என் வீட்டில் சிறு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி சளியுடன் கூடிய இருமல், சில சமயம் வறட்டு இருமல், உள்காங்கை, பசியின்மை, உடல் மெலிந்திருத்தல், மலம் செரியாமல் இளகிப் போகுதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. ஏதேனும் சிறிய கை வைத்தியம் சொல்ல முடியுமா?
கனகவல்லி, தாம்பரம்.
தாளீஸபத்திரி 10 கிராம், மிளகு 20 கிராம், சுக்கு 30கிராம், திப்பிலி 40 கிராம், மூங்கிலுப்பு 50 கிராம், லவங்கப்பட்டை 5 கிராம், ஏலரிசி 5 கிராம், சர்க்கரை 320 கிராம். சர்க்கரை நீங்கலாக மற்றவற்றைத் தனியே இடித்து மிகச் சிறிய கண்ணுடைய சல்லடையில் சலித்தோ, துணியால் சலித்தோ சூரணமாக்கிக் கொள்ளவும். சர்க்கரையை இடித்து நன்கு சலித்து அந்த சூரணத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கால் அல்லது அரை டீ ஸ்பூன், தினம் 2 - 4 வேளை உசிதப்படி தேன் அல்லது நெய்யுடன் கலந்தோ, காய்ச்சியோ சர்க்கரை சேர்த்த பாலுடனோ சாப்பிடலாம்.
இது சளியுடன் கூடிய இருமலுக்குச் சாப்பிடக் கூடிய சிறந்த மருந்தாகும். மார்பிலும் தலையிலும் சளி கோர்த்து வறட்டு இருமல் ஏற்படும்போது இதைச் சாப்பிட நீர்க்கோர்வை எளிதில் பழுத்து வெளியாகும். வறட்டிருமல் நிற்கும். இருமலால் ஏற்படும் விலா வலி ,
மார்பு வலி, தொண்டை வலி முதலியவையும் சுகமாகும். வெகு நேரம் சிரமத்துடன் இருமிச் சிறிது கபம் துப்பியதும் சிறிது நேரம் அடங்கும் இருமல், நா வறட்சி,தொண்டை உலர்ந்து போகுதல், கண், முகம் சிவத்தல் போன்றவை இதனால் குணப்படும். சூட்டுடன் கூடிய இருமலானால் நெய்யில் குழைத்துச் சாப்பிடலாம். அல்லது சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிய பசுவின் பாலுடன் சாப்பிடலாம். கபம் இறுகி ஏற்படும் இருமலில் தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.
சிறுவர்களுக்கு ஏற்படும் உள்காங்கை, பசியின்மை, உடல் இளைப்பு, மலம் செரியாமல் இளகிப் போதல், ருசியின்மை, உணவின் மீது வெறுப்பு போன்றவற்றுக்கு, இதைத் தொடர்ந்து தேன், நெய், அல்லது பாலில் கொடுத்து வர நல்ல பசி, ருசி, ஜீரண சக்தி ஏற்படும். இளைப்பு மாறி சுறுசுறுப்பும், புஷ்டியும் உண்டாகும். உணவு ஜீரணமாகி மலமும் இறுகிப் போகும்.
இதில் மூங்கிலுப்புக்குப் பதில் கூகைக் கிழங்கின் மாவை (கூகை நீர்) சேர்த்தும் செய்வதுண்டு. அதை சிறுவர்களுக்குக் கொடுப்பது மிகவும் நல்லது. சளி இருமலுடன் மலம் செரியாமல் இளகிப் போகும் போது இதைக் கொடுக்க மிகவும் நல்லது.
இதைச் செய்வதற்கு உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் தாளீசாதி அல்லது தாளீசபத்ராதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கியும் நீங்கள் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.