தினமணி கதிர்

திரைக்கதிர்

முன்னணி இடத்தில் இருக்கும் போது, ஒரு சில நடிகைகளே நடிப்பிலும், சமூகப் பணிகளிலும் கவனம் செலுத்துவார்கள்.

ஜி. அசோக்

முன்னணி இடத்தில் இருக்கும் போது, ஒரு சில நடிகைகளே நடிப்பிலும், சமூகப் பணிகளிலும் கவனம் செலுத்துவார்கள். இந்த வரிசையில் ஹன்சிகா சேர்ந்திருப்பது எல்லோரும் அறிந்த விஷயமே. இவர் ஆண்டுதோறும் தனது பிறந்த நாளில் ஓர் ஏழைக் குழந்தையைத் தத்து எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி 19 குழந்தைகளைத் தத்து எடுத்தவர், அவர்களுக்கான கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும்  செய்து கொடுக்கிறார். இதற்கிடையில் பிள்ளைகளால் கைவிடப்படும் மற்றும் உறவுகள் இல்லாத முதியோர்களுக்கான இல்லம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ஹன்சிகா. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா, முதியோர் இல்லத்தை அங்குதான் தொடங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் விரும்புகிறார்களாம். ஆனால் தென்னிந்திய சினிமாதான் தனக்கு வாழ்வளித்ததால், தென்னிந்திய மக்களுக்காக இந்த முதியோர் இல்லத்தை சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளாராம் ஹன்சிகா.

"மொசக்குட்டி' பட ஆடியோவை வெளியிட்டு பாரதிராஜா பேசிய பேச்சில் அத்தனை கனல்..."" சினிமாவில் நான் இரண்டாவது இன்னிங்க்ஸ் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். எனக்கு எப்போதுமே ஒரே இன்னிங்க்ஸ்தான். இப்போதும் சினிமாவில் துடிப்போடுதான் இருக்கிறேன். அடுத்த 2 வருடங்களில் 3 படங்கள் இயக்கப் போகிறேன். நான் என்னவோ சினிமாவையே விட்டு விட்டுப் போன மாதிரி, மீண்டும் வர வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். இளைஞர்கள் என்னை "அப்பா' என்றழைப்பது சந்தோஷம்தான். அதற்காக தாத்தா என யாரும் அழைத்து விடாதீர்கள். இன்று டிஜிட்டல் சினிமாதான் கலக்குகிறது. நவீன தொழில்நுட்பங்கள் ஆட்டிப் படைக்கின்றன. புதியவர்கள் அந்த தொழில்நுட்பத்துடன் இணைந்து கதை சொல்லுவதில் கில்லாடிகளாக உள்ளனர். எங்கள் காலத்தில் அந்த வசதி இல்லை. நான் இப்போது ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டு படம் இயக்க வர வேண்டும் போலிருக்கிறது. நவீனமாகப் படம் எடுப்பது தவறில்லை. ஆனால் நமது கலாசாரம், பண்பாடு, மண்ணின் ஈரத்தை மறைத்து விடாமல் படம் எடுங்கள்'' என கரகர குரலில் பேசி முடித்தார் பாரதிராஜா.

திகில் படம் வரிசையில் மற்றுமொரு படம் "மூச்'. நித்தின், மிஷாகோஷல், பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ், அபி, தியா, சுஹாசினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "பொம்மலாட்டம்' உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவின் உதவியாளராக பணியாற்றிய வினுபாரதி இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். கதைக்கரு குறித்து வினுபாரதி... ""நிறைவேறா ஆசைகளுடன் இறந்து போனவர்களின் ஆன்மா இந்த காற்றிலும், வெளிச்சத்திலும் கலந்திருக்கிறது என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருடைய நம்பிக்கை. அப்படியொரு நம்பிக்கைதான் இந்த கதையின் கரு. தாய்மை அடைய நினைத்த ஒரு பெண், திடீரென்று மரணத்தைச் சந்திக்கிறார். அவளின் அன்பு, பாசம், ஈரம் எல்லாம் அப்படியே நிலைத்து நின்று விடுகிறது. அப்படி ஒரு சூழலில் அந்த ஆன்மா சந்திக்கும் இரண்டு குழந்தைகளுக்கும், அந்த ஆன்மாவுக்கும் இடையேயான போராட்டம்தான் கதை. தாய்க்கும், பேய்க்கும் இடையில் நடக்கும் திகிலான பாசப் போரட்டமே கதை எனலாம். குன்னூர், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார் வினுபாரதி.

