முகப்பு
தினமணி கதிர்

நட்பின் வலிமை

எழுத்துலகிலும், கலை உலகிலும் பல புதியவர்களை அறிமுகம் செய்வித்த பெருமைக்கு உரியவர் சக்கண்ணா.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

எம்.ஜி.ஆரின் முதலாளி

 என் தந்தையாரின் புற வாழ்க்கைக்கும் தொழில்ரீதியான முன்னேற்றத்திற்கும் வழிகாட்டி, தன் வாழ்நாள் முழுவதும் துணையாக இருந்தவர் ஏ.வி.சுப்பாராவ். நாகிரெட்டி என்றால் சக்ரபாணி பெயரும் நினைவுக்கு வரும். எனவே அவரைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். சுப்பாராவ் என்பது அவரது இயற்பெயர். ஆனால் எழுத்து உலகிலும், திரையுலகிலும் அவர் பெயர் சக்கரபாணி. நெருங்கியவர்களுக்கு அவர் சக்கண்ணா. ஓர் அண்ணனுக்கு உரிய வாஞ்சையுடனும் கண்டிப்புடனும் அவர் பழகுவார். மற்றவர்களும் அவரைத் தங்கள் அண்ணனாகவே கருதி அதே மரியாதையுடன், அன்புடன் அவரிடம் பழகி வந்தார்கள்.

எழுத்துலகிலும், கலை உலகிலும் பல புதியவர்களை அறிமுகம் செய்வித்த பெருமைக்கு உரியவர் சக்கண்ணா.

என்னைப் பொறுத்தவரையில் அவர் எனக்கு வழிகாட்டி. நான் பள்ளியில் படிக்கும்போதே என்னைச் சிறுகதை எழுத வைத்து "அம்புலிமாமா' இதழில் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இப்பூவுலகைவிட்டு பிரியுமுன், என்னுடைய பத்திரிகைப் பணி ஆர்வத்தைக் கண்டு, "சந்தமாமா' (அம்புலிமாமா) இதழின் ஆசிரியராக பத்திரிகை உலகில் அவரது வாரிசாக என்னை நியமித்து மகிழ்ந்தவர்.

சக்கரபாணி 1908ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் தெனாலிக்கு அருகில் உள்ள ஐடா நகரம் என்னும் ஊரில் பிறந்தவர் .

அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்த அவர், காந்தியவாதி வெங்கடப்பையா நடத்திய இந்தி பள்ளியில் சேர்ந்து, காந்தியடிகளின் 20 அம்ச திட்டத்தின் கீழ் இந்தி மொழி படிக்க ஆரம்பித்தார்.

1932ல் தமது மாமாவின் மகளான ரங்கம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

மிகச் சிறு வயதிலிருந்தே சக்கரபாணி கதை எழுதுவார். அவருடைய கதைகள் பல இந்தி பத்திரிகைகளிலும் வெளியாகின. அப்போது வட இந்திய பதிப்பாளர் ஒருவர், உமது கதைகளை இயற்பெயரில் வெளியிடுவதைவிட புனைப்பெயரில் வெளியிடலாமே என்று சக்கரபாணி என்ற பெயரையும் தந்தார். அன்றிலிருந்து சுப்பாராவ், சக்கரபாணியானார்.

1934ல் சக்கரபாணியாருக்கு காசநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மதனப்பள்ளி "ஆரோக்கிய வரம்' மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதில், ஒரு நுரையீரலுடன் மட்டும் வாழ வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அந்த மருத்துவமனையில் அங்கே அவருடைய பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளி வங்க மாநிலத்தவர். ஏற்கெனவே இந்தி மொழி தெரிந்திருந்ததால் மூன்று மாதங்கள் அவரோடு பேசி, பழகி... சுலபமாக வங்க மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். பின்னாளில் பிரபல வங்க எழுத்தாளர் சரத்சந்திரருடைய எழுத்துக்களை (தேவதாஸ் உட்பட) கருத்துச் சிதைவு ஏற்படாமல் மொழிபெயர்க்கும் அளவிற்கு, அந்த மொழியில் தன்னுடைய ஞானத்தை வளர்த்துக் கொண்டார். மனதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வேகம் இருந்தால், எந்த நிலையிலும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அவர் ஓர் உதாரண புருஷர்.

