முகப்பு
தினமணி கதிர்

ஓட்டப் பந்தயத்தில் நாட்டம்!

போர்த்து கீசியர்களின் ஆளுமையில் இருந்த பகுதிகளை ஒருங்கிணைக்கும் வகையில் "அட்லாஸ்' அமைப்பு மூலம்

Updated On : 30 மார்ச், 2014 at 9:53 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:21 AM

போர்த்து கீசியர்களின் ஆளுமையில் இருந்த பகுதிகளை ஒருங்கிணைக்கும் வகையில் "அட்லாஸ்' அமைப்பு மூலம் "லூசோபோனியா' தடகள விளையாட்டுப் போட்டியை சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்திய ஒலிம்பிக் சங்கமும், கோவா யூனியன் பிரதேசமும் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் இப்போட்டியை நடத்தியது. இப்போட்டியில் பல மாநிலங்களிலிருந்து 130 கல்லூரி மாணவிகளும், சீனா, இலங்கை,நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்திலிருந்து 3 பேர் கலந்து கொண்டனர்.

Advertisement

அதில் விருதுநகர் பி.இனியா 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

இந்த வெற்றி குறித்து அவரிடம் கேட்டோம்:

""எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே இடையான்குட்டியான் தோட்டம். நான் 6 ஆம் வகுப்பை நம்பியூரில் உள்ள குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது ஆசிரியர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் சேர வேண்டும் எனக் கூறினார்கள். பல விளையாட்டுக்களில் பயிற்சி பெற்றேன். ஆனால் நான் ஓட்டப் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவதாக கூறி ஆசிரியர்கள் நான் 7ஆம் வகுப்பு படிக்க சென்ற பின்னர் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்கள். அப்போது முதல் பல போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளேன்.

இதன் மூலம் எனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் பிறந்தது. அப்போது சிவகுமார் மாஸ்டர்தான் பயிற்சி அளித்தார். தற்போது விருதுநகர் மாவட்ட தடகளப் பயிற்சியாளர் ஜெயகுமார் ராஜாவிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.

தினசரி காலை 6.30 மணி முதல், 8 மணி வரையிலும், மாலை 4  மணிமுதல் 5.30 மணிவரையிலும் பயிற்சி.  பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் சரிவிகித உணவு அளித்து வருகிறார்கள்.இதன் மூலம் உடலை விளையாட்டுப்போட்டிகளுக்கு தயார்ப்படுத்திக் கொள்ள முடிகிறது. மேலும் கல்லூரி செயலாளர் மாணிக்கவாசகம், முதல்வர் பி.செல்வமீனாட்சி, உடற்கல்வி இயக்குனர்கள் கே.ஜமீலாஜோதிபாய், எம்.கஜலட்சுமி ஆகியோர் ஊக்கமளித்து வருகிறார்கள். 

பெங்களூரில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகளப்போட்டியிலும், ஹைதராபாத்தில் நடைபெற்ற தென்மண்டல ஜூனியர் தடகளத்திலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவிலும், மங்களூரில் நடைபெற்ற  அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தடகளப் போட்டியிலும், லக்னோவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டியிலும் 400 மீட்டர், 800 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்றுள்ளேன்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியின் போது  400 மீட்டர் தொடர் ஒட்டப் போட்டியில் நான் தங்கப் பதக்கம் பெற்றேன். இப்போட்டியில் ஒரு குழுவுக்கு 4 பேர் என  மூன்று குழு அமைத்து போட்டியை நடத்தினார்கள்.

பல போட்டிகளில் தங்கம் வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெல்ல வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. அந்த தாக்கம் என்னை வெற்றி பெறச் செய்தது. இதில் இலங்கை இரண்டாமிடமும். சீனா மூன்றாமிடமும் பெற்றது.

வருங்காலத்தில் நான் எம்.பி.ஏ. படித்து மத்திய அரசில் வேலை பார்க்க வேண்டும் என்பது எனது லட்சியமாகும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.