முகப்பு
தினமணி கதிர்

எம்.ஜி.ஆரின் முதலாளி

என் சித்தப்பா பி.என். கொண்டா ரெட்டியின் ஆர்வமெல்லாம் புகைப்படக் கலையில் இருந்தது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

நாகிரெட்டி நினைவுகள்:மகன் விஸ்வம் எழுதுகிறார்
 என் சித்தப்பா பி.என். கொண்டா ரெட்டியின் ஆர்வமெல்லாம் புகைப்படக் கலையில் இருந்தது.
 எனவே கொஞ்ச காலம் பிரஸ்ஸில் வேலை செய்துவிட்டு, கே. ராமநாத்தின் உதவியாளராகச் சினிமாவில் சேர்ந்தார். இதனால் பி.என்.கே. பிரஸ் நிர்வாகம் முழுவதும் என் தந்தையாரிடமே இருந்தது.
 ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமத்துக்கு என் தந்தையார் அடிக்கடி போவதுண்டு.
 ""நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'' என்று ஆஸ்ரமத்தில் அவரிடம் கேட்டபோது பிரிண்டர் என்று பதில் சொன்னார்.
 ""ராமகிருஷ்ணா மிஷன் புத்தகங்களை உங்களால் அச்சடித்துத் தர முடியுமா?'' என்று அவர்கள் கேட்க, என் தந்தையார் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்.
 ஆரம்பத்தில் சின்ன சின்ன வேலைகளைத் தந்தார்கள். நாளடைவில் பி.என்.கே. பிரஸ், ராமகிருஷ்ணா மிஷனின் அஃபீஷியல் பிரிண்டர் ஆனது. அப்போது என் தந்தையாரே புரூஃப் பார்ப்பார்.
 ""இந்த உலகில் புதிய பாதையை, ஆன்மிகப் பாதையை எனக்குக் காண்பித்தது ராமகிருஷ்ணா மிஷன்தான்'' என்பார் என் தந்தையார்.
 நாளடைவில் படிப்படியாக அச்சகத்திற்கு நிறைய வேலைகள் வர ஆரம்பித்தன. நல்ல பெயரும் வந்தது.
 அச்சக வேலைகள் அதிகமாக வர வர... என் தந்தையார் சில நாள்களில் தி.நகரில் இருந்த வீட்டிற்குப் போக நேரமில்லாமல் ஆச்சாரப்பன் தெரு அச்சகத்திலேயே இரவு நேரங்களில் தங்கி வேலைகளைப் பார்க்க வேண்டியிருந்தது. வேஸ்ட் பேப்பரே அவருக்குப் படுக்கை.
 பி.என்.கே. பிரஸ்ஸில் திருமண பத்திரிகை அச்சடிக்கும்போது மட்டும் இவ்வளவு பில் என்று கணக்கிடுவதில்லை. வாடிக்கையாளர்கள் அவர்களாகவே மனமுவந்து எவ்வளவு தருகிறார்களோ அதுதான் பில் தொகை. பி.என்.கே. பிரஸ்ஸில் திருமண பத்திரிகை அச்சடித்தால் எல்லாம் சுபமாக முடியும் என்ற நம்பிக்கையும் வாடிக்கையாளர் மனதில் எழுந்தது. இந்த வகையிலும் பி.என்.கே. பிரஸ் பிரபலமானது...
 இது குறித்து என் தந்தையார் சொன்னதாவது:
 ""பக்த போதனா'' படத்தின் வெற்றி ராம்நாத் சேகர் இருவரையும் ஜெமினியில் இணைய வைத்தது. இதனால் தமது அடுத்த தயாரிப்பான "சொர்க்க சீமா' படத்திற்கு வசனம் எழுத பொருத்தமானவரை தேடிக் கொண்டிருந்தார் என் அண்ணன். கே.வி. ரெட்டியின் வாயிலாக சக்கரபாணி என்னும் ஏ.வி. சுப்பாராவ் அவர்களை வரவழைத்து, சொர்க்க சீமா படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சக்கரபாணி மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வெளியிடும் பிரசுரத்தையும் வைத்திருந்தார். அவற்றை அச்சிடும் வேலையையும் பி.என்.கே. பிரஸ் ஏற்க, சக்கரபாணி அச்சகத்தின் மாடியிலேயே தங்கி, புத்தக வேலைகளைக் கவனித்து வந்தார்.
 இந்த சந்தர்ப்பத்தில்தான் எனக்கும் சக்கரபாணியாருக்கும் நட்பு நெருக்கமானது.
 இலக்கிய உணர்வு, சுதந்திர தாகத்துடன் நடத்தப்பட்ட "ஆந்திர ஜோதி' மாத இதழை, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற நிறைவுடன், அதைத் தொடர்ந்து நடத்த ஆந்திராவைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு உரிமை தரப்பட்டது.
 1947 ஜுலையில் குழந்தைகள் பத்திரிகையாக "சந்தமாமா' என்று தெலுங்கிலும், "அம்புலிமாமா' தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதன் விலை ஆறணா. இரண்டு ஆண்டுகளில் ஆறு மொழிகளில் "சந்தமாமா' வெளியானது. ஆரம்பித்த ஒன்பது மாதங்களுக்கு "சந்தமாமா' நஷ்டத்திலேயே நடந்து வந்தது. பத்திரிகை லாபநோக்குடன் தொடங்கப்படவில்லை. சேவை மனப்பான்மையை அடிநாதமாகக் கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் வண்ண வரை படங்கள், வண்ணப்பட அட்டை... பாமரனும் படித்துப் புரியும்படியான எளிய நடை... இது இலக்கிய வட்டத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 சந்தமாமா, அம்புலிமாமா தொடங்கியபோது கிராமங்களில் உள்ள அனைத்து தபால் நிலைய அதிகாரிகளுக்கு அதன் ஒரு பிரதியை அனுப்பி அவர்களை படிக்கச் சொல்லி, அவர்கள் வாயிலாக உள்ளூரில் இருந்த ஆர்வத் துடிப்புள்ள படித்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து முகவர்களாக நியமித்தோம். இதில் ஒரு சிறப்பு அன்று அப்படி முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களது வாரிசுகள் சந்தமாமா, அம்புலிமாமா இதழ்களின் முகவர்களாக தொடர்ந்து இருந்ததுதான்.
 தவிர சக்கரபாணி, மேலாளர் பி.எஸ். ராமாராவ் உடன் நானும் சேர்ந்து சந்தமாமா, அம்புலிமாமா இதழ்களை கைகளில் ஏந்தி சென்னை மெரீனா கடற்கரையில் காற்று வாங்க வருபவர்களிடம் காண்பித்து, அம்புலிமாமாவையும் வாங்கச் செய்து, பத்திரிகை சம்பந்தப்பட்டவர்களே நேர்முக விற்பனையை நடத்திய புதுமையையும் அன்றே செய்தோம்.
 இந்த முறையில் குறுகிய காலத்தில் எங்களால் அம்புலிமாமா இதழ்களுக்கான முகவர்களை நியமித்து... விற்பனையை அதிகரிக்கச் செய்ய முடிந்தது.
 ஆறு மொழி இதழ்களையும் பி.என்.கே. பிரஸ் அச்சிட, தேசிய அளவில் அங்கீகாரம், வரவேற்பை பெற்றது சந்தமாமா. ஆறு வயது முதல் எண்பது வயது வரை வாசகர்களைக் கொண்ட இதழாக அவை திகழ்ந்தன.
 "சந்தமாமா' இதழுக்கு சக்கரபாணியை ஆசிரியராகவும், அச்சிடுபவர், பதிப்பாளராக நானும் பணியாற்றினோம்.
 எனக்கு வேலைவாய்ப்பை அதிகமாக பி.என்.கே. பிரஸ் கொடுத்திருந்தாலும் அதைவிட எனக்கு மனநிறைவை தேசிய அளவிலும் ஏன்... உலக அளவில் பெற்றுக் கொடுத்தது சந்தமாமாதான்.
