முகப்பு
தினமணி கதிர்

திரையில் முதல் முத்தம் அளித்த தேவிகாராணியும் ரஷ்ய ஓவியர் ரோரிச்சும்

ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்த ஸ்வெடோஸ்லாவ் நிக்கோலாவிச் ரோரிச் (அக்.23, 1904) 60 ஆண்டுகள் இந்தியாவை தாயகமாகக் கருதி பெங்களூரில் வசித்து வந்தபோது காலமானார் (ஜன,1993). இவரது தந்தையை போலவே

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்த ஸ்வெடோஸ்லாவ் நிக்கோலாவிச் ரோரிச் (அக்.23, 1904) 60 ஆண்டுகள் இந்தியாவை தாயகமாகக் கருதி பெங்களூரில் வசித்து வந்தபோது காலமானார் (ஜன,1993). இவரது தந்தையை போலவே பிரபல ஓவியராக விளங்கிய இவர் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றதோடு பெங்களூரில் உள்ள "சித்ர கலா பரிஷத்'தை நிறுவிய வகையில் ஓவியக்கலை வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.

இவரது தந்தை நிகோலாய் ஸ்டான்டோ நோவிச் (1874-1947). அவரது மனைவி ஹெலினா ஐவாநோவ்னா (1879-1955). இருவரும் பயணம் மற்றும் ஆராய்ச்சிகளில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஒரு சூழ்நிலை காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்கள் தங்கள் குழந்தைகள் ஜார்ஜ் மற்றும் ரோரிச்சுடன் 1916-ஆம் ஆண்டில் பின்லாந்து வந்தனர். பின்னர் 1919-ஆம் ஆண்டில் லண்டன் சென்ற ஓராண்டிற்குள் நியூயார்க் சென்றனர். தங்களுக்கென்று ஒரு நிரந்தரமான வசிப்பிடத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் நிக்கோலாய் மனதில் தோன்றியது.

1923-ம் ஆண்டில் இந்தியா வந்தவர் குளு பள்ளத்தாக்கில் நிரந்தரமாக குடியேறினார். 1928-ஆம் ஆண்டில் "உருஸ்வதி' என்ற கலைக்கூடத்தை அமைத்து இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையை வித்தியாசமான கோணங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களாக வரைந்து உலக அளவில் பிரபலப்படுத்தினார். ஓவியங்கள் மட்டுமன்றி "ஹார்ட் ஆஃப் ஆசியா', "சம்பாலா', "ரியல் ஆஃப் லைட்' உள்பட பல புத்தகங்களையும் எழுதி சர்வதேச அளவில் புகழ் பெற்றதால் ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தாகூர் போன்ற ஓவியர்களும் தத்துவ ஞானிகளும் இவருக்கு அறிமுகமானார்கள்.

ரோரிச்சிற்கு ஓவியத் துறையில் அவரது தந்தையே குரு என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயமாகும். லண்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கட்டடக்கலை, ஓவியம், சிற்பம் போன்றவற்றை கற்றுணர்ந்தவர். பல நாடுகளில் ஓவியக்கூடங்களையும் கலாசார மையங்களையும் துவக்கியதோடு தன் பெற்றோர்களுடன் இந்தியாவில் குடியேறுவதற்கு முன்பே தன்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை ஆர்டென்னஸ் நகரில் நடத்தி பிரபலமானார்.

1931-ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை பெற்ற ரோரிச் தன் தந்தையின் உருஸ்வதியின் பொறுப்பை ஏற்றார். 1945-ஆம் ஆண்டு ரவிந்திரநாத் தாகூரின் பேத்தியும் இந்தியத் திரையுலக முதல் பெண்மணியுமான தேவிகா ராணியை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தின் மூலம் இவரது வாழ்க்கையிலுமே திருப்பம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பின்னர் பெங்களூருவில் குடியேறிய இருவரும் இங்கேயே தங்கிவிட்டாலும் ஆண்டுதோறும் குளுவுக்குச் சென்று தந்தையின் ஓவிய கூடத்தைக் கவனிப்பதை கடமையாகக் கொண்டிருந்தார். ரோரிச் ஹெரிடேஜ் மியூசியம் (1962), இன்டர்நேஷனல் ரோரிச் மெமோரியல் டிரஸ்ட் (1992) இரண்டையும் நிறுவினார். பெங்களூருவில் நிறுவிய சித்ரகலா பரிஷத்தில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. இவர் வரைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் நாடாளுமன்ற சென்டரல் ஹாலில் இடம் பெற்றிருப்பது இவரது ஓவியத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

ரோரிச்சுடன் தேவிகாராணி இணைந்தது எப்படி?

1934-ஆம் ஆண்டு வெளிவந்த "கர்மா' திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனுக்கு துணிந்து முத்தம் கொடுத்த நடிகை என்ற புகழைப் பெற்ற தேவிகாராணி துவக்கத்தில் லண்டனில் ஆர்க்கிடெக்டாக பயிற்சி பெற்று வந்தார்.

ஏற்கெனவே இரண்டு மவுனப்படங்களை எடுத்து பிரபலமாகியிருந்த ஹிமான்சு ராய், தன்னுடைய படம் ஒன்றிற்கு செட் டிசைனாக பணியாற்ற அழைத்து வரப்பட்டு, கதாநாயகியாக அறிமுகப்படுத்த, ராய்-தேவிகாராணி ஜோடி பிரபலமடைந்தனர். சில வருடங்களுக்குள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தேவிகாராணியை விட வயதில் மிகவும் மூத்தவரான ராய், தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டபோது, மறுப்பேதும் கூறாமல் திருமணத்திற்கு தேவிகாராணி சம்மதித்தார்.

தேவிகாராணிக்காக தகுந்த ஜோடியை தேடியபோதுதான் அசோக்குமார் கிடைத்தார். இந்த ஜோடியும் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தாலும் 1939-ஆம் ஆண்டில் ராய், இறந்த பிறகு அசோக்குமாருடன் தொடர்ந்து நடிப்பதை தேவிகாராணி விரும்பவில்லை.

கணவரின் மறைவுக்குப் பின்னர் அவர் நடத்தி வந்த பாம்பே டாக்கீஸ் நிர்வாகத்தை இவரே ஏற்று நடத்தினார். 1944-ஆம் ஆண்டு முதன்முதலாக நடிப்பதற்காக மும்பை வந்த திலீப்குமாரை வைத்து படமெடுக்க மாதச் சம்பளம் 400 ரூபாய் கொடுப்பதாகக் கூறி ஒப்பந்தம் போட்டார். இதற்கிடையில் ரஷ்ய ஓவியர் ரோரிச்சை சந்தித்த தேவிகாராணி திரையுலகைவிட்டு விலக தீர்மானித்தார். பாம்பே டாக்கீஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்கை 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். 1945-ஆம் ஆண்டு பாம்பே டாக்கீஸ் நிறுவனம் மூடப்பட்டது.

ரோரிச்சுடன் பெங்களூர் சென்ற தேவிகாராணி மீண்டும் திரையுலகம் பக்கம் திரும்பவில்லை. 1950-ஆம் ஆண்டில் பெங்களூருக்கருகில் ஆங்கிலேயர் ஒருவரிடமிருந்து தத்தகுனி எஸ்டேட்டை விலைக்கு வாங்கி இருவரும் குடியேறினர். இவர்களுக்கு உதவுவதற்காக கர்நாடக அரசு நில உச்சவரம்பு சட்டத்தில் வரிவிலக்கு அளித்ததோடு அந்த எஸ்டேட்டை விரிவுபடுத்தவும் அனுமதியளித்தது. மொத்தம் 475 ஏக்கர் நிலம் இவர்கள் வசமானாலும் வாரிசு இல்லை.

சில ஆண்டுகளுக்குள் அவர்களது எஸ்டேட்டை அரசு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவசர சட்டமொன்றை இயற்றி மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பியது. அந்த எஸ்டேட்டில் உள்ள அபூர்வமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் ரோரிச் மற்றும் அவரது தந்தை நிக்கலோய் இருவரின் ஓவியங்களையும் பாதுகாத்து பொட்டானிகல் கார்டனுடன் கூடிய கலைக்கூடமொன்றை அமைப்பதற்காகவே எஸ்டேட்டை கையகப்படுத்துவதாக அரசு காரணம் காட்டியது.

ஆனால் தங்கள் சொத்து அரசு தரப்புக்குப் போகக்கூடாது என்றும் தங்கள் நலனும் காக்கப்பட வேண்டுமென்றும் அப்போதைய ரஷ்ய அதிபர் எல்ஸ்டினுக்கு ரோரிச்சும் தேவிகாராணியும் கடிதமெழுதினர். ரஷ்ய தூதர் மூலம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அமைதியோடு வாழ ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையில் 1970-ஆம் ஆண்டு தாதா பால்கே விருது முதன்முதலாக துவங்கப்பட்டபோது முதல் விருது தேவிகாராணிக்கு வழங்கப்பட்டது. அவரது வாழ்நாளில் அவர் நடித்தது 14 படங்களே என்றாலும் முதல் இந்தியத் திரையுலக பெண்மணி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

தனது இறுதி நாட்களில் தத்தகுனி எஸ்டேட், சித்ரகலா பரிஷத் என்ற வளையத்திற்குள்ளேயே வாழ்ந்த ரோரிச், 1993-ஆம் ஆண்டு மரணமடைந்தார். சித்ரகலா பரிஷத் வளாகத்தில் மைசூர் தலைப்பாகையுடன் பொதுமக்கள், கலைஞர்கள் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்ட அவரது உடல் மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் உடனிருந்த சிலர் செய்த நம்பிக்கை துரோகம் காரணமாக எஸ்டேட்டை விட்டு வெளியேறிய தேவிகாராணி, ரோரிச் இறந்த பதினைந்தாவது மாதத்தில் 85-வது வயதில் மார்ச் 9, 1994-ஆம் ஆண்டு காலமானார்.

தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தத்தகுனி எஸ்டேட் கர்நாடக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ரோரிச் தேவிகாராணி நினைவிடமாகவும் கலைக்கூடமாகவும் சித்ர கலா பரிஷத் உறுப்பினர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தில் முதன்முதலில் நடிக்க வந்தவர் தேவிகாராணி என்பது கூடுதல் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.