முகப்பு
தினமணி கதிர்

'மேஜிக்' மதுபாலா

"கண்ணழகி' காஞ்சனமாலா தமிழ்த் திரையுலகில் கொடிநாட்டினார். இந்திப் படவுலகில் "கனவுக் கன்னி'யென பெயரெடுத்தவர் மதுபாலா. "மொகலே ஆஸம்' படம் பிரம்மாண்டத்திற்காக மட்டுமல்ல; இவரின் நடிப்புக்காகவும் புகழ்பெற்றத

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

"கண்ணழகி' காஞ்சனமாலா தமிழ்த் திரையுலகில் கொடிநாட்டினார். இந்திப் படவுலகில் "கனவுக் கன்னி'யென பெயரெடுத்தவர் மதுபாலா. "மொகலே ஆஸம்' படம் பிரம்மாண்டத்திற்காக மட்டுமல்ல; இவரின் நடிப்புக்காகவும் புகழ்பெற்றது.

தன் வாழ்நாள் முழுக்க தனக்குத்தானே பாதுகாவலாக இருந்த "கண்ணழகி' மதுபாலா மனிதர்களில் சிலரை நேசித்தார். நேசித்த கையோடு அவர்களை இழந்தார். கடைசிவரை தனிமையில் வாழ்ந்த அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுயவழிபாடுள்ள ஒவ்வொருவரும் குறைகளை ஏற்க மறுப்பதுபோல் தன்னைத்தானே நேசித்தார். ஏழாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் 1966-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி மீண்டும் "சாலக்' என்ற படத்தில் நடிக்கவந்த அவர், அந்தப் படத்தை முடிக்காமல் போகமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார். ஆனால் அந்தப் படம் முடிவடையவே இல்லை. "மிஸ்ட்ரி அண்ட் மிஸ்டிக் ஆஃப் மதுபாலா' என்ற நூலிலிருந்து ஒரு பகுதி:

அத்தாவுல்லா கான் உடல் நலம் சரியின்றி படுத்திருந்தார். அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் மதுபாலா. இவர்களில் யார் யாரைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தெரியாது. கானுக்கு மகளைப் பார்த்தால் பயம். அவளது ரத்த நாளங்களில் "பத்தான்' இன ரத்தம் ஓடுகிறதென்பது தெரியும். மதுவுக்கு எது தேவை என்றாலும் உடனே கிடைத்தாக வேண்டும். சிறுமியாக இருந்தபோது மும்பை நடைபாதைகளில் செல்லும் டிராம் வண்டிகளில் சென்றும் பழக்கப்பட்டவர். நடிகையானவுடன் அவரது ஒரே வருமானத்தில்தான் குடும்பமே ஓடிக் கொண்டிருந்தது. அப்பாவைக் கண்டால் அவளுக்குப் பயம். அவளது அம்மாவையும் சகோதரியையும் அவர் அடிப்பதைப் பார்த்திருக்கிறார். ஆனால் மதுபாலா மீது கையை ஓங்கியதில்லை. ஒருவேளை மறுநாள் கேமிரா முன்பு நிற்கவேண்டுமே என்ற சலுகையாகக் கூட இருக்கலாமென்று நினைத்தார். அப்பா வீட்டில் இல்லாத போது அவள் சற்று உற்சாகமாகவும் ஓய்வாகவும் இருப்பதை பலர் கவனித்தனர்.

ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் நல்ல எடுப்பான அழகான மனிதரொருவர் டைரக்டர் நஜம் நக்வி, இசையமைப்பாளர் குலாம் முகமதுவுடன் பேசிக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவரது தோற்றமும் பேசும் தொனியும் முகலாய இளவரசர் போல் இருந்தது. அவர்தான் கமல் அம்ரோஹி.

மதுபாலா தன்னைக் கவனிப்பதை உணர்ந்த கமல், அவரது கண்களையே உற்றுப் பார்த்தார். அந்த கண்களில் என்ன மந்திர வார்த்தைகளைக் கண்டறிந்தாரோ தெரியவில்லை.

அப்போது மதுபாலா ஒன்றுக்கும் தேறாத சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வந்தபோதிலும் அவரது அழகைப் பாராட்டாதவர்களே இல்லை. அதிகமாகப் பேசப்பட்ட அவரது கோபக்காரத் தந்தை அங்கு இல்லை.

