முகப்பு
தினமணி கதிர்

பேப்பர் பெண்!

பஸ் ஓட்டும் பெண், ஆட்டோ ஓட்டும் பெண், பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் பெண்  என ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

பஸ் ஓட்டும் பெண், ஆட்டோ ஓட்டும் பெண், பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் பெண்  என ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல துறைகளில் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறோம். பேப்பர் போடும் பெண்ணை பார்த்திருக்கிறோமா? விடியற்காலையில் சென்னை தி.நகர் ஏரியா பக்கம் சென்றால் இவரை பார்க்கலாம். விஜயராகவா சாலையில் தொடங்கி, ஜி.என்.செட்டி சாலை வரை நாள்தோறும் தினசரி நாளிதழ்களை டெலிவரி செய்து வருகிறார் அமுதா கணேசன். தனது அலுவல் குறித்து நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டது...

 ""எனது கணவர் கணேசன், பேப்பர் டெலிவரி பாயாக சிறுவயதில் ஆரம்பித்து 40 ஆண்டுகளாக, இந்தத் தொழிலைச் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை கிடைத்தது. இதில் சிக்கல் என்னவென்றால், அவர் காலை ஆறு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். எனவே அவர் செய்து கொண்டிருந்த பேப்பர் டெலிவரி செய்யும் தொழிலை விட மனம் இல்லாமல் தவித்தார். இதைக் கண்ட நான், பேப்பர் டெலிவரி செய்வதாக கூறினேன்.  முதலில் பயந்தார். பிறகு யோசித்துவிட்டு ""உன்னால் முடியுமா?  இரண்டு நாட்கள் செய்துவிட்டு முடியாது என்று சொல்லக் கூடாது'' என்றார். ""என்னால் முடியும். நான் செய்கிறேன்'' என்றேன். முதல் இரண்டு நாட்கள் என்னுடன் வந்து இடங்களை எல்லாம் காண்பித்தார். அதே போல சைக்கிள் ஓட்டவும் கற்றுக் கொடுத்தார். மூன்றாவது நாளில் இருந்து நானே சைக்கிள் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பேப்பர் டெலிவரி செய்து வருகிறேன். விடியற்காலை 4.30 மணிக்கெல்லாம் பேப்பர் பிரித்துக் கொடுக்கும் பாயிண்ட்டுக்குச் சென்றுவிடுவேன். அவர்கள் நாளிதழ்களைப் பிரித்துக் கொடுப்பதற்குள் மணி ஐந்தரை ஆகிவிடும். அங்கிருந்து நாளிதழ்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று டெலிவரி செய்வேன். காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் நாளிதழ்களை டெலிவரி செய்துவிடுவேன். சில வீடுகளில் என் பேப்பர் சென்றுதான் வீட்டில் உள்ளவர்களையே எழுப்பும்.

 4.30 மணிக்கெல்லாம் பேப்பர் பாயிண்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் தினசரி  காலை 3.30 மணிக்கே எழுந்துவிடுவேன். எனக்கு புஷ்பலதா, சுபாஷினி, யாஷ்மிகா என்று  மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு, டீ போட்டு பிளாஸ்கில் வைத்துவிட்டு  செல்வேன். 7.30 மணிக்கு திரும்பி வந்து சிற்றுண்டி செய்து கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஆர்பி அரசு அலுவலகத்தில் பேப்பர் டெலிவரி செய்துவிட்டு வருவேன். அதன் பிறகு, சமையல் செய்து மதியவேளையில் பள்ளியில் கொண்டு கொடுப்பேன். பொதுவாக எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் கண்விழிக்கும் போதே ""அம்மா'' என்றபடி எழுந்து வருவார்கள். என் குழந்தைகள்  அவர்களாகவே எழுந்து வந்து அவர்களது வேலைகளைச் செய்து கொண்டு பள்ளிக்குக் கிளம்புவார்கள். மனதிற்குள் வருத்தம் இருக்கலாம். ஆனால் என் கடைக்குட்டி கூட அதை வெளியில் காட்டியதில்லை.

நாளிதழ்களை கையில் எடுத்ததும் தலைப்புச் செய்திகளை மட்டும் தவறாமல் படித்துவிடுவேன். மற்றபடி நேரம் கிடைக்கும் போது ஆன்மிக இதழையும், பெண்கள் இதழையும் படிப்பேன்.

 பெண்கள் முன்னேறினால் சுற்றியிருக்கும் சமுதாயம் அவளைப் பின்னோக்கித்தான் தள்ள பார்க்கும், எனக்குப் போட்டியாக ஆண்களும் சிலர் என் ஏரியாவிலேயே பேப்பர் போட வந்தனர். இருந்தாலும் 150 வீடுகளுடன் என் வேலையைத் துவங்கினேன். இப்போது 350 வீடுகள் என் கைவசம் உள்ளன. 

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றிரண்டு வீடுகளே வாடிக்கையாளர்களாக இருந்தனர். இப்போது அதே குடியிருப்புகளில் பத்து முதல் பதினைந்து வீடுகளை வாடிக்கையாளர் ஆக்கியிருக்கிறேன். என்னைப் பார்த்துவிட்டு இப்போது தேனாம்பேட்டை, கோபாலபுரம், வேளச்சேரி ஏரியாக்களில் என் உறவுக்காரப் பெண்கள் பேப்பர் டெலிவரி செய்கிறார்கள். 

 விடியற்காலையில் சாலையில் தனியாகச் செல்வதால் சில சமயங்களில் இடர்களைச் சந்திக்க நேரிடும், அவற்றையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு, துணிவோடு சமாளித்துச் செல்வேன். மழை நேரங்களில் இடுப்பளவு தண்ணீரிலும் நீந்திச் சென்று பேப்பர் டெலிவரி செய்திருக்கிறேன். எந்த நேரத்திலும் சலிப்பு ஏற்பட்டதே கிடையாது. அதனால்தான்  சைக்கிளில் இருந்து இப்போது டூவீலருக்கு மாறியிருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.