 அதன் வளர்ச்சியில் பல்வேறு மொழிகளில், அதனைக் கொண்டுவர சக்கரபாணியாரும் நானும் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம்.
 "சொர்க்கசீமா' வெற்றியை அடுத்து, உடனே படம் தயாரிக்க வேண்டும் என்று அண்ணனின் (பி.என். ரெட்டி) நண்பர்கள் விரும்பினார்கள். ஆனால் ஏற்கெனவே படங்களைத் தயாரித்த நியுடோன் ஸ்டூடியோவில், அண்ணனுக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் நாமே ஒரு ஸ்டூடியோவை நிர்மாணித்த பிறகே படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக இருந்தார்.
 வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி செய்துவந்த மூலா நாராயணசாமிக்கு இன்கம்டாக்ஸ் பிரச்னையில் பெரும் தொகை கட்ட வேண்டியிருந்தது.
 அவர் என்னிடம், ""பண உதவி செய்ய முடியுமா?''
 என்று கேட்டார். அப்போது நான் தி.நகரில் குடும்பத்துடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்து இருந்ததால் மூலாவுக்கு உதவுவதில் எனக்குத் தடங்கல். அந்த கம்பெனிக்கு அண்ணன்தான் மானேஜிங் டைரக்டர். பாங்கில் பணம் இருந்தும் அண்ணன் மூலாவுக்கு உதவ முன்வரவில்லை.
 அச்சகத்தை, பிரசுரத்தை விரிவுபடுத்த சேமித்து வைத்திருந்த பணத்துடன் என் நண்பர்களிடமும் பணத்தைப் பெற்று மூலாவுக்கு உதவினேன். அதனால் வாகினி புரொடக்ஷன்ஸýக்கு நாகிதான் மேனேஜிங் டைரக்டர் என்று மூலா தீர்மானித்து விட்டார்.
 அண்ணனிடம் போய் இதைச் சொன்னேன். ""நீ இல்லாவிட்டால் வேறு யாரையாவது அந்த இடத்தில் மூலா நியமித்து விடுவார். அதனால் நீயே பொறுப்பை ஏற்றுக்கொள்'' என்றார் அண்ணன். ஒப்புக்கொண்டேன்.
 இந்தச் சந்தர்ப்பத்தில் சென்னை, தி.நகர் விஜயராகவாச்சாரி தெருவில் இருந்த வீடு உட்பட ஏனைய சொத்துக்கள் அனைத்தும் பாகப்பிரிவினையில் என் மற்ற சகோதரர்களுக்கு அப்பாவினால் அளிக்கப்பட்டது. எனக்கு ஆச்சாரப்பன் தெருவில் இருந்த அச்சகம் மட்டுமே கிடைத்தது.
 இந்த பாகப்பிரிவினையை ஏற்காத சக்கரபாணியும் சந்தமாமா பொது மேலாளர் பி.எஸ். ராமாராவும் என் அப்பாவைச் சந்தித்து கேட்டபொழுது, ""நாகி தன்னுடைய தனித்திறமையால் முன்னுக்கு வந்து பெரிய ஆளாகிவிடுவான். அவனது திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அதனால்தான் இப்படி'' என்று சொல்லி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.
 அதுவரை, கூட்டுக் குடும்பமாக சேர்ந்து இருந்த எனக்கு தனிக்குடித்தனம் போக, வேறு வீடு பார்க்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அப்போது நடிகர் வி.நாகய்யா, தமது படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தை எனக்குக் குடியிருக்கக் கொடுத்தார். அந்த கட்டடத்திலேயே சக்கரபாணியாருக்கும் மாடியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது.
 இதனால் நடிகர் வி.நாகய்யா எங்களுக்கு நெருங்கிய நண்பரானார். பின்னாளில் அவர் தயாரித்த "என் வீடு' படம் பொருளாதாரப் பிரச்னையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு பொருளுதவி தந்து "என் வீடு' படத்தை முடித்து வெளியிட உதவினேன். அவர் மீண்டும் படங்களை எடுத்தார். இப்படியாக வி.நாகய்யாவுக்கும் என் நன்றிக் கடனைச் செலுத்த பின்னாளில் இறைவன் எனக்கொரு வாய்ப்பைத் தந்தார்.
 அப்போது "குணசுந்தரி கதா' படம் தயாரிப்பில் இருந்தது.
 மூலா நாராயணசாமி சென்னையில் ஸ்டூடியோ கட்ட விரும்பி, வாஹினியின் மெயின் பில்டிங் கட்டட வேலை நடந்துகொண்டிருந்தது. இன்கம்டாக்ஸ் பிரச்னையினால் அந்த வேலையை அவரால் தொடர முடியவில்லை.
 இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கிய பிரமுகரைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அவர் பெயர் ரமணா ரெட்டி. என் கடைசி தம்பி ராமலிங்க ரெட்டியின் மைத்துனர். மண்டபம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த குடும்பத்திற்கு பெரிய தோட்டம் உண்டு. விஜயா புரொடக்ஷன்ஸ் தொடங்க இருந்ததை அறிந்த அவரும் அவருடைய சகோதரரும் சேர்ந்து, ""நாங்கள் பணம் தருகிறோம்'' என்று பணம் கொடுக்க முன்வந்தார்கள்.
 அர்ஜுனனுக்கு விஜயன் என்ற பெயர் உண்டு. ஆஞ்சநேயருக்கும் விஜயன் என்ற பெயர் உண்டு. அதனால் ஆஞ்சநேயர் கொடியை வைத்து விஜயா புரொடக்ஷன்ஸ் உருவாக்கினேன். இந்த பெயரை சக்கரபாணியும் ஒப்புக்கொண்டதில் எனக்கு நிரம்ப சந்தோஷம். சக்கரபாணியும் முதலீடு செய்து இதில் பங்குதாரரானார். வாகினி ஸ்டூடியோவை விஜயா புரொடக்ஷன்ஸ் பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தினோம்.
 அப்போது புராண நாட்டுப்புறக் கதையை கே.வி. ரெட்டி இயக்க, அவருடன் இணைந்து செயலாற்ற ஒரு யூனிட் அமைக்கப்பட்டது. இந்த யூனிட் படப்பிடிப்பில் இருக்கும்போது சமூக, குடும்ப கதைகளை சக்கரபாணி எழுத, அவற்றை எல்.வி. பிரசாத் இயக்க, ஆயத்த பணிகளைச் செய்ய இன்னொரு யூனிட் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனால், இடைவெளி இல்லாமல் விஜயா புரொடக்ஷன்ஸ் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கவும், ஸ்டூடியோ எப்போதும் பிஸியாக இருக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
 அப்போது ஸ்டூடியோவில் மெயின் பில்டிங்கைத் தவிர வேறு தளங்கள் இல்லை. கறுப்பு வெள்ளை லேபரட்டரி, ரிக்கார்டிங் தியேட்டர், ஒரு படப்பிடிப்பு தளம் இருந்தது. அதனால் திருநெல்வேலியில் இருந்து பெரிய பனைமரங்களை வரவழைத்து, அறுத்து துண்டுகளாக்கி செட் போட்டோம். வாகினி ஸ்டூடியோவில் உருவான முதல் தெலுங்கு படம் குணசுந்தரி கதா. தமிழ்ப்படம் லாவண்யா விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த முதல் படம் "செüகார்'. எல்.வி. பிரசாத் எங்களுக்காக இயக்கிய முதல் படம் "செüகார்'.
 வாகினி ஸ்டூடியோவின் நிர்வாகத்தை மேற்கொண்டோமே தவிர, அதைத் தொடர்ந்து நடத்த பல சிரமங்கள்... தயாரிப்பில் இருந்த படத் தயாரிப்பு கூட பண நெருக்கடியினால் தத்தளித்தது. பணியாட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை. அதற்காக அப்போது நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவிடம் இருந்து கடன் பெறப்பட்டது. செüகார் படம் வெளியாகி பேனருக்கு பெயரைக் கொடுத்ததே தவிர வசூல் எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால் கே.வி. ரெட்டி இயக்கிய வாகினியின் "குணசுந்தரி கதா' 1949 இறுதியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. பானுமதியிடம் வாங்கிய கடனை அடைத்தோம். அன்றிலிருந்து பானுமதியும் அவரது கணவரும் எங்கள் குடும்பத்திலேயே இணைந்தவர்களாக இருந்தனர்.
 அந்நாளில் வாகினினியில் நிரந்தர பணியாளர்களாக சுமார் 150 பேர் மாத சம்பளத்தில் வேலை செய்து வந்தனர். அவர்களில் கதாநாயக நடிகர் என்.டி. ராமாராவும் ஒருவர். அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய, விளையாட, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளும் உணவு வழங்க காண்டீன் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
 அதேசமயத்தில், தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் பலர் வந்தால்தான் தொழிலும் செழிக்கும், புதிய கலைஞர்களும் வர முடியும் என்ற எண்ணம் கொண்டு, வெளியில் இருந்து வரும் படத் தயாரிப்பாளர்களுக்கு விஜயா புரொடக்ஷன்ஸ் அனுபவித்து வரும் அனைத்து வசதிகளையும் செய்து தந்து, புதியவர்களை வரவேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 ஒருசமயம், படத் தொழிலின் நிதி நிலைமை மிக மோசமானபோது விஜயா வாகினியில் படமெடுத்தவர்களுக்கு, அவர்கள் ஸ்டூடியோவுக்கு செலுத்திய வாடகைத் தொகையிலிருந்து ஒரு பகுதியை திருப்பிக் கொடுத்து தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி பட உலகின் நிதிநிலைமையிலும் பங்கேற்று உதவினோம்.
 அதற்குப் பிறகு ஸ்டூடியோ படிப்படியாக வளர்ந்து தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோ என்ற அந்தஸ்தைப் பெற்று உயர்ந்தது...
 
 9. விஜயா புரொடக்ஷன்ஸ்
 
 என் பெரியப்பா டைரக்டர் பி.என்.ரெட்டியின் சகோதரர் என்ற காரணத்தால் என் தந்தையாருக்கு வாஹினி பிக்சர்ஸ், வாகினி புரொடக்ஷன்ஸ் உடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. மேலும் அவர், எவ்வவளவு குறுகிய காலமாயினும், நேர்த்தியான முறையில் உயர்தர ஏற்பாடுகளைச் சிறந்த முறையில் நன்கு செய்ய வல்லவர் என்பதும் புலனாகியது.
 சக்கரபாணி 1939ல் முதன் முதலாக "தர்மபத்னி' என்ற தெலுங்குத் திரைப்படத்திற்குச் சினிமாக் கதை எழுதிக் கொடுத்தார். 1944ல் பி.என். ரெட்டிக்கு "சுவர்க்கசீமா' என்ற தெலுங்குப் படத்திற்கு திரைக்கதை எழுதிக் கொடுத்தார். இவர் விஷயங்களை எளிதில் கிரகித்துக் கொள்வதில் மட்டும் சமர்த்தர் என்பதுடனல்லாமல் தொலைநோக்குள்ளவர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
 சிறந்த குணங்களையும் பண்பாட்டையுமுடைய தந்தையாரும் சக்கரபாணியும் சேர்ந்து தயாரித்த விஜயா புரொடக்ஷனின் படங்கள் முதல் தரமாக அமைந்தனவென்றால் ஆச்சரியமில்லை மக்களின் மனதைக் கவர்ந்து வெற்றியடைந்தன.
 இவர்களது முதல் படம் செüகார் ஆடம்பரமற்ற கிராமவாசிகளின் கதை இரு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அகங்காரம் தலை தூக்கியதால் ஏற்படும் கேட்டினை எடுத்துக்காட்டும் படம் இது.
 "செüகார்' குறிப்பிட்ட இனம், பிரிவு, சாதியில் காணப்படும் சடங்குகளை, சம்பிரதாயங்களை ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட சூழ்நிலையில் மக்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களை கொண்டிருந்தாலும் அது மனித இனத்தின் முழுமையான இயல்பை பிரதிபலித்தது.
