டிவி நிகழ்ச்சிகளை நடத்த எனக்கும் ஆசை: ரேகா
பத்திரிகை பேட்டி. பொது நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து வந்த ரேகா, அண்மையில் வெளியான
பத்திரிகை பேட்டி. பொது நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து வந்த ரேகா, அண்மையில் வெளியான "சூப்பர் நானி' படத்திற்கான விளம்பரம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மும்பை திரையுலகையே ஆச்சரியப்பட வைத்தது. ஒரு மர்ம நபராகவே தனிமையில் வாழ்ந்து வந்தவர் ரேகா. அறுபது வயதை கடந்த பாட்டி வேடத்தில் "சூப்பர்நானி' படத்தில் நடித்ததை அவரது ரசிகர்களும் பத்திரிகைகளும் பெரிதும் பாராட்டியுள்ளன.
"" இந்தப் படித்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டபோது எந்த சிரமமும் எனக்கேற்படவில்லை. எனக்காகவே உருவாக்கப்பட்டது போல் தோன்றியது. தன் குடும்பத்திற்காக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் குடும்பத் தலைவியின் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. இது என்னுடைய ரசிகர்களிடம் சென்றடைய வேண்டுமே என்ற கவலையும் எனக்கிருந்தது. பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஏற்கெனவே பாசு பட்டாச்சார்யாவின் "அஸ்தா', "பூல் பனே அங்காரே' போன்ற படங்களில் நடித்துள்ளேன். அஸ்தாவில் நான் ஏற்ற பாத்திரம் விமர்சனத்திற்குள்ளானாலும் படம் வெற்றி பெற்று, அதன் மூலம் கிடைத்த பணம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பாசுவின் மருத்துவ செலவுக்கு பயன்பட்டது குறித்து சந்தோஷப்பட்டேன்'' என்று கூறும் ரேகா, ""என்னை உண்மையானவளாக கருதுகிறேன். என்னுடைய நடிப்பு உண்மையானது என்று நம்புகிறேன். நான் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றையும் நான் என்னுடைய குழந்தைகளாகவே கருதுவதால் என்னுடைய வேலையில் நான் எதையும் ஏமாற்ற முடியாது. படப்பிடிப்பின் போது ஒருநாள் கூட நான் சோர்ந்து போனதில்லை. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் முழுமையான ஒத்துழைப்பை கொடுப்பதுதான் என்னுடைய கொள்கை'' என்கிறார்.
"சூப்பர் நானி' படித்தில் நடித்தபோது தொடர்ச்சி விடுபடக்கூடாது என்பதற்காக ரேகா, அவரது அம்மாவின் புடவைகளையே படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் புடவைகளை உடுத்தியபோது அவரது அம்மாவின் டிரஸ் சென்ûஸ புரிந்து கொண்டதோடு தனக்குள் அவர் முழுமையாக நிறைந்திருப்பது போன்ற உணர்வு தோன்றியதாம்.
"சூப்பர் நானி' படத்தின் விளம்பரத்துக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
""எனக்கென்று இதுவரை பர்சனல் செகரட்டரி என்று யாரையுமே வைத்துக் கொண்டதில்லை. படங்களை மார்க்கெட்டிங் செய்வதிலோ, புரமோட் செய்வதிலோ எனக்கு நம்பிக்கையில்லை. இந்தமுறை என்னுடைய ரசிகர்களுக்காக செய்தால் என்ன என்று தோன்றியது. மேலும் நான் யார் கண்களுக்கும் தென்படாத மர்மப் பெண்ணாக வாழ்க்கை நடத்துவதாக செய்திகள் வரத் தொடங்கின. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு ஒரு மாறுதலாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நினைத்தேன். முப்பது இன்டர்வியூக்களில் பங்கேற்கும் வகையில் பட்டியலைக் கொடுத்தார்கள். நான் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கலந்து கொண்டேன். நிகழ்ச்சிகளில் பேசியவற்றை என் இதயத்திலிருந்து வந்த வார்த்தைகளாகவே நினைக்கிறேன். மற்றவைகளை கடவுளிடமே விட்டுவிட்டேன்'' என்கிறார் ரேகா.
""வாழ்க்கையில் அடுத்த ஆசை என்ன?''
எனக்கும் டிவி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்ற எண்ணம் எழுந்துள்ளது. அமிதாப்பச்சன்போல் பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்பது என்னுடைய ஆசை அல்ல. இது என்னுடைய பர்சனாலிட்டியை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதில் உள்ள ஒரே பிரச்னை இந்தியில் எனக்கு சரளமாகப் பேசமுடியாது. ஆங்கிலத்தில் தான் நடத்த வேண்டியிருக்கும்.
முப்பத்தாறு ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். வித்யாபாலன், காத்ரீனா கைப் போன்று எத்தனையோ திறமையான இளம் நடிகைகள் இப்போது வந்துள்ளனர். இருப்பினும் இன்னும் எனக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை மீனாகுமாரி, வகிதா ரஹ்மான் போன்ற நடிகைகள் இருந்த காலத்தைச் சேர்ந்த கடைசி நடிகை நான் என்ற காரணமாகவும் இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
தயாரிப்பாளர்களுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்று கூறுவதும் தவறு. எப்போது வேண்டுமானலும் நடிக்க தயாராக இருக்கிறேன். அடுத்து ஜனவரியில் துவங்கவுள்ள அபிஷேக் கபூர் இயக்கத்தில் "ஃபிட்டூர்' படத்தில் நடிக்கவுள்ளேன். என்னுடைய வாழ்க்கையைப் பொறுத்த வரை நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்கிறேன். என்னுடன் தொடர்பு கொள்பவர்களின் மனதை அறிய முயற்சிப்பதால், வாழ்க்கையில் எந்தச் சிரமமும் இல்லை. எனக்கு யார் மீதும் எந்தவித வெறுப்பும் இல்லை. ஏற்கெனவே இந்த உலகில் ஏராளமான இயற்கைப் பேரழிவுகள் நிகழ்கின்றன. இதில் நீங்கள் எதற்காக ஒரு சுனாமியை எழுப்புகிறீர்கள்'' என்கிறார் ரேகா.
விரைவில் தன்னுடைய எண்ணங்களை புத்தகமாக எழுதும் திட்டமும் ரேகாவிடம் உள்ளது. இது அவருடைய வாழ்க்கை வரலாறு அல்ல. உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களையே எழுதப் போகிறாராம். "இன்னும் நான் தனிமை பெண்மணி அல்ல. என்னைச் சுற்றி எந்த மர்மமும் இல்லை. என்னைப் பற்றி நானே அறிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன். ஒருவேளை மதர்தெரசா போன்று முகத்தில் சுருக்கங்கள் தோன்றும்போது எனக்குள் சுயவிழிப்புணர்வு தோன்றலாமென்று நினைக்கிறேன்'' என்கிறார்.