தினமணி கதிர்

திரைக்கதிர்

மேடைகளில் மட்டுமே கவனம் ஈர்த்து வந்த எஸ்.பி.பி.க்கு சினிமா ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. இன்னிசைக்

ஜி. அசோக்

மேடைகளில் மட்டுமே கவனம் ஈர்த்து வந்த எஸ்.பி.பி.க்கு சினிமா ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. இன்னிசைக் குழுக்களில் முதன்மைப் பாடகராக வலம் வந்து கொண்டு இருந்த நேரத்தில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாடகி ஜானகியுடன் நடந்த சந்திப்பு ஒன்றுதான் எஸ்.பி.பி.யின் பார்வையை சினிமாவின் பக்கம் திரும்ப வைத்தது. ""உங்களை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்... இப்படி குழுக்களில் மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் எப்படி... சினிமாவில் நீங்கள் ஏன் பாடக் கூடாது? யாருடைய சாயலிலும் உங்கள் குரல் இல்லாதது நல்ல விஷயம்...'' எதேச்சையாக நடந்த அச்சந்திப்பில் ஜானகியின் இந்த வார்த்தைகள்தான் எஸ்.பி.பி.யின் சினிமா பயணத்துக்கான முதல் தளம். மேடைப் பாடகராக இருந்த நீங்கள், சினிமாவுக்குள் வந்தது எப்படி? என கேட்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை மறக்காமல் சொல்லுவார் எஸ்.பி.பி. மேடைப் பாடகராக பாலு, புகழ் வெளிச்சத்துக்குப் பின் எஸ்.பி.பி. என பெயர்கள் மாற, ""பாலசுப்பிரமணியம்'' என்று முழுப் பெயரையும் சொல்லி அழைக்கும் ஒரே நபர் இன்று வரை ஜானகிதான். இப்போதும் ஜானகியின் இந்த அழைப்புக்கு நெகிழ்ந்து விடுவார் மனிதர்.    

"கண்ணெதிரே தோன்றினாள்', "மஜ்னு', "சந்தித்த வேளை', "உற்சாகம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதி இயக்கும் படம் "நட்பதிகாரம் 79'. ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இப்படத்தில் ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ரேஷ்மி, தேஜஸ்வி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். தனது முந்தைய படங்களைப் போலவே காதல், நட்பு, குடும்பம் இந்த மூன்றையும் முக்கிய அம்சங்களாக கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் ரவிச்சந்திரன். இருப்பினும், நடப்பு சினிமா பாணிகளுக்கு ஏற்ப கதையில் மாற்றங்களையும் உருவாக்கியிருக்கிறார். "மஜ்னு' படத்தில் ஹாரீஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தியதைப் போல் இந்தப் படத்தில் அதே ஆர்வமும், தேடலும் கொண்ட தீபக் நிலம்பூர் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். இசையமைப்பாளர் தேவா இப்படத்தில் ஒரு கானா பாடலைப் பாடவுள்ளார். சென்னை, மைசூர், உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது. 

ஒலிம்பிக் போட்டியில் குத்து சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது தங்க பதக்கம் வென்ற மேரி கோம் வாழ்க்கை ஹிந்தியில் திரைப்படமாக உருவானது. மேரி கோம் வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் மிகப் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சிகளில் பாலிவுட் இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படமாகவுள்ளது. தனது வாழ்க்கை வரலாறு குறித்த இப்படத்துக்கு தோனி விருப்பம் தெரிவித்ததையடுத்து இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே இப்படத்தை எழுதி இயக்கவுள்ளார். தனது வாழ்க்கை படமாவதைத் தெரிந்து கொண்ட தோனி, இயக்குநர் நீரஜ் பாண்டேவை தொடர்பு கொண்டு, எந்தெந்த மாதிரியான அம்சங்கள் படத்தில் இடம் பெறுகின்றன என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டாராம். பள்ளி படிப்பு முதல் கிரிக்கெட் வாழ்க்கை, பள்ளித் தோழியை காதல் மணம் புரிந்து கொண்டதில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் என தோனி வாழ்க்கையின் அனைத்து சம்பவங்களும் இதில் படமாகின்றன. விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு.

