"ஐ' படப்பிடிப்பை சீனாவில் முடித்து விட்டு திரும்பிய ஷங்கர் விக்ரம் - எமி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார். இருவருக்குமான காதல் காட்சிகளில் எமிக்கு அதிகப்படியான வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் அத்தனை டயலாக்குகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு அதிகாலையில் இருந்தே மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடுகிறாராம். இவரின் ஆர்வத்தை, அர்ப்பணிப்பைக் கண்டு வியக்கும் ஷங்கர் ஒவ்வொரு காட்சியிலும் டயலாக்குகள் பேசி முடித்ததும் கை தட்டி உற்சாகப்படுத்தி வருகிறாராம்.
""படம் வெளிவரும் வரை துளசியின் போட்டோஸ் வெளியே வரக்கூடாது'' என்ற நிபந்தனையுடன்தான் "கடல்' படத்துக்கு ஒப்பந்தம் போட்டு, கையெழுத்து வாங்கினார் மணிரத்னம். இப்போது அவரே "கடல்' பட விளம்பரத்துக்கான போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். பார்ப்பதற்கே இவ்வளவு காலம், இப்போது பேசலாம் என காத்திருந்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம். துளசியின் போன் நம்பரை பிடிப்பதே போராட்டம். பிடித்ததும், முதலில் பெயர் காரணம் தருக என்றால், "'எங்க தாத்தாவுக்கு துளசியை ரொம்ப பிடிக்குமாம். தினமும் உணவில் துளசியை சேர்த்துக் கொள்வாராம். அதனால் அவர்தான் இந்த பெயரை வைத்ததாக அம்மா சொல்லுவார்'' என்கிறார் துளசி.
ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள்தான் எப்போதும் வெளிநாடுகளில் நடக்கும். இப்போது புதுமுகங்கள் நடிக்கும் "சுட்டக் கதை' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் நடக்கப் போகிறது என்று அறிவித்தால் எப்படியிருக்கும்? ஜெயா டி.வி.யின் பிரபலமான தொகுப்பாளர் பாலாஜி இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். "ஆரோகணம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சுப்பு இப்படத்தை எழுதி இயக்குகிறார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தமிழில் பிரபலமாக இருந்த காமிக் கதைகளை தொகுத்து சுவாரஸ்யம் கூட்டி அப்படியே படமாக்கி இருக்கிறார்களாம்.
மீனவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக கொண்டு மீண்டும் ஒரு படம். மணிரத்னத்தின் உதவியாளர் பிஜாய் நம்பியார் எழுதி இயக்கி அறிமுகமாகும் இப்படத்தின் பெயர் டேவிட். விக்ரம், ஜீவா முதன் முதலாக இணையும் இப்படத்தில் தபு, லாரா தத்தா, இஷா ஷெர்வானி என பாலிவுட்டின் உச்ச பட்ச நாயகிகள் நடிக்கின்றனர். நாசர் முக்கிய பாத்திரம் ஏற்கிறார். விக்ரம் - ஜீவா சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் தொடர்ந்து 17 மணி நேரத்துக்கும் மேலாக படமாக்கியிருக்கிறார்களாம். முக்கியமான அந்த நேரங்களில் படக்குழுவினரின் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆஃப்பில் இருந்ததாம்.
""இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்களில் இளைய பேரரசு, கவிப் பேரரசுகள், இளம் கவி என்றெல்லாம் கவிஞர்களுக்கு அடைமொழி கொடுத்து அச்சடிக்கிறார்கள். எங்களை அப்படியெல்லாம் அழைக்காதீர்கள். நாங்களெல்லாம் பட்டுக்கோட்டையாரின் பிள்ளைகள். மன்னர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ அடி வருடுபவர்கள் அல்ல.'' "ராம்சரண்' ஆடியோ வெளியீட்டு விழாவில் கவிஞர் அறிவுமதி பேசிய மேற்படி பேச்சு திரையுலகில் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காரணம் என்னவென்று விசாரித்தால், ""என்னைத் தாக்கி பேசுபவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்கள்'' என வார இதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்திருந்ததாகவும், அதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் அறிவுமதியின் இந்த பேச்சு அமைந்ததாகவும் பேசப்படுகிறது.
"அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தின் இசை கோர்ப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் மதுரையில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார்களாம். இந்த விழாவுக்காக இயக்குநர் பாரதிராஜா ஒரு திட்டம் தீட்டி இருக்கிறார். ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூவரையும் அந்த விழாவுக்கு அழைத்து அவர்களின் கையால் படத்தின் ஆடியோவை வெளியிடலாம் என்பதுதான் அது. மூவருக்கும் முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட்டு விட்டதாம். இது சாத்தியமானால் ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த நட்சத்திரங்கள் நெடுங்காலங் கழித்து ஒன்று சேருவார்கள் என்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நீடிப்பதற்கான ரகசியத்தை கேட்டால், இதில் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. வேண்டுமானால் சினிமாவில் நுழைந்த கதையைச் சொல்லுகிறேன் என ஆர்வம் காட்டினார் த்ரிஷா. என்னவென்று கேட்டால், மாடலிங் துறையில் இருந்த போது சினிமா ஆசை இல்லை. மிஸ் சென்னையான பிறகு சினிமா வாய்ப்பு தேடி வந்தன. அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. நான்தான் மூன்று படங்களில் மட்டும் நடித்து பார்க்கிறேன் என்றேன். அதன் படியே நடித்தேன். சொல்லி வைத்தது போல் லேசா லேசா, மௌனம் பேசியதே இரண்டு படங்களும் சரியாக போகவில்லை. மூன்றாவதாக வந்த சாமிதான் என்னை நிலை நிறுத்தியது என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.