முகப்பு
தினமணி கதிர்

24 ஆண்டுகள்... 16 குழந்தைகள்..!

நமது கொள்ளுத் தாத்தா - பாட்டிகள் சொல்வார்கள்: ""நாங்க பதினாறு பிள்ளைங்களைப் பெற்றோம். ஆனால் கடைசியில் மிஞ்சினது இந்த மூணு பேர்தான்'' என்று.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:46 PM
பகிர்:

நமது கொள்ளுத் தாத்தா - பாட்டிகள் சொல்வார்கள்: ""நாங்க பதினாறு பிள்ளைங்களைப் பெற்றோம். ஆனால் கடைசியில் மிஞ்சினது இந்த மூணு பேர்தான்'' என்று.

ஆனால் இந்தக் காலத்தில் - அதுவும் நமது நாட்டில் அல்ல - இங்கிலாந்தில் ஒரு பெண் பதினாறு குழந்தைகள் பெற்றிருக்கிறார்.

இப்போது இங்கிலாந்திலேயே  மிகப் பெரிய குடும்பம், அவர்களுடையதுதான்.

இங்கிலாந்தில் லங்காஷயர் மாகாணத்தில் உள்ள மோர்கேம்பே என்ற ஊரைச் சேர்ந்த சியூ என்ற பெண்தான் 16  குழந்தையைப் பெற்றவர்.  வயது நாற்பதைத் தாண்டியிருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 38 தான். இவருடைய கணவர் நோயல் ராட்ஃபோர்ட். அவருக்கு வயது 41.

ஒரு குழந்தை பிறந்து சரியாக 11 மாதத்தில் அடுத்த குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் சியூ.

மூத்த பையனான கிரீஸூக்கு வயது 24. கடைசிப் பையனான காஸ்பருக்கு வயது 11 மாதங்கள்.

சியூவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவருக்கு வயது 14. நோயலுக்கு வயது 17. ஆனால் அப்போது அவர்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணத்துக்கு முன்பே பிறந்த குழந்தை என்பதால் முதல் குழந்தையை யாருக்காவது தத்துக் கொடுத்துவிடலாமா என்று கூட யோசித்திருக்கின்றனர்.

முதல் குழந்தை பிறந்து 4 ஆண்டுகள் கழித்துத் திருமணம். அதற்குப் பின்புதான் 15 குழந்தைகள் 11 மாத இடைவெளியில் உலகைப் பார்க்க அணிவகுத்து வந்திருக்கின்றனர். கடைசியாகப் பிறந்த காஸ்பருக்கு ஒரு வயதாக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் அடுத்த குழந்தை வயிற்றில். அதைத்தான் ஆரவாரமாக இங்கிலாந்தின் எல்லா ஊடகங்களுக்கும் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

பிறக்கப் போவது ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னார்கள் சியூ - நோயல் தம்பதியினர்.

இவ்வளவு குழந்தைகளையும் எப்படி வளர்க்கிறார்கள்? எப்படிச் சமாளிக்கிறார்கள்? அவர்களுடைய சாப்பாடு, உடை, பள்ளிக் கட்டணம், போக்குவரத்து, மருத்துவம் எல்லாவற்றுக்கும் எவ்வளவு செலவாகும்?

இத்தனைக்கும் நோயல் பெரும் தொழிலதிபரோ, பணக்காரரோ அல்ல. ஒரு சிறிய பேக்கரி வைத்திருக்கிறார். அந்த பேக்கரியில் இருந்து வரும் வருமானத்தை வைத்துத்தான் இத்தனை உயிர்களும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் நேரம் போக, மீதி நேரங்களில் (அப்படி ஒரு நேரம் இருக்குமா?) சியூவும் பேக்கரியில் வேலை செய்கிறார். இந்த வருமானத்தில்தான் 16 + 2 பேரின் வாழ்க்கை ஓட வேண்டியிருக்கிறது.

இந்தப் பெரிய குடும்பத்துக்கு சாப்பாட்டுச் செலவு மட்டும் வாரத்துக்கு சுமார் ரூ.25 ஆயிரம் ஆகிறதாம்.

ஒரு நாள் இரவு உணவுக்கு மட்டும் 16 இறைச்சித் துண்டுகள், 7 கிலோ உருளைக்கிழங்கு, 3 முள்ளங்கி, 30 கேரட்கள் தேவை.

இவ்வளவு பேருக்கும் எவ்வளவு பெரிய வீடு வேண்டும்?

10 படுக்கையறைகள் இருக்கும் நான்கு மாடிக் கட்டடம்தான் இவர்களுடைய வீடு.

ஆண்டுக்கு 60 ஜோடி செருப்புகள் வாங்க வேண்டுமாம்.

""அவர்களுடைய குடும்பம் மிகவும் அன்பான குடும்பம். அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் நல்ல பண்புள்ளவர்கள். உண்மையிலேயே சியூவும், நோயலும் மிகச் சிறந்த பெற்றோர்'' என்கின்றனர் அவர்களுடைய குடும்ப நண்பர்கள்.

பதினைந்தாவது குழந்தை பெற்றபோது அங்குள்ள சேனல் 4 தொலைக்காட்சியினர் இவர்களைப் படம் பிடித்துப் பிரபலமாக்கிவிட்டார்களாம்!

பதினாறாவது குழந்தை பெற்ற போது சியூ தனது கணவரிடம், ""இன்னொரு குழந்தையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்றாராம்.

அவர் நினைத்தபடியே 17 ஆவது குழந்தையும் கருக்கொண்டு விட்டது.

வரும் ஏப்ரல் மாதம் பிறக்கப் போகிறது என்று எல்லாரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார்கள். பிறக்கப்போகும் குழந்தையை வரவேற்க எல்லாரும் ஆயத்தமாக இருந்தார்கள்.

ஆனால், ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். கருவிலிருந்த குழந்தையின் இதயத் துடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பே நின்று போயிருந்தது.

இதயம் உடைந்து நிற்கிறார்கள், பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் சியூ - நோயல் தம்பதி.

முழு கட்டுரையைப் படிக்க →