீச்சல் பழகவும், நீந்தவும் நவீன தரத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த நீச்சல் குளத்தில் 3 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். நீச்சல் குளத்தின் ஒரு மூலையில் 2 சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார், சென்னை மாநகராட்சி தலைமை நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டி. சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதில் என்ன வியப்பு என்று கேட்கிறீர்களா..? வியப்புக்கான விஷயம் அதில்தான் அடங்கியிருக்கிறது.
ஆம் அந்த 2 சிறுவர்களுமே மூளை வளர்ச்சி குறைந்தவர்கள். மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது பெற்றோருக்கும், மருத்துவர்களும் சவால்விடும் விஷயம். ஆனால் அவர்களை நீச்சல் குளத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு நீச்சல் கற்றுத் தருவது என்பது சாதாரண விஷயமில்லை.
நீச்சல் கற்றுக் கொண்டிருந்த குழந்தைகளின் தாய்மார்களும் தங்கள் குழந்தைகள் நீச்சலடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் தாமாகவே எழுந்து வந்து நம்மிடையே பேசினார்.
""மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிறந்துள்ளது என்று டாக்டர்கள் சொன்னபோது நான் கலங்கிவிட்டேன். எனக்கு கடவுள் கொடுத்த வரம் இதுதானா என்று நொந்திருந்தேன்.
அப்போதுதான் பயிற்சியாளர் முனியாண்டி என்னிடம் வந்து, குழந்தையை என்னிடம் பயிற்சிக்கு அனுப்புங்கள் என்று சொன்னார். நான் முதலில் பயந்தேன். பயிற்சி பெறும் குழந்தை நீரில் மூழ்கிவிட்டால், தண்ணீரைக் குடித்துவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடுமே என்று கவலை கொண்டேன். ஆனால் எனக்கு தைரியமளித்த பயிற்சியாளர், எனது குழந்தை ஆகாஷுக்கு நீச்சல் பயிற்சி அளித்தார். அவரிடம் உள்ள கைதேர்ந்த பயிற்சியாளர்கள் குழந்தைகளை ஒரு நொடிகூட விடாமல் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். நீச்சல் குளத்திலிருந்து அவர்கள் எழுந்த பின்னர்தான் அவர்கள் பிள்ளைகள் மீதிருந்தே கண்களை எடுப்பார்கள். அவ்வளவு ஜாக்கிரதை.
பேசவே தெரியாதிருந்த எனது குழந்தை, இப்போது என்னிடம் பசிக்கிறது என்று சொல்கிறான். தண்ணீர் சுடுகிறது. வீட்டுக்குப் போகலாம்... என்று சொல்கிறான். எனது குழந்தை சரியாகிவிடுவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இங்குள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது அவன் தன்னையே மறந்துவிடுகிறான். நார்மலான மற்ற குழந்தைகளைப்போலவே இருப்பதைப் பார்க்கும்போது கடவுளுக்கு மட்டுமல்ல. பயிற்சியாளர் முனியாண்டிக்கும் நன்றி சொல்வதற்கு மட்டுமே தோன்றுகிறது'' என்றார் கண்கள் பனிக்க...
ஆம்... அது உண்மைதான். பேசவே தெரியாதிருந்த மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி மூலம் புதிய வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார் முனியாண்டி.
முனியாண்டியிடம் பேசியபோது....
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி கற்றுத்தரும் எண்ணம் எப்படி வந்தது?
குழந்தைகளில் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தை என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. சாதாரணமாகக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தபோது அங்கு அவர்களோடு சில நேரம் அவர்களின் உடன் பிறந்த மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளும் வருவார்கள். அவர்களுக்கும் ஆர்வம் இருப்பதை அறிந்தேன். அதனால் அவர்களுக்கும் பிரத்யேக வகுப்பைத் தொடங்கினேன்.
1990-ல் தமிழக காவல்துறையில் நீச்சல் பயிற்சியாளராக சேர்ந்தேன். 92-ல் பிளாக் கேட் படையினருக்கு நீச்சல் பயிற்சியாளராக இருந்தேன். 97-ல் கமாண்டோ படையினரின் பயிற்சியாளராக இருந்தேன். 2004-ல் சென்னை மாநகராட்சியில் தலைமை நீச்சல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டேன்.
அப்போது முதல் இந்த நாள் வரை நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் இன்று தேசிய அளவிலும், மாநில அளவிலும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் கொண்டு வந்து காட்டும்போது, அதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் ஏதுமில்லை.
50-க்கும் மேற்பட்டோர் தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளனர். உதாரணமாக ஸ்ரீராம், கார்த்திக், கமலி, யுவஸ்ரீ, சேரன்மேரி, அரவிந்த், முகேஷ், வெங்கடேஸ்வரன் ஆகியோரைச் சொல்லலாம்.
இதற்காக அதிக அளவில் ஸ்டடி செய்து, இளைஞர்களை என்னுடன் இணைத்து இந்தப் பயிற்சியைத் துவங்கினேன். இப்போது என்னிடம் மூளை வளர்ச்சி குன்றிய 10 குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
உங்களின் இந்த முயற்சிக்கு யாராவது தடை போட்டார்களா?
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னை எச்சரித்தனர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது சிக்கலானது. ஆபத்து வரும் என்றனர். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. இதை சவாலாக எடுத்துக்கொண்டு செய்து காட்டினேன். என்னிடம் நீச்சல் பயின்ற ஆர்த்தி என்ற மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி தேசிய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாள்.
நான் பட்ட கஷ்டத்துக்கு அன்றுதான் பலன் கிடைத்தது. முயற்சி திருவினையாக்கும் என்பார்களே? அது அன்று நடந்தது. அதன் தொடர்ச்சிதான் இன்று 10 குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.
அவர்களது பெற்றோர் என்னிடம் வந்து, உங்களால்தான், என்னுடைய குழந்தை பேசுகிறான். பசிக்கிறது சாப்பாடு கொடுங்கள் என்று கேட்கிறான் எனச் சொல்லும்போது அதை விட மகிழ்ச்சியான விஷயம் ஏதுமில்லை.
நீச்சல் பழகும்போது முதுகுவலி பிரச்னை வருவதில்லை. இதயத்துக்கும் நல்லது. கால் வலி, உடம்பு வலி வராது. முழு உடம்புக்கும் பயிற்சி தருவதுதான் நீச்சல். ஒரு நாள் நீச்சல் பயிற்சி செய்தால், உங்களுடைய மரணம் ஒரு நாள் தள்ளிப் போகும். இதை நான் சொல்லவில்லை. பிரபல டாக்டர்தான் இதை சொன்னார். நீச்சல் பழகுவதால் தோல்வியைத் தாங்கக் கூடிய சக்தி கிடைக்கும். இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
நீச்சல் பழக மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள்?
குறைந்த கட்டணத்தில் மைலேடீஸ் பூங்காவிலும், மெரீனா நீச்சல் குளத்திலும் நீச்சல் பயிற்சி பெறும் வசதியை மாநகராட்சி தருகிறது. சிறுவர், சிறுமிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
எதிர்காலத் திட்டம்?
2011-12-ம் ஆண்டில் ஆசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்லவேண்டும். இதற்காக எனது மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன். தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகவும் தொடர்ந்து பயிற்சிஅளிக்கிறேன். அவர்களுக்காகவே நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் பெறவைப்பேன்.
முனியாண்டியின் பேச்சைக் கேட்டால் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா பாடல்தான் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கும்தானே?