தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மாதவிடாய்க் காலத்தில் வயிற்று வ... தீர்வு கிடைக்குமா?

என் மகளுக்கு 20 வயதாகிறது. 3 ஆம் ஆண்டு பொறியியல் படிக்கிறாள். வயதுக்கு வந்தது முதல் மாதவிடாய் சரியாக வருகிறது. ஆனால் வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுகிறாள். முதல்நாள் வாந்தி குமட்டல் இருக்கிறது. மூன்

எஸ். சுவாமிநாதன்

என் மகளுக்கு 20 வயதாகிறது. 3 ஆம் ஆண்டு பொறியியல் படிக்கிறாள். வயதுக்கு வந்தது முதல் மாதவிடாய் சரியாக வருகிறது. ஆனால் வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுகிறாள். முதல்நாள் வாந்தி குமட்டல் இருக்கிறது. மூன்றாம்நாள்தான் கொஞ்சம் சரியாகிறது. இரவு தூக்கம் சரியாக இல்லை. கல்லூரிக்குச் செல்வதற்கு அதிக தூரம் பேருந்துப் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், மிகவும் சிரமப்படுகிறாள். இதற்கு ஆயுர்வேதத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா?

என்.உமாமகேஸ்வரி, சென்னை-33.

இதுபோன்ற கருப்பையைச் சார்ந்த உபாதைகளுக்கு, பெருஞ்சீரகம் அதாவது சோம்பு நல்ல தீர்வாக அமையும். மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வெகுட்டல், உமட்டல் போன்ற உபாதைகளில், வறுத்த 1 - 2 ஸ்பூன் பெருஞ்சீரகத்தை வெந்நீரிலிட்டு ஊற வைத்து வடித்துச் சாப்பிட மிகவும் நல்லது. சிறுநீர் தாராளமாகப் பெருகும். உடம்பும் லேசாக இருக்கும். அசதி தோன்றாது.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வாந்தி, குமட்டல், வயிற்றுவலி, தலை சுற்றுதல், அசதி முதலியவற்றைக் குறைப்பதில் துறிஞ்சிப் பழம் நிகரற்றது. இதன் சாறும் சர்க்கரையும் (இஞ்சியும் சிலர் சேர்ப்பர்) சேர்த்துப் பானகமாக்கி 1 -2 ஸ்பூன் தினம் 5 -6 வேளை சாப்பிடலாம். இந்தப் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் மாதீபலரஸôயனம் என்ற பிரசித்திமான ஆயுர்வேத பானத்தைச் சாப்பிடுவது நலமே.

சதகுப்பை எனும் சோயிக்கீரையின் விதையை அரைத்துப் புளி அல்லது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து, ரஸம் வைத்துச் சாப்பிட்டால் வயிற்றில் வாயு தங்காது. குடலில் மலத்தைத் தங்க விடாமல் சீராக நகர்த்திச் செல்லும். தடைகளை நீக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். ருசி, பசி, ஜீரணசக்தி தரும். உடல் வலியை அகற்றும். பெண்களின் மாதவிடாய்ப் பெருக்கு குறையும்போது சீர் செய்யும். கருப்பை வலியைக் குறைக்கும்.

ஜாதிக்காயை நீராவியில் சிறிது வேக வைத்து உலர்த்திப் பொடித்து 2 -4 கிராம் சாப்பிட்டு வெந்நீர் சாப்பிட வயிற்றில் வாயு தங்காமல் வெளியேறும். குடலில் உணவோட்டத்தைச் சீராக்கும். நரம்புகளுக்கு வலிவு தரும். மாதவிடாய்நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், பசி மந்தம், மலமிளகிச் சீரின்றி வெளியாதல், உடல் வலி, தலைவலி போன்றவை குணமாகும்.

காய்ச்சிய பசுவின் பால்விட்டுக் கசகசாவை அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடுவதன் மூலமாக மாதவிடாய்க் காலத்தில் வலி மிகுதியாக உள்ளவர், விரைவில் வலியின்றிக் குணமாகலாம். மாதவிடாய்க் காலத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே இப்படிச் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. தனித்துக் கசகசாவை ஊற வைத்து அம்மியில் அரைத்து தண்ணீர் விட்டுக் குழப்பி பால் பிழிந்து அடுப்பிலேற்றிக் காய்ச்சி கொதி வந்ததும் இறக்கிப் பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். பருவத்துக்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும், மாதவிடாய்க் கோளாறுகளைப் போக்குவதற்கும் ஏற்ற காலை உணவு இது.

எள்ளுப் பொடியும் வெல்லமும் கலந்து காலையில் சாப்பிடுவதன் மூலம், உதிரப் போக்கின் போது ஏற்படும் பல உபாதைகளுக்குத் தீர்வு ஏற்படும்.

தசமூலம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை சுமார் 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் உதிரப்போக்கு ஏற்பட சுமார் ஒரு வாரத்துக்கு முன்பாகச் சாப்பிட, வயிற்றுவலி இல்லாமல் உதிரப் போக்கு ஏற்படும்.

தான்வந்திரம் எனும் தைலத்தை வெதுவெதுப்பாக உடலெங்கும் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தாலும் உதிரப் போக்கு வலி இல்லாமல் உடலைப் பாதுகாக்கலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT