முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்...

இந்திப் படவுலகில் ஏராளமான ஆண் பாடகர்கள் வந்திருக்கலாம். ஆனால் யாரும் முகமது ரஃபிக்கு ஈடாக இயலாது.

Updated On : 12 மே, 2013 at 11:05 AM
பகிர்:

இந்திப் படவுலகில் ஏராளமான ஆண் பாடகர்கள் வந்திருக்கலாம். ஆனால் யாரும் முகமது ரஃபிக்கு ஈடாக இயலாது. 1945-1980 வரை 35 ஆண்டுகள் அவருடைய தேனினும் இனிய பாடல்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்தன. இன்றும் இழுக்கின்றன! 35 ஆண்டுகளில் 5000-க்கும் அதிகமான பாடல்களை பாடினார். அதாவது ஆண்டிற்கு 140 பாடல்கள் என்ற எண்ணிக்கையில்.

முகமது ரஃபிக்கிற்கு ஒரு பழக்கம். வீட்டை மட்டுமல்ல } கார்களையும் மாற்றிக்கொண்டே இருப்பாராம்.

அவருடைய மருமகள் யாஸ்மின் "ஙவ அடடஅ' என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு தகவல்:

Advertisement

ஒருமுறை மசூதிகட்ட ரஃபி பணம் கொடுத்தார். அதனை திருப்பிக் கொடுத்தனர். ""சினிமா பாடல் பாடி சம்பாதித்தது. அதனால் வேண்டாம்'' என்றனர்.

துடித்தார் ரஃபி!

""எனக்கு இந்த இனிய குரலை அளித்தவரே அல்லாதான். அவரைத் தொழ நான் பணம் தரலாகாதா?''

அவர் இறந்து 35 வருடங்கள் ஆகியும் இன்னமும் அவர் குரலை பின் தள்ள ஒரு குரல் வரவில்லை.

ராஜி ராதா, பெங்களூரு

சபியாசாஷி முகர்ஜி பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஃபேஷன் டிசைனர். ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, வித்யா பாலன், ஸ்ரீதேவி போன்ற பிரபல நடிகைகள் இவரைத்தான் தங்களது ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளராக நிர்ணயித்துள்ளனர். "பிளாக்', "பா', "கஹானி',"இங்கிலீஷ் விங்கிலீஷ்' போன்ற படங்களில் இவரது ஆடை வடிவமைப்பு மக்களைக் கவர்ந்தன.

பெரும்பாலும் பாரம்பரிய ஆடைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் இவரின் புடவை வடிவமைப்புதான் ஹீரோயின்களின் சாய்ஸ். ""புடவை அணியும்போது இந்திய நகைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். ப்ரஷ் பூக்களையே தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். செயற்கை பூக்கள், அலங்காரங்களை தவிர்த்துவிடுவது நல்லது.

காலில் கொலுசு, நெற்றியில் சிறிய பொட்டு வைத்துக் கொள்ளலாம். அதுதான் நம் பண்பாட்டைக் குறிக்கும். புடவையை நவீனமாக அணிய ஆசைப்படக் கூடாது. புடவைக்கென்று தனி பாரம்பரியம், மதிப்பு உள்ளது. அதனை காப்பாற்ற வேண்டும். நாம் புடவை அணிகிறோம் என்ற கர்வம் இருக்க வேண்டும்'' என்கிறார்.

""2000-ம் ஆண்டின் இறுதியில் நாங்கள் மிகப்பெரிய பணப் பிரச்னையை சந்தித்தோம். அப்போது எங்கள் பிரச்னை தீர வேண்டும் என்பதற்காக வெறும் காலுடன் எங்களது இல்லம் இருந்த லோகன்வாலா பகுதியில்

ஆரம்பித்து பிரபாதேவி சித்தி விநாயகர் கோயிலுக்கு நடந்து சென்று வேண்டினார் என் மனைவி. "நோ என்ட்ரி' படத்தின் வெற்றியும் கேள்விக்குறியானபோதும் இதே போன்று வெறும் காலுடன் கோயிலுக்கு சென்று வேண்டினார். எங்கள் பணப்பிரச்னையை சமாளிப்பதற்காக நாங்கள் "மாலினி ஐயர்' என்ற டி.வி. தொடரைத் தயாரித்தோம். என் மனைவி அதில் நடித்தார். அந்த சமயம் சிறு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, அதிக நேரம் எனக்காக நடித்துக் கொடுப்பார். என் பணப் பிரச்னையை புரிந்துகொண்டு என் பிறந்தநாளின்போது விலையுயர்ந்த "போர்ஷ்' காரை எனக்குப் பரிசளித்தார். 9 ஆண்டு காலமாக பழைய காரை வைத்து அதனை மாற்ற முடியாத சூழ்நிலையில் இருந்த எனக்கு அது பெரிய ஆச்சரியத்தை அளித்தது'' என்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் இயக்குநருமான போனி கபூர்.

-ஜெனி

ரிஷி என்பவர் தில்லியைச் சேர்ந்தவர். 1994-ல் 489 பக்கங்களில் 1,04,567 வார்த்தைகளில் பெரிய உயிலை எழுதினார். அவரது மனைவியோ "அனைத்தும் மகனுக்கே' என மிகச் சிறிய உயிலை எழுதினார்.

புஷ்பா, நேபாளத்தைச் சேர்ந்தவர். காட்மாண்டு செயின்ட் சேவியர் கல்லூரியில் சமூகவியல் படித்தவர். அவர் படித்தபோது அங்குள்ள சிறைச்சாலையை பார்வையிட அழைத்துச் சென்றனர். அங்கு கைதிகளின் குழந்தைகள் சிறை வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். குழந்தைகளின் தாய் சிறையில் உள்ளதால், குழந்தைகளும் சிறையில் வளர வேண்டிய ஓர் சூழ்நிலை. இந்நிகழ்வு புஷ்பாவை வெகுவாக பாதித்தது. இதற்காக ஓர் அறக்கட்டளை துவங்கப்பட்டு குழந்தைக் காப்பகமும் உருவாக்கப்பட்டது. ஆனால் குழந்தைகளை அழைத்து வருவதற்கு அன்னையின் அனுமதி கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. தெரியாத நபரிடம் அவர்கள் குழந்தையை ஒப்படைக்க விரும்பவில்லை. இந்நிலையில் சிறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன், அன்னையின் அனுமதியுடன் குழந்தைகளை வெளியில் அழைத்து வந்தனர்.

அதாவது காலையில் குழந்தைகளை அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் சிறை வளாகத்தில் விடுவதற்கு அனுமதி பெறப்பட்டது. "சோலோ டும்ப்' என்ற சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட குழந்தைகள் புதிய இடம் மற்றும் அதிக குழந்தைகளைப் பார்த்து அழத் தொடங்கின. ஒரு வாரம் சென்றது. சகஜ நிலை திரும்பியது.

காலப்போக்கில் அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கிவிட்டனர். சிறையிலிருந்து தாய்மார்கள் விடுதலையானதும், தங்கள் குழந்தைகளை மகிழ்வுடன் அழைத்துச் செல்கின்றனர். சிறைக் கைதிகள் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் புஷ்பாவை "நேபாளத்தின் யசோதா' என்று மக்கள் செல்லமாக அழைக்கின்றனர்.

நா.கிருஷ்ணவேலு.

அமர்த்தியா சென் சிறந்த பொருளாதார மேதை. மேற்கு வங்கத்தின் சாந்திநிகேதனில் பிறந்தவர். பொருளாதாரத்துறையில் அவருடைய பங்களிப்புக்காக 1998 இல் நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது. 1999 இல் பாரத ரத்னா விருது கிடைத்தது.

பத்து வயதுப் பையனாக இருந்தபோது, வங்காளத்தில் பஞ்சம். மக்கள் உணவின்றி இறந்ததைப் பார்த்த  அவர், அதிர்ச்சியில் உறைந்து போனார். அதுவே பிற்காலத்தில் இவருடைய நலப் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

ஏழை மனிதனுக்கு நலம் தரும் வகையில் பொருளாதாரத் திட்டமிடல்கள் இருக்க வேண்டும் என்பதே அமர்த்தியா சென்னின் கோட்பாடு. அரசு தரும் மானியங்களை ஆதரிக்கும் அவர், அது பெண் குழந்தைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்றால், அந்த மானியங்கள் உணவாகவும், ஊட்டச் சத்துப் பொருட்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார். அமெரிக்காவில் மஸôசூசெட்ஸ் மாகாணத்தில் கேம்ப்ரைடில் தனது மூன்றாவது மனைவி எம்மா ரோத்ஸ்சைல்ட்டுடன் வசித்து வருகிறார். மனைவி எம்மா, பொருளாதார வரலாற்று நிபுணர்.

உலகின் சக்தி மிக்க 100 பெண்களில் ஒருவராக டைம் மற்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகைகளால் தேர்வு செய்யப்பட்டவர் கிரண் மஜும்தார் ஷா. பெங்களூருவில் உள்ள "பயோகான்' என்ற நிறுவத்தின் தலைவர்.

  உயிரித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மனித உடலுக்குத் தேவையான என்ûஸம்களை பயோகான் நிறுவனம் தயாரிக்கிறது. உதாரணமாக, சர்க்கரை நோய்க்குத் தேவையான இன்சுலின் தயாரிக்கப்படுகிறது. நோய்த் தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் மருந்தும் கூட.

பயோகான் ஃபவுண்டேஷன் என்ற இவரது அறக்கட்டளை, ஏழை மக்கள் சிகிச்சை பெற  பல மருத்துவமனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மருத்துவமனையைச் சுற்றிலும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் பயனடைகிறார்கள்.

மருத்துவம் படிக்க நினைத்து வாய்ப்பு கிடைக்காததால் விலங்கியலில் பட்டம் பெற்ற அவர், தனது நிறுவனத்தை 1978 இல் வங்கிக் கடன் வாங்கித்தான் தொடங்கியிருக்கிறார்.

தீபிகா பல்லிக்கல் - ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை.
விளையாட்டு இவருடைய ரத்தத்தில் ஊறிய பரம்பரைச் சொத்து. அம்மா சூசன், இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் கேப்டனாக இருந்தவர். பாட்டியோ அத்லெட்டிக் வீராங்கனை. தாத்தா மாநில கூடைப்பந்து வீரர்.   11 வயதிலிருந்தே ஸ்குவாஷ் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தவர், இன்று வரை தொடர்ந்து உலக அளவில் விளையாடி  வெற்றிகளைக் குவித்து வருகிறார். 2012} இல் அர்ஜூனா விருது, 2009}ஆம் ஆண்டுக்கான இளைய விளையாட்டு வீரர் விருது என விளையாட்டுக்காகப் பெற்றிருப்பது மட்டுமல்ல, பத்து மிகச் சிறந்த அழகான பெண்களில்  ஒருவராக இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  விளையாட்டு வீராங்கனைக்கு உடல் வலிமை முக்கியம் என்பதால், "ஜங்க் ஃபுட்' வகைகளைச் சாப்பிடுவதில்லையாம். நிறைய காய்கறிகள், கொஞ்சம் சாக்லேட்.... ஐஸ் க்ரீமுக்கு நோ. உடற்பயிற்சி செய்யாமல் ஒருநாளும் இருந்ததில்லையாம்.  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் பல வந்து, கதவைத் தட்டியபோதும் மறுத்துவிட்டாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.