பேசிக் கொண்டிருந்த கமல், மதுபாலா அருகில் வந்து ""வா... நீயும் எங்களுடன் வந்து உட்கார்..'' என்றார். நன்றியுடன் வணக்கம் தெரிவித்தவர், அவர்களுடன் அமர்ந்தார். எப்போதும் கம்பீரமான பெண் போல் அமரும் மதுபாலா அன்று பணிவுடனும் விருப்பத்துடனும் அமர்ந்தார்.

முதன்முறையாக தனது வாழ்க்கையில் ஒரு மனிதன் அன்போடு தன்னிடம் பழகுவதை உணர்ந்தார். எப்போதும் காமப் பார்வையுடன் பார்க்கும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் நடுவே பரிவோடு தன்னை கவனிக்கும் அந்த மனிதன் அவரது பார்வைக்கு வித்தியாசமாகத் தெரிந்தார்.

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் தேவையற்ற வார்த்தைகள் இல்லை. சரிந்து விழுந்த துப்பட்டாவைக் கைகளால் சரிசெய்து கொண்டார். அவரது அழகு கமலை வசீகரித்தது. முதன்முறையாக மதுபாலா தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து வெட்கமடைந்தார். கமல் புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் அவரால் மதுபாலாவையோ அவரது கண்களுக்களித்த வாக்குறுதியையோ மறக்க முடியவில்லை. கமல் அம்ரோஹி திரைக்கதை, கதை, வசனத்தை தூய்மையான உருது மொழியில் எழுதும் திறமைகள் இருந்தாலும் திரைப்படத்தை இயக்கியதில்லை. முதன்முதலாக பத்தாண்டுகளுக்கு முன்பு ஷோராப் மோடியின் "புக்கார்' படத்திற்கு வசனம் எழுதியபோது முகலாய அரசரொருவர் பேசுவது போன்று இயற்கையாக இருந்ததைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்ததுண்டு.

இப்போது முதன்முறையாக அவர் டைரக்டராக விரும்பியதோடு மதுபாலாவை கதாநாயகியாக தன் படத்தில் நடிக்க வைக்கவும் ஆசைப்பட்டார். மதுபாலாவின் "மோனலிஸா' புன்னகைக்கேற்ப கதையை எழுதிவைத்திருந்தார்.

அப்போது அசோக்குமார் கொல்கத்தாவில் இருந்தார். கமல் அம்ரோஹி தனது "மகால்' கதையை பாம்பே டாக்கீஸ் ஸ்டுடியோ நிர்வாகத்தை கவனிக்க வந்த வாச்சாவிடம் கூறினார். அது ஒரு சஸ்பென்ஸ் கதை. கதை பிடித்திருந்தாலும் சஸ்பென்ஸ் கதைகளைப் பார்க்கும் ரசிகர்கள் மறுமுறை தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று வாச்சா தன் சந்தேகத்தைத் தெரிவித்தார். ஏற்கெனவே ஆஷா, மஜ்பூர், ஜித்தி போன்ற படங்களின் தோல்வியால் அப்போது பாம்பே டாக்கீஸ் நஷ்டத்தில் இருந்தது. வாச்சா மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. உரிமையாளர் ஹிமான்ஷூ ராய்க்கு அவரது மனைவி தேவிகாராணி மீது நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் அப்போதுதான் தன்னுடன் நடித்துக் கொண்டிருந்த நஜ்மல் உசைன் என்ற நடிகருடன் ஓடிப்போன தேவிகாராணி மீண்டும் தன் கணவர் ஹிமான்ஷூ ராயிடம் திரும்பியிருந்தார். அசோக்குமார் பிரச்னையில்லாத ஒரு பெங்காலி என்பதால் அவரைக் கதாநாயகனாக நடிக்கவைக்கலாமென்ற நம்பிக்கை அவருக்கிருந்தது.

கமல் அம்ரோஹியின் "மகால்' ஒரு வரிக் கதையை கேட்ட அசோக்குமார், நிச்சயம் இந்தப் படம் வெற்றிபெறுமெனக் கூறினார். பாம்பே டாக்கீஸýம் இந்த நம்பிக்கையைத்தான் எதிர்பார்த்தது. ஆனால் கமல் அம்ரோஹியே இந்தப் படத்தை இயக்க விருப்பம் தெரிவிப்பதாக வாச்சா, அசோக்குமாரிடம் கூறினார். அதனால் என்ன செய்யட்டுமே என்றார் அசோக்குமார். இதற்கு முன் எந்த படத்தையும் அவர் இயக்கியதில்லை என்று வாச்சா டெலிபோனில் சொல்லிக் கொண்டிருந்தபோதே குறுக்கிட்ட கமல், ""முதன்முறையாக நான் இயக்கப் போகிறேன்..'' என்றார்.

இறுதியில் கமல் அம்ரோஹி படத்தை இயக்குவதென தீர்மானிக்கப்பட்டது. அசோக்குமார் கதாநாயகன். ஏற்கெனவே ஒரு படத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சுரைய்யா, கதாநாயகி என முடிவு செய்யப்பட்டது. அப்போது அதுகுறித்து ஏதும் சொல்லாத கமல், மற்றொரு சந்திப்பின் போது என்னுடைய கதைக்கு சுரைய்யா பொருத்தமானவர் அல்ல. சுரைய்யா திறமையானவர், அழகானவர், நன்றாகப் பாடக் கூடியவர் என்றாலும் இந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் அல்ல. இது ஒரு புதிரான பாத்திரம். அவரால் செய்யமுடியாது என்றார்.

ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கம்பெனிக்கு இது பேரிடியாக அமைந்தது. சுரைய்யாவுக்கு ஏற்கெனவே கொடுத்த பணம் நிச்சயமாகத் திரும்பாது. அவரது பேராசைக்காரப் பாட்டி ஒரு பைசாக்கூட திருப்பித் தரமாட்டார்.

கமல் அம்ரோஹியை வேண்டாமென்று சொல்லி சொல்லி அவரை ஒதுக்கிவிடலாம். ஆனால் கதை அவருடையது.

""படத்தை நான் தயாரிப்பதாக இருந்தால் மதுபாலாவைத்தான் கதாநாயகியாக நடிக்கவைப்பேன். இல்லையெனில் படத் தயாரிப்பையே நிறுத்திவிடுவேன்..'' என்று கமல் பிடிவாதமாகக் கூறினார்.

பிரச்னை வளர்ந்தது. கடைசியில் கமல் ஒரு யோசனை கூறினார். ஸ்க்ரீன் டெஸ்ட் எடுப்போம். முடிவை மற்றவர்களிடம் விடுவோம். முடிவு என்ன என்பதைப் பார்த்துவிட்டு உங்களுக்கு விருப்பமில்லையெனில் வேறு கதாநாயகியைத் தேர்ந்தெடுங்கள் என்று தீர்மானமாகக் கூறினார்.

அவரது யோசனை ஏற்கப்பட்டது. ஆனால் அதன் பின்னால் மாபெரும் சதியொன்று உருவானது. ஸ்க்ரீன் டெஸ்ட்டில் தேறாதபடி மதுபாலாவுக்கு மேக்-அப் போடும் போது சொதப்புவதென்றும், பின்னாளில் "பாகீசா' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெர்மன் காமிராமேன் ஜோசப் விர்ச்சிங்கிடம் எப்படியாவது ஸ்க்ரீன் டெஸ்ட்டை சீர்குலைக்கும்படியும் கூறப்பட்டது.

ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு மதுபாலா அவரது தந்தை கானுடன் வந்தார். எல்லாமே திட்டத்தின்படி பாழாயிற்று.

கமல் அம்ரோஹி திகைப்பும் கோபமும் அடைந்தார். மதுபாலா சரியான தேர்வு என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. தொழில் நுணுக்கம் அறிந்தவராக இருந்திருப்பின் இதற்கான காரணத்தை அவர் கண்டுபிடித்திருக்க முடியும். மீண்டுமொரு முறை வாய்ப்பளிக்கும்படி கேட்டார்.

காதல் வயப்பட்ட ஒரு மனிதனால் மட்டுமே இப்படிக் கேட்க முடியும். தவறுக்கு உடந்தை என்ற காரணத்தால் மீண்டும் வாய்ப்பளிக்க தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஒப்புக் கொண்டனர். இந்த முறை கமல் அம்ரோஹியே ஸ்க்ரீன் டெஸ்ட் நடத்தினார். அவரே மேக்-அப் மேனாக மதுபாலாவின் தலையைத் துப்பட்டாவால் முக்காடிட்டு ஒவ்வொரு கோணத்திற்கும் தேவையான வெளிச்சத்தை வைத்துப் படமாக்கினார். மாஜிக் மதுபாலா அவரது மந்திர வசியத்தால் அனைவரையும் வீழ்த்தினார். சுரைய்யாவுக்குப் பதில் மதுபாலா ஒப்பந்தம் செய்யப்பட்டு சம்பளமாக 7 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. "மகால்' திரையிடப்பட்டபோது அதன் வெற்றி மதுபாலாவை உச்சத்திற்குக் கொண்டுசென்றது. சுரைய்யாவால் மட்டும் கடைசிவரை மதுபாலாவை மறக்கமுடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.