1935ல் தமது நண்பர் குடும்பராவ் உடன் இணைந்து யுவா பப்ளிகேஷன்ஸ் என்னும் பிரசுரத்தை நிறுவி, மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டார்.

அந்த நாவல்களில் இருந்த கருத்துகளுடன் இவரது எழுத்தையும் கண்டறிந்த இயக்குநர் பி.புல்லையா தர்ம பத்தினி படத்துக்கு வசனம் எழுத இவரை ஏற்பாடு செய்தார் (1939).

கோலாப்பூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சக்கரபாணியாரும் அங்கே இருந்தபோது, தமது இரண்டு ஆண் குழந்தைகளையும் விட்டுவிட்டு, அவரது தர்ம பத்தினி ரங்கம்மா இயற்கை எய்தினார்.

மீண்டும், புத்தக பதிப்புத் துறைக்கே திரும்பி வந்தபோது, அவரை "ஸ்வர்க்க சீமா' திரைப்படத்துக்கு கதை வசனம் எழுத, என் பெரியப்பா இயக்குநர் பி.என்.ரெட்டி, கே.வி. ரெட்டி வாயிலாக அழைத்தார்.

எனக்கு திரைக்கதை, வசனம் எழுதத் தெரியாது என்று சக்கரபாணி சொல்ல, அதை எப்படி அமைப்பது என்பதை பி.என். ரெட்டி அவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.

மீண்டும் தெனாலிக்குச் சென்று புத்தக வெளியீட்டுத் துறையில் ஈடுபட்டார். அவருடைய நாவல்களில் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து போக, இரண்டாம் பதிப்பு வெளியிடும் நோக்கத்தில், பி.என்.ரெட்டி அவர்களின் சகோதரரான என் அப்பாவை (பி.நாகிரெட்டி) அணுகினார். தமது பி.என்.கே. பிரஸ்ஸில் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடவும், சக்கரபாணி சென்னையில் தங்கியிருக்கவும் மாத வாடகை ரூ.6 இல் ஓர் அறை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வாடகையும் சரியாக தர முடியாத நிலை. அவரது நண்பர் பி.எஸ். ராமாராவ் இந்த வாடகையைச் செலுத்த வேண்டிய நிலை.

1944 இல் பிரசுரத் துறையில் என் தந்தையாருக்கும் சக்கரபாணியாருக்கும் தொடர்பு ஏற்பட்டு அது ஆழ்ந்த நட்பாக மாறியது...

ஆம். உண்மையான, தூய நட்புக்கு அடையாளமாக நாகிரெட்டி சக்கரபாணியின் இணைந்த உள்ளங்கள் பெரும் சான்றாகத் திகழ்ந்தன. அவர்களது இந்த இணைந்த நட்பு, இலக்கிய உலகுக்கும், பட உலகுக்கும் பெரும் சிறப்பை அளித்துள்ளது.

இவர்களது இலக்கிய ஆர்வமும், வளரும் குழந்தைகள் சமுதாயத்துக்குச் சிறந்த சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலும்தான் "சந்தமாமா' (அம்புலிமாமா) என்னும் சிறுவர் பத்திரிகை ஆரம்பிக்கக் காரணமானது.

அம்புலியின் ஆசிரியராக இருந்து, ஆங்கிலம் உட்பட 12 மொழிகளில் அதை வளர்த்து வந்தார்.

நாகிரெட்டி - சக்கரபாணி இருவரில் ஒருவர் இன்றி மற்றொருவரை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

என் தந்தையார், சக்கரபாணி அவர்களை எங்கே, எப்படி சந்தித்தார்? என் தந்தையார் சொல்லக் கேளுங்கள்:

""நாகிரெட்டி சக்கரபாணி இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்றே அநேகர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் எங்கள் நட்பின் வலிமையே. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு திருக்குறள் என் நினைவுக்கு வருகிறது:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற் சென்று இடித்தற் பொருட்டு

இருவர் நண்பர்களாக இருப்பது, ஒருவரையொருவர் சதா புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருப்பதற்கு அல்ல. நண்பனிடத்தில் வேண்டாத ஒழுக்கமோ, செய்கையோ கண்டால், அவனைத் திருத்தி, நல்வழிப்படுத்தும் பொருட்டுக் கடுமையாக அறிவுரை சொல்லுவதே நட்பின் அறம் இதைவிட்டு, நட்பு, சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டிருப்பதற்குத்தான் என்று கருதுதல் தவறு.

சக்கரபாணி உயரமான மனிதர் மட்டுமல்ல, உயர்ந்த மனிதரும்கூட. அவர் பேசும்போது, வார்த்தையை மென்று விழுங்குவது கிடையாது. நினைத்ததை நேரடியாகக் கூறிவிடுவார். பலர் அவரது கடுமையான வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்வர். ஆனால் அந்த வார்த்தைகளின் அடிநாதமாக இருந்த மனிதநேயமும், கலைஉணர்வும் எல்லாராலும் விரும்பி ரசிக்கப்பட்டது.

பெங்களூரில் அன்று வாகினி படங்களுக்கு விநியோகஸ்தர் பி.என்.குப்தா. அவரது வீடு சென்னை தி.நகரில்தான் இருந்தது. நாளடைவில் அவர் எனக்கு நெருங்கிய நண்பரானார். 1945ல் பி.என்.குப்தா வெளியீட்டாளராக இருந்த "ஆந்திர ஜோதி' வார இதழை வாங்கி, சக்கரபாணியை ஆசிரியராகவும், நான் பிரிண்டர் வெளியீட்டாளர் எனவும் தீர்மானித்து தெலுங்கு மொழியில் ஆந்திர ஜோதி என்னும் அரசியல், சமூக விழிப்புணர்வைக் கொண்ட இலக்கிய மாத இதழாகத் தொடர்ந்து வெளியிட்டோம்.

ஆந்திர ஜோதியில் வெளியான சக்கரபாணியின் எழுத்துக்கள், கருத்துக்கள் அன்று மிகவும் பிரபலமாகின.

குழந்தைகளுக்கான பத்திரிகையை தெலுங்கிலும், தமிழிலும் கொண்டு வரலாமே என சக்கரபாணி ஆலோசனை கூறினார். புராணக் கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு இந்த ஆலோசனை பிடித்துவிட்டது. சந்தமாமா (அம்புலிமாமா)வின் மூலம் இந்த புராணக் கதைகளை முதன்முதலாக குழந்தைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் சந்தமாமா (தெலுங்கு), அம்புலிமாமா (தமிழ்) இதழ்களின் முதல் பதிப்பு வெளியானது.

சந்தமாமா இதழ் தொடங்கப்பட்டவுடன் சக்கரபாணி சந்தமாமா இதழுக்கு ஆசிரியராகி... அதன் பொறுப்புகளை ஏற்றதினால், ஆந்திரஜோதி இதழுக்கு நானே ஆசிரியரானேன். சுதந்திர தாகத்திற்கு புதிய, இன்னொரு பரிமாணத்தைத் தர நிறைய எழுத்தாளர்கள் ஆந்திர ஜோதிக்கு வந்தனர். அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களானார்கள்.

அப்போது என்னுடைய இருப்பிடத்தை தி.நகர் ராமசாமி தெருவில் மாற்றினேன்.

சக்கரபாணியும் தமது இருப்பிடத்தை டவுனில் உள்ள ஆச்சாரப்பன் தெருவிலிருந்து தி.நகர் ராமசாமி தெருவுக்கே மாற்றிக் கொண்டார்.

பட சம்பந்தமான வேலை, புத்தக வேலை என்று பிஸியாக இருந்த அவரிடம் குடும்பத்தோடு சென்னைக்கே வந்து விடும்படி சொன்னேன்.

நாளடைவில், அவர் எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாகி விட்டார். எங்கள் வீட்டு மாடியிலேயே அவருக்கு ஓர் அறை கொடுத்து எங்களோடு தங்க வைத்தோம்.

ஆரம்பத்தில் தமது புத்தகம் அச்சிடும் வேலை விஷயமாக வந்தவர்... அடுத்து ஆந்திர ஜோதி... நாளடைவில் சந்தமாமா பத்திரிகைகளில் ஆசிரியராகப் பங்கேற்ற சக்கரபாணியின் பொறுப்புணர்வு எங்களுக்குள் நட்பு என்னும் ஆலமரமாக வளர்ந்தது.

இந்த நட்புதான், பின்னாளில் பார்ட்னர்ஷிப்பிற்கு அடித்தளமாக அமைந்தது. ஸ்டுடியோ நடத்தலாம் என்று திட்டமிட்ட போது, அதில் அவரும் ஒரு ஷேர் வாங்கிக் கொண்டார். விஜயா புரொடக்ஷன்ஸ் துவங்கி, முதல் படமாக அவருடைய செüகார் கதையை அவரே வசனம் எழுதி எடுத்தோம். 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 7ந் தேதி செüகார் படம் திரையிடப்பட்டது. அதில்தான் முதல் முறையாக தயாரிப்பு நாகிரெட்டிசக்ரபாணி என்று டைட்டில் கார்டு வந்தது. அதைத் தொடர்ந்து அவர் மறையும் வரை எங்களுடைய எல்லா தயாரிப்புகளிலும் அப்படியே டைட்டில் கார்டு வந்தது.

படத் தயாரிப்பில் கதை, வசனம், டைரக்ஷன் எனத் தயாரிப்பு பொறுப்பு அவருடையது.

விநியோகப் பொறுப்பு என்னுடையது என்று வேலைகளைப் பிரித்துக் கொண்டோம். அவருடைய வேலையில் நானோ, என்னுடைய வேலையில் அவரோ தலையிடுவதில்லை...

இரவு எட்டு மணிக்கு மேல் நான் வீட்டிற்கு வரவில்லையென்றால் துடிதுடித்துப் போவார். வந்ததும் அவரிடம் தாமதத்திற்கான காரணம் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கண்ணை இமை காப்பது போல, என்னைக் காத்து வந்தார். என்னைப்பற்றி யாராவது தவறாகப் பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டார். அதே சமயம் அவர் உரிமையோடு என்னைக் கண்டிப்பார். பள்ளி ஆசிரியர் நன்றாக படிக்கும் மாணவன் மீது காட்டும் பிரியமான கண்டிப்போடு இருந்தார்.

தொழில் என்று வரும்போது மிகவும் கண்டிப்பானவர். உதாரணத்திற்கு "மிஸ்ஸியம்மா' படத்தில் பானுமதி நடிக்க, இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் நடைபெறும் நிலையில்... பானுமதி தாமதமாகப் படப்பிடிப்புக்கு வந்ததனால், சக்கரபாணிக்கும் பானுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இத்தனைக்கும் பானுமதியும் ஓர் எழுத்தாளர். சக்கரபாணியும் ஓர் எழுத்தாளர். தர்மபத்தினி பட காலத்திலிருந்தே இவர்கள் ஒருவரையொருவர் இலக்கிய வழியால் நன்கறிவார்கள். இருந்தாலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருந்தவர் சக்கரபாணி.

சக்கரபாணி பானுமதியைக் கூப்பிட்டு, ""இனி உன்னை வைத்துப் படம் எடுக்க முடியாது'' என்று சொல்லி பேசிய தொகையைக் கொடுத்து அனுப்பிவிட்டார். அதன் பின், அப்போது இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்த சாவித்திரியைக் கதாநாயகியாக்கி மிஸ்ஸியம்மா தயாரிக்கப்பட்டது. சக்கரபாணி அந்த அளவிற்குக் கண்டிப்பானவர்.

"அம்புலிமாமா'வின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. பதின்மூன்று மொழிகளில் அச்சிடப்படுகிறது. ஆறு வயது முதல் எண்பது வயதுவரை அதற்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் சக்கரபாணிதான்.

நூற்றி நாலு டிகிரி காய்ச்சலோடு படுத்து இருந்தாலும் அவரது கையெழுத்து இல்லாமல் ஒரு வரி கூட அச்சேறாது. அந்த அளவிற்கு அம்புலிமாமா பத்திரிகையில் ஈடுபாட்டோடு இருந்தார்.

சிறுவர்கள் பத்திரிகை என்றாலும் கூட, பெரியவர்களுக்கும் நீதி போதனைக் கதைகள் அதில் இருக்க வேண்டும். ஆனால் அது எந்த இஸத்திலும் கட்டுப்படக்கூடாது என்று சொல்வார். வெளியிலிருந்து வரும் கதைகளை அவரே மறுபடியும் திருத்தி எழுதச் சொல்வார். எழுதுவார்.

படத் தயாரிப்பு, பத்திரிகைப் பணி இரண்டிலுமே அவருடைய பணி மதிப்பிட முடியாதது.

காலையில் ஸ்டுடியோ, நண்பகலில் இரண்டு மணி நேரம் பத்திரிகைப் பணி மீண்டும் ஸ்டுடியோ, இரவு ஏழு மணிக்கு மேல் பத்திரிகைப் பணி இதுதான் அவருடைய அன்றாட அலுவல்.

அவருடைய வெற்றிக்குக் காரணம் பொது அறிவுடன்... சினிமா தயாரிப்பில் ரசிகனாக இருந்தார். அம்புலிமாமா பத்திரிகையில் வாசகனாக இருந்தார்.

இது மக்களுக்குப் பிடிக்கும். இது பிடிக்காது என்பதைத் துல்லியமாகச் சொல்வார்.

வயது வித்தியாசம் பாராமல் மற்றவர்களுடைய கருத்துக்கு நல்ல மரியாதை கொடுப்பவர் சக்கரபாணி. வசனங்களைப் பொறுத்தவரை சுருக்கமாகக் காரண காரியங்களோடு பேசப்படுவதாக இருக்க வேண்டும் என்று சொல்வார். இப்படி எந்தக் காரியத்தையும் மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டுமென்ற உணர்வு உள்ளவர் சக்கரபாணி.

அவரையும் என்னையும் அவருடைய மரணத்தினால் மட்டுமே பிரிக்க முடிந்தது. எங்களுடைய விஜயா மருத்துவமனையில்தான் அவர் என்னைவிட்டு உடலளவில் பிரிந்தார்.

இன்று இந்த அளவிற்கு... உலகத்திற்கு என்னைத் தெரிகிறது என்றால்... அதற்கு அடிப்படைக் காரணம் சக்கரபாணி. எனக்கு நல்ல நண்பனாக... சகோதரனாக... வழிகாட்டியாக... ஆசிரியனாக இருந்து ஒரு சகாப்தமாகவே வாழ்ந்தார்''

என்று என் தந்தையார் தனது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார்.

8. வாகினியிலிருந்து விஜயா...

என் தந்தையார், "பக்த போதனா' பட வேலைகள் முடிந்த கையோடு, பெங்களூரிலிருந்து நேரே ஓரம்பாடு கிராமத்துக்கு வந்துவிட்டார். இது குறித்துக் கேள்விப்பட்ட தாத்தா (அம்மாவின் அப்பா) அம்மாவையும், பேரக் குழந்தைகளான எங்களையும் பார்க்க ஓரம்பாடு வந்தார். ஏழ்மை தாண்டவமாடிய நிலையைக் கண்டார். எங்களில் யாருமே உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இல்லை. கண்களில் நீர் வழிய அவர் எங்களை அணைத்துக் கொண்டார். எங்களின் படிப்பு - உடல் நலன் கருதி பண உதவி செய்ய முன்வந்தார். என்

தந்தையை மீண்டும் சென்னைக்கே சென்று தொழில் செய்யும்படியும், அதற்கான உதவி செய்யவும் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

அடுத்து என்ன செய்வது? எங்கே போவது? என்ற கேள்விக்குறி என் தந்தையாரை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள் தந்தையார் மாட்டுத் தொழுவத்தையே கவனித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு பசு கன்றை ஈன்றிருந்தது. அந்தக் கன்று பிறந்தவுடன் பலமுறை நிற்க முயற்சி செய்தும் கீழே விழுந்து கொண்டேயிருந்தது. இருந்தாலும் பலமுறை முயன்று இறுதியில் எழுந்து நின்றது.

