சியாமா சாஸ்திரி, லால்பஹதூர் சாஸ்திரிக்கு உறவா?
எல்லோராலும் பேசமுடிகிறது. ஆனால் எல்லோராலும் பாட முடிகிறதா? முடியாது அல்லவா? அப்போது, பாடுகிற ஒரு சிலரின் பாட்டைக் கேட்க முடியாமல் சபாவுக்கு வந்து இம்சை செய்கிற, மனிதப் பிறவிகளை என்ன செய்யலாம், சொல்லுங
எல்லோராலும் பேசமுடிகிறது. ஆனால் எல்லோராலும் பாட முடிகிறதா? முடியாது அல்லவா? அப்போது, பாடுகிற ஒரு சிலரின் பாட்டைக் கேட்க முடியாமல் சபாவுக்கு வந்து இம்சை செய்கிற, மனிதப் பிறவிகளை என்ன செய்யலாம், சொல்லுங்கள்?
சின்ன சபாக்களில்தான் இந்தத் தொல்லை. முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற பிரமுகர்கள் சிலர் பண்ணுகிற அடாவடி (அல்லது அட்டகாசம்) சில வேளைகளில் தாங்க முடிவதில்லை. அவர்களுக்கோ முன் வரிசையில் உட்கார்ந்தால்தான் கவுரவம். அங்கே உட்கார்ந்து கேட்டால்தான் கச்சேரி கேட்ட மாதிரி.
ஒரு பெரிய புள்ளி, முதல் வரிசையில் உட்கார்ந்து கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தார். கேட்கட்டும் அல்லது கேட்டுத் தொலையட்டும். ஆனால் இப்படியா ஒரு ராட்சச தும்மல் தும்ம வேண்டும்? அதிலும் கச்சேரி தொடங்கி, பாடகி முதல் உருப்படியை ஆரம்பித்தவுடனேயா? அதுவும் அபசகுனமாக ஒற்றைத் தும்மல். தும்மல் சத்தத்தில் நடு நடுங்கிப் போன பாடகி, என்னடா இது, மனுஷன் ஆரம்பத்திலேயே தும்மறார். அதுவும் ஒத்தைத் தும்மல் என்று நினைத்துத் திகைத்திருப்பார்.
அனுபல்லவி தொடங்கியதும் இன்னொரு டுமீல் தும்மல். அடுத்த வினாடியே அதைத் தொடர்ந்து இரட்டைக் குழந்தை பிரசவம் மாதிரி இன்னொரு பயங்கர டுமீல் தும்மல். தும்மல் வந்தால் அடக்கிக்கொள்ளக் கூடாதா? அல்லது கடைசி வரிசையில் உட்கார்ந்து, இஷ்டத்துக்குத் தும்மிக்கொண்டே இருக்கக் கூடாதா? ஒரு கர்சீப்பை வைத்து முகத்தில் முக்கால் பங்கு மூடிக்கொண்டார் பிரமுகர். காரணம், அருகிலிருந்து முறைத்த அவர் தர்மபத்தினிதான். ஏதோ நில அபகரிப்பு வழக்கில் சிக்கிக்கொண்டு போலீஸ் வேனில் ஏறுகிற அரசியல்வாதி மாதிரி முகத்தை இப்போது பொத்திக்கொள்ளத் தெரிகிறதே... இந்த நினைப்பு, தும்மல் வந்தவுடன் எங்கே போச்சு? (பெண்டாட்டி கேட்காவிட்டாலும் தொலைகிறது. நாம் கேட்போம்.)
சபையோர் இப்போது சரணத்தின்போது மூன்றாவது தும்மலுக்குக் காத்திருக்கத் தயாராகிவிட்டார்கள். அவர்களை அந்த முதல் வரிசை மகானுபாவுலு ஏமாற்றிவிடவில்லை. போட்டார் ஒரு ராட்சசத் தும்மல். அடுத்து அதைவிட பயங்கரத் தும்மல். அதையடுத்து இன்னோர் அதி பயங்கர ராட்சசத் தும்மல். ஆக, பல்லவிக்கு ஒரு தும்மல் என்றால், அனுபல்லவிக்கு இரண்டு தும்மல். சரணத்துக்கு மூன்று தும்மல் என்று இப்படி ஏதானும் கணக்கு வைத்திருப்பார் போலும்! பாடுகிறவர்கள்தான் லயத்தில் கணக்கு விவகாரங்கள் வைத்து, ரசிகர்களையும் பக்கவாத்தியக்காரர்களையும் குழப்பியடிப்பார்கள். இப்படி முன் வரிசை முத்தண்ணாக்களுமா கணக்கு வைத்துக்கொண்டு தும்மித் தள்ள வேண்டும்?
ஒரு கீர்த்தனைக்கு ஆறு தும்மல் என்று வைத்துக்கொண்டால் - ஒரு கணக்குக்குச் சொல்கிறேன் - ராகம்-தானம்-பல்லவிக்கு எத்தனை தும்மல் அடுக்கடுக்காகத் தும்மித் தொலைக்க வேணும்? யார் இதை எல்லாம் கணக்கு வைத்துக்கொள்வார்கள்? கச்சேரிக்கு வந்தால் ஓர் ஒழுங்குமுறை கிடையாதா?
தில்லி பட்டியாலா கோர்ட்டில் இப்படி எல்லாம் இஷ்டத்துக்குத் தும்மினால் நீதிபதி மூன்று மாதக் கடுங்காவல் விதித்து, திஹார் ஜெயிலுக்கு அனுப்பிவிடமாட்டாரா அதுவும் கச்சேரிதானே?
இன்னொரு வயிற்றெரிச்சல் கும்பல் இருக்கிறது. முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு பாட்டு முடிந்ததும், ""ஆகா, பிரமாதம். பேஷ், பேஷ், கல்யாணி ரொம்ப நல்லா இருந்துது'' என்பார்கள். இல்லாவிட்டால் காம்போதி, இல்லையா சாவேரி, அசாவேரி. ஏதாவது ஒன்று. அவர்கள் வந்து முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டிருப்பது சபையோருக்குத் தெரியவேண்டும். அவ்வளவுதான். என்ன ராகம்? எப்படிப் பாடப்பட்டது? என்பது முக்கியமில்லை. கச்சேரி என்றால் ஒரு "டிசிப்ளின்' வேண்டாம்?
வேறு ஒருவகை உபத்திரவ மூர்த்திகள் இருக்கிறார்கள். முன் வரிசையில் அமர்ந்தபடி, சபை நடத்துகிறவன் காதுக்குள் "இயர் டிரம்' இருக்கிற இடத்தில் நாற்காலி போட்டு உட்காராத குறையாக அமர்ந்துகொண்டு, சத்தமாக அவரிடம் யோசனை சொல்லுவார்கள். சொல்லித் தொலைக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. இத்தனை பெருங்குரலிலா? பாடகர் அல்லது பாடகிக்கு இடைஞ்சலாக இருக்குமே... என்று தோன்றாதோ? பின்வரிசைகளில் உட்கார்ந்தால் மட்டும் என்ன வாழ்ந்தது? என்று கேட்கலாம்.
அங்கே உட்கார்ந்திருப்பவர்கள் ஒன்றும் மோசமில்லை. தங்களுக்கு வந்திருக்கும் லேட்டஸ்ட் வியாதி, அதற்கு எடுத்துக்கொள்ளும் வைத்தியம், ஆகிற செலவு, மச்சினி கல்யாணம் நின்று போனது, மாமியார் லூட்டி அல்லது மருமகள் லூட்டி என்று ஒரே பிழிச்சல். ஆயுர்வேத வைத்திய நவரக்கிழி பிழிச்சல் எல்லாம் எந்த மூலைக்கு?
முன் வரிசைக்காரர்களும் வேண்டாம். கடைசி வரிசைக்காரர்களும் வேண்டாம். நடுவில் எப்படி? அங்கேயும் இருக்கிறது ஓர் இக்குமத்து. இது என்ன ராகம்? இது என்ன தாளம்? இது யாரோட சாகித்தியம்? கோபாலகிருஷ்ண பாரதியா, கோபாலகிருஷ்ண கோகலேயா? - பிடுங்கல்கள். அடுக்கடுக்கான பிடுங்கல்கள். அது சியாமா சாஸ்திரி எழுதினதாக இருந்துவிட்டால் தொலைந்தது. "அது யார் சார், லால்பஹதூர் சாஸ்திரிக்கு உறவா?' என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாத அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
போதும்டாப்பா. வாழ்க்கையில் வெறுப்பு தட்டாமல் இருக்க ஏதானும் கச்சேரி கேட்கப் போகலாம் என்றால்... எவ்வளவு ரோதனை, பாருங்கள். வித்துவான்கள் கேட்கிறார்களே என்று "மைக்'காரர் ஒலியை ரொம்ப தூக்கி வைத்து விடுவதாகவும், காது செவிடாகிப் போவதாகவும் ஒரு புகார் ரசிகர்களிடம் இருக்கிறது. (ஒரு நண்பர், கச்சேரிக்குக் கிளம்பு முன் வேறு என்ன எடுத்துக்கொள்கிறாரோ இல்லையோ, ஒரு சின்னப் பந்தளவுக்கு பஞ்சு எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டுதான் கிளம்புகிறார்!) மைக்-காரர்களே, அப்படி ஒன்றும் ஒலியைக் குறைத்துவிடாதீர்கள். அப்போதுதான் கொஞ்சம்பேர் சத்தமாக பூகம்பம் மாதி 6.2 ரிக்டர் அளவுக்குத் தும்ம முடியும். கொஞ்சம் பேர் சத்தம் போட்டுப் பேச முடியும். கொஞ்சம் பேர் சங்கீதமும் கேட்க முடியும்!
இந்த லட்சணத்தில், தில்லியில் இருக்கிற பாகிஸ்தான் நாட்டுப் பெண் நிருபர் சோனியா பட்டா, போன மாசம் எழுதியிருந்ததைப் படிக்க ஆச்சரியம், கோபம், சந்தேகம் (தும்மல் தவிர) எல்லாம் வந்தன. ஒவ்வொரு தடவையும் கராச்சிக்குப் போகும்போது, அவருடைய சினேகிதர்களிடமிருந்து வரும் கடிதங்களில், சில சாதனங்கள் வாங்கிவரச் சொல்லி ஒரு பட்டியல் இருக்குமாம். அதில் முதல் இடம் எதற்கு தெரியுமோ? கர்னாடக இசை ஒலித்தகடுகளாம்!
அவர்களோ ஹிந்துஸ்தானி இசை, கஜல் என்று பழக்கப்பட்டுப் போனவர்கள். அமைதியாக உட்கார்ந்துகொண்டு ரசித்துக் கேட்பார்கள். ஆர்ப்பாட்டமே இருக்காது. என்ன, பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் சுருதி சேர்க்கிறேன் பேர்வழி என்று "டொய்ங் டொய்ங்' என்று ஆரம்பித்துப் பாட்டை நிறுத்தி விடுவார்கள் அந்த வித்துவான்கள். மூன்று மணி நேரத்தில் இரண்டே முக்கால் பாட்டுப் பாடினால் அதிகம். இங்கே மிருதங்கக்காரரும் கடம் வாசிப்பவரும் தடாலடியாக அடித்து வாசிப்பதையும், அடிதடி ரகளையாகப் போட்டி போட்டுக்கொண்டு பாடுவதைக் கேட்டுவிட்டு, தலையில் (அல்லது காதில்) கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடப்போகிறார்கள்.
தும்மல் சத்தம், பேச்சு சத்தம், தனி ஆவர்த்தன வாத்திய நொறுக்கல்கள் சப்தம், சகோதரர்கள் போட்டி சங்கீத சப்தம் இல்லாத சிடிக்களாகப் பார்த்து அனுப்புங்க அம்மணி, உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!