முகப்பு
தினமணி கதிர்

நைஜீரியாவில் நடப்பது என்ன? பெற்றோர்களின் தொடர் மரணம்...?

அது ஓர் அரசுப் பள்ளி. நைஜீரியாவின் சீபோக் நகரில் உள்ளது. நைஜீரியாவில் அண்மைக்காலமாகவே நடந்து வரும் தீவிரவாத

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

அது ஓர் அரசுப் பள்ளி. நைஜீரியாவின் சீபோக் நகரில் உள்ளது. நைஜீரியாவில் அண்மைக்காலமாகவே நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களுக்குப் பயந்து அந்தப் பள்ளி மூடப்பட்டுதான் இருந்தது. ஆனாலும் ஆண்டு இறுதித் தேர்வு சமயமாக இருந்ததால், தேர்வை எழுதுவதற்காக மாணவிகள் வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த தீவிரவாதக் குழு ஒன்று, அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வந்திருப்பதாகக் கூறிக்கொண்டு பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தது. அனைவரையும் வெளியே வரச் செய்து, லாரிகளில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள வனப்பகுதி ஒன்றுக்குள் நுழைந்தது. அதற்குப் பிறகு அந்த மாணவிகளைப் பற்றிய ஒரு செய்தியும் வெளியே வரவில்லை.  ஏறக்குறைய நூறு நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. அவர்கள் என்ன ஆனார்கள்? எங்கிருக்கிறார்கள்? உயிரோடுதான் இருக்கிறார்களா? என்று எதுவுமே தெரியவில்லை.

தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் துக்கமோ சொல்லி மாளாது. ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகள் கிடைப்பார்களா என்ற ஏக்கத்திலேயே தங்கள் உடல்நிலையை மோசமாக்கிக் கொண்டனர்.

இப்படி ஏக்கப்பட்டு ஏக்கப்பட்டு சிறுமிகளின் பெற்றோர்கள் உடல்நிலை மோசமாகி இறந்து வருகின்றனர். இதுவரை இப்படிப் பதினோரு பெற்றோர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 14-15 தேதிகளில்தான் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்தது.

சரி... எதற்காக இந்தக் கடத்தல்? அப்பாவி மாணவிகள் என்ன பாவம் செய்தார்கள்?

நைஜீரியாவிலுள்ள ஒரு தீவிரவாதக் குழுவின் பெயர் "போகோ ஹாரம்'. இவர்கள் தங்கள் நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கெல்லாம் காரணம், நைஜீரிய மக்களிடையே ஏற்பட்டுள்ள மேற்கத்திய மோகம்தான் காரணம் என்று கருதுகிறார்கள்.

இதனால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். 2013-ஆம் ஆண்டு மே மாதம் அரசு நாட்டில் எமர்ஜென்சி சட்டத்தை அமல்படுத்தியது.

இதனால் அரசு இயந்திரம் மூலம் நூற்றுக்கணக்கான போகோ ஹாரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து, தீவிரவாதக் குழு தனது வெறித்தனத்தை மக்கள் மீது காட்டத் தொடங்கியது.

பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பது கூடாது என்பது இவர்களின் வாதம். இதனால் பெரும்பாலான பள்ளிகள் இவர்களது தாக்குதலுக்கு உள்ளாயின. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவித்து வந்தனர். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ,மாணவிகள் கொல்லப்பட்டனர்.

கடத்தப்பட்ட சிறுமிகள் சமையல் வேலைகளுக்கு அமர்த்தப்பட்டனர் என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.

இந்தக் குழுவை அடக்குவதில் நைஜீரிய அரசு தோற்றுப் போய்விட்டது என்றுதான் பலரும் கருதுகிறார்கள்.

அரசோ பெற்றோர்கள் தங்களுக்குப் போதுமான தகவல்களை அளிக்கத் தவறிவிட்டனர் என்று கூறித் தப்பிக்கப் பார்க்கிறது.

உலகின் மற்ற நாடுகளோ நைஜீரியா அரசுக்குத் தங்களாலான எல்லாவித உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகக் கூறிவருகின்றன.

இருந்தாலும் கடத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது நெஞ்சு பதறுகிறது. ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

இதில் சில தைரியசாலிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தப்பி வந்திருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை 53.

தப்பி வந்தவர்களின் மனோதைரியத்தைப் பாராட்டுவோம்... இன்னும் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்காகப் பிரார்த்திப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.