தமிழ், மலையாளப் படங்கள் கை வசம் இல்லாததால் தற்போது ஓரிரு தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் பூர்ணா. தமிழ்ப் படங்களை பெரிதும் எதிர்பார்த்து இருந்தவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக புதிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் சினிமாவை நம்பி காத்திருந்து நேரத்தை வீணாக்குவதை விட, தன் நீண்ட நாள் கனவான நடன பள்ளியை தொடங்கி நடத்த முடிவு செய்துள்ளார். கேரள மாநிலம் கண்ணனூரைச் சேர்ந்த பூர்ணா, அந்த இடத்திலேயே நடன பள்ளியை தொடங்குகிறார். ""நடன பள்ளி ஆசிரியை என்பதுதான் என் கனவாக இருந்தது. என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட என் பெற்றோர் பல்வேறு நடனங்களை கற்க ஊக்குவித்தனர். அந்த சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஆடியது பலரையும் ஈர்த்தது. அதுதான் எனக்கு நடிப்பு வாய்ப்பைப் பெற்று தந்தது. இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேடைகளில் ஆடி வந்தேன். இப்போது என் கனவான நடனப் பள்ளியை தொடங்க உள்ளேன். தற்போது தெலுங்கில் "அவுனு' படத்தின் 2-ஆம் பாகத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் நடன பள்ளியைத் தொடங்குகிறேன்'' என்று அறிவித்திருக்கிறார் பூர்ணா.

""நான் இன்றைக்கு உயிரோடு இருப்பதற்கு காரணம் என் தாத்தா கிருஷ்ணன் நாயர்தான்'' என சொல்லும் போதெல்லாம் எம்.எஸ்.வி.யை சோகம் கவ்விக் கொள்ளும். திருச்சியில் சிறை வார்டனாக இருந்த அவரின் தந்தை, எம்.எஸ்.வியின் நான்காவது வயதில் இறந்து போனார். குடும்பமே சோகத்தில் மூழ்கி கிடக்க, சில நாள்களிலேயே எம்.எஸ்.வியின் தங்கை வேசம்மாவும் இறந்து போய் விட்டார். ""அப்பனையும் தின்னுட்டான்... தங்கச்சியையும் தின்னுட்டான்...'' என அக்கம் பக்கத்துக்காரர்கள் விஸ்வநாதனை திட்டித் தீர்ப்பது அவரது தாயைப் பெரிதும் காயப்படுத்தியது. ""புருஷன் செத்துப் போயிட்டாரு.... புள்ளையையும் இப்படி திட்டுறாங்களே...'' என மனம் ஓடிந்து போன தாய், புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்த ஒரு குளத்தில் விஸ்வநாதனை தள்ளி விட்டு தானும் இறந்து விட முடிவு செய்திருக்கிறார். அந்த நேரத்தில் மகளைக் காணோமே எனத் தேடிக் கொண்டு வந்த தாத்தா கிருஷ்ணன் நாயர், தற்கொலை செய்து கொள்ள இருந்த மகளையும், பேரனையும் காப்பாற்றி அழைத்து சென்றாராம். அம்மா, தாத்தா பற்றி பேசும் போதெல்லாம் இந்த சம்பவத்தைச் சொல்லி வானம் பார்த்து கைக் கூப்பி நிற்பார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஒளிப்பதிவாளர் என்ற முகத்தை கடந்து இலக்கியம், இசை உள்ளிட்ட பல தளங்களில் இயங்கி வருபவர் செழியன். அப்பா, அம்மா இருவரும் இசை, பாடல் என இயங்கி வாழ்ந்ததால் சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் அவருக்கு. இருந்தும், போட்டோகிராஃபி மீது இருந்த ஆர்வத்தால் பாதை மாறி பயணித்தார். இந்நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் மேற்கத்திய இசைக்கான பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார். ""சினிமா ஆர்வத்தில் அலைந்து திரிந்த போது, இசையமைப்பாளர் இளையராஜாவின் பேட்டியைப் படிக்க நேர்ந்தது. சினிமா நோக்கி வரும் இளம் தலைமுறையினர் குறித்த கேள்விக்கு... ""சினிமாவுக்கு வருகிறவர்கள் எனக்கு அது தெரியும். இது தெரியும் என சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் மிகவும் தேவையான இசையை யாரும் தெரிந்து கொள்வதில்லை. அது எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்தால் நல்லது'' என சொல்லியிருந்தார். அந்த பதில் என்னை இசையை நோக்கி இழுத்தது. ஆனால், கற்றுக் கொள்ள இடம் இல்லை. வசதிகள் இல்லை. அந்த நிலை இப்போதும் உள்ளது. அதற்காகவே இந்த இசைப்பள்ளி. என் மனைவி பிரேமா செழியன் இந்தப் பள்ளியை நிர்வகிப்பார்'' என்கிறார் செழியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT