முகப்பு
தினமணி கதிர்

எம்.ஜி.ஆரின் முதலாளி

காலை எட்டு மணிக்குத் தொடங்கிய விழா, இரவு பத்துமணி வரை நடந்தது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

நாகிரெட்டி நினைவுகள்:மகன் விஸ்வம் எழுதுகிறார்

காலை எட்டு மணிக்குத் தொடங்கிய விழா, இரவு பத்துமணி வரை நடந்தது. யாரும் எந்த புரோக்ராமையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அந்த நேரத்தில், அவரவர்க்குத் தோன்றிய ஸ்பாட் ஐடியாவை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
 இந்த விழா நடக்கும் தகவல் அறிந்து, ஏனைய நடிக, நடிகைகளும் தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆவலோடு வந்து கலந்து கொண்டார்கள். எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்பன்... ஆகியோரும் மாலை மூன்று மணிக்கே வந்து விழா முடியும்வரை இருந்தார்கள்.
 இப்படி உற்சாகமாய் எல்லோரும் கலந்து கொண்ட அந்த விழாவில், குளிர்பானம் சப்ளை செய்த விநியோகஸ்தர்கூட, சந்தோஷ மிகுதியால் இலவசமாய் எல்லோருக்கும் சப்ளை செய்யத் தொடங்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...
 வித்தியாசமாக நடந்த இந்த விழாவிற்காக, எங்களுக்கு ஏற்பட்ட செலவு பத்தாயிரம் ரூபாய்தான். ஆனால், அது நெஞ்சத்தில் கட்டித் தொங்கவிட்ட சந்தோஷ ஊஞ்சலுக்கு விலை உண்டா? இல்லவே இல்லை. இனி திரைஉலகின் எல்லாரையும் ஒன்றாகத் திரட்டி அதைப்போல ஒரு விழாவை நடத்த முடியும் என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
 நாங்கள்... அதாவது படவுலகினர் ஒரே குடும்பம் என்பதை வலியுறுத்தவே விஜயா கார்னிவல் நடத்தப்பட்டது.
 ஆனால், யாருடைய கண்பட்டதோ என்னவோ, எங்கள் குடும்பத்தை பிளவுபடுத்தும் சம்பவங்கள் அரங்கேறின.
 அது கச்சா பிலிம் தட்டுப்பாடு, கட்டுப்பாடு சமயத்தில் பட உலகிற்குள் புதிய தயாரிப்பாளர்கள் நுழையத் தடை என்று தென்னிந்திய வர்த்தக சபையில் தீர்மானம் போட முயற்சி... ஏற்கெனவே இருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் படம் எடுக்க வேண்டும் என்றதை ஓரிரு தயாரிப்பாளர்களுடன் நாங்களும் சேர்ந்து இந்தத் தீர்மானத்தை எதிர்த்தோம். எந்தத் தொழிலிலும் புதியவர்கள் வர வேண்டும். அப்போதுதான் அதில் புதிய கருத்துக்கள் உதயமாகும். நாமும் ஒரு காலத்தில் புதியவர்களாக இந்தத் துறைக்குள் வந்தவர்கள்தானே?அதனால் புதியவர்களுக்கு வழி விட வேண்டும். புதியவர்கள் வராவிட்டால் தொழில் நம்முடன் நசிந்து விடும் என்று வலியுறுத்தினேன்.
 இந்த கருத்துக்கு நான் மதிக்கும் முன்னோடிகள் எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம்.உட்பட மற்ற ஸ்டுடியோ தயாரிப்பாளர்களும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 நான் புதிய தயாரிப்பாளர்களுடன் ஒரு பிரம்மாண்டமான பேரணியை கோடம்பாக்கத்திலிருந்து தொடங்கி நடத்திச் சென்றேன். இது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. யார் யாரெல்லாம் புதியவர்களை எதிர்த்தார்களோ அவர்களே வரவேற்று... வாழ்த்தியதில் பிளவுபட்டிருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தது.
