முகப்பு
தினமணி கதிர்

ரயில் என்றாலே மகிழ்ச்சி...!

கோடை விடுமுறை என்றால் பள்ளி மாணவர்களுக்குக் கொண்டாட்டம். பெற்றவர்கள் பாடோ பெரும் திண்டாட்டம். கொளுத்தும் வெயிலில் எங்கேயும் போகாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெரியவர்கள் நினைக்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

கோடை விடுமுறை என்றால் பள்ளி மாணவர்களுக்குக் கொண்டாட்டம். பெற்றவர்கள் பாடோ பெரும் திண்டாட்டம். கொளுத்தும் வெயிலில் எங்கேயும் போகாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெரியவர்கள் நினைக்க, "எங்கேயும் கூட்டிட்டுப் போகமாட்டேங்கிறீங்களே' என்று குழந்தைகள் சிணுங்க... ஒரே போராட்டம்தான்.

அப்படி... இப்படி வெளியே கிளம்பினாலும் மரங்கள் அடர்ந்த இடமாக இருந்தால் நல்லது என்று பெரியவர்கள் திட்டமிடுவார்கள். குழந்தைகளின் ஆர்வத்துக்குத் தீனி போடும் இடமாகவும் அது இருக்க வேண்டும். அப்படி ஓர் இடம் உள்ளது. சென்னை வில்லிவாக்கம் ஐசிஎஃப் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள "ரயில் மியூசியம்'தான் அது.

இந்தியன் ரயில்வேயின் "ஹெரிட்டேஜ்' என்ற துறையின் கீழ் நடத்தப்படும் இந்த ரயில் மியூசியத்தின் பிறந்த நாள்: 31.03.2002.

ரயில் மியூசியத்தின் இயக்குநர் வி.கல்யாணசுந்தரத்துடன் பேசினோம்:

""குழந்தைகளைத் துள்ளிக் குதிக்க வைக்கும் ரயில் மியூசியம் முதன் முதலில் டெல்லியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்புறம் படிப்படியாக ஹவுரா, மைசூர், நாக்பூர், சென்னை போன்ற இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.

ரயில் என்றாலே மனதுக்குள் மகிழ்ச்சி எப்படியோ புகுந்து கொள்கிறது. இங்கு வரும் பெரியவர்கள், அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது பயணம் செய்த நீராவி என்ஜின் ரயிலின் நினைவுகளில் மூழ்கிப் போய்விடுகிறார்கள். தங்களுடைய கிராமத்தின் எல்லையில் எப்போதாவது வரும் ரயிலுக்காகக் காத்திருந்து, "கூ'வென்று ரயில் கூவிக்கொண்டு போகும்போது மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டே கையசைத்ததை நினைத்துப் பார்க்கிறார்கள்.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் இடமாக இந்த மியூசியம் இருந்தாலும், கல்வியோடு தொடர்புடையதாகவும் உள்ளது. உதாரணமாக, மழலையர் பள்ளி, ஆரம்பப் பள்ளியில் சிக்னல்களைப் பற்றி ரைம்ஸ் உள்ளது. அதைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இங்கே வந்து பொம்மை ரயிலில் ஏறுகிறார்கள். சிவப்பு சிக்னலைப் பார்த்ததும் ரயில் நின்றுவிடுகிறது. மஞ்சள், பச்சை சிக்னலுக்குப் பிறகு ரயில் புறப்படுகிறது. பள்ளியில் படித்ததை நேரில் பார்த்து குதூகலிக்கிறார்கள்.

கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இங்கு வந்தால், அவர்கள் ரயில் என்ஜின்களின் வடிவமைப்பு, போகிகளின் வடிவமைப்பு, ப்ரேக் அப்ளை பண்ணும்போது என்ன நடக்கிறது? என்று அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொண்டு போகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இங்கு மாணவர்களுக்குத் தேவையான பல விஷயங்களை எழுதியும் வைத்திருக்கிறோம்.

எல்லாரும் நினைப்பார்கள் முதலில் நீராவி என்ஜின், அப்புறம் டீசல், அதற்குப் பிறகுதான் எலக்ட்ரிக் என்ஜின் என்று. உண்மையில் நீராவி என்ஜினுக்கு அடுத்தபடியாக எலக்ட்ரிக் என்ஜின்தான் வந்தது. 1920 இலிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் எலக்ட்ரிக் ட்ரெயின் ஓடியிருக்கிறது.

ரயில் என்றால் மீட்டர் கேஜ், பிராட் கேஜ், நேரோ கேஜ் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் இந்த நேரோ கேஜில் 2 அடி அகலம் உள்ள பாதையும், 2 1/2 அடி அகலம் உள்ள பாதையுமாக இரண்டு வகைகள் இருந்திருக்கின்றன.

2 அடி அகலம் உள்ள நேரோ கேஜ் ரயில் வெள்ளைக்காரன் காலத்தில் டார்ஜிலிங்கில் ஓடியிருக்கிறது.

நமது ரயில்வேயில் ஆக்சிடென்ட் ரிலீஃப் ட்ரெயின் ஒன்று இருக்கிறது. எங்காவது விபத்து நடந்துவிட்டால், அந்த ட்ரெயின் அங்கே போகும். அதில் டூல்ஸ் வேன், ஸ்டாஃப் வேன், மெடிக்கல் வேன் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. டூல்ஸ் வேனில் உள்ள பொருட்களை வைத்து பணியாளர்கள் விபத்து நடந்த பகுதியில் ரயில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியைச் செய்வார்கள். மெடிக்கல் வேனில் அறுவைச் சிகிச்சை செய்யும் வசதி உட்பட விபத்தில் காயமடைந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வசதிகள் உள்ளன. ஸ்டாஃப் வேனில் பணியாளர்கள் தங்கியிருப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இப்படிப்பட்ட புதிய வடிவமைப்புகளை எல்லாம் நம்நாட்டிலேயே திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். பிற நாடுகளில் இருந்து தொழில்நுட்பங்களைப் பெற்று அப்படியே பயன்படுத்துவதில்லை. இது நமக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும். இப்படிப்பட்ட பல தகவல்களை இங்கு வரும் குழந்தைகள், மாணவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த ரயில்வே மியூசியத்தை ஒவ்வோராண்டும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம். உதாரணமாக, இங்கே உள்ள பொம்மை ரயில் பாதையில் முதலில் மரத்தில் ஸ்லிப்பர் கட்டைகள் இருந்தன. இதனால் மழைக்காலத்தில் ரயில் பாதை பூமியில் சிறிது புதைந்து, பொம்மை ரயில் ஓட முடியாதவாறு ஆகிவிடும். இப்போது மரத்தாலான ஸ்லிப்பர் கட்டைகளுக்குப் பதிலாக காங்கிரீட்டில் அமைத்திருக்கிறோம்.

இங்கே 1909 இல் இங்கிலாந்தில் இருந்த நார்த் பிரிட்டிஷ் லோகோமோட்டிவ் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்த நீராவி என்ஜின் உள்ளது.

1917 இல் 2 அடி நேரோ கேஜ் நீராவி என்ஜின் உள்ளது.

1965 இல் ஊட்டிக்குச் சென்ற மலை ரயிலின் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் உள்ளன.

1965 இல் ஓடிய பீச் - தாம்பரம் மின்சார ரயில் பெட்டிகள் உள்ளன.

இப்படி நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக எங்களுடைய ரயில் மியூசியம் உள்ளது'' என்கிறார் பெருமையாக.

முழு கட்டுரையைப் படிக்க →