முகப்பு
தினமணி கதிர்

ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு!

தற்போது எங்கும் கணினி, எதிலும் கணினி என கணினி மயமாகிவிட்டது.

Updated On : 23 நவம்பர், 2014 at 10:00 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:56 PM

தற்போது எங்கும் கணினி, எதிலும் கணினி என கணினி மயமாகிவிட்டது.

தற்போது புதிது புதிதாக பல கண்டு பிடிப்புகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்புகளுக்கு நிகராக, பள்ளி மாணவர்களின் அறிவியல் சாதனைகளும் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கின்றன.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.பிரணவ்கிருஷ்ணா, வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைக் கணக்கெடுக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். மேலும் அந்தக் கருவி மூலம் மின்திருட்டையும் கண்டறியமுடியும் எனக் கூறுகிறார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு, அக்டோபர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.முத்தையாபிள்ளை மீனாட்சி அம்மாள் மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற "நம்ம ஊரு விஞ்ஞானி' என்ற தலைப்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்று, ரூபாய் 50ஆயிரம் ரொக்கப்பரிசும் கிடைத்துள்ளது.

இது குறித்து மாணவர் எஸ்.பிரணவ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது:

""மத்திய மாநில அரசுகள் பல செலவுகளைக் குறைக்க வழிமுறைகளை ஆய்வு செய்து, சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வீடு வந்து, அந்த வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளார்கள். அதற்கு உரிய கட்டணம் எவ்வளவு என ஒரு காகித அட்டையில் குறித்து செல்ல மின்வாரியம் பலரை நியமித்துள்ளது. மின்வாரிய ஊழியர் வீட்டிற்கு வராமல், மின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்க இயலுமா? என்ற கேள்வியே என்னை ஆய்வு செய்ய துண்டியது.

எனது கண்டுபிடிப்பின் பெயர், இ.பி.பில் டிரான்ஸ்மீட்டிங் ஆட்டோமெட்டிக் யூஸிங் ஜி.எஸ்.எம். ஆகும்.

இதில் ஒரு பெரிய மதர்போர்டும், ஜி.எம்.எஸ். எனப்படும் சர்க்யூட்டும் உள்ளது.

பெரிய மதர் போர்டில் கணினி மூலம், வீட்டு மின் இணைப்பு எண், ஒரு யூனிட்டிற்கு எவ்வளவு கட்டணம், தேதி, நுகர்வோர் கைபேசி எண், மின்வாரிய கணக்கெடுப்பு கணினி குறித்த விபரம் ஆகியவற்றைப் புரோக்கிராம் செய்து வைத்துக் கொள்ள  வேண்டும்.

அதில் டிஜிடெல் டிஸ்பிளே இணைக்க வேண்டும். மேலும் சிறிய சிறிய ஐ.சி. சிப்ஸ் 2 உள்ளன. ஜி.எம்.எஸ். சர்க்யூட் வைக்க வேண்டும். இதன் விரிவாக்கம் குளோபல் ஸ்டேண்டர்டு மொபைல் நெட் ஒர்க்ஸ் என்பதாகும். இதில் மொபைல் போன்களுக்கு பயன்படுத்தும் சிம் வைக்க வேண்டும். இந்த சிம்மில் எந்த எண்ணுக்கு கட்டண விபரம் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கணினி மூலம் முதலிலேயே செட் செய்து கொள்ள வேண்டும். இவற்றின்  மூலம் குறிப்பிட்ட மின் இணைப்பில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு உரிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல்களை நுகர்வோர் பார்த்துக் கொள்ளலாம்.

மின்வாரியத்திற்கும் கணினி மூலம் புரோக்கிராம் செய்துவிட்டால், மின்வாரியத்திலும், அவர்களது அலுவலகத்தில் இருந்தபடியே இந்த நுகர்வோர் இணைப்பு எண்ணில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளார்கள்? அதற்கு உரிய கட்டணம் எவ்வளவு? என்ற தகவல் தெரிந்துவிடும்.

ஒவ்வொரு வீட்டிலும் மின் இணைப்பு அருகே இந்த கருவியைப் பொருத்திவிட்டால், மின்வாரிய ஊழியர் வீட்டிற்கு வந்து கணக்கெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்தக் கருவியைத் தயாரிக்க ரூபாய் 500 போதும். மேலும் இதன் மூலம்  மின்திருட்டைக் கண்டறிய முடியும்.

மின்கணக்கீடு செய்வதற்கு கணினி மூலம் புரோக்கிராம் செய்து செட் செய்வதுபோல, ஒவ்வொரு டிரான்ஸ்ஃபார்மருக்கும் எவ்வளவு மின்சாரம் வருகிறது. அது எத்தனை வீடுகளுக்கு பயன்படுகிறது. வீட்டு பயன்பாடு போக கூடுதல் மின்சாரம் அந்த டிரான்ஸ்ஃபார்மரில் உள்ளதா என்பது குறித்த தகவல்களை கணினி மூலம் புரோக்கிராம் செய்து டிரான்ஸ்ஃபார்மரில் பொருத்திவிட  வேண்டும். அப்படிப் பொருத்தும்போது, அதிகமாக மின்சாரம் செலவாகியிருந்தால் மின்திருட்டு நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்து விடலாம். 

தமிழக அரசு இதனை வர்த்தகரீதியில் தயாரிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்'' என்றார் மாணவர் பிரணவ்கிருஷ்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.