 "இவ்வளவு பிரபலமாக விளங்கும் நீங்கள் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது?' என்று என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என் பதில்:
 ""என்னைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது இன்ஸ்டன்ட் காபி மாதிரி அது ஃபில்டர் காபி ஆகாது. அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் சமூக நலப்பணிகளை சிறப்பாக செய்வதினால் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும் என்பதே எனது அசைக்க முடியாத நம்பிக்கை'' என்று தெரிவித்தார்.
 
 என் தந்தையார் அவர் சொன்னபடியே தமது இறுதி நாள்வரையில் அரசியலில் ஈடுபடவில்லை. சமூக நலப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார்...
 அகில இந்திய பிலிம் பெடரேஷன் 1950ல் ஜூன் மாதத்தில் ராய் பகதூர் சினிலால் தலைமையில் அமைக்கப்பட்டது.
 1953 ஆகஸ்ட் 5ந்தேதி அகில இந்திய ஃபிலிம் பெடரேஷன் தினம், இந்தியா முழுவதிலும் வெகு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. சினிமாத் தொழிலில் முன்னிற்கும் சென்னை பிராந்தியத்தினர் வாகினி ஸ்டூடியோவில் விழா ஏற்பாடுகளைப் பிரமாதமாகச் செய்திருந்தனர்.
 பிரபல டைரக்டர்கள், நடிகர்கள், தொழில் நிபுணர்கள், படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இன்னும் சினிமா துறையில் ஈடுபட்டுள்ளோர் பலர் கலந்துகொண்டனர். சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான பேர் பங்கேற்று அங்கு இருந்த மைதானத்தின் நாலாபுறங்களில் நின்று கொண்டுமிருந்தனர். கூட்டம் அவ்வளவு அதிகம் இருந்தது.
 கூட்டத்தில் எல்லோரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அன்று எல்லா ஸ்டூடியோக்களும் விடுமுறை அளித்தன. அகில இந்தியாவிலிருந்தும் வந்து பங்கேற்றனர்.
 விழாவில் ரோஹிணி பிக்சர்ஸ் அதிபர் எச்.எம். ரெட்டி, எஸ்.எஸ். வாசனைத் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்திக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்ள அவரும் முதல் மந்திரி மூதறிஞர் ராஜாஜியை மேடைக்கு அழைத்துக் கொண்டு வந்து தலைமை ஆசனத்தில் அமர வைத்தார். பிரபல பின்னணி பாடகி பி.லீலாவின் பிரார்த்தனையுடன் கூட்டம் ஆரம்பமாகியது.
 வாசன் தலைமையுரையில், ""கூட்டத்திற்கு ராஜாஜியின் விஜயம் சினிமாத் தொழிலில் ஈடுபட்ட அனைவருக்கும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது'' எனக் கூறினார்.
 தென்னிந்திய பிலிம் சேம்பரின் தலைவர் ராமையா பேசுகையில், ""அகில இந்திய ஃபிலிம் ஃபெடரேஷன் தினத்தில் சினிமாத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டதும் அன்றைய படக் காட்சியில் வசூலானதை ஃபெடரேஷனுக்குக் கொடுக்க சம்மதித்ததும் தொழிலில் அவர்களுக்குள்ள பற்றுதலைக் காட்டுகிறது'' என்று கூறினார்.
 விஜயா புரொடக்ஷன்ஸ் அதிபரும் தென்னிந்திய பிலிம் சேம்பரின் கெüரவக் காரியதரிசியுமான என் தந்தையார் பி.நாகிரெட்டி பேசுகையில், சினிமாத் தொழில் தேசத்தில் அதற்குரிய இடத்தைப் பெறவேண்டுமென்றும் அதற்குரிய அந்தஸ்தை மற்றவர்களும் அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். ராஜாஜி இக்கூட்டத்திற்கு விஜயம் செய்து சினிமாப் பிரமுகர்களின் கஷ்ட நஷ்டங்களுக்குச் செவிசாய்க்க முன்வந்துள்ளதே இத்தொழிலின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது என்றும் கூறினார்.