"குழந்தை கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே' என்னும் உண்மையை உணர்ந்தார். இது என் தந்தையரின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவருள் ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பலமுறை வீழ்ந்தாலும் பலமுறை முயன்று நாம், நமது லட்சியத்தை அடைய வேண்டும்.

இப்படி எண்ணிய வேளையில், என் தந்தையாருக்கு சென்னையில் இருந்து ஓர் கடிதம் வந்தது. அதை எழுதியவர் ஒருவரல்லர், ஐவர். ஆம்... என் பெரியப்பா (பி.என்.ரெட்டி), கே. ராம்நாத், மூலா நாராயணசாமி, ஆர்ட் டைரக்டர் ஏ.கே. சேகர், கே.வி. ரெட்டி ஆகியோரே அவர்கள்.

அந்தக் கடிதத்தில், "உன் பட விளம்பர யுக்தியினால் பக்த போதனா படம் பெரும் வெற்றி பெற்றது. இப்போது நீ பொருளாதாரப் பிரச்னையால் சென்னைக்கு வர தயங்கிக் கொண்டிருக்கிறாய். நீ இங்கே வராவிட்டால் நல்ல எதிர்காலத்தையும் நல்ல நண்பர்களையும் இழந்துவிடுவாய்' என்று குறிப்பிட்டிருந்தார் கே. ராம்நாத். ஆனால் என் தந்தையார் வரவில்லை வர விரும்பவும் இல்லை.

இதனையடுத்து, கே. ராம்நாத் என் தந்தையாரைத் தேடி ஓரம்பாடு கிராமத்துக்கே வந்துவிட்டார். அவர் நேரில் வந்து வற்புறுத்திய பிறகுதான் என் தந்தையார் சென்னைக்கு வர ஒப்புக்கொண்டார்.

இவர்கள் ஐவரும் தலா ஆயிரம் போட்டு, ஐயாயிரம் ரூபாயைச் சேர்த்து என் தந்தையாரிடம் கொடுக்க, இந்தத் தொகையுடன் என் தாத்தா கொடுத்த ஐயாயிரம் ரூபாயையும் சேர்த்து இன்னும் ஓர் அச்சு இயந்திரம் வாங்கி, ஏற்கெனவே இருந்த பி.என்.கே. பிரஸ் அச்சகத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார் என் தந்தை.

பி.என்.கே. பிரஸ்ஸில் அச்சிடப்பட்டு வந்த ராமப்பிரம்மத்தின் "பிரஜாமித்ரா' பத்திரிகை ராமப்பிரம்மத்தின் உடல்நலம் சரியில்லாததாலும், நிதி பற்றாக்குறையாலும் தவித்து வந்தது. தவிர, ராமப்பிரம்மமும் என் பெரியப்பா பி.என்.ரெட்டி அவர்களைப் போலவே சினிமாவில் ஈடுபட்டிருந்தார். சமூக விழிப்புணர்வு கருத்துக்களைக் கொண்ட நான்கு தெலுங்குப் படங்களை ஏற்கெனவே தயாரித்து, ஐந்தாவது படத்தை தயாரித்து, இயக்கும்போது உடல்நலம் மோசமாக, படம் முடியும் முன்னரே ராமப்பிரம்மம் இயற்கையெய்தினார்.

இந்த நிலையில் அச்சகத்தை தொடர்ந்து நடத்த ஆர்டர்களைப் பெறவேண்டிய கட்டாய சூழல் தந்தையாருக்கு ஏற்பட்டது.

அப்போது, என் சித்தப்பா பி.என். கொண்டா ரெட்டி கல்லூரிப் படிப்பை முடித்தபோது அவரிடமும் தாத்தா அச்சகத்தை பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →