டீம் ஒர்க் மனோபாவம் வேண்டும்...
26.4.2012, காலை 5.47. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கிச் சீறிக் கொண்டு சென்றது பிஎஸ்எல்வி - சி 19 ராக்கெட். சும்மா கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. 1858 கிலோ எடையுள்ள ஒரு "ரேடார் செயற்கைக் கோளைச்
26.4.2012, காலை 5.47.
ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கிச் சீறிக் கொண்டு சென்றது பிஎஸ்எல்வி - சி 19 ராக்கெட்.
சும்மா கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. 1858 கிலோ எடையுள்ள ஒரு "ரேடார் செயற்கைக் கோளைச்' சுமந்து கொண்டு பூமியிலிருந்து 480 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையை 18 நிமிடத்தில் சென்றடைந்தது. அந்தச் செயற்கைக் கோளின் பெயர் ரிசாட்-1.
இந்தச் செயற்கைக்கோள் பகலில் மட்டுமின்றி இரவிலும் கூட துல்லியமான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கும்.
முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்துடன் உருவான இந்தச் செயற்கைக் கோளை உருவாக்கிய குழுவின் தலைவர் - திட்ட இயக்குநர் - தமிழ்நாட்டின் அரியலூரைச் சேர்ந்த என்.வளர்மதி.
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி சாதனை.... என்று ஆரம்பித்த நம்மை இடைமறித்துப் பேசத் தொடங்கினார் அவர்.
""வேலை என்று வந்துவிட்டால் பெண் என்றும் ஆண் என்றும் நான் பார்ப்பதில்லை. திறமையும் கடின உழைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்'' என்கிறார் உறுதியாக.
அது சரி, நீங்கள் சாதித்தது எப்படி?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அரியலூரில். அங்குள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே - அந்தச் சிறுவயதிலேயே - திறமையானவர்களைக் கண்டால் எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. யாரிடம் திறமை இருந்தாலும் அதுபோல் நாமும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர் பட்டிமன்றத்தில் நன்றாகப் பேசுவதைக் கேட்டால், இவருக்கு எவ்வளவு திறமை? நாமும் அதுபோல திறமையான ஆளாக வர வேண்டும் என்று நினைப்பேன். திறமையான பேச்சாளர், எழுத்தாளர், ஐஏஎஸ் ஆபிஸர், வழக்கறிஞர் யாரைப் பார்த்தாலும், அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் நாமும் அவர்களைப் போல திறமையானவர்களாக ஆக வேண்டும் என்று நினைப்பேன். போதாக்குறைக்கு என் அப்பா என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். "அந்த ஐஏஎஸ் ஆபிஸரைப் பார்... எப்படித் தைரியமாக முடிவுகள் எடுக்கிறார்?' என்று எதையாவது எனக்கு ஊக்கம் ஏற்படும் விதத்தில் சொல்லிக் கொண்டிருப்பார். இதனால் நான் எப்போதும் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் குறியாக இருந்தேன். பியூசி முடித்ததும் எந்தத் துறைக்குப் போவதென்று முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் ஒரு சில பெண்கள் என்ஜினியருக்குப் படிக்க ஆரம்பித்திருந்தார்கள். நானும் துணிந்து கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். அப்புறம் அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.இ.படித்தேன்.
படித்து முடித்ததும் எனக்கு விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசையாக இருந்தது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு (இஸ்ரோ) வேலைக்காக விண்ணப்பித்தேன். உடனே கிடைத்தது. அன்றிலிருந்து... பல்வேறு பொறுப்புகளை வகித்து, இப்போது "தொலையுணர்வு செயற்கைக் கோள் பிரிவில்' திட்ட இயக்குநராக இருக்கிறேன்.
செயற்கைக் கோளை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல. பலரின் ஆர்வமுள்ள ஈடுபாடும், கடும் உழைப்பும் அவசியம். ஒரு திட்ட இயக்குநர் என்கிற முறையில் பலரையும், குறிப்பாக பல ஆண்களையும் வேலை வாங்க வேண்டியிருக்கும். ஒரு பெண் என்பதால் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதில் ஆண்களுக்கு ஈகோ பிரச்னை ஏதும் ஏற்படவில்லையா?
வேலை என்று வந்துவிட்டால் ஆண் - பெண் வித்தியாசத்தை நான் பார்ப்பதில்லை. ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்றால் பிறரிடம், "நீ இந்த வேலையைச் செய்' என்று சொல்லமாட்டேன். நானே அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடுவேன். நான் செய்வதைப் பார்த்ததும் பிறரும் தானாகவே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
ஈகோ பிரச்னை எப்போது வரும்? பிறரின் திறமையை மதிக்காமல் அவர்களை நடத்தினால் ஈகோ பிரச்னை வரும்.
ஒரு புராஜக்ட் என்று எடுத்துக் கொண்டால் அது தொடர்பான எல்லா விஷயங்களையும் எல்லாருக்கும் தெரியும்படி செய்துவிடுவேன். இந்தப் புராஜக்ட்டை எதற்காகச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? எதை நாம் சாதிக்க வேண்டும்? இந்தப் புராஜக்ட்டில் ஒருவரின் ரோல் என்ன? என்று முதலில் தெளிவுபடுத்திவிடுவேன். இதனால் யாருக்கு எந்த வேலை? என்று தெரிந்துவிடும். நான் என் வேலையைச் செய்ய ஆரம்பிக்க, பிறரும் அவர்களுடய வேலையைத் தானாகவே செய்ய ஆரம்பிப்பார்கள்.
என்னுடன் வேலை செய்யும் ஒவ்வொருவரின் திறமை என்ன? என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களின் திறமைக்கேற்ற வேலையைக் கொடுத்துவிடுவேன். அதற்குப் பிறகு அவர்கள் வேலை செய்யும்போது ஏதேனும் சிறு தவறுகள் ஏற்பட்டால் அவர்களைக் கடிந்து கொள்ள மாட்டேன். அந்தத் தவறு நடந்ததற்கான சூழ்நிலை என்ன? என்று ஆராய்வேன். அவற்றைச் சரி செய்வேன். இதனால் என்னுடன் வேலை செய்பவர்கள் உற்சாகமாக வேலை செய்கிறார்கள். 24 மணி நேரமும் வேலை செய்ய நேர்ந்தாலும் முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள்.
மேலதிகாரிகள் உத்தரவு போட்டு, அதைக் கீழுள்ளவர்கள் வேண்டா வெறுப்புடன் செய்யும் சூழ்நிலை இருந்தால் எதையும் சாதிக்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்ற "டீம் ஒர்க்' மனோபாவத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட மனோபாவத்தை ஏற்படுத்திவிட்டால் நீங்கள் சொல்லும் ஆண், பெண் வேறுபாடு, ஈகோ பிரச்னை எதுவும் ஏற்படாது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. முடிவுகள் எடுப்பதற்கு முன்பு பலரிடமும் கலந்து ஆலோசிப்பேன். ஆனால் முடிவைச் சுயமாக எடுப்பேன். அப்படி நான் எடுத்த முடிவைச் செயல்படுத்தும் போது அதன் வெற்றி, தோல்விகளுக்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்வேன். தோல்வியோ, தவறுகளோ ஏற்பட்டால் பிறர் மேல் பழி போடமாட்டேன்.
பெரிய அளவுக்குத் தவறுகள் நேர்ந்தால் கூட பிறரைக் குற்றம் சொல்லமாட்டீர்களா?
பெரிய அளவுக்குத் தவறுகள் நேரவே நேராது. ஏனென்றால் எல்லா வேலைகளையும் முறையாகத் திட்டமிட்டே செய்வேன். ஒரு வேலையின் ஆரம்பநிலையிலிருந்து எல்லா நிலைகளிலும் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து, கவனமாகச் செய்வேன். எதையும் முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவதால் பெரிய அளவுக்குத் தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
வீட்டில் எப்படி?
கணவர் வங்கியில் உதவிப் பொது மேலாளர். உயர்ந்த பதவியில் இருக்கிறார். மகன் ஹேமந்த் பி.இ., எம்பிஏ முடித்து இருக்கிறார். மகள் தீபிகா பி.இ. முதலாம் ஆண்டு பயில்கிறார்.
எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் நான் என் குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றிவிடுவேன்.
வீட்டில் உள்ள எல்லாரும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து மனம் விட்டுப் பேசிக் கொள்வோம். குடும்பத்தில் எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரியும். கணவன், மனைவி, அப்பா, அம்மா, மகன், மகள் என்ற உறவுமுறைகளை விட எல்லாரும் நண்பர்களைப் போல பழகுகிறோம். அதனால் எனது அலுவலக நெருக்கடி நேரங்களில் எல்லாரும் அன்புடன் ஒத்துழைக்கிறார்கள்.