 ஏவி.எம். ஸ்டூடியோ அதிபர் மெய்யப்ப செட்டியார் பேசுகையில், ""சினிமாத் தொழிலிலுள்ளவர் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்களென்பதற்கு எடுத்துக்காட்டாகவே இக்கூட்டம் இருக்கிறது'' என்பதைச் சொன்னார்.
 பிரபல நடிகை பி.பானுமதி பேசுகையில், ""சினிமாவை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் ராஜாஜியே இக்கூட்டத்திற்கு விஜயம் செய்தது அத்தொழிலுக்கே கிடைத்த மகத்தான வெற்றி'' என்று குறிப்பிட்டார்.
 முதல் மந்திரி ராஜாஜி பேசுகையில், ""சினிமா ஜனங்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு என்பதைத் தாம் ஒப்புக்கொள்வதாயும் ஆனால் பொழுதுபோக்கின் தரம் மட்டமாகிவிடக்கூடாதென்பதே தமது நோக்கம்'' என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து கூறுகையில், ""சினிமாவின் மூலம் வரி கிடைத்தால் அதுவும் பொது ஜனங்களுக்காகத்தான் செலவிடப்படுகிறதென்பதைக் கூறி, சினிமா மூலம் பொதுஜனங்களின் ஆத்மீக உணர்வு பாதிக்கலாகாது'' என்பதையும் குறிப்பிட்டார். அத்துடன் தொழில் துறையிலுள்ளவர்களும் தமக்கு எவ்வித இழுக்கும் கெட்ட பெயரும் வராது பார்த்துக் கொள்வதுடன் தாம் தயாரிப்பதையும் நல்ல சிறந்த படங்களாகச் செய்ய வேண்டும். நல்ல படங்களை நீதிகளைப் புகட்டும் வகையில் உயர்தரமாகத் தயாரிக்க வேண்டும். மக்களின் கீழ்த்தர உணர்ச்சிகளைக் கிளப்பி அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிடும்படி வேண்டிக் கொண்டார்.
 டைரக்டர்கே.சுப்ரமணியம் நன்றி கூற, வைஜயந்திமாலாவின் நாட்டிய நிகழ்ச்சியுடன் விழா இனிது முடிவுற்றது.
 
 11. வடபழனியின் வளர்ச்சி...
 
 வடபழனியின் வளர்ச்சி குறித்தும் திரைப்பட அரங்கங்கள் வந்தவிதம் குறித்து ஏவி.எம். செட்டியார் தனது நூலில் எழுதியிருந்தது வருமாறு:
 வடபழனி ஆண்டவன் கோயிலுக்கு மேற்கில் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்தில் பத்து ஏக்கர் காலி இடம் கோடம்பாக்கத்தில் இருந்தது. ஒரு முஸ்லீமுக்கு சொந்தமான தோல் கிடங்கு இருந்த இடம்.
 பாகிஸ்தான் பிரிந்தபோது அந்த முஸ்லீம் அதை விட்டுவிட்டுப் பாகிஸ்தான் போய்விட்டார். அது (எவாக்வி) அகதி ப்ராப்பர்டியாக இருப்பதனால் அதை மலிவாக வாங்கவிடலாமே என்பதாக என் காரியஸ்தர் கேட்டார். உடனே அதை வாங்கிவிடச் சொன்னேன்.
 காரணம், நாங்கள் தேர்ந்தெடுத்த இடத்துக்கு அருகில்தான் திரு. பி.என். ரெட்டி தம் நெருங்கிய நண்பர் மூலா நாராயணசாமியுடன் சேர்ந்து வாகினி ஸ்டூடியோவை ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்தார். வாகினி ஸ்டூடியோவுக்கு அருகில் என்னுடைய ஸ்டூடியோவும் அமைவது பின்னால் ஏதாவது ஒருவகையில் ஒருவருக்கொருவர் உதவியாகக்கூட இருக்கலாம் என்பது ஒன்று.
 அவர்கள், அப்போது காமிராமேன் ஆக இருந்த ராம்னாத், ஆர்ட் டைரக்டர் ஏ.கே.சேகர் ஆகியவர்களோடு ஒரு டீம்ஆக "வந்தே மாதரம்' முதலிய சிறந்த படங்களை உருவாக்கியிருந்தார்கள்.
 இரண்டாவது, அந்தக் காலத்தில் கோடம்பாக்கத்தில் இப்போது உள்ளதுபோல ஜனப் போக்குவரத்து இல்லை. ஈ, காக்காய் இல்லாத இடமாக அமைதியாக இருந்தது. நான் பாலாஜி நகரில் இருந்தேன். ஸ்டூடியோவுக்காகப் பார்த்த இடம் என் வீட்டில் இருந்து ஐந்து மைலுக்குள் இருந்ததும் மற்றொரு காரணம்.
 ஆகவே வேறு எதைப் பற்றியும் யோசிக்காது முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு அந்தப் பத்து ஏக்கர் இடத்தை வாங்கினேன்...
 இவ்வாறு "எனது வாழ்க்கை அனுபவங்கள்' என்னும் புத்தகத்தில் ஏவி.எம். அவர்கள் ஸ்டூடியோ சென்னைக்கு வந்தது என்னும் தலைப்பில் எழுதியுள்ள அத்தியாயத்தின் தொடக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
 வரப்பு உயர நீர் உயரும்
 நீர் உயர நெல் உயரும்
 நெல் உயர குடி உயரும்
 குடி உயர கோன் உயரும்
 என்றார் ஒளவை மூதாட்டி.
 வாகினி வர, வளர... வளர... வடபழனியும் வளர்ந்தது.
 அன்றைய வடபழனி எப்படி இருந்தது ஆற்காடு ரோட்டின் வடக்கே அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில். தெற்கே அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோயில். பஸ் வசதி கிடையாது. கோடம்பாக்கம் ரயிலடியிருந்து கோவில்களுக்கு வருபவர்கள் ஜட்கா எனப்படும் குதிரை வண்டியில்தான் வரவேண்டும். அதுவும் கப்பி ரோடு எனப்படும் மண்சாலை. பாதையின் இருபுறங்களிலும் வயல்வெளிகள்... பாதையையொட்டி வேலியாக முட்புதர்கள் இருட்டிவிட்டால் யாரும் தனியாக நடந்து வர, போக பயப்படும் சூழல்.
 வடபழனி மார்க்கெட் அருகில் இறங்கி கோவிலுக்கோ அருகில் உள்ள சாலிகிராமம், விருகம்பாக்கம் கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டும். இதற்குமேல் ஓர் அடிகூட வராது என்பார் வண்டிக்காரர்.
 கோடம்பாக்கம் சைதாப்பேட்டை பாதையில் (இன்றைய அசோக் நகர்) ராணுவப் பயிற்சி நடைபெறும் இடம் இருந்தது. அதனால் ராணுவ ஜீப்கள்தான் அந்தப் பக்கம் வரும், போகும்.
 இப்போது அந்தக் கால வடபழனியைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...
 வடபழனியில் மருத்துவ வசதிகூட கிடையாது. டாக்டர் ஸ்காட் என்பவர் வடபழனி மார்க்கெட்டுக்கு அருகில் ஒரு கிளினிக் வைத்திருந்தார். அங்கே வரும் நோயாளிகளுக்கு ஒரே மாதிரியான இன்ஜெக்ஷன். ஒரு பெரிய கண்ணாடி குடுவையில் ஏற்கெனவே கலந்து வைத்திருக்கும் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆக மூன்று நிறங்களில் மிக்ஸர் எனப்படும் திரவத்தில் இருந்து ஒரு பாட்டிலில் கொஞ்சம் தந்து... ஒரு ரூபாய் பீஸ் ஆக பெற்றுக்கொள்வார். இதுதான் அப்போது அங்கே கிடைத்த அவசர சாதாரண வைத்திய உதவி.
