முகப்பு
தினமணி கதிர்

ஆகஸ்டு 15: ஒருவர் கூட காட்டிக் கொடுக்கவில்லை!

சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி. அந்த மிகச் சிறிய கிராமத்தின் அமைதியைக் குலைத்து ஒலியெழுப்பிக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி. அந்த மிகச் சிறிய கிராமத்தின் அமைதியைக் குலைத்து ஒலியெழுப்பிக் கொண்டு வந்தது போலீஸ் வேன். படுத்திருக்கும் மாடு சட்டென்று எழுந்து வெறித்துப் பார்க்க, குஞ்சுகள் தொடர ஓடி ஒரு மூலையில் பதுங்கும் கோழி. நாய்களின் விடாத குரைப்பொலி.

பூட்டியிருக்கும் வீட்டருகே நின்றது போலீஸ் வேன். அதிலிருந்து குதித்த நான்கைந்து போலீஸ்காரர்கள் வீட்டின் முன்பு நின்று, பூட்டை பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்க்கிறார்கள். ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைக்க முற்படும்போது, ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஓடி வருகிறாள்.

""பூட்டை உடைக்காதீங்க. இந்தாங்க சாவி''

சாவியைப் பறித்துக் கொண்டு வீட்டுக்குள் "திமுதிமு' வெனப் புகுந்த அவர்கள் கையில் சிக்கி வீடு சின்னாபின்னமாகிறது. பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்துப் போடுகிறார்கள். முக்கியமான பத்திரங்கள், சர்டிபிகேட்களை கிழித்துப் போடுகிறார்கள்.

""எங்கே உன் புருஷனை ஒழிச்சு வைச்சிருக்கிற?'' - சாவியைக் கொடுத்த அந்த இளம் பெண்ணை மிரட்டுகிறார்கள். பெண்ணுக்கு அழுகை வருகிறது.

பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் தைரியமாக வந்து போலீஸிடம் பேசுகிறார்.

""அது என்னங்கய்யா வீட்டுல உள்ள பொம்பளை புள்ளைங்களை வந்து மிரட்டுறது?''

சொல்லி முடிக்கும் முன்பே பளாரென்று விழுகிறது அறை. நான்கைந்து போலீஸ்காரர்களும் சேர்ந்து அவரைக் கீழே தள்ளி, காலால் மிதித்து... கண்மண் தெரியாமல் அடிக்கிறார்கள். தேடி வந்த ஆள் கிடைக்காததால் குடும்பத்தையே அழித்துவிடுவதாக மிரட்டிவிட்டுப் போகிறார்கள்.

- இது இப்போது நடந்த கதை அல்ல. 1942 வாக்கில் நடந்த கதை.

தாக்குதல் தொடுத்தவர்கள் பிரிட்டிஷாரின் காவல்துறையினர்.

காவல்துறையினரின் மிரட்டலுக்கு உள்ளான அந்தப் பெண்ணுக்கு இப்போது வயது 86. பெயர் திருவேங்கடம்மாள். அவருடைய கணவர் எஸ்.ஆர்.ராமசாமி சுதந்திரப் போராட்ட வீரர்.

ஆலமரத்துப்பட்டியில் உள்ள அவருடைய மகள் வீட்டிலிருந்த திருவேங்கடம்மாளுடன் பேசினோம்:

""வெள்ளையனே வெளியேறு இயக்கம் அப்போது நடந்து கொண்டிருந்தது. என் கணவருக்கு அப்போது இருபத்திரண்டு வயதுதான் இருக்கும். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார்.  நிறையக் கூட்டங்கள் நடக்கும். பெண்களாகிய நாங்கள் இந்தக் கூட்டம் நடப்பதைப் பற்றிய தகவல்களை உரிய நபர்களிடம் சொல்வோம். என் கணவர், "வெள்ளைக்காரனின் சர்க்காரை நடத்தவிடக் கூடாது; அதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும்'  என்று அடிக்கடி சொல்வார். அதனால் அப்போது தகவல் தொடர்பு கருவியாக இருந்த தந்திக் கம்பிகளை அவரும் வேறு சில தேச பக்தர்களும் சேர்ந்து அறுந்தெறிந்துவிட்டனர். அதற்காகத்தான் அவரைக் கைது செய்வதற்காக போலீஸ் அப்போது தேடி வந்தது. வந்த போலீஸ்கார்கள் ஊரிலிருக்கிற எல்லாச் சனங்களிடமும் விசாரித்தார்கள். ""ராமசாமி எங்கே?'' என்று அவர் பெயரைச் சொல்லி மிரட்டிக் கேட்டார்கள். ஆனால் சனங்கள் ஒருவர் கூடக் காட்டிக் கொடுக்கவில்லை. என் கணவருடன் ஆளவந்தார், கே.வி.ராமசாமி, வி.சீனிவாசன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும், ஊருக்கு வெளியே தூரத்தில் உள்ள மலையடிவாரத்தில் பதுங்கியிருந்தார்கள். அவர்களுக்குச் சாப்பாடு எல்லாம் ஊரிலிருந்து பெண்களாகிய நாங்கள் கொண்டு போவோம்.

இதற்கிடையில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் போலீஸ் பிடித்துவிட்டது. அவரை அடிஅடியென்று அடித்துக் கேட்டதில் யார் யார் எல்லாம் தந்திக் கம்பியை அறுத்தார்கள் என்ற உண்மையை அடிதாங்க முடியாமல் அவர் போலீஸிடம் சொல்லிவிட்டார். அதற்குப் பின்பு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கு வந்து வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் தலைமறைவாக இருந்த எல்லாரும் தாங்களே முன் வந்து கைதானார்கள். என் கணவர் கைதாவதற்கு முன்பு செல்லச்சாமி, ஜி.ராமச்சந்திரன், சின்னையன், வடமலாபுரம் கோபால்சாமி ஆகியோரை போலீஸôர் கைது செய்துவிட்டனர்.

என் கணவரை சாத்தூரில் 3 மாதம் ரிமாண்டில் வைத்தார்கள். எங்கள் ஊரான ஆலமரத்துப்பட்டியிலிருந்து சாத்தூர் 18 கி.மீ. வாரத்துக்கு ஒருமுறை  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு நாங்கள் சாத்தூருக்கு நடந்தே போவோம். அங்கே போனால் பார்க்கவிடமாட்டார்கள். கைதிகள் குளிப்பதற்காக சிறை அறையைவிட்டு வெளியே வரும்போது தூரத்தில் நின்று பார்த்துவிட்டுப்

போக வேண்டும். அப்படி வெளியே வருகிறவர்கள் கையில் மண்சட்டி வைத்திருப்பார்கள். மலம், சிறுநீர் எல்லாம் அதில்தான் கழிக்க வேண்டும். அந்த மண்சட்டியைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் சிறை அறைக்குள் கொண்டு போய் வைப்பார்கள். தூரத்தில் நின்று பார்க்க வேண்டும் என்பதால் அவர்களுக்குத் தின்பண்டங்களோ, பழங்களோ கூடத் தர முடியாது.

சாத்தூரில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெல்லாரி சிறைக்கு மாற்றிவிட்டார்கள். அங்கே 2 வருடம் சிறைத் தண்டனை.

என் கணவர் பாரதியார் பாடல்களை நன்றாகப் பாடுவார். சுதந்திரப் போராட்ட உணர்வுடன் நாடகங்கள் போடுவார். பெல்லாரி சிறையில் பாரதியார் பாடல்களைப் பாடியிருக்கிறார். கைதிகளை வைத்தே நாடகங்களை நடத்தியிருக்கிறார். இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசு, அவருடைய சிறைத் தண்டனையை நான்கு மாதம் அதிகப்படுத்திவிட்டது.

சிறையில் எனது கணவர் இருந்தபோது ஒரே ஒருநாள் மட்டும் நேதாஜி சிறை வைக்கப்பட்டாராம். அப்போது என் கணவர் அவரிடம் பேசியிருக்கிறார். இதைப் பெருமையாக என் கணவர் இறக்கும் வரை எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

பெல்லாரி சிறையில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட நான் என் கணவரைப் பார்க்க முடியவில்லை. நான் மட்டுமல்ல, சிறைக்குச் சென்ற பலருடைய மனைவிகளும் அவர்களுடைய கணவரைப் பார்க்க முடியவில்லை. தனிமையில், சோகத்தில் எல்லாரும் கண்ணீரோடு இருந்தோம். அப்போது டாக்டர் செüந்தரம் (ராமச்சந்திரன்) அம்மா எங்கள் ஊருக்கு வந்து, எங்களையெல்லாம் நர்சுக்குப் படிக்க வைத்து, வேலை வாங்கித் தருவதாகக் கேட்டார்கள். எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

என் கணவர் சிறைத் தண்டனை முடித்துவிட்டு வெளியே வந்தபோது சுதந்திரம் கிடைத்துவிட்டது. வந்தவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேலும் படிக்கலாம் என்று பழைய சர்டிபிகேட்களைத் தேடிப் பார்த்தால், அவற்றை வெள்ளைக்கார போலீஸ்கள் ஏற்கெனவே கிழித்துப் போட்டுவிட்டார்களே? அந்த 25 வயதுக்கும் மேல் அந்தக் காலத்து இஎஸ்எல்சி - அதாவது எட்டாவது வகுப்புப் பரீட்சையை மீண்டும் எழுதிப் பாஸ் பண்ணினார். அதற்குப் பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, ராஜபாளையத்துக்கு அருகே உள்ள கம்மாபட்டி என்ற ஊரில் உள்ள ஓராசிரியர் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். அதற்குப் பின்பு திருத்தங்கலில் உள்ள ஒரு பள்ளிக்கு மாறுதல் வந்தது. 35 வருடம் ஆசிரியர் பணி செய்தார். எங்களுக்கு ஐந்து மகள்கள்.  கடந்த 2006 இல் அவர் மறைந்தார். அவர் சுதந்திரப் போராட்ட தியாகி என்பதால் எனக்குப் பென்ஷன் வருகிறது'' என்கிறார் பழைய நாட்களை நினைத்துக் கொண்டே திருவேங்கடம்மாள்.

முழு கட்டுரையைப் படிக்க →