முகப்பு
தினமணி கதிர்

மோசமான ஜோக்ஸ்

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண் கையிலிருந்த புகைப்படத்தைக் காட்டி அழுதபடியே சொன்னாள்,""இவர் என்னுடைய கணவர். காணாமல் போய்விட்டார். நீங்கள்தான் எப்படியாவது கண்டுபிடித்துத் தர வேண்டும்'' புகைப்படத்தை பார்த்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண் கையிலிருந்த புகைப்படத்தைக் காட்டி அழுதபடியே சொன்னாள்,""இவர் என்னுடைய கணவர். காணாமல் போய்விட்டார். நீங்கள்தான் எப்படியாவது கண்டுபிடித்துத் தர வேண்டும்''

புகைப்படத்தை பார்த்த இன்ஸ்பெக்டர் கேட்டார்,""எதற்கு?''

******************************

ஆசிரியர்: உன்னுடைய வயதில் ஜனாதிபதிகள் அனைவரின் பேரையும் வரிசை கிரமமாகச் சொல்வேன்.

மாணவன்: உங்கள் வயதில் அப்போது மூன்று நான்கு ஜனாதிபதிகள்தான் இருந்திருப்பார்கள் டீச்சர்!

******************************



தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்டார்: ""ஏன் லேட்?''

மாணவன்: வழியில் ஒரு தகவல் பலகை இருந்தது டீச்சர். அதில்...

இடையே குறுக்கிட்ட ஆசிரியர்: நீ லேட்டாக வரும் வகையில் அந்த தகவல் பலகையில் என்ன எழுதியிருந்தது.

மாணவன்: பள்ளிக்கூடம் வருகிறது. மெதுவாகச் செல்!

******************************



ஞாபகமறதி பேராசிரியர் தன் வீட்டு படுக்கையறைக்குள் நுழைந்தபோது ஒரு பெண் படுக்கையில் இருப்பதைப் பார்த்தார். ""யார் நீ? என்னுடைய படுக்கையில் உனக்கென்ன வேலை?''

அந்தப் பெண்ணோ,""இந்தப் படுக்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இந்த வீடு பிடித்திருப்பதுபோல் எனக்கும் இந்த வீடு பிடித்திருக்கிறது. மேலும் நான் உங்கள் மனைவி!''

******************************

புதிதாக சேர்ந்த வேலைக்கார பெண்ணிடம் வீட்டுக்காரி கேட்டாள்: ""மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு இன்று புதிதாக தண்ணீர் மாற்றினாயா?''

வேலைக்காரப் பெண்: ""இல்லையம்மா! நேற்று ஊற்றிய தண்ணீரையே அவை இன்னும் குடித்து முடிக்கவில்லையே!''

டிராபிக் போலிஸ்: மேடம்! நீங்கள் மணிக்கு 70 மைல் வேகத்தில் காரை ஓட்டி வந்திருக்கிறீர்கள்

பெண்: வாவ்! இது மிகவும் ஆச்சரியமில்லையா? நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதே நேற்றிலிருந்துதான்!

******************************

வீட்டுப் பெண்மணி: எப்போதும் எங்கள் வீட்டிற்கே வந்து பிச்சை எடுக்கிறாயே ஏன்?

பிச்சைக்காரன்: டாக்டர்தான் சொன்னார்

வீட்டுப் பெண்மணி: டாக்டர் என்ன சொன்னார்?

பிச்சைக்காரன்: உன்னுடைய உடல் நலனுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்கிறதோ அதையே தொடர்ந்து சாப்பிடு என்றார்.

******************************

டாக்டர்: உங்கள் மனைவிக்கு "லோக்கல்' அனஸ்தீஷியா கொடுக்கலாமா?

கணவன்: நோ. நோ. என்னிடம் ஏராளமான பணமிருக்கிறது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே கொடுங்கள்.

******************************

டாக்டர்: என்னிடம் வருவதற்கு முன் நீங்கள் வேறு டாக்டர் யாரிடமாவது சென்றீர்களா?

நோயாளி: இல்லை டாக்டர். இந்தத் தெருவில் உள்ள மருந்து கடைக்காரரிடம்தான் சென்றேன்.

டாக்டர்: அந்த மடையன் என்ன சொன்னான்?

நோயாளி: அவர்தான் உங்களிடம் போகச் சொன்னார்!

******************************

சொர்க்கத்தின் வாசலில் புதிதாக வந்த ஜோசப் அங்கிருந்த இரண்டு வாசல்களைப் பார்த்தான். ஒன்றில் ஆண்கள் என்று மற்றொன்றில் பெண்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆண்கள் வாசல் வழியே சென்றபோது மீண்டும் இரண்டு வாசல்கள் தென்பட்டன. ஒன்றில் மனைவியால் அடங்கி நடப்பவர்கள் என்றும் மற்றொன்றில் மனைவியை அடக்கி நடப்பவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. முதலாவது வாசலில் நீண்ட வரிசையில் ஆட்கள் காத்திருந்தனர். இரண்டாவது வரிசையில் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான். எந்த வாசலில் செல்வதென்று முடிவெடுப்பதற்கு முன்பு, இரண்டாவது வாசலில் நிற்கும் அந்த மனிதனை விசாரித்து வரலாமென்று ஜோசப் நினைத்தான். அவனிடம் சென்று "எதற்காக இந்த வாசலில் நிற்கிறாய்?' என்று கேட்டான்.

"எனக்கொன்றும் தெரியாது. என்னுடைய மனைவிதான் இந்த வாசலில் நிற்கும்படி சொன்னாள்...' என்றான் அவன்.

******************************

பனிப்பொழிவு நிறைந்த ஃபுளோரிடா நகருக்கு விடுமுறையைக் கழிக்க சென்ற கணவன் வேலை நிமித்தமாக வரும் தன்னுடைய மனைவியை மறுநாள் அங்கு சந்திக்க நினைத்தான்.

ஓட்டலுக்குச் சென்றவுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தவுடன் மனைவிக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்ப நினைத்தான். அவளது இமெயில் முகவரியை குறித்துவைத்திருந்த சீட்டை எங்கே வைத்தோமென்று அவனுக்குத் தெரியவில்லை. ஓரளவு கவனத்திற்கு வந்த முகவரிக்கு தகவல் அனுப்பினான். எதிர்பாராதவிதமாக அதில் ஓர் எழுத்து தவறாகிவிட்டதால் அந்த தகவல் ஒரு வயதான மதபோதகரின் மனைவிக்கு சென்றுவிட்டது. அந்த மதபோதகர் இரு தினங்களுக்கு முன்புதான் இறந்து போனார். தன்னுடைய இமெயிலைத் திறந்து பார்த்தவள் அதிலிருந்த வாசகங்களை படித்தவுடன் பெருங்குரல் எழுப்பி அலறி அடித்து மயக்கமடைந்தாள். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வலைதளத்தில் பார்த்தபோது, "அன்புள்ள மனைவிக்கு, நாளை உன்னுடைய வருகைக்காக இங்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். அங்கு இருப்பதைவிட இங்கு மிகவும் குளுமையாக இருக்கிறது...'

******************************

திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடும் தம்பதியரை பார்த்து விருந்துக்கு வந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் கேட்டார். ""25 ஆண்டுகளாக எந்தவித தகராறும் இல்லாமல் குடும்பம் நடத்தியதன் ரகசியம் என்ன?''

தன்னுடைய தேனிலவு அனுபவத்தை நினைவுபடுத்திக் கொண்ட கணவன் சொன்னார். "திருமணமான புதிதில் நானும் என்னுடைய மனைவியும் சிம்லா சென்றிருந்தோம். இருவரும் குதிரை சவாரி செய்ய விரும்பினோம். தனித்தனி குதிரைகளை அமர்த்திக் கொண்டு புறப்பட்டோம். நான் அமர்ந்திருந்த குதிரை நன்கு பழகிய குதிரை என்பதால் சிரமம் கொடுக்காமல் சென்றது.

என் மனைவி அமர்ந்திருந்த குதிரை சரியான முரட்டுத் தன்மை வாய்ந்தது. அவளை குப்புறத் தள்ளிவிட்டது. சுதாரித்து எழுந்த என் மனைவி குதிரையை தட்டிக் கொடுத்து இது முதல் தடவை என்று சொல்லி மீண்டும் குதிரை மீது ஏறி அமர்ந்தாள். மீண்டும் குதிரை அவளை கீழே தள்ளியது. பொறுமையுடன் எழுந்த அவள் குதிரையைத் தட்டிக் கொடுத்து, "இது இரண்டாவது முறை' என்று கூறி அதன் மீது தாவி ஏறி அமர்ந்தாள். மீண்டும் குதிரை அவளைக் குப்புறத் தள்ளிவிட்டது. மவுனமாக எழுந்த அவள் தன் கைப்பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றுவிட்டாள்.

நான் பதறியபடியே "உனக்கென்ன பைத்தியமா? வாயில்லா ஜீவனை இப்படி அநியாயமாக சுட்டுக் கொன்றுவிட்டாயே..?' என்று கேட்டேன். மவுனமாக என்னைப் பார்த்தவள் சொன்னாள்....

"இதுதான் முதல் தடவை!'

அவ்வளவுதான். அதன் பிறகு எங்களுக்குள் பிரச்னையே வரவில்லை!

******************************

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.