 தெலுங்குப் படங்களில் புராணப் படங்களும் நாட்டுப்புறப் படங்களும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவக்கிய வேளையில் "செüகார்' வெளியானது.
 இன்றுவரை "செüகார்' படம் ஜனரஞ்சகமான அம்சங்களை ஓரளவு கொண்ட செமி கிளாசிக் படமாகக் கருதப்படுகிறது. காரணம் கதையின் கரு. ஒளிவு மறைவு இன்றி அலசப்பட்டு, நாட்டுப்புற உணர்வை அழகாக வெளியிட்டதுதான். தெலுங்குப் படவுலகை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற முதல் படம் செüகார்.
 இரு தீபாவளிகளுக்கிடையே ஏற்பட்ட மகத்தான மாறுதல்களை எடுத்துக்காட்டிய இப்படத்தை மிகக் குறைந்த காலத்தில் பெரிய நடிக நடிகைகளின் பட்டியலில்லாமல் கலைத் திறனுடன் விஜயா புரொடக்ஷன்ஸôர் தயாரித்தனர். 1949 நவம்பர் 5ந் தேதி இப்படப்பிடிப்பு ஆரம்பமாகி 1950 மார்ச் 11ந் தேதி முடிவடைந்தது. 1950 ஏப்ரல் 7ந் தேதி படம் திரையிடப்பட்டது. இதில் முக்கிய நடிகர்கள் என்.டி. ராமாராவ், எஸ்.வி. ரங்கராவ், (செüகார்) ஜானகி, சாந்தகுமாரி, ரேலங்கி முதலியவர்கள். கதை, வசனம் சக்கரபாணியுடையது. இயக்கம் எல்.வி. பிரசாத். இது தெலுங்கில் மட்டுமே தயாரிக்கப்பட்டது.
 விஜயா புரொடக்ஷனின் இரண்டாவது படமான "பாதாள பைரவி' பழங்காலக் கதையைக் கொண்டது. எந்த மொழியிலும் தயாரிக்கப்படக்கூடிய கதை. கே.வி. ரெட்டி உருவாக்கிய இந்தக் கதை, கதை வசனம் எழுதுவதற்கான ஒரு சிறந்த இலக்கணம் எனச் சொல்லலாம். கதாபாத்திரங்கள் தோன்றி அவர்களது இயல்புகள், நோக்கங்கள் வெளிப்படும்போது ஒரு துவக்கக் காட்சி ஏற்படுகிறது. இந்தக் கதை தைரியமே செல்வம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசிவரை இந்தக் கருத்து எதிரொலிக்கிறது. தாம் எடுக்க வேண்டிய காட்சிகளை சரியாக கே.வி. ரெட்டி நிர்ணயித்ததால் எடிட்டருக்கு வேலையே இல்லாமல் ஆகிவிட்டது. கே.வி.ரெட்டியின் கதை சொல்லும் திறன்... ஒரு நொடிகூட கண்களுக்கு அயர்ச்சியோ காதுகளுக்கு பாதிப்போ ஏற்படுத்தவில்லை. படம் முழுவதும் விறுவிறுப்பு கூடியிருந்தது. ஒரு சாதாரண ரசிகனை மனதில் கொண்டு, எல்லா ரசிகர்களையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்ட உன்னதமான படம் பாதாள பைரவி. கே.வி. ரெட்டியின் டைரக்ஷனில் இப்படம் 1950 பிப்ரவரி 5ந்தேதி ஆரம்பமாகி 1951 பிப்ரவரி 18ந் தேதி முடிந்தது. 1951 மார்ச் 15ந் தேதி திரையிடப்பட்டது.
 விஜயாவின் புதிய பாணி நாட்டின் நாலா பக்கத்திலும் தெரிந்து பாராட்டுதல்களைப் பெறலாயிற்று.
 (தொடரும்)
 

 
 

முழு கட்டுரையைப் படிக்க →