தினமணி கதிர்

திரைக்கதிர்

தங்கள் உடலில் டாட்டூ வரைந்து கொள்வது நடிகைகளின் விருப்பங்களில் ஒன்று. கை, கால், இடுப்பு உள்ளிட்ட பாகங்களில் தங்களின்

ஜி. அசோக்

தங்கள் உடலில் டாட்டூ வரைந்து கொள்வது நடிகைகளின் விருப்பங்களில் ஒன்று. கை, கால், இடுப்பு உள்ளிட்ட பாகங்களில் தங்களின் இயற்பெயரையோ அல்லது பொருள் தரும் எழுத்துக்களையோ டாட்டூவாக வரைந்து கொள்கின்றனர். டாட்டூ வரைந்துள்ள நடிகைகளின் வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் பிரியா ஆனந்த். ஆன்மீகத்தில் மிகவும் நாட்டமுள்ள பிரியா ஆனந்த், தனது இடது கையின் மடிப்புக்கு அருகே "அகம்' என பொருள்படும் ஹிந்தி வாசகத்தை எழுதியுள்ளார். "அகம் பிரமாஸ்மி' என்பது அதன் விரிவான பொருள். சாய் பாபாவின் தீவிர பக்தையான பிரியா ஆனந்த்,  இந்தியாவின் பல பகுதியில் உள்ள சாய் பாபா கோயில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதுவரை தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களுக்கு சென்று வந்துள்ள பிரியா ஆனந்த், சமீபத்தில் சென்று வந்துள்ள தலம் "வைத்தீஸ்வரன் கோயில்.' மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புலியூர்தான் சொந்த ஊர் என்பதால், அங்கிருந்து வருடத்துக்கு ஒரு முறை அருகில் உள்ள வேளாங்கண்ணிக்கு நடந்து செல்வார் பிரியா ஆனந்த்.

எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ஜெமினி நடித்த படம் "வஞ்சிக்கோட்டை வாலிபன்.' அந்தப் படத்துக்கான சண்டை காட்சி படப்பிடிப்பு அது. வில்லன் வேடத்தில் வீர வசனம் பேசி நடித்துக் கொண்டிருந்தார் பி.எஸ்.வீரப்பா. காட்சி படமாகி கொண்டிருந்தது. "நான் உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்ற வசன உச்சரிப்பின் போது, பி.எஸ்.வீரப்பாவின் மூக்கின் மேல் வந்து அமர்ந்தது ஒரு ஈ. வசன உச்சரிப்பை நிறுத்த விரும்பாத பி.எஸ்.வீரப்பா அந்த ஈயை தனது இடது கை விரலால் தட்டி விட்டார். அந்த காட்சி நன்றாக வந்து விடவே, மேற்கொண்டு அந்தக் காட்சியை படமாக்காமல், அதே காட்சியை படத்தில் வைத்து வெளியிட்டார். தமிழகம் எங்கும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற அந்தப் படம், பின்னாளில் ஹிந்தியில் ரீமேக் ஆனது. இப்போது பி.எஸ்.வீரப்பா இடத்தில் ஹிந்தி நடிகர் பிரான். அதே வசன உச்சரிப்பு வரும் போது பிரானும் மூக்கை தட்டி விடுகிறார். அங்கேயும் படம் ஹிட். ராசி, அதிர்ஷ்டம் என்பதற்கு உதாரணமாக இந்த விஷயம் இப்போதும் சினிமாவில் சொல்லப்படுவதுண்டு. 

கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் "அனேகன்.' "வேலையில்லா பட்டதாரி' படத்தையடுத்து இப்படத்தில் நடிக்கிறார் தனுஷ். அவருக்கு ஜோடியாக புதுமுகம் அமைரா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்திக் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். அறிவியல் கனவு, அரசியல் த்ரில்லர், குற்றப் பின்னணி என படத்துக்கு படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கே.வி.ஆனந்த், இந்த முறை காதலை முழு களமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளார். தனுஷுக்கும், அமைராவுக்குமான காதலுக்கு இடையில் கொஞ்சம் ஆக்ஷன்தான் கதை களம். முந்தையப் படங்களை போலவே சுருக், சுள்ளென தலைப்பு வேண்டும் என தேடிப் பிடித்த போதுதான் "அனேகன்' என்ற வார்த்தையைப் பிடித்துள்ளார் கே.வி.ஆனந்த். திருவாசகத்தில் "அனேகன்' என்ற வார்த்தைக்கு சிவபெருமான் என்பவர் ஒருவர் அல்ல; பல ரூபத்தில் உள்ளவர் என்பது பொருள். தலைப்புக்கு ஏற்றவாறு தனுஷ் 4 விதமான வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். முன் ஜென்மத்தில் நடக்கும் சம்பவங்கள் படத்தின் திரைக்கதையில் முக்கியத்துவம் பிடிப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினியின் பாலிவுட் நண்பர் சத்ருகன் சின்ஹா. இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா "லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சோனாக்ஷி சின்ஹா பங்கேற்ற ஒரு சில காட்சிகள் மட்டும் கர்நாடக மாநிலத்தின் உட்புற பகுதிகளில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. குதிரை ஏற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. திடீரென்று திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு என்பதால் அங்கு சரியான தங்கும் வசதி இல்லை. இதை வெளிப்படையாக  தனது இணையதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார் சோனாக்ஷி. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த தகவலை தன் இணைய தள பக்கத்திலிருந்து சோனாக்ஷி நீக்கி விட்டார். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே அசௌகரியங்கள் பற்றி படக்குழுவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்த சோனாக்ஷி சின்ஹா, தற்போது ""லிங்கா' படப்பிடிப்பு அனுபவங்கள் நிறைந்தது'' என புகழாரம் சூட்டி இருக்கிறார். ""படப்பிடிப்பில் பணியாற்றிய நாள்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதது'' என்றும், ""அதை அளித்த ரஜினிக்கு நன்றி'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

குழந்தைகள் வளர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, அவ்வப்போது சூர்யாவுடன் இணைந்து விளம்பர படங்களில் நடித்து வந்தார். பட வாய்ப்புகள் வந்த நிலையில், நடிப்பது குறித்த முடிவை ஜோதிகாவின் முடிவுக்கே விட்டிருந்தார் சூர்யா. இந்நிலையில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த "ஹவ் ஒல்டு ஆர் யூ' படம் வெற்றி பெற்றது. அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகாவிடம் கதை சொல்லப்பட்டது. திரைக்கதை பிடித்திருந்ததையடுத்து நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தை மலையாள நடிகர் ரோஷன் ஆண்ட்ரூ இயக்குகிறார். நடிகர் ரகுமான் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் மலையாள படமொன்றில் கவனம் செலுத்தி வந்த இயக்குநர் தற்போது, இந்தப் படத்துக்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். நவ.17-ஆம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் ஜோதிகா பங்கேற்று நடிக்கிறார். புதுதில்லி, ராஜஸ்தானில் இப்படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஓர் எழுத்தை படங்களுக்கு தலைப்பாக வைப்பது சமீபமாக அதிகரித்து வருகிறது. "கோ', "உ', "தா' என இந்த வரிசையில் வெளிவந்த படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இது மாதிரி ஓர் எழுத்தை தலைப்பாக கொண்டு படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் தற்போது இடம் பிடித்திருக்கிறது "ர.' பிளான் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை, புதுமுக பிரபு யுவராஜ் எழுதி இயக்குகிறார். அஷ்ரப், லாரன்ஸ் ராமு, அதிதி செங்கப்பா, கீதா பாபு, ரெதிகா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். "ர' என்பதற்கு "அபகரித்தல்' என்பது பொருள். படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் யாரிடமிருந்து எதை? எப்படி? அபகரிக்கிறார்கள் என்பதே கதை. ""கதையின் பிரதானமாக காதல் இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்தான் திரைக்கதை. சமீபமாக வெளிவரும் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில் இது தனித்துவமாக இருக்கும்.  இனி வரும் படங்களுக்கு டிரெண்ட் செட்டராகவும் இப்படம் இருக்கும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT