தினமணி கதிர்

கல்வி ஒன்றே தீர்வு!

நமது நாட்டு மக்களின் மக்கள் தொகையில் 9 சதம் பேர் பழங்குடியினர் என்றால் நம்பமுடிகிறதா? காடுகள், அவை சார்ந்த இடங்களில்

ந.முத்துமணி

நமது நாட்டு மக்களின் மக்கள் தொகையில் 9 சதம் பேர் பழங்குடியினர் என்றால் நம்பமுடிகிறதா? காடுகள், அவை சார்ந்த இடங்களில் வசித்து வரும் இம்மக்கள் ஆந்திரம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்குவங்கம் தவிர வடகிழக்கு மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையைப் பேணி பாதுகாப்பதில் மகத்துவம் மிக்க பங்காற்றிவரும் பழங்குடியினர் 10.4 கோடி பேர் இந்தியாவில் வசிப்பது பலரின் கவனத்தை ஈர்க்க தவறியுள்ளது. சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாது கல்வி, வேலைவாய்ப்பிலும் பழங்குடியினர் பின் தங்கியுள்ளனர். இந்தியாவின் எழுத்தறிவுவிகிதம் 74.04 சதமாக இருக்க, பழங்குடியினர் 59 சத எழுத்தறிவுடன் போராடி வருகிறார்கள். 16 கால் பாய்ச்சலில் உலகம் முன்னேறிவந்தாலும் பழங்குடியினர் வாழ்க்கை நிலை பரிதாபமாக இருப்பதற்குப் போதுமான எழுத்தறிவின்மையே காரணம் என்று கருதப்படுகிறது.

பழங்குடி குழந்தைகளின் கல்விக்கண்களைத் திறக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றாய் முகிழ்த்திருக்கிறார் அச்யுத சமந்தா. நலிந்த குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது, கண்ணில் பார்வை இல்லாதவனுக்கு பார்வை அளித்தது போல என்று கூறும் சமந்தா, ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக 1992-இல் கலிங்கா தொழில், தொழில்நுட்ப மையத்தை தொடங்கினார். இன்று உலகின் மிகப்பிரமாண்டமான பல்கலைக்கழகமாக அது உருவெடுத்துள்ளது. பழங்குடி குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிப்பதற்காக கலிங்கா சமூக அறிவியல் மையத்தை தொடங்கியுள்ளார். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மழலையர் பள்ளி முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி அளித்துவருகிறார்.

இதுபற்றிவிவரிக்கிறார் அச்யுத சமந்தா:

""பட்டினி மற்றும் அறியாமைக்கு எதிராகப் போராடி வருவதோடு, சமத்துவ உலகத்தைப் படைப்பதே எனது வாழ்வின் இலட்சியமாக உள்ளது. ஏழையாகப் பிறந்தேன், ஆனால் யாரும் ஏழையாக நிலைக்கக் கூடாது என விரும்புகிறேன். எனக்கு நான்கு வயதிருக்கும்போது(1969) தொழிற்சாலை ஊழியரான எனது தந்தை இறந்துவிட்டார். எனது குடும்பம் கடும் வறுமையில் வாடியது. மாற்று சேலை கூட இல்லாத நிலையில் எனது தாய், நதியோரத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணெய் வித்துகளைப் பொறுக்கி விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருசில நேரங்களில் ஒருவேளை கூட உணவு கிடைக்காது. 7 வயது முதல் குடும்பத்திற்காக வேலை செய்து சம்பாதிக்கத் தொடங்கினேன். கல்வியால் மட்டுமே மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று நம்பியதால், எனது சேமிப்பில் இருந்து நண்பர்களின் கல்விக்கு அவ்வப்போது உதவி வந்தேன். படிப்பையும் வேலையையும் தொடர்ந்தேன். கல்வி மீது தீராத காதல் ஏற்பட்டது. வறுமை, துன்பம், தோல்வி ஆகியவற்றை கடவுளின் வரமாகக் கருதி, அவற்றை எதிர்த்து போராடும் மனப்பக்குவத்தைச் சம்பாதித்தேன். வெறித்தனத்தோடு படித்து அறிவியல் முதுநிலை பட்டம் முடித்து, தனியார் கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். பொதுப்பணிக்கு திருமண உறவு தடையாக இருக்கும் என்பதால், திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆதரவற்ற பழங்குடி குழந்தைகள் கல்வி வசதி இல்லாமல் தவிப்பதை கண்டு , 1992-இல் நான் சேமித்து வைத்திருந்த ரூபாயில் தொழில்பயிற்சி வழங்குவதற்காக கலிங்கா தொழில் தொழில்நுட்ப மையத்தையும்(கேஐஐடி), ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்குவதற்காக கலிங்கா சமூக அறிவியல் மையத்தையும்(கேஐஐஎஸ்) தொடங்கினேன். குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், பாடநூல்கள், கல்வி அனைத்தும் இலவசம். ஒவ்வொரு ரூபாயாகச் சேர்த்து, படிப்படியாக இரு கல்வி நிறுவனங்களையும் கட்டமைத்தேன். வங்கியில் கடனுதவி பெற்று கல்வி நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறேன். கேஐஐடி-யில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். கேஐஐஎஸ் மூலம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கிவருகிறேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இங்கு படித்த ஏராளமான பழங்குடியின குழந்தைகள் சீரும் சிறப்போடு வாழ்ந்து வருகிறார்கள்.

நான் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவன் அல்ல என்றாலும் , பழங்குடி குடும்பத்தின் ஒரு தலைமுறைக்கு கல்வி அளித்துவிட்டால் அது அக்குடும்பங்களின் சமூக கட்டமைப்பையே மாற்றியமைத்துவிடும் என்று நம்புகிறேன். ஒடிசாவில் 62 வகையான பழங்குடியினர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும்  ஏழைகளாவர். இச்சமூக குழந்தைகளுக்கு கல்வி அளித்துவிட்டால், மற்றவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள்.

எனது ஊதியம் குறைவு. எனது தேவைக்குப் பயன்படுத்தியது போக மீதமுள்ள பணத்தை குழந்தைகளின் கல்விக்குச் செலவிடுகிறேன். சிறிய வாடகை வீட்டில் தங்கியிருக்கிறேன். ஆனால் எனது குழந்தைகள் பயிலும் கல்வி நிறுவனங்கள் 25 சதுர கிமீ பரப்பில் அமைந்துள்ளன. கல்வி நிறுவனங்களின் வருமானத்தை கல்விப் பணிகளுக்கு மட்டுமே செலவிடுகிறேன். அதனால் தான் கல்வி நிறுவனம் உலக அளவில் உயர்ந்து நிற்கிறது. கல்வி நிறுவனத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக, ஆசிரியர்களுக்கு தாராளமாக ஊதியம் அளித்து வருகிறேன். அப்துல்கலாம் உள்ளிட்ட மிகப்பெரிய மனிதர்கள் எங்கள் கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து பழங்குடி மக்களை ஊக்குவித்திருக்கிறார்கள். பழங்குடி குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒடிசா மாநிலத்தில் மேலும் 20 கேஐஐஎஸ் மையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளேன். அதேபோல, ஜார்கண்ட், சத்தீஸ்கர், தில்லியிலும் கேஐஐஎஸ் மையங்கள் தொடங்கப்படும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களிலும் பழங்குடி குழந்தைகளுக்காக கேஐஐஎஸ் மையங்களை நிறுவ அம்மாநிலங்களின் அரசுகளோடு பேசிவருகிறோம். சுயநலத்திற்காக அல்லாமல், மற்றவர்களுக்காக ஏதாவதொருவகையில் சேவையாற்றும்போது மற்றவர்கள் நமது குரலுக்கு செவி சாய்ப்பார்கள். என்னுடைய பணி உலகமெங்கும் பரவும். கல்வி இல்லாமல் எந்தகுழந்தையும் வஞ்சிக்கப்படக்கூடாது'' என்று நெகிழ்ந்து கூறுகிறார் சமந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இனையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

SCROLL FOR NEXT