 நடிகர் வி. நாகய்யா அவர்கள் வடபழனியில் இடம் வாங்கி தோட்டத்தை ஏற்படுத்தினார். அதன்பிறகு வாகினி நிறுவனமும் வடபழனியில் 1945ல் இடம் வாங்கி வாகினி ஸ்டூடியோ கட்ட ஏற்பாடுகளைத் துவங்கியது. வாகினி கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆயின.
 வாகினியை நிர்மாணித்தவர்களில் ஒருவரான மூலா நாராயணசாமிக்கு தனிப்பட்ட முறையில் பணப் பிரசினைகள் இருந்ததனால், வாகினியை குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்க இயலவில்லை. எனவே என் தந்தையார் வாகினியை, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் 1949ல் குத்தகைக்கு எடுத்த பிறகே இரு புறமும் முன்னேற்றம் காண ஆரம்பித்தது.
 ஒருபுறம் ஸ்டூடியோ நிர்மாண வேலைகள்... மறுபுறம் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் படத் தயாரிப்புப் பணிகள்... சந்தமாமா பத்திரிகையில் என் தந்தையாருக்கும் சக்ரபாணியாருக்கும் நேர நெருக்கடி... இவையெல்லாம் ஒருசேர, சென்னையில் வடகிழக்கே ஜார்ஜ் டவுனிலிருந்த பி.என்.கே. அச்சகத்தை சென்னையின் தென்மேற்கே இருந்த வடபழனிக்கே மாற்ற விரும்பினர்.
 அப்போது, வாகினியின் கிழக்குப்புறம் குண்டும் குழியுமாக... செடி, கொடி, புதர் மண்டிக் கிடந்த பேய் காத்த தோப்பு என்ற சுமார் நான்கு ஏக்கர் நிலம் என் தந்தையாரின் கவனத்தை ஈர்த்தது. மற்றவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்த அந்த பேய் காத்த தோப்பை என் தந்தையார் வாங்கி புதர்களை நீக்கி, தரையைச் சமன் செய்து கட்டடம் கட்டும் அளவுக்கு நிலத்தைத் தயார்படுத்தி, கட்டட வேலையையும் துவக்கினார். அந்த இடத்தில் உருவான முதல் கட்டடம் சந்தமாமா பில்டிங்ஸ். 1950 பிற்பகுதியில் தொடங்கி 1951 முற்பகுதிவரையில் பி.என்.கே பிரஸ், சந்தமாமா பத்திரிகைகளின் இடமாற்றம் சென்னை ஜார்ஜ் டவுனிலிருந்து இந்த கட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.
 அந்தச் சமயத்தில் விஜயாவின் "பாதாள பைரவி' படம் வெளியாகி வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. "சந்திரஹாரம்', "கல்யாணம் பண்ணிப்பார்' படங்கள் தயாரிப்பில் இருந்தன.
 என் மூத்த அண்ணன் பி.எல்.என். பிரசாத் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வாகினி ஸ்டூடியோவில் பிரதம ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பார்ட்லே அவர்களின் இரண்டாவது உதவியாளராகச் சேர்ந்தார். ஒரு நாள் செட்டில் லைட் சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது லைட்மேன் ஒருவர் தவறாக கரண்ட் பிளக் பாயிண்ட்டைச் சொருகிவிட, அவரை மின்சாரம் தாக்க... அவரைக் காப்பாற்ற முயன்று பிரசாத் அவரைத் தொட... பிரசாத், லைட்மேன் இருவரும் மின்சாரத்தின் பிடியில் ஊசலாட... இதைக் கண்ட மார்க்கஸ் பார்ட்லே உடனே ஒரு மரக்கம்பினால் லைட்பாயைத் தள்ளிவிட இருவரும் காப்பாற்றப்பட்டனர்.
 ஆனால் இந்த நிகழ்ச்சி பிரசாத் அண்ணனுக்கு மன அதிர்ச்சியைத் தந்து... நரம்பு பாதிப்பைத் தர... அதிலிருந்து மீள அவருக்கு சில மாதங்கள் ஆயின.
