முகப்பு
தினமணி கதிர்

கரப்பான் பூச்சி

மாலதிக்குச் சிறு வயது முதலே கரப்பான்பூச்சி என்றால் கொள்ளை பயம். அந்தப் பூச்சி தன் கால்களைப் பரப்பிக் கொண்டு எப்பொழுதும் தன்னை விழுங்கக் காத்திருப்பதுபோல்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:44 AM
பகிர்:

மாலதிக்குச் சிறு வயது முதலே கரப்பான்பூச்சி என்றால் கொள்ளை பயம். அந்தப் பூச்சி தன் கால்களைப் பரப்பிக் கொண்டு எப்பொழுதும் தன்னை விழுங்கக் காத்திருப்பதுபோல் அவளுக்கு நினைப்பு. அதுவும் அது அவளை நோக்கி வரும்போது அவள் மிகவும் பயப்படுவாள். தன் முன்னே வந்து நின்று மிகப் பெரியதாய் விசுவரூபம் எடுத்துத் தன்னை அந்தப் பூச்சி உணவாக்கிக் கொள்ளும் என்பது அவளின் மாற்ற முடியாத எண்ணம். இந்த மாதிரி அவள் உள்ளத்தில் தோன்றுவதற்கு அவளின் பாட்டியும் ஒரு காரணமோ என்னவோ தெரியவில்லை. மாலதியின் பாட்டிதான் அவளுக்குச் சிறு வயதில் பல கதைகள் கூறுவாள். அவளும் அந்தக் கதைகளைக் கேட்டுத்தான் தூங்குவது வழக்கம். இப்போதெல்லாம் கதை சொல்ல  பாட்டி தாத்தாக்கள் வீடுகளிலேயே இல்லை. அவர்கள் கதை சொன்னாலும் கேட்கக் கூடிய அளவிற்கு இக்காலக் குழந்தைகளும் இல்லை என்பது வேறு விஷயம். என் பையன் டிவி பார்த்துகிட்டு அப்படியே தூங்கிவிடுவான் என்பது இன்றைய தாய்மார்களின் தேசியகீதம்.

 அதுவும் பாட்டி அவளைக் கூப்பிடுவதே மிக ஆசையாக இருக்கும்.

 ""என் மாலுவுக்கு இன்னிக்கு என்னா கதை வேணும்?'' என்பாள் பாட்டி. எல்லாப் பெயர்களையும் இன்னும் சுருக்கி அழைப்பதே நமக்கு வழக்கமாகப் போய்விட்டது. திருச்சிராப்பள்ளியை திருச்சி என்றும், திருநெல்வேலியை நெல்லை என்றும், கோயம்புத்தூரை கோவை என்றும் அழைப்பவர்தாமே நாம்.  அதுபோல மாலதியும் மாலு ஆகிவிட்டாள். நாமும் மாலு என்றே இனி அழைப்போம். அதுதானே மரபு.

 மாலுவும் வழக்கமாக, ""பாட்டி, இன்னிக்கும் ராட்சஸன் கதை சொல்லு'' என்று கேட்பாள். அந்தக் கதையில் ஒரு ராட்சஸன் வருவான். அவன் ஓர் அரசகுமாரியைக் கவர்ந்து கொண்டு போவான். அவளைக் கொண்டு போய் எங்காவது மறைத்து வைத்து விடுவான். ஓர் அரச குமாரன் வந்து ராட்சஸனிடம் சண்டை போட்டு அவளை மீட்டு வருவான். க்ளைமாக்ஸ் என்னவென்றால், அந்த ராட்சஸனின் உயிர் ஏழுகடல்கள், ஏழு மலைகள் தாண்டி இருக்கும் ஓர் ஆலமரத்தின் பொந்தில் உள்ள ஒரு கரப்பான் பூச்சியில் இருக்கும். இதைக் கேட்டு கேட்டு மாலுவின் மனத்தில் கரப்பான் பூச்சி என்றாலே  ஒரு ராட்சஸன் என்னும் நினைப்பு மனத்தில் வேரூன்றி விட்டது. அவளுக்கு வயதாக வயதாக அது மறையாமல் கிளை பரப்பி மிகப்பெரிய மரமாகி விட்டது.

 வீட்டிலும் வெளியிலும்  கரப்பான் பூச்சி என்றாலே மனத்தில் மட்டுமன்றி, உடலிலும் நடுக்கம் வரக்கூடிய அளவிற்கு மாலு மாறி விட்டாள். இது எல்லார்க்கும் தெரிய வர மாலுவைப் பயமுறுத்த அவர்கள் கரப்பான் பூச்சியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மாலுவும் தன் உள்ளில் இருக்கும் கரப்பான் பூச்சி அச்சத்தைப் போக்க எவ்வளவு முயற்சி செய்தாலும் கடைசியில் கரப்பன் பூச்சியே வெற்றி பெற்றது.

மாலு இப்பொழுது பெரிய பெண்ணாகி விட்டாள். அவளைக் கல்லூரியிலும் சேர்த்தாகிவிட்டது. படிப்பில் நன்கு சுட்டியாக இருந்தாலும் இந்தக் கரப்பான் பூச்சி பயம் மட்டும் போகவே இல்லை. ஒருநாள் கல்லூரியில் இடைவேளையில் ஒரு சம்பவம் நடந்தது. அது மாலுவைக் கல்லூரி முழுதும் அடையாளம் காட்டி விட்டது. அன்று  கல்லூரியில் அவளுடன் பயிலும் தோழிகளுடன் அவள் கழிவறை செல்ல நேர்ந்தது. உள்ளே சென்ற மாலு ""ஐயோ, ஐயோ'' என்று அலறும் சத்தம் கேட்டது. வெளியில் இருந்தவர்கள் பதறிக் கொண்டு உள்ளே ஓடினார்கள். அங்கே கழிவறையின் கதவைச் சாத்திக் கொண்டு மாலு வெளியே நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் வெளிறிப் போயிருந்தது. உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

""என்னடி என்னடி என்னா நடந்தது? ஏன் கத்தின?'' என்று எல்லாரும் ஒரே குரலில் கேட்டனர். அவளால் பேசவே முடியவில்லை. ஏதோ சொல்ல நினைத்தாள். குரல் வரவே இல்லை. சைகையால் சாத்தியிருந்த அறைக்கதவைச் சுட்டிக் காட்டினாள். இரண்டு மாணவிகள் அறைக் கதவை லேசாகத் திறந்தனர். சற்று பயத்துடனே எட்டிப் பார்த்தனர். உள்ளே யாருமே இல்லை. மீண்டும் அவர்கள், ""என்னாடி உள்ள யாரையுமே காணோம்.  ஏன் கத்தின?''

என்று கேட்க,  மாலு மெதுவாக எட்டிப் பார்த்து, அந்த அறையின் மூலையைக் காண்பித்து உடனே மயங்கிக் கீழே விழ, பக்கத்திலிருந்த மாணவிகள் அவளைத் தாங்கிக் கொண்டனர். அவள் காட்டிய அந்த மூலையில் தன் மீசைகளை அசைத்துக் கொண்டு ஒரு பெரிய கரப்பான் பூச்சி நின்று கொண்டிருந்தது. எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். ""என்ன இதற்கா இவள் இத்தனை பயