முகப்பு
தினமணி கதிர்

இந்தியாவின் கடைசி மொகலாய மன்னர்

இந்தியாவின் கடைசி மொகலாய மன்னர் அபு முசாபிர் சிராஜூதின் முகமது பகதூர் ஷா ஜாஃபர் (1775-1862) இந்திய சரித்திரத்தில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:59 PM
பகிர்:

இந்தியாவின் கடைசி மொகலாய மன்னர் அபு முசாபிர் சிராஜூதின் முகமது பகதூர் ஷா ஜாஃபர் (1775-1862) இந்திய சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்ததில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். மொகலாய ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்குவதற்கும் நவீன இந்தியா உருவாவதற்கும் இவரது வீழ்ச்சி முக்கிய பங்கு வகித்தது.

1707-ஆம் ஆண்டு அவுரங்கசீப் மரணத்திற்கு பின்னர் மொகலாய ஆட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. ஜாட், மராத்தியர்கள், சீக்கியர்கள் வலுப் பெறத் தொடங்கினர். மொகலாய சக்கரவர்த்தி என்ற பெருமை நாளடைவில் குறைந்து "மன்னர்' என்று அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு குறைந்தது. மொகலாய மன்னர்களின் ஆட்சியும் செங்கோட்டையைத் தாண்டி வரவில்லை. ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் வேரூன்ற தொடங்கியதும் ஒரு காரணமாகும். ஒரு மாபெரும் மொகலாய சாம்ராஜ்யம் சரிவு கண்டதை உலகம் அதுவரை கண்டதில்லை. கடைசி மன்னரான பகதூர் ஷா, அவரது 62-ஆவது வயதில்தான் 1837-ஆம் ஆண்டில் மன்னரானார். மொகலாய வம்சத்தில் வந்த மன்னர் என்பதைத் தவிர மற்ற பெருமைகள் ஏதும் இவருக்கு இல்லை. ஆட்சி செய்வதிலும் அக்கறை காட்டவில்லை.

முஸ்லிம் தந்தைக்கும் ராஜபுத்ர தாய்க்கும் மகனாக பிறந்த இவர், புத்தகங்களைப் படிப்பது, சுஃபி துறவிகளுடன் விவாதிப்பது, சுஃபி வழிபாட்டு தலங்களுக்கு செல்வது என்று காலங்கழித்தாரே தவிர, வேறு எந்த சிறப்பையும் பெறவில்லை. குத்புதீன் பக்தியால் கக்கி என்ற இடத்தில் இவர் கட்டிய ஜாஃபர் மகாலுக்கு ஆண்டுதோறும் செல்வதும் அங்கு நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது தொடங்கிய திருவிழா இன்றளவும் தொடர்ந்து நடந்து வருகிறது.

உருது கவிதைகளை எழுதுவதில் வல்லவராக விளங்கிய இவரது கவிதைகள், அவரது ஆட்சிகாலத்தின் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலித்தன. இவர் ஆட்சிக்கு வருவற்கு முன்னரே இரண்டாம் அக்பர் ஷா காலத்திலேயே பிரிட்டிஷாருக்கும் அவருக்கும் இடையே மோதல்கள் துவங்கின. அப்போது துவங்கிய இந்த "பனிப்போர்' பகதூர் ஷா ஆட்சியிலும் தொடர்ந்தது.

1857-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி மீரட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தினரில் சிலர் ஆயுதங்களைக் கைப்பற்றியதோடு தங்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் கொன்றுவிட்டு பகதூர் ஷாவுக்கு ஆதரவாளர்களாக மாறினர். நேரே அவரிடம் வந்து அவருக்கு உதவி செய்வதாகவும் மீண்டும் இந்தியாவில் மொகலாய ஆட்சியை நிலை நிறுத்த பக்க பலமாக இருப்பதாகவும் கூறினர். மீண்டும் மொகலாயர் ஆட்சியை விஸ்தரிப்பதற்கு பகதூர் ஷாவுக்கு ஆசை இருந்தாலும் அப்போதைய சூழ்நிலையில் இந்த அதிருப்தியாளர்கள் தனக்கு உதவுவது போல் நடித்து நாட்டை சூறையாட தொடங்கினால் என்ன செய்வது? என்ற சந்தேகமும் எழுந்தது.

அந்த நேரத்தில் பகதூர் ஷா பெரும் பொருளாதார சிக்கலில் இருந்தார். தனது ராணுவத்தினருக்கு வழக்கமாக தரும் மாத சம்பளத்தைக் கூட தர முடியாத நிலையில் இருந்தார். தன்னுடைய அந்தரங்க மாளிகையிலிருந்து தங்க நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் கொண்டுவந்து ராணுவ அதிகாரிகளைப் பங்கிட்டுக் கொள்ளச் சொன்னார்.

""நீங்கள் உங்களுக்குச் சொந்தமான நகைகளை அளிப்பதாக கூறியதே போதும். இதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. உங்கள் கவுரவம்தான் முக்கியம்'' என்று கூறி, அதிருப்தி ஆங்கிலேய வீரர்களுடன் இணைந்து போராட முன்வந்தனர். அவர்கள் செலவுக்காக நாள்தோறும் 500 ரூபாய் அளிக்க ஏற்பாடு செய்வதாக பகதூர் ஷா கூறினார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போலவே அதிருப்தி ஆங்கிலேய ராணுவத்தினர் டெல்லியைச் சூறையாட தொடங்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று. தனது படையினரும் மக்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே செங்கோட்டையை காப்பாற்ற முடியுமென நினைத்தார். அதிருப்தி ராணுவத்தினர் வருவதற்கு முன் இருந்த நிம்மதியை இழந்தார்.

செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் ராணுவம் செங்கோட்டையைக் கைப்பற்றியது. ஹசரத் நிஜாமுதீன் அவுலியா (தற்போதைய நிஜாமுதின்)வில் உள்ள வழிபாட்டு தலத்தை தவிர அனைத்தையும் பகதூர் ஷா இழந்ததுடன் பிரிட்டிஷாராலும் கைது செய்யப்பட்டார். அவரது இரண்டு மகன்களும் பேரனும் கொல்லப்பட்டனர். செங்கோட்டையிலேயே கீழ்தளத்தில் கைதியாக அடைக்கப்பட்டார். 20 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்தவர் சாதாரண கைதியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சர்வதேச முஸ்லிம் அமைப்புகள், ஈரான், துருக்கி மன்னர்களுடன் சேர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 42 நாட்கள் விசாரணைக்கு பின்னர் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான தங்க ஆபரணங்களும் விலைமதிப்பற்ற பொருள்களும் இருந்தபோதும் விலை மதிப்பற்ற பொருளாக கருதிய இறைதூதர் அல்லாவின் மூன்று தாடி முடிகளை மட்டுமே ஒரு பேழையில் வைத்து எடுத்துச் சென்றார். இது 14-ஆம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் அமைத்த தைமூருக்கு டெல்லி அருகில் உள்ள தர்காவில் ஹஸ்ரத் நிஜாமுதின் அவுலியா கொடுத்த இந்த அரிய பொருள் தொன்றுதொட்டு வந்த மொகலாய மன்னர்களிடமிருந்து இறுதியில் பகதூர் ஷா கைக்கு வந்ததாகும்.

பகதூர் ஷா கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டவுடன் செங்கோட்டையில் இருந்த அரசு சொத்துக்கள் ஆங்கிலேய வீரர்களால் சூறையாடப்பட்டன. யுத்தத்தில் வென்றதற்குப் பரிசாக ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் கொள்ளையடித்த பொருட்களை பங்கிட்டுக் கொண்டனர். இந்த தகவல் பிரிட்டிஷ் அரசுக்கு தெரிய வந்த போது அனைத்தையும் திரும்ப ஒப்படைக்கும்படியும், எந்த பொருளையும் யாரும் எடுக்கக் கூடாதென்றும் தடை விதித்தது. அதற்குள் பலர் அவற்றை நினைவு பொருட்களாக லண்டனுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.

கோட்டைக்குள் இருந்த நகைகளையும் ஆபரணங்களையும் விற்பனை செய்ய பிரிட்டிஷ் அரசாங்கமே ஏஜென்டுகளை நியமித்தது. அந்த ஏஜென்டுகள் மூலமாகவே விலை மதிப்பற்ற பொருட்கள் கைமாறின. சொத்துக்களின் மதிப்பீட்டை குறைத்து காட்டினர். இதுகுறித்து செங்கோட்டை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட கேப்டன் ராபர்ட் டெய்லரின் மனைவி ஹாரியத் டெய்லர் (1826-1907) எழுதிய நினைவு குறிப்பேடுகளில் பகதூர் ஷாவுக்கு சொந்தமான தங்க நகைகள், தங்க நாணயங்கள், ஆபரணங்கள் பற்றி குறிப்பிடுகையில், "பழைய பொருட்களை வாங்குவதில் என் கணவருக்கும் ஆர்வம் இருந்ததால் பகதூர் ஷா அணிந்திருந்த கிரீடம் என்பது தெரியாமலேயே பலத்த போட்டிக்கிடையே அதை அதிக விலை கொடுத்து வாங்கினார். பின்னர் இங்கிலாந்து திரும்பியவுடன் அந்த கிரீடத்தை விக்டோரியா மகாராணிக்கு 500 பவுண்டுக்கு குறைந்த விலையில் விற்றார். இதற்கு மாற்றாக மீண்டும் உயர் பதவியுடன் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதாக உறுதியளித்தார். அரசிக்கு விற்பனை செய்த பின்னர், கிரீடத்தில் இருந்த நவரத்தின கற்கள் நீங்கலாக ஆயிரம் பவுண்டு கொடுப்பதாக ஆக்ஸ்போர்டு மியூஸியத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.

மணி மகுடத்தை கொடுத்த கையோடு என்னுடைய கணவர் மேலும் தன்னிடமிருந்த சிம்மாசனங்களையும் அரசியின் பார்வைக்கு அனுப்பிவைத்தார். அப்போதைய இந்தியாவின் மாநில செகரட்டரி சார்லஸ் வுட், அந்த சிம்மாசனங்கள் அரசிக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் ஏற்கனவே கொடுத்த 500 பவுண்டுடன் அதை சேர்த்து கொள்ளும்படி கூறியதாகவும் என் கணவரிடம் சொன்னார். தான் ஏமாற்றப்பட்டதை என் கணவர் உணர்ந்தாலும் மீண்டும் நல்ல பதவியுடன் இந்தியா அனுப்புவதாக கூறியதை எதிர்பார்த்து காத்திருந்தார்...' என்று ஹாரியத் டெய்லர் குறிப்பிட்டிருந்தார். கேப்டன் டெய்லருக்கு வாக்களித்தபடி 1862-ஆம் ஆண்டு அந்தமான் கண்காணிப்பாளராக டெய்லர் மீண்டும் இந்தியா திரும்பினார். இரண்டாண்டுகள் அந்தமான் அவரது கட்டுப்பாட்டில் இருந்தபோது அங்கிருந்த உயரமான மலை ஒன்றுக்கு தன்னுடைய மனைவி நினைவாக ஹாரியத் என பெயர் சூட்டினார். இன்றளவும் உலக வரைபடத்தில் "மவுண்ட் ஹாரியத்' இடம்பெற்றிருப்பதை காணலாம்.

ஆனால் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்ட பகதூர் ஷா நான்காண்டுகள் கழித்து 1862-ஆம் ஆண்டில் மரணமடைந்தார். தன்னுடைய மரணத்திற்கு பிறகு டெல்லி அருகில் க்வாஜா முகமது பக்தியார் சுக்கியில் உடலை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கிவைத்திருந்த ஆறடி நிலம் கூட அவருக்கு கிடைக்கவில்லை. இந்தியாவின் கடைசி மொகலாய மன்னர் இறுதியில் நாடுகடத்தப்பட்டு வேறொரு நாட்டில் இறந்தது மறக்கமுடியாத சோகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.