முகப்பு
தினமணி கதிர்

பயிற்சி: குறைந்த மதிப்பெண்களா? கலங்கத் தேவையில்லை!

நிறைய மதிப்பெண்கள்... நிறைய மதிப்பெண்கள்... நிறைய மதிப்பெண்கள்... இன்றைய பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையே அவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுப்பதில்தான் இருக்கிறது. அதிலும் மருத்துவக் கல்லூரியில் இடம்

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:40 PM
பகிர்:

நிறைய மதிப்பெண்கள்... நிறைய மதிப்பெண்கள்... நிறைய மதிப்பெண்கள்... இன்றைய பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையே அவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுப்பதில்தான் இருக்கிறது. அதிலும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், கட் ஆஃப் மார்க் 200 ஐ நெருங்க வேண்டும். பொறியியலுக்கும் அப்படியே.

 கொஞ்சம் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் ஏழை மாணவர்களால் மருத்துவம், பொறியியல் படிப்புகளை நினைத்தும் பார்க்க முடியாது. லட்சக்கணக்கில் செலவு செய்து கல்லூரியில் இடம் பிடிக்க அவர்களால் முடியாது.

 மிகவும் குறைவான மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்த மாணவர்களின் கதி? அவர்களுடைய எதிர்காலம்?

 ""ஒன்றும் பயப்படத் தேவையில்லை'' என்கிறார் கவுதமன். சென்னை அமைந்தகரையில் "எஜுகேஷன் காரிடார்' என்ற பெயரில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் கவுதமன்.

 ""எனது சொந்த ஊர் திண்டுக்கல். அப்பா பி.எஸ்.பழனியப்பன் நல்லாசிரியர் விருது பெற்றவர். அவர் என்னை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பதற்காகச் சேர்த்தார். அப்போது எனக்கோ, என் அப்பாவுக்கோ என்னென்ன படிப்புகள் உள்ளன? எந்தப் படிப்பைப் படித்தால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது என்பதெல்லாம் தெரியாது. நான் படிப்பை முடித்து வெளியே வரும்போது கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நான் தெரிந்து கொண்டதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினேன்'' என்கிறார் கவுதமன்.

 ""இன்று நகரங்களில் உள்ள பெற்றோர் கூட பிள்ளைகளுக்குக் கல்வியைத் திணிக்கிறார்கள். தாங்கள் படிக்க முடியாத மருத்துவத்தை, பொறியியல் படிப்பைப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் கணக்கே வராத மாணவனைப் பொறியியல் படிக்கச் சேர்க்கிறார்கள். பொறியியல் படிப்புக்குக் கணக்கு அடிப்படை. கணக்கு வராத மாணவன் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறவோ, ஆர்வமாகப் படிக்கவோ முடியாமல் போகிறான். இதுபோல மாணவர்களுக்குப் பொருந்தாத, அவர்களுக்கு ஆர்வமில்லாத பல படிப்புகளைப் படிக்க வைக்கிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. நகரங்களிலேயே இந்த நிலை என்றால், கிராமங்களில் உள்ள மாணவர்களின் நிலையைப் பற்றிச் கேட்கவே வேண்டாம்'' என்ற அவரிடம், பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளுக்குத்தானே வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன? அதனால்தானே பெற்றோர் அவற்றைப் படிக்கச் சொல்கிறார்கள்? என்று கேட்டோம்.

 ""அப்படிச் சொல்ல முடியாது. தமிழ் முதுகலை படித்தாலும் இன்று வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. கல்லூரியில், பள்ளியில் ஆசிரியர் பணி முதற்கொண்டு பல்வேறு ஊடகங்களில் பலவிதமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பதற்குக் கலைப் படிப்புகளில் பட்டம் வாங்கினால் போதும். தமிழ்நாடு அரசுப் பணிகள், மத்திய அரசின் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் எழுதவும் முடியும். வேலை வாய்ப்பு என்றால் அது பொறியியல், மருத்துவம் என்று நினைப்பது தவறு'' என்கிறார் கவுதமன் உறுதியாக.

 பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவர்கள் என்ன செய்வது? என்று கேட்டோம்.

 ""பத்தாம் வகுப்பில், பிளஸ் டூ வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மருத்துவம் படித்து டாக்டராக முடியவில்லை என்றாலும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் நிறைய இருக்கின்றன. பத்தாம் வகுப்பில் மிகக் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புகளில் சேரலாம். நர்ஸிங் எய்டி, டென்டல் அஸிஸ்டென்ஸ், மெடிக்கல் ரிகார்ட் சைன்ஸ், ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, ஆக்ஸிடென்ட் அண்ட் எமர்ஜென்ஜி கேர் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்திஸ்யா டெக்னாலஜி என்று நிறையப் படிப்புகள் உள்ளன. இன்று மருத்துவத்துறையில் உள்ள பல கருவிகளைத் திறம்பட இயக்குவதற்கு பல மருத்துவமனைகளில் திறமையான ஆட்கள் இல்லை. இதே படிப்புகளில் பட்டப் படிப்புகளும் உள்ளன. உதாரணமாக பி.எஸ்சியில் கார்டியாக் டெக்னாலஜி, டயலிஸிஸ் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி போன்று 15 க்கும் அதிகமான படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் டூ வில் குறைந்த பட்சம் 40% மதிப்பெண்களும், பத்தாம் வகுப்பில் 35 % மதிப்பெண்களும் பெற்றிருந்தாலே போதும். நிறையப் பேருக்கு இது தெரியாமல் இருக்கிறது'' என்ற அவரிடம், பொறியாளராக ஆக வேண்டும் என்று கனவு கண்டு குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என்ன செய்யலாம்? என்று கேட்டோம்.

 ""பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பிளஸ் டூ படித்த மாணவர்கள் பொறியியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் சேரலாம். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ முடித்தவுடன் பி.இ. படிப்பில் இரண்டாம் ஆண்டு சேரலாம். பிளஸ் டூ படித்த மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம். அதன்பின்பு, பி.இ. இரண்டாம் ஆண்டில் சேரலாம். எனவே பிளஸ் டூ முடித்தவுடன் பொறியியல் கல்லூரிகளில் சேர முடியவில்லையே என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை'' என்கிறார் கவுதமன்.

 ""தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஹவுசிங் அண்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (தாட்கோ) ஆதி திராவிட மாணவர்களுக்குப் பல இலவசத் தொழிற் பயிற்சிகளை அளித்து வருகிறது. நர்சிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங், ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, கம்ப்யூட்டர் ஸôப்ட்வேர் புரோக்கிராமிங், எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக் ரிப்பேர் அண்ட் மெயின்டன்ஸ் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கிறது. 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம். ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் மட்டும் எட்டுவிதமான பயிற்சிகளை அளிக்கிறது. மூன்று மாதம், ஆறுமாதம், ஓராண்டு என எடுத்துக் கொள்ளும் பயிற்சிக்கேற்ப பயிற்சிக் காலம் மாறுபடுகிறது.

 மினிஸ்ட்ரி ஆஃப் மைக்ரோ, ஸ்மால் அண்ட் மீடியம் எண்டர்பிரைசஸ் என்ற மத்திய அரசு நிறுவனம் பல இலவச தொழிற் பயிற்சிகளை வழங்கி வருகிறது. மல்ட்டி மீடியா, இன்டஸ்டிரியல் கன்ட்ரோல் ஆட்டோமேஷன், டெஸ்டாப் அன்ட் லேப் டாப் என்ஜினீயரிங், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், அழகுக் கலை நிபுணர் பயிற்சி, எடிட்டிங் பயிற்சி உட்பட பல பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். பிளஸ் டூ, பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மனம் தளராமல் அவர்களால் முடிந்த பயிற்சிகளைப் பெற்று கடும் உழைப்பின் மூலம் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும்'' என்கிறார் கவுதமன் நம்பிக்கையுடன்.

 படங்கள்: ப.இராதாகிருஷ்ணன்

முழு கட்டுரையைப் படிக்க →