 இதனால் அம்மாவுக்கு, அண்ணன் காமிரா டிபார்ட்மெண்டில் வேலை செய்வதில் விரும்பவில்லை. எனவே தனியாக அவருக்கென ப்ளாக் மேக்கிங், போஸ்டர் லித்தோ பிரஸ்ûஸ அவருடைய பெயரிலேயே பிரசாத் பிராசஸ் எனத் தொடங்கி அவருடைய நிர்வாகத்திலேயே விடப்பட்டது. சக்கரபாணியாரின் மூத்த மகன் திருப்பதி ராயுடு, பிரசாத் அண்ணாவுடன் இணைந்து செயல்பட, லெட்டர் பிரஸ்ஸில் இருந்து மல்டிகலர் ஆப்செட் பிரஸ் அமைய முன்னோட்டமாக அமைந்தது. இதன் முன்னேற்றத்திற்கு பிரசாத் அண்ணன் பெரும்பங்கு வகித்தார். ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் இருந்து அச்சு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. நாளடைவில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்ற அந்தஸ்தைப் பெற்றது பிரசாத் பிராசஸ்.
 வாகினி, சந்தமாமா பில்டிங்ஸ், பி.என்.கே. பிரஸ்... ஏவி.எம். ஸ்டூடியோ என தொழிற்சார்ந்த நிறுவனங்கள் வர... வர.. அவை வளர வடபழனியும் வளரத் தொடங்கியது.
 அப்போது வாகினி, சந்தமாமா நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசித் தேதியன்று மாலை மூன்று மணிக்கே சம்பளம் வழங்கப்பட்டுவிடும். காரணம் அப்போது அங்கே குடியிருப்பு வசதியில்லை. பணியாளர்கள் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில்... மாம்பலம் அருகில்... என வசித்து வந்தனர். மாலையில் அவர்களுக்கு சம்பளம் கொடுத்தால், அத்துடன் அவர்கள் நடந்து போவதற்குள் இருட்டிவிட, அதனால் வழிப்பறி சம்பவங்கள் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை மூன்று மணிக்கே சம்பளம் வழங்கப்பட்டது.
 நாளடைவில் இங்கு பணிபுரிந்தவர்களே வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் பகுதியில் மனைகளை வாங்கி, வீடு கட்டி குடியேறினர்.
 ஜார்ஜ் டவுன் ஆச்சாரப்பன் தெருவிலிருந்து பி.என்.கே. அச்சகம், அலுவலகம் ஆகியவை வடபழனிக்கு வந்துவிட்டன. ஆனால், என் தந்தையார் மட்டும் தி.நகர் ராமசாமி தெருவிலேயே வசித்து வந்தார். அதுவும் பிரச்னையை உருவாக்கியது. அது அந்தத் தலைமுறையினருக்கு மட்டுமே தெரிந்த, அனுபவித்த கோடம்பாக்கம் ரெயில்வே கேட் பிரச்னைதான். ரயில் வருகிறது என்று கேட்டை மூடினால் திறக்க முக்கால் மணி நேரம் முதல் மூன்று மணி நேரம்கூட ஆகலாம் இதனால் வடபழனிக்கு வந்து குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளைச் செய்வதில் தடங்கல், தாமதம் ஏற்பட்டது. மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
 இதையெல்லாம் மனதில்கொண்டு என் தந்தையார் அலுவலகத்தை மாற்றியதைப்போல... இருப்பிடத்தையும் தி.நகரிலிருந்து வடபழனி சந்தமாமா பில்டிங்ஸ் மாடிக்கு (1954ல்) மாற்றினார். இதனால் காலமும் நேரமும் மிச்சமாக, தந்தையார் அவர்தம் பணியில் இன்னும் அதிக நேரம் ஈடுபட முடிந்தது.
 (தொடரும்)
 

முழு கட்டுரையைப் படிக்க →