முகப்பு
தினமணி கதிர்

ஆரோக்கியம்: நீடித்த ஆயுளுக்கு வழிகாட்டும் உணவகம்!

சமையல் நிபுணர்களிடம் சமையல் செய்ய என்னவெல்லாம் தேவை என நாம் கேட்டால், ஒரு பெரிய பட்டியலையே தருவார்கள். அதில் புளி, மிளகாய், மசாலா பொருள்கள், பால் பொருள்கள் போன்றவை நிச்சயம் இருக்கும். ஆனால், மிளகாயும்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:08 AM
பகிர்:

சமையல் நிபுணர்களிடம் சமையல் செய்ய என்னவெல்லாம் தேவை என நாம் கேட்டால், ஒரு பெரிய பட்டியலையே தருவார்கள். அதில் புளி, மிளகாய், மசாலா பொருள்கள், பால் பொருள்கள் போன்றவை நிச்சயம் இருக்கும்.

ஆனால், மிளகாயும், புளியும் உடலைக் கெடுக்கின்றன என்ற கருத்து உள்ளது. இருந்தாலும் இவற்றைச் சேர்க்காமல் எவ்வாறு காரசாரமான உணவைத் தயாரிப்பது, அவ்வாறு தயாரிக்கப்படும் உணவில் சுவை இருக்குமா என்ற கேள்விகள் எழுவதும் இயல்பே. இதற்கு கரூர் லைட்

அவுஸ் கார்னரில் செயல்பட்டு வரும் நளன் உணவகம் நமக்கு விடையளிக்கிறது. இது குறித்து இதன் நிர்வாகி கே. தனபாலிடம் பேசினோம்.

Advertisement

""இங்கு சாப்பிட வருபவர்களை முதலில் நாங்கள் அன்பாக வரவேற்று உபசரிக்கின்றோம். பின்னர், இலையை விரித்து காய்கறி கூட்டுகளைப் பரிமாறி, அவற்றின் பலன்களையும் விளக்குகின்றோம். அதன் பின்னர் சாப்பாட்டுக்கு ஊற்றப்படும் குழம்பில் சேர்க்கப்பட்டுள்ள காய்கள், அவற்றின் மருத்துவக் குணங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குக் கூறுகின்றோம். இதைக் கேட்போருக்குத் தாங்கள் திருப்தியான, முழுமையான உணவை உண்கிறோம் என்ற நிறைவு ஏற்படுகிறது.

மேலும், எங்கள் உணவகத்தின் சுவர்களில் காய்கறிகளின் தன்மைகள், அவற்றின் மருத்துவக் குணம் குறித்த விவரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், எங்கள் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான உணவோடு, கூடுதல் தகவல்களையும் பெற முடிகிறது.

இந்த உணவகத்துக்கு வருவோர் எங்களிடம் கேட்கும் முதல் கேள்வி "மிளகாய், புளி சேர்க்காமல் எப்படிச் சமைக்க முடியும்?' என்பதுதான். அதற்குத் தேவையான விளக்கங்களைக் கொடுப்பதோடு, இங்கு பால், சர்க்கரை, கடுகு போன்றவையும் சேர்ப்பதில்லை என்ற கூடுதல் தகவலையும் தருகிறோம். நாங்கள் புளிக்குப் பதிலாக தக்காளியையும், மிளகாய்க்குப் பதிலாக மிளகையும், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றைத்தான் பயன்படுத்துகிறோம்.

இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சூப்கள், காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு கிடைக்கிறது. அருகம் புல் சூப்பில் தொடங்கும் மெனுவானது மிளகுத் தக்காளி சூப், கோதுமைக் கஞ்சி, சத்து மாவுக் கஞ்சி, ராகிக் கஞ்சி என்று ஒவ்வொரு நாளும் ஒன்று என்ற விதத்தில் வழங்கப்படுகிறது.

பின்னர் ரவா தோசை, பாசிப் பருப்பு தோசை, கடலை மாவு தோசை, முருங்கைக் கீரை தோசை, சோள தோசை, காளிஃபிளவர் தோசை என்ற விதத்திலும் தூதுவளை சட்னி, பீர்க்கங்காய் சட்னி, கேரட் சட்னி, கருவேப்பிலை சட்னி, புதினா சட்னி என்றும் எங்கள் மெனு விரிகிறது.

மதிய உணவில் முள்ளங்கி சாம்பார், அகத்திக் கீரை சாம்பார், கீரை சாம்பார், அவரைக் காய் சாம்பார், புடலங்காய் சாம்பார், பூசணிக்காய் சாம்பார், சுரைக்காய் சாம்பார் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சாம்பார் செய்து பரிமாறுகிறோம். மேலும், கொள்ளுத் துவையல், நெல்லிக்கனி ரசம், பிரண்டை ரசம், தூதுவளை ரசம், வல்லாரைக் கீரை ரசம், வெற்றிலை ரசம், துளசி ரசம், அகத்திக்கீரை ரசம் எனப் பலவித ரசங்கள் வைத்து வாடிக்கையாளர்களை அசத்துகிறோம்.

மாலையில் கிடைக்கும் சூப்பிலும், இரவில் கிடைக்கும் உணவிலும் மேலும் ஆச்சரியம் தரும் உணவு வகைகள் உள்ளன. அத்துடன் மோர் என்றதும் சோயாபீன்சிலிருந்து எடுக்கப்பட்ட பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட மோரைத்தான் இங்கு சாப்பிட வருபவர்களுக்குக் கொடுக்கிறோம். ஏனென்றால் சோயாபீன்ஸ் புரோட்டீனை அதிகரிப்பதோடு, எலும்பு மஜ்ஜைகளை உறுதியாக்குகின்றது.

மிளகாய், புளி, பால் இல்லாமல் சுவையாக மட்டுமல்ல ஆரோக்கியமான உணவைத் தயாரிக்க முடியும். உணவில் காரமும், புளிப்பும் சேரும்போது அவை உடலைக் கெடுப்பதோடு, வாழ்வின் ஆயுளையும் குறைக்கிறது. மனிதனின் முழு ஆயுள் காலம் 120 ஆண்டுகளாகும். ஆனால், நமது உணவுப் பழக்கவழக்கங்களால் அவ்வளவு காலம் நம்மால் வாழ முடிவதில்லை. இதற்கு நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் மசாலா பொருள்களே முக்கிய காரணம் ஆகும். இவற்றைச் சேர்க்காமல் ருசியான, ஆரோக்கியமான உணவைத் தயார் செய்ய முடியும் என்பதற்காகவே நவயுகம் அறக்கட்டளை மூலமாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். லாப நோக்கில்லாமல் நடத்தப்படும் இந்த உணவகத்தில் ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பது குறித்து விளக்குகிறோம். நளன் செய்முறை என்ற புத்தகத்தையும் வாடிக்கையாளர்கள் வாங்கிப் பயன் பெறலாம். எங்களது செய்முறையை அவர்கள் வீட்டிலும் செய்து, அதன்படி சமைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார்'' தனபால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.