மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "பெங்களூரு டேய்ஸ்'. அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான இப்படம் மலையாள சினிமா ரசிகர்களைத் தாண்டி தென் இந்தியாவின் பல மொழி ரசிகர்களையும் கவர்ந்த படம். அன்பு, நேசம், உறவு என மனித வாழ்வின் ஆத்மார்த்த பக்கங்கள்தான் இதன் கரு. தற்போது இப்படம் தமிழில் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் "அர்ஜுன், திவ்யா மற்றும் கார்த்திக்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. மலையாளத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபகத் ஃபாசில், நஸ்ரியா நடித்த கதாபாத்திரங்களில் முறையே ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கிறார்கள். பார்வதி நடித்த ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் தமிழிலும் அவரே நடிக்கிறார். கதையின் திருப்புமுனைக் கதாபாத்திரமாக அமைந்த இஷா தல்வாரின் கதாபாத்திரத்தை தமிழில் ஏற்க இருப்பது ராய் லட்சுமி. மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக அமைந்த நித்யா மேனன் வேடத்துக்கு அவரே நடிப்பார் எனச் சொல்லப்பட்டது. தற்போது அதில் தான் மாற்றம் நடந்துள்ளது. அந்த கதாபாத்திரத்துக்கு ஆர்யா நயன்தாராவை சிபாரிசு செய்துள்ளதையடுத்து படத்தில் நயன்தாரா நடிப்பதாகப் பேசப்பட்டது. இப்போது அந்த கதாபாத்திரத்துக்கு சமந்தா இறுதி செய்யப்பட்டுள்ளார். இதே போல் விஜய்யின் 59-ஆவது படமாக அட்லி இயக்கும் படத்திலும் நயன்தாராவுக்கு பதில் சமந்தா இடம் பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் குணச்சித்திரம் உள்ளிட்ட ஏனைய கதாபாத்திரங்கள் யாவற்றிலும் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி. இன்ஜினியரிங் படித்தவர். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் "அதாகப்பட்டது மகாஜனங்களே'. தந்தை ராமையாவின் சிபாரிசு இல்லாமல் தானாகவே முன் வந்து வாய்ப்பு பிடித்துள்ளார் உமாபதி. ""நான் நடிக்க வருவதில் என் தந்தைக்கு இஷ்டமில்லை. சம்மதம் கேட்ட போது என்னை முன் நிறுத்தி வாய்ப்புத் தேடாதே. நானும் சிபாரிசு செய்யமாட்டேன்'' என சொல்லி விட்டார். அதனால் அவரின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. நடிகர்களின் தேர்வு நடக்கும் பட அலுவலகங்களுக்குச் சென்று தேர்வுகளில் பங்கேற்றேன். அப்போதுதான் இந்த வாய்ப்புக் கிடைத்தது. நடிப்பு, வசனம் என பல தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றேன். இந்தப் படத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் நான் இவரின் மகன் என என் தந்தையின் பெயரை பயன்படுத்தினேன். நடிப்பில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார் உமாபதி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் மூலம் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வந்தார் ஸ்ரீதேவி. தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் பல அவரைத் தேடி வந்தன. அப்போதெல்லாம் மறுத்த ஸ்ரீதேவி தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "புலி' படத்துக்காக 21 வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வந்துள்ளார். புலி பட விழாவில் பங்கேற்ற ஸ்ரீதேவி... "" எனக்கு சென்னைதான் எல்லாம். மும்பையில் இருந்தாலும் என் இதயம் எப்போதும் இங்கேதான் இருக்கிறது. தமிழுக்கு வந்தது மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தது போல் உள்ளது'' என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
லிங்கா படத்துக்குப் பின் வெளியான விமர்சனங்களையடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இனி நடிப்பது என முடிவுக்கு வந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து தேடி வந்த பல கதைகளிலிருந்து அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்ஜித்தின் கதையை தேர்வு செய்தார் ரஜினி. வயதுக்கு ஏற்ற வேடம் என்பதுதான் இதில் ரஜினி ஏற்க உள்ள சவால் என்பதால், அவரின் கெட்-அப் மாற்றத்துக்கான வேலைகள் இதுவரை நடந்து வந்தன. வயதான "தாதா' வேடம் என்பது அவரின் கதாபாத்திரம் குறித்து உலவி வரும் செய்தி. இதற்காக தற்போது இருக்கும் உருவத்தில் அடர்ந்த தாடியை வளர்த்து வந்தார். தற்போது கதைக்குத் தேவையான உருவம் கிடைத்து விட்டதால், படப்பிடிப்புக்காக இன்று மலேசியா புறப்பட்டு செல்கிறார் ரஜினி. நாளை முதல் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. மலேசிய நகரத்தில் நடக்கும் முதற்கட்ட படப்பிடிப்பில் 13 நாள்கள் பங்கேற்கும் ரஜினி, பின்னர் சென்னையில் நடக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ரஜினியுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் ராதிகா ஆப்தே. படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
வரும் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிம்புவின் "வாலு' இதோ வருகிறது. வாலுவின் தாமதத்துக்கு காரணங்கள் நிறைய உண்டு. இப்போது எல்லா சிக்கல்களும் தீர்க்கப்பட்ட நிலையில், இந்த மாதத்தில் வாலுவின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த மேஜிக் ரேஸ் உட்பட அனைவருக்குமான சிக்கல்கள் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன என்று சொல்லப்படுகிறது. இதைத் தீர்க்கப் பெரும்தொகை தேவைப்பட்டபோது, டி.ராஜேந்தர் பெருமளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதும் நிதி நெருக்கடியில் படம் சிக்கி இருந்ததால், சிம்புவுக்கு உதவிக்கரம் கொடுத்துள்ளார் விஜய். இதை சமீபத்தில் நடந்த புலி பட ஆடியோ வெளியீட்டு மேடையில் வெளிப்படையாக போட்டு உடைத்தார் விஜய். இதையடுத்து செய்தித்தாள்களில் அதி விரைவில் என்று போட்டு வாலு படத்தின் விளம்பரங்கள் வெளிவந்துள்ளன. நீதிமன்றமும் வாலு படத்துக்கு இருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளதால், வரும் 14-ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ், "நாகா' மற்றும் "மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற இரண்டு படங்களையும் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்காக இயக்கவிருக்கிறார். அதில் "நாகா' படத்தை இரண்டு பாகங்களாக தயாரிக்கவிருக்கிறாராம். "நாகா', "நாகா 2' இரண்டுமே பேய் படமாக உருவாகவுள்ளது. நாகா படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. "36 வயதினிலே' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்த ஜோதிகா "நாகா' படத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. "மொட்ட சிவா கெட்ட சிவா' படமும் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ளது. இதில் காஞ்சனா படத்தில் நடித்த நடிகர்கள் பெரும் அளவில் பங்கு பெறுகிறார்கள். ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சு நடக்கிறது. மற்றொரு ஜோடியாக ராய் லெட்சுமி நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.