"கான காந்தர்வன்' கே.ஜே.யேசுதாஸின் கலைப்பயணத்துக்கு இது 50-வது ஆண்டு. 1964-ஆம் ஆண்டில் எடுத்து வைத்த அடி, நீலவானம் போல் இன்றும் தொடர்ந்து செல்கிறது. 50 ஆண்டுகள் கடந்த இந்த இசைப் பயணத்தில் ரசிகர்களின் ஆதரவிலும், வணிக வெற்றியிலும் இப்போதும் அவருக்கு முதல் இடம். ஆயிரக்கணக்கான பாடல்கள் ஒவ்வொன்றிலும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் முற்றிலுமாக தன்னாலேயே உருவாக்கப்பட்ட அவரது பாணிக்கு ஒவ்வொரு தமிழ் ரசிகனும் அடிமை. நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி இருந்தும் யேசுதாஸþக்கு மட்டுமே சங்கீதம் பயிலும் அனுமதியை தந்திருக்கிறார் அவரது தந்தை ஜோசப். தன் தந்தையின் ""இந்த சுதந்திரம்தான் என் இசைப் பயணத்தின் முதல் உத்வேகம்'' என்பது யேசுதாஸ் பெருமையாக சொல்லும் வார்த்தைகள். ""எதிலும் செயற்கைத்தனங்கள் இருந்தால் ரசிக்க முடியாது. இசையில் அப்படி இருக்கவே கூடாது. ஒரு பூ தானாக மலருவது போல் மலர வேண்டியது பாடல். அது இப்படித்தான் வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்காதீர்கள்'' என்பது இளம் தலைமுறையினருக்கு யேசுதாஸின் அறிவுரை. உங்களுக்கு பிடித்த பாடகர் யார்? என்ற சமீபத்தில் கேள்வி ஒன்றுக்கு.... யேசுதாஸின் பதில்: ""நடிகர் சந்திரபாபு.''
திருட்டு வி.சி.டி.க்களின் வருகை, கட்டணங்கள் உயர்வு என திரையரங்குகளில் கூட்டம் குறைய பல காரணங்கள் சொல்லப்பட, சினிமாவை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மாற்றங்கள் தேவை என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருக்கின்றன. "விஸ்வரூபம்' படத்தை திரையரங்குகளில் வெளியிடும் அதே நாளில் டி.டி.ஹெச் மூலமாக வீடுகளுக்கும் கொண்டு செல்வதாக அறிவித்தார் கமல். அடுத்தடுத்த தடைகளால் அது அப்படியே முடங்கி போக, திரையரங்குகளிலேயே படம் வெளியானது. இதைத் தொடர்ந்து "வீடு தோறும் சினிமா' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் சேரன் டி.வி.டி., சி.டி, கேபிளில் ஒளிபரப்பு என அனைத்து விதங்களிலும் சினிமாவை வீடுகளுக்குக் கொண்டு செல்லும் முனைப்பில் உள்ளார். தற்போது ஒரே டிக்கெட்டில் இரண்டு சினிமாக்கள் என்ற புதிய முறையை அறிவித்து இருக்கிறார் லாரன்ஸ். இடைவேளை வரை ஒரு படம், இடைவேளைக்குப் பின் மற்றொரு படம் என்பது அவரது திட்டம். இதற்காக தனது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் இரண்டு படங்களுக்கு பூஜையும் போட்டு விட்டார். ஒரு படத்தின் பெயர் "கிழவன்.' "கருப்பு துரை' மற்றொரு படத்தின் பெயர். "கிழவன்' படத்தின் நாயகி ஆண்ட்ரியா. "கருப்பு துரை' படத்துக்கு லட்சுமிராய்.
பீகாக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் "ஆலமரம்.' ஹேமந்த் குமார், அவந்திகா மோகன், தவசி, சர்வேஸ் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய துரைசிங் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். தலைப்பு கொடுக்கிற வித்தியாசம் மற்றும் கதைக் களம் குறித்து இயக்குநர்... ""ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. அத்தனை கதைகள் உண்டு. தன்னைக் கடந்து போகிற ஒவ்வொரு நாளைக்கும் அது குறிப்பு வைத்திருக்கும். திருவல்லிக்கேணி மகாகவி பாரதியின் இல்லத்துக்கு சென்றால், அங்குள்ள ஒரு மரத்தை எல்லோரும் தொட்டு வணங்குவார்கள். காரணம், பாரதியை, பாரதியின் வாழ்க்கையை பார்த்து வளர்ந்த மரம். அந்த மரத்தைத் தொட்டால் பாரதியை தொட்டு திரும்புகிற நம்பிக்கை எல்லாருக்கும். அப்படி ஒரு ஆலமரத்தின் கதைதான் இந்தப் படம். தரையைத் தொடுகிற அதன் விழுதுகளின் எண்ணிக்கைப் போலவும், மண்ணுக்குள் புதைந்து கிடக்கிற அதன் வேர்களைப் போலவும் அத்தனை கதைகளை பேசும் படமாக இது இருக்கும். தேனி பக்கத்துக்கு கிராமம் ஒன்றில் நூறாண்டுகள் பழமையான ஆலமரத்தைப் பின்னணியாக கொண்டு கதைக்கரு உருவாக்கப்பட்டுள்ளது'' என்கிறார் இயக்குநர்.
"7-ஆம் அறிவு' படத்துக்குப் பின் தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டினார் ஸ்ருதிஹாசன். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக இருந்ததே அதற்கு காரணம் என கூறியிருந்தார். தமிழ் ரசிகர்களை எளிதில் அடைய கமர்ஷியல் படங்கள்தான் சரி என முடிவெடுத்தவர், ஹரி இயக்கத்தில் "பூஜை' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஸ்ருதியின் தமிழ் சினிமா வருகையை அறிந்த பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் ஸ்ருதியை நடிக்க வைக்க அணுகினர். ஆனால் எதையும் அவர் ஏற்கவில்லை. இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து தனது இணைய தள பக்கத்தில் மகிழ்ச்சியும் தெரிவித்து இருந்தார் ஸ்ருதி. ஆனால் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில் ""மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பெரிய படங்கள் இப்போது இல்லை. எல்லாம் காரண காரியத்துக்காக நடக்கிறது. நீங்கள் அதை கண்டறியுங்கள்'' என யாருக்கும் புரியாத ஸ்டேட்டஸ் கொடுத்திருக்கிறார். ஹிந்தியில் ஜான் ஆப்ரஹாம், அனில் கபூர் படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் பெரிய படத்திலிருந்து விலகி இருப்பதாகக் குறிப்பிட்டு இருப்பது விஜய் படம்தான் என தெரிகிறது.
விஷன் ஐ மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி எழுதி இயக்கும் படம் "அரண்மனை.' விநய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், சந்தானம், கோவை சரளா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. காதல், நகைச்சுவை, ஆக்ஷன் என்று மட்டுமே இதுவரை பயணித்து வந்த சுந்தர்.சி. முதன் முறையாக த்ரில்லர் பாணியில் கதை சொல்ல வருகிறார். மாற்றம் குறித்து சுந்தர்.சி கூறுகையில்... ""பெண்கள் மற்றும் குழந்தைகளின் வருகை அதிகமாக இருக்கும் போதுதான், அந்தப் படம் வெற்றிப் பட பட்டியலில் இணைகிறது. சமீபத்திய பல படங்கள் அதற்கு உதாரணம். தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீதத்தினர் தற்போது ஹாலிவுட் "ஹாரர்' பாணி படக் கதைகளை விரும்புவதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்காக ஒரு படம் செய்தால் எப்படியிருக்கும் என்ற யோசனைதான் இந்த கதையின் உருவாக்கம். எல்லாரும் விரும்புகிற கதையில் பயணிப்பது சவால். அதை ஏற்றுக் கொண்டு இதை உருவாக்கி உள்ளேன். கடந்த ஜனவரி மாதமே இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டேன். இருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இத்தனை மாத உழைப்பு தேவைப்பட்டது. அபரிமிதமான கிராபிக்ஸ் இல்லாமல் கதைக்கு தேவைப்பட்டதைச் செய்துள்ளேன்'' என்றார் சுந்தர்.சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.