தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கருணைக் கிழங்கு ஒன்றே போதுமே!

என் வயது 48. சேல்ஸ் ரெப்பாக வேலை செய்த போது அதிகப் பயம், ஹோட்டல் சாப்பாடு, அதனால் மூலச் சூடு, வெளிமூலம், ரத்தப் போக்கு வந்தது. உடல் சூடாகி ரத்தக் கொதிப்பு. கொலஸ்ட்ரால் கூடி அதற்கு மருந்து. பசிக்குறைவு

எஸ். சுவாமிநாதன்

என் வயது 48. சேல்ஸ் ரெப்பாக வேலை செய்த போது அதிகப் பயம், ஹோட்டல் சாப்பாடு, அதனால் மூலச் சூடு, வெளிமூலம், ரத்தப் போக்கு வந்தது. உடல் சூடாகி ரத்தக் கொதிப்பு. கொலஸ்ட்ரால் கூடி அதற்கு மருந்து. பசிக்குறைவு, வயிறு உப்புசம், சாப்பிட்ட பின் சத்தத்துடன் ஏப்பம், காலையில் மலம் கழிக்கச் சென்றால் ஆசன வாய் வழியாகச் சத்தத்துடன் வாயு பிரிவதால் மூலச் சூடு. காலையில் எழும்போது சோம்பேறித்தனம். தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தால், ஓரளவு சுறுசுறுப்பு வரும். இவை அனைத்தும் மாற, ஆயுர்வேத மருந்து கூறவும்.

ஆர்.தாமரைச்செல்வன், ஈரோடு.

பசி வேளையில் ஹோட்டலில் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டதால், இன்று இந்த நிலைக்கு நீங்கள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. உடல்நிலை சரியாக இல்லை. ஏதோ கேடுவர இருக்கிறது. உடல் கனம், அசதி, செயல் தடுமாற்றம், பசி மந்தம் போன்ற இனம் தெரியாத நோய்ச் சின்னங்கள் தோன்றியுள்ள நிலையிலாவது உணவைக் கவனித்து நிதானித்து ஏற்றிருந்தால், இதில் பல உபாதைகளைத் தவிர்த்திருக்கலாம். சரி, வந்துவிட்டது, இவற்றை எப்படிக் குணப்படுத்தலாம் என்று சற்று சிந்தித்துப் பார்த்து, உடலைச் சீராக்க முடியுமா? என்பது பற்றி ஆராய்வோம்.

மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக ஏற்று நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு. உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது சற்றுக் கடுமை குறைந்த பத்தியமுறை.

இதன் சுவை காரணமாக, சூடான வீர்யமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும். கிழங்குகளில் இது சுலபமாக ஜீரணமாவதும் கபத்தையோ வயிற்றில் வாயுக் கட்டையோ செய்யாமலிருப்பதுடன் வாயு கபக் கட்டுகளைப் போக்குவதுமாகும். ருசி, பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது, மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையையும், தடையையும் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள். "வன சூரணாதி' என்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

அசப்பில் முள்ளங்கியின் கீரையைப் போல இருக்கும் காசினிக் கீரையைப் பயத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்துச் சாப்பிட்டால் மூலத்தின் ரத்தம் நிற்கும். அவ்வப்போது இதைச் சமையலில் கூட்டி வருவது மூல வியாதி உள்ளவருக்கு மிகவும் விரும்பத்தக்கது.

தனியா இரண்டு பங்கு, சுக்கு ஒரு பங்கு சேர்த்துக் காய்ச்சிய தண்ணீரிலேயே கறி கூட்டு ரஸம் குழம்பு முதலியவற்றைச் சமைத்து உண்பது என்ற பழக்கமும் மூலத்தின் உபத்திரவத்தைத் தடுக்கவும், காலக் கிரமத்தில் நோயை ஒழிக்கவும் உதவி புரியும்.

மேற்கூறிய உணவுமுறைகளுடன் மோர் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லதே. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்துச் சாப்பிடுவது, மணத்தக்காளிக் கீரையை அதிகம் உணவில் சேர்ப்பதும் நல்லதே.

அபயாரிஷ்டம் மற்றும் துராலபாரிஷ்டம் எனும் ஆயுர்வேத மருந்துகளை 15 மி.லி. வீதம் சேர்த்து, மொத்தம் 30 மி.லி. காலை இரவு உணவுக்குப் பிறகு சுமார் 48 நாட்கள் நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, உபாதைகள் அனைத்தும் குறைய வாய்ப்பிருக்கிறது. முன் குறிப்பிட்ட லேகிய மருந்தையும் காலை, மாலை வெறும் வயிற்றில், சுமார் 10 கிராம் வீதம் நக்கிச் சாப்பிட்டு வரலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT