முகப்பு
தினமணி கதிர்

வேலை கிடைத்தால் போதும்!

குருத்வாரா ஒன்றின் அருகே நடைபாதையில் 65 வயதுள்ள ஒரு பெண். அவரோடு ஒரு நாய். குருத்வாராவுக்கு வருகிறவர்கள் காசு தருகிறார்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 PM
பகிர்:

மும்பை வெர்சோவா பகுதி. ஜே.பி.சாலை.

குருத்வாரா ஒன்றின் அருகே நடைபாதையில் 65 வயதுள்ள ஒரு பெண். அவரோடு ஒரு நாய். குருத்வாராவுக்கு வருகிறவர்கள் காசு தருகிறார்கள். பலர் அவரை இரக்கத்தோடு பார்த்துச் செல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தவர்களில் ஒருவருக்கு அந்தப் பெண் யாரென்று அடையாளம் தெரிந்துவிடுகிறது.

மும்பையில் உள்ள ஊடகங்களுக்கு அவர் சொல்ல, அடுத்த சில மணிநேரங்களில் அந்த இடத்தில் நிறைய செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளின் படையெடுப்பு.

அவர் சுனிதா நாயக். மராத்தி மொழியில் வெளிவந்து கொண்டிருந்த "கிருஹலெட்சுமி' இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்.

எப்படி இந்த நிலைக்கு வந்தார்? இதை அவரிடம் கேட்டால் அவருக்கே சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை.

""நான் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தேன். நண்பர்கள் உதவியுடன்தான் படித்தேன். கிருஹலட்சுமியில் எடிட்டராக இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அதை மூடிவிட்டார்கள். இருந்தாலும் என்னிடம் நிறையப் பணம் இருந்தது.

இன்றிருந்தால்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு பெரிய வீடுகள் மும்பை ஓர்லி பகுதியில் எனக்கிருந்தன. புனேயில் ஒரு பங்களா இருந்தது. இரண்டு கார்கள் எனக்குச் சொந்தமாக இருந்தன. காரை நானே ஓட்டிச் செல்வேன்.

எனக்கு உணவு எப்போதும் தாஜ் ஓட்டலில் இருந்துதான் வரும்.

ஆனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. சிறு நீரகத்தில் கல். செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. முதலில் 1984 இல் புனேயில் உள்ள பங்களாவை 6 லட்சத்துக்கு விற்றேன். ஓர்லியில் இருந்த இரண்டு வீடுகளையும் விற்றேன். மொத்தம் 80 லட்சம் ரூபாயை வங்கியில் போட்டு வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து கொண்டிருந்தேன்.

தானேவில் ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்தேன். எனக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் எடுத்துக் கொண்டிருந்தேன். கமல் ரெய்க்கர் என்ற எனது உதவியாளர்தான் எனது வங்கிக் கணக்குகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று பார்த்தால் எனது வங்கிக் கணக்கில் சுத்தமாகப் பணம் இல்லை. கமல் ரெய்க்கரையும் காணவில்லை. அவருக்குப் போன் செய்யலாம் என்றால் என் மொபைல் போன் தண்ணீரில் விழுந்து சேதமாகிவிட்டது. அவருடைய போன் நம்பர் அதில்தான் இருந்தது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது 12 வயது நண்பனான நாயை அழைத்துக் கொண்டு தானேயில் இருந்து மும்பைக்கு வந்து நடைபாதையில் உட்கார்ந்துவிட்டேன்'' என்கிறார் சுனிதா நாயக்.

சுனிதா நாயக்குக்கு இந்தி, மராத்தி, ஆங்கிலம் உட்பட ஐந்து மொழிகள் தெரியும். சரளமாகப் பேசுவார்.

சுனிதா நாயக்கின் நிலையை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்ட பலர் அவருக்கு உதவ முன் வந்திருக்கின்றனர். பிரபல கஸல் பாடகர் அசோக் கோஸ்லா புனேவில் தனது ஆஸ்ரமத்தில் வந்து தங்குமாறு சுனிதா நாயக்கை அழைத்திருக்கிறார். ஆனால் மும்பையை விட்டுப் போக மனமில்லை சுனிதாவுக்கு. தயங்கியிருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து, மும்பையில் வில்லி பார்லே பகுதியில் செயின்ட் பிரான்சிஸ் ரோட்டில் வசிக்கும் ஜார்ஜ் மிஸ்கிட்டாவும் அவருடைய மனைவி கிறிஸ்டினாவும் சுனிதா நாயக்கைப் பார்க்க வந்திருக்கின்றனர். தங்களுடைய வீட்டில் வந்து தங்குமாறு அவர்கள் வற்புறுத்தினர். சுனிதா நாயக்கின் நாயும் அவர்களுடைய வீட்டில் தங்கலாம் என்று சொன்னவுடனேயே உற்சாகமாகக் கிளம்பி விட்டார் சுனிதா நாயக்.

ஜார்ஜ் மிஸ்கிட்டாவின் வீட்டுக்கு வந்தவுடன் சுனிதா நாயக்கை ஆச்சரியம் தொற்றிக் கொண்டது. ஜார்ஜ் வளர்க்கும் 10 நாய்களைப் பார்த்ததும் மெய்மறந்து நின்றுவிட்டார்.  "டக்'கென்று அவற்றுடன் ஒட்டிக் கொண்டுவிட்டார் சுனிதா நாயக்.

""நான் நீண்டகாலமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவள். வழக்கமான எனது பழைய வாழ்க்கைக்கு நான் திரும்புவதன் முதல் அடிதான் ஜார்ஜ் வீட்டுக்கு இப்போது நான் வந்தது. இந்தச் சிறிய குடும்பத்தில்  10 நாய்கள் வளர்க்கிறார்கள் என்றால் அது பெரிய விஷயம். என்னிடம் ஒரு காலத்தில் 30 நாய்கள் இருந்தன. மனிதர்களைவிட நாய்கள் மிகச் சிறந்த நண்பர்கள் '' என்கிறார் சுனிதா நாயக்.

ஜார்ஜின் வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அங்குள்ள 10 நாய்களின் பெயர்களைச் சொல்லி அவற்றைக் கூப்பிடத் தெரிந்துவிட்டது அவருக்கு.

ஜார்ஜ் மிஸ்கிட்டா - கிறிஸ்டினி தம்பதிக்கு சுனிதா நாயக்குக்கு உதவ முடிந்ததில் ரொம்பப் பெருமை.

""என்னுடைய அப்பாவின் ரூமை நன்கு சுத்தப்படுத்தி அவரை அங்கு தங்க வைக்கப் போகிறோம்'' என்கிறார் ஜார்ஜ்.

பிறரின் உதவிகளை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்ட மனநிலையில்தான் இருக்கிறார் சுனிதா நாயக். ""எனக்கு வேலை கிடைத்தால் போதும். அப்புறம் ஒரு கவலையுமில்லை'' என்கிறார் நம்பிக்கையுடன்.

முழு கட்டுரையைப் படிக்க →