தினமணி கதிர்

போராட்டத்தின் இடையே காதல்!

ஒரு வனவாச காலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எளிதான விஷயம்  அல்ல.

பிஸ்மி பரிணாமன்

ஒரு வனவாச காலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எளிதான விஷயம்  அல்ல.

மணிப்புரியைச் சேர்ந்த ஐரோம் சானு ஷர்மிளா,இந்திய ராணுவத்தின்  அத்துமீறல்கள்,  மனித உரிமை மறுப்புகள் மற்றும்   அனாவசிய கொலைகளுக்குத் தண்டனை தரப்படாததை எதிர்த்து குரல் கொடுத்து, 5 நவம்பர் 2000 அன்று   உண்ணாவிரதம்  தொடங்கி, 14ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். 14  ஆண்டுகளாக இவர் போலீசின் தீவிர கண்காணிப்பில் கட்டுப்பாட்டில், கட்டாய உணவு  ஊட்டலில் வாழ்ந்து வருகிறார்.

உலகில் இப்படி ஒரு நீண்ட  கால  உண்ணாவிரதம்  அனுஷ்டிப்பவர் ஷர்மிளா  மட்டுமே!

மணிப்புரி அரசு ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்ததை தற்கொலை முயற்சி என்றுபெயர் சூட்டி கைது செய்து சிறையில்அடைத்தது.

""உணவும்வேண்டாம்... சொட்டுத் தண்ணீரும் வேண்டாம்'' என்று அறவே ஒதுக்கிய ஷர்மிளா, உண்ணாவிரதத்தால் வாடி வதங்கி தளர்ந்த போதெல்லாம் கட்டாயப்படுத்தி பலவந்தமாக குழாய் ஒன்றை மூக்கினுள் செலுத்தி அதன் மூலம் திரவ உணவை ஊட்டி ஷர்மிளாவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்கள். இப்படி அடிக்கடி திரவ உணவு 

செலுத்த  வேண்டி  வந்ததால் குழாயை நிரந்தரமாகவே மூக்கினுள் வைத்துவிட.. அந்தக் குழாயும் ஷர்மிளாவின் ஓர் அங்கமாகிவிட்டது.

இந்த 14 ஆண்டுகளில் பெற்றோரை, ஷர்மிளா ஒரு முறை கூட பார்க்கவில்லை...  பேசவில்லை. ""இந்திய ராணுவத்திற்கு மணிப்புரியில் தரப்பட்டிருக்கும் வானாளாவிய அதிகாரத்தைக் குறைத்தால்தான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன். அதன் பிறகுதான் என் அம்மாவின் கையால் சோறு வாங்கிச் சாப்பிடுவேன். எனது குறிக்கோள் நிறைவேறும் வரையில் அம்மாவைப் பார்க்கமாட்டேன். அவருடன்பேசமாட்டேன்'' இப்படி சபதம் எடுத்திருக்கும் ஷர்மிளாவுக்கு 42 வயது. திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவர் ஒரு கவிஞரும் கூட. இவரை விடுதலை செய்வதும் அடுத்தகணம் கைது செய்வதும், அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகள்.

தற்சமயம் மணிப்புரி மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஒரு சிகிச்சை அறையில் சிறைக் கைதியாகப் போலீஸ் பாதுகாப்புடன் வாழ்ந்து வரும் ஷர்மிளா மனதில் காதல் தாமதமாகப் பூக்கும் குறிஞ்சிப்பூவாக மலர்ந்திருக்கிறது.

ஷர்மிளாவின் அறை சுவரில் நிறவெறியை எதிர்த்து இளமைக் காலம் முழுவதையும் சிறையில் அடகு வைத்த தென்ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன்மண்டேலாவின் படம் ஒட்டப்பட்டுள்ளது. லேப்டாப் அறையின் ஒரு மூலையில். ஆனால் இன்டெர்நெட் வசதி கிடையாதாம். ஷர்மிளா அமர்ந்திருக்கும் கட்டிலின் மேல் பொம்மை ஒன்று வைக்கப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டியின் மேல் புறத்தில் "ஐ லவ்யூ' என்று எழுதப்பட்டு ஆண் ஒருவரது ஃபோட்டோ ஒட்டப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் மீது காதல் வயப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியாக வந்த இங்கிலாந்து நாட்டவரான டெஸ்மாண்ட்டின் படம். உலகம் சுற்றியான டெஸ்மாண்ட் பங்களூருவில் செய்தித்தாள் ஒன்றில் ஷர்மிளாவின் படத்தைப் பார்த்ததும் ஷர்மிளாவின்பால் ஈர்க்கப்பட்டார். 2010இல் டெஸ்மாண்ட் ஷர்மிளாவைச் சந்தித்தார். இந்த நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

அந்தக் காதல் ஷர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும் டெஸ்மாண்டுக்கும் இடையில் கசப்பினை விதைத்து விருட்சமாக்கியிருக்கிறது. தகராறுகளும் அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றன. விஷயம் போலீஸ் வரை போக, டெஸ்மாண்ட் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட, ""அபராதம் செலுத்தினால் நான் குற்றம் செய்ததாகிவிடும். நான் குற்றம் எதுவும் செய்யவில்லை. அதனால் அபராதம் கட்டமாட்டேன்'' என்று டெஸ்மாண்ட் மறுத்திருக்கிறார்.   கொஞ்சம் தாமதம் ஆனாலும் ஷர்மிளாவுக்கு சரியான, பொருத்தமான, ஒரே கொள்கைப் பிடிப்புள்ள ஜோடிதான் கிடைத்திருக்கிறது.

""என்னைப் புரிந்து கொண்டிருக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் எனக்கும் காதல் வரும் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.  என்னை விரும்பும் டெஸ்மாண்டை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். டெஸ்மாண்ட் என்னை  சந்திக்க  என்  ஆதரவாளர்கள்  மறுக்கிறார்கள். என்னை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்க வேண்டுமென்பதில்லை.  என்னைக் கடவுளாகப் பூஜிக்கவும் வேண்டாம். நான் சாதாரண மனுஷியாக... சாதாரண மனுஷிக்கு ஏற்படும் உணர்வுகளுடன் வாழ விரும்புகிறேன்.

 காதல்  வேறு... கொள்கை  வேறு...  இரண்டையும் எனது ஆதரவாளர்கள்  குழப்பிக் கொள்கிறார்கள்.  இந்த  சிறை  வாழ்வு  வெறுத்துவிட்டது. என்னைப்  போல்  வேறு  மணிப்புரியினர்  உண்ணாவிரதம்  இருக்க  முன்  வருவதில்லை. நான்  உண்ணாவிரதத்தை  நிறுத்தினால்  இந்த  இயக்கம்  முடிவுக்கு  வந்துவிடும்.  அந்த  பயம் 

எனக்கும்,  எனது  ஆதரவாளர்களுக்கும்  இருக்கிறது.  உண்ணாவிரதம் சரியென்று உள்ளுணர்வு சொல்கிறது. அதைச் செயல்படுத்துகிறேன்'' என்று சொல்லும் ஷர்மிளா தற்போது   காதலுக்கும்   கொள்கைக்கும்  நடுவே  சிக்கியிருக்கிறார். 

இவரது  உடல்நிலை  சீர்கெட்டுவிட்டதை  உணர்ந்திருந்தாலும்,  ஷர்மிளாவின்  ஆதரவாளர்கள்  தொடர்ந்து  ஷர்மிளா உண்ணாவிரதம்  இருப்பதையே   விரும்புகிறார்கள்.

இது  தான்  நிதர்சன  உண்மை. இதை    ஷர்மிளா நன்றாகவே  உணர்ந்திருக்கிறார். என்றாலும்  அவரால்  ஒரு  முடிவினை  எடுக்க  முடியாத  சோதனைக்  காலகட்டத்தில்    தன்னை அறியாமலே  ஒப்படைத்து  விட்டார். அதிலிருந்து மீளுவது சிரமம்  என்று ஷர்மிளாவுக்கு தெரியாமல் இல்லை.

அநேக விருதுகளைப் பெற்றவர். தன்னைப் பற்றி திரைப்படம் எடுக்கப்படுவதை விரும்பாத ஷர்மிளா   தேர்தலில் போட்டியிடச் செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் அணுகினர்.

""நான் அரசியல்வாதி அல்ல. அநீதியை எதிர்க்கும் எதிர்ப்பாளி..'' என்று சொல்லி மறுத்து விட்டார்.

""காந்தி பிறந்த மாநிலத்திலிருந்து மோடி வந்திருக்கிறார் .. நிச்சயம் எனது வேண்டுகோளைப் பரிசீலனை செய்வார்'' என்று   ஷர்மிளா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

காதல் வந்திருப்பதனால், ஷர்மிளா தனது  உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவிட்டு, இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்குவார் என்பது சமீபத்திய எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT