பாரதிராஜாவின் இயக்கத்தில் "அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தை முடித்த கையோடு அருண் விஜய் ஜோடியாக "டீல்' படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டார் கார்த்திகா. "கோ' படத்துக்குப் பின் நட்சத்திர இயக்குநர்கள் மற்றும் பிரபல நடிகர்களின் படங்களின் வாய்ப்புகளை மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்தவர், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். என்ன காரணம் என கார்த்திகா தரப்பில் கேட்டால், "" கோ' படத்துக்குப் பின் நிறைய பெரிய பட வாய்ப்புகள் கிடைத்தன. பொருத்தமில்லாத கதைகளால் நடிக்கவில்லை. இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. பாரதிராஜா படம் வெளியானால் வேறு மாதிரியான இமேஜுக்குள் சிக்கி விடுவார். அதனால்தான் கமர்ஷியல் ப்ளஸ் ஆக்ஷன் கலந்த "டீல்' படத்தை ஒப்புக் கொண்டார். இனி தொடர்ந்து அதே மாதிரியான படங்களில் நடிக்க கார்த்திகா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வார கால சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நந்தனம்'. சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மித்ரா நடிக்கிறார். புதுமுகம் என்.சி. ஷியாமளன் எழுதி இயக்குகிறார். "நந்தனம்' படத்தின் சிறப்பம்சம் குறித்து கேட்டால், "" நந்தவனம் என்பது அழகிய பூங்கா என்ற அர்த்தத்தை குறிக்கும். காதலும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் மனதில் நந்தவனமாய், பசுமை மாறாமல் இருக்கும் அழகான விஷயம். சென்னை மாநகரத்தின் நந்தனம் பகுதியில் உள்ள தொழில்நுட்பத்துறை சார்ந்த வேலையில் இருக்கும் காதல் ஜோடியின் இனிமையான காதல் சம்பவங்களை உள்ளடக்கிய கதைதான் "நந்தனம்'. நமது வாழ்க்கையை கடந்து போகும் நிறங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை கதை சொல்லும் பின்புலத்தில் பயன்படுத்திருக்கிறேன். இது தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத புது அனுபவமாக இருக்கும்'' என்றார் இயக்குநர்.
"பார்வை ஒன்றே போதுமே', "பேசாத கண்ணும் பேசுமே', "பலம்' ஆகிய படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா அடுத்து இயக்கும் படம் "துட்டு'. ஆரியன் ராஜேஷ், மும்பை மாடல் அழகி சோனா சோப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். "" பலரது வாழ்வில் கந்து வட்டியின் கொடுமை பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. கஷ்டத்தைச் சமாளிக்க கந்து வட்டிக்கு பணம் வாங்கி அதை கட்ட முடியாமல் வாழ்க்கையை முடித்து கொண்டவர்கள் பலர். அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் முரளிகிருஷ்ணா.
"மௌனம் பேசியதே', "ராம்', "பருத்தி வீரன்' என எதார்த்த கதைகளில் பயணித்து வந்த அமீர், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிக்கும் "ஆதிபகவன்' படத்தின் மூலம் கமர்ஷியல் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். ஏனிந்த மாற்றமாம்? "" எல்லோருக்குமே டெண்ட் கொட்டகை தியேட்டர் வாசம் உண்டு. எனக்கு அது நிறையவே உண்டு. உள்ளூரில் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்களில் இது குடும்ப சித்திரம், இது விழுந்து விழுந்து சிரிக்கும் படம், இது சண்டைகளும், பாடல்களும் நிறைந்த படம் என்று ஒவ்வொரு சினிமா போஸ்டரின் கீழேயும் போட்டிருப்பார்கள். நான் சண்டை மற்றும் பாடல்கள் நிறைந்த சினிமாவுக்கு மட்டுமே போவேன். அதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால் சினிமாவில் இயக்குநராக ஆன பிறகு அது மாதிரியான சினிமாக்களை ஏன் தவிர்த்தேன் என்றே தெரியவில்லை. அதற்குதான் இந்த "ஆதிபகவன்'. 80 வருஷ தமிழ் சினிமா பார்த்த கதைதான். அதை என் பாணி சினிமாவுக்குள் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றார் அமீர்.
"துப்பாக்கி' படத்துக்குப் பின் "கீரிடம்' விஜய் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். "தெய்வத்திருமகள்', "தாண்டவம்' படங்களைத் தொடர்ந்து இப்படத்தை எழுதி இயக்குகிறார் விஜய். விஜய் ஜோடியாக அமலாபால். முக்கிய வேடத்தில் சத்யராஜ் உண்டு. சத்யராஜ் நடித்த "ரிக்ஷாமாமா', ராமராஜன் நடித்த "அன்புக்கு நான் அடிமை', டி.ராஜேந்தரின் "ஒரு வசந்த கீதம்' ஆகிய படங்களை தயாரித்த மிஷன் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
என்.ஓ.டி. புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் படம் "என்றென்றும்'. புதுமுகம் சினிஷ் கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். "மானாட மயிலாட' புகழ் சதீஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா ரெட்டி என்பவர் அறிமுகம். ஒரு சிறு மாற்றம், வாழ்க்கையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படி யூகிக்க முடியாத பிரச்னைகளை கொண்டு வருகிறது என்பதுதான் கதை. ""ஒர் ஆணும், பெண்ணும் வாழும் போதுதான் காதலிக்க முடியும். அவர்கள் இறந்து விட்டால் காதலும் இறந்து விடுவதுதான் நியதி, மாறாக ஒரு காதல் ஜோடி இறந்த பிறகும் அவர்களின் காதல் தொடரும் என்பதை சுவாரஸ்யமாக திரைக்கதையாக்கி இருக்கிறோம்'' என்கிறார் இயக்குநர் சினிஷ்.
சரியான நேரத்துக்கு வர மாட்டார். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பேச்சை கேட்கவே மாட்டார் என உச்சத்தில் இருந்த காலத்திலேயே கார்த்திக் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. இப்போது அவரது வாரிசு கௌதம், மணிரத்னம் இயக்கும் "கடல்' படத்தில் நடித்து வருகிறார். ""அப்பா மாதிரி இல்லாமல் சொல் பேச்சு கேட்டால் நன்றாக வந்து விடலாம்'' என சிலர் அட்வைஸ் செய்ய, நல்ல விதமாகவே படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம். இதற்கிடையில் கௌதமின் கால்ஷீட் கேட்டு வரும் இயக்குநர்களிடம் ""கண்டிப்பாக செய்து விடலாம், கால்ஷீட் கொடுத்து விடலாம்'' என கார்த்திக் சொல்லி வருகிறாராம். கௌதமை படம் ரிலீஸ் ஆகும் வரை யாரும் சந்திக்க கூடாது என மணிரத்னம் கேட்டுக் கொண்டிருப்பதால், கௌதமை யாரிடமும் பேசவே விடுவதில்லையாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.