இசைப் பணிகளுக்கு இடையே படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள ரஹ்மான், ஹிந்தியில் படம் உருவாக்குகிறார். இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இத்தனை வருட பயணத்தில் தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவுகளில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்தும் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து தன் இணைய தள பக்கத்தில் ரஹ்மான் தெரிவித்திருப்பது...""ஹிந்தியில் உருவாகும் முதல் படத்துக்கான கதையை நானே எழுதியுள்ளேன். வாழ்க்கை அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், அவர்கள் புகட்டிய பாடங்கள் இந்த கதையில் இருக்கும். எனக்குள் உருவான பல கதைகளிலிருந்து சிறந்ததொரு கதையைத் தேர்வு செய்திருக்கிறேன். புதுமுகங்கள் இதில் நடிக்கிறார்கள். முதலில் ஹிந்தி சினிமா தயாரிப்பு என்பது தானாகவே அமைந்து விட்டது. தமிழிலும் படங்கள் தயாரிக்க வேலைகள் தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 2 படங்கள் தயாரிக்கப்பட உள்ளன. பட இயக்கத்தில் தடம் பதிக்கும் எண்ணம் கிடையாது'' என தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

"தாணா' படத்தில் நடித்தபடியே அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார் சிவகார்த்திகேயன். படத்துக்கு "ரஜினி முருகன்' என பெயரிடப்பட்டுள்ளது. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்கவுள்ளார். இதில் ரியல் எஸ்டேட் புரோக்கராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். வேஷ்டி, கூலிங் கிளாஸ், அக்குளில் கைப்பை, அசட்டுத்தனமாக புன்னகை, மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வியாபார பேச்சு என வித்தியாசமான தோற்றம் சிவகார்த்திகேயனுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பின் இப்படத்தில் மீண்டும் இணைகிறார் சூரி. முழுக்க முழுக்க நகைச்சுவையைக் களமாகக் கொண்டு உருவாகவுள்ள இப்படத்துக்கான நடிகைகள் தேர்வு  நடந்து வருகிறது. இதில் ஹீரோயின் தெருச்சண்டை போடும் காட்சிகள் இடம் பெறும் என்கிறார்கள். அது போன்ற காட்சியில் சந்திக்கும் போதுதான் ஹீரோயின் மீது சிவகார்த்திகேயனுக்கு காதல் அரும்புகிறதாம். இதனால் நடிகைகள் தேர்வில் அதீத கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. இந்த மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஒருவர் மட்டுமே நடித்த படம். இரு கதாபாத்திரங்களை கொண்டு உருவான படம். ஒரு வீட்டுக்குள் முழுக் கதையும் பயணிக்கும் படம் என அவ்வப்போது புதுப் புது முயற்சிகள் தமிழ் சினிமாவில் அரங்கேறுவது வழக்கம். இந்த வரிசையில் அடுத்த புதிய முயற்சியில் உருவாகிறது "லட்டுக்குள்ள பூந்தி பூந்தி' ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் நடிப்பதுதான் இப்படத்தின் சிறப்பு. இது பற்றி இயக்குநர் ஜீன்ஸ்... ""லட்டு என்பது உலகம். அந்த உலகத்தில் ஆணும், பெண்ணும் பூந்தி பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்தது தான் லட்டு. அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம். இந்த ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்ற ஒருவனுடைய கனவுதான் கதை! அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனால் அவர்கள் பெண்கள் குணத்தோடு மென்மையாக, நளினமாக இருப்பார்கள். அதுபோல பெண்கள் எல்லோரும் ஆண்களுடைய குணத்தோடு முரட்டுத் தனமாக அடாவடியாக இருப்பார்கள்.  இப்படி ஆண்களும், பெண்களும்  மாறி இருந்தா எப்படி

இருக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்காத கோணத்தில் பதிவு செய்வதே படம்"" என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT