சசிகபூரும் நானும் - சபனா ஆஸ்மி
சிறுவயதில் எனக்குக் கிடைத்த பாக்கெட் மணியில் சசிகபூர் படங்களாக வாங்கிச் சேகரிப்பதில் பைத்தியமாகவே
சிறுவயதில் எனக்குக் கிடைத்த பாக்கெட் மணியில் சசிகபூர் படங்களாக வாங்கிச் சேகரிப்பதில் பைத்தியமாகவே இருந்தேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் பிருத்வி தியேட்டருக்கு வரும்போதெல்லாம் கையெழுத்து வாங்குவதுண்டு. அந்த அளவுக்கு அவரது தீவிர ரசிகையாக இருந்த நான், நடிக்கத் துவங்கியபோது "ஃபக்கீரா' படத்தில் ஜோடியாக நடிப்பேன் என்று சிறுவயதில் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
முதல் நாள் படப்பிடிப்பின்போது பாடல் காட்சியில் நடன இயக்குநர் சத்தியநாராயண் அமைத்திருந்த சில நடன மூவ்மெண்ட்கள் எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றியது. என்ன செய்வதென்று தெரியாமல் மேக் அப் ரூமுக்குச் சென்று ஹேர்டிரஸ்ஸரிடம் சொல்லி அழுதேன். சசிகபூரிடம் நேரடியாகச் சொல்லுமளவுக்குப் பழக்கமும் இல்லை.
சில நிமிடங்கள் கழித்து மேக்-அப் ரூம் கதவை சசிகபூர் தட்டும் சத்தம் கேட்டது. என்ன பிரச்னை என்று கேட்டார். கண்ணீருடன் விவரித்தேன். ""இதுதானா பிரச்னை? சரி சரி வா. படப்பிடிப்புக்குத் தயாராகி விட்டார்கள்'' என்று கூறி அழைத்தார். செட்டிற்குள் சென்ற பிறகுதான் தெரிந்தது. நான் சுலபமாக நடனமாடும் வகையில் நடன ஆசிரியரிடம் சொல்லி மூவ்மெண்ட்களை அமைத்துக் கொடுத்திருந்தார்.
எப்போதுமே அவர் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார் அல்லது வேடிக்கையாக பேசிச் சிரிக்க வைப்பார். பிரச்னை என்று வந்துவிட்டால் பாறையைபோல் கடினமாக மாறிவிடுவார்.
86-ஆம் ஆண்டுகளில் கொலாபாவில் இருந்த குடிசைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் எம்எல்ஏ ஹாஸ்டல் கட்டுவதென அரசு தீர்மானித்தது. ஆனால் அங்கிருந்த குடிசைவாசிகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரவில்லை. அவர்களுக்காக நாங்கள் ஓர் அமைப்பாக பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினோம். பலன் ஏதும் இல்லை. ஆனந்த் பட்வர்தன், நான் மற்றும் குடிசைவாசிகள் மூன்று பேர் உண்ணாவிரதம் இருப்பதென முடிவு செய்தோம்.
இதுபோன்ற சமூகத் தொண்டுகளுக்காக திரையுலகினர் யாரும் உண்ணாவிரதம் இருந்ததில்லை. அதனால் நடிகர்கள் யாராவது எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வருவார்களா என்பது சந்தேகமாக இருந்தது. ஐந்தாவது நாள் என்னுடைய ரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது. என்னுடைய அம்மா கவலைப்படத் தொடங்கினார்.
திடீரென சசிகபூர் நாங்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்தார். எங்கள் கோரிக்கை என்னவென்று கேட்டறிந்தார். உடனே அங்கிருந்து நேரே முதல்வர் சங்கர்ராய் சவான் வீட்டிற்குச் சென்றார். ""அரசுக்கு எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் இந்தி திரையுலகம் ஆதரவு அளித்து வருகிறது. இது ஒரு பொது பிரச்னை. இதைத் தீர்க்க வேண்டுமென்பதற்காக எங்களில் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரது கோரிக்கையை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள்?'' என்று கேட்டாராம். உடனே முதல்வர், வீட்டுவசதி துறை அமைச்சரை அழைத்து குடிசைவாசிகளுக்கு மாற்று வசதி செய்து தரும்படி கூறியதோடு, என்னுடைய உண்ணாவிரதத்தையும் முடித்து வைக்கும்படியும் உத்தரவிட்டார்.
அமைச்சரும் வந்து பழரசம் கொடுத்து எங்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். சசிகபூருக்கு நன்றி தெரிவிக்க மேடையில் தேடியபோது எதுவுமே நடக்காததுபோல் அவர் மீடியாவைகூடச் சந்திக்காமல் இறங்கிச் செல்வதைப் பார்த்தேன். அதைப் பற்றி அவர் பின்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னிடம் பேசியதும் இல்லை.
அவர் திரையுலகில் பிரபலமாக இருந்தபோது, மற்ற நடிகர்களைப்போல் ரியல் எஸ்டேட் தொழிலிலோ, லாபம் வரக்கூடிய முதலீடுகளிலோ தான் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்ததில்லை. மாறாக 36, சவுரங்கிலேன், ஜூனுன், கல்யுக், விஜிதா போன்ற படங்களைத் தயாரித்தார். 36, சவுரங்கிலேனை இயக்கிய அபர்ணாசென் கூட இவரைத் திறமையான தயாரிப்பாளராகக் கருதினார். அதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
ஜூனுன் படத்தைத் தயாரித்தபோது வெளிப்புறப் படப்பிடிப்பின்போது அதில் அறிமுகப்படுத்திய நாடகக் கலைஞர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் வேறுபாடு காட்டாமல் அனைவரையும் ஒரே ஹோட்டலில் தங்க வைத்தார்.
மாஸ்கோ திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்தபோது எங்களிடம் அந்நியச் செலாவணி எட்டு டாலர் மட்டுமே இருந்தது. அந்த நெருக்கடியான நேரத்தில் எப்.சி.மெஹ்ரா, ராஜ்கபூர், சசிகபூர் ஆகியோர்தான் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது சசிகபூருக்கு வழங்கப்படுகிறது என்ற தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முதன்முதலாக ஹாலிவுட் படங்களில் நடித்த முதல் இந்திய நடிகரான இவர் தயாரிப்பாளராக ஆர்ட் பிலிம்களைத் தயாரித்துள்ளார். பிருத்வி தியேட்டரைத் தொடர்ந்து நடத்தி நாடகக் கலைஞர்களை ஊக்குவித்து வந்தார். தன்னுடைய வருமானம் அனைத்தையும் கலைக்காகவே செலவழித்தார். அப்படிப்பட்ட மனிதருக்கு இந்த விருது கிடைத்தது பொருத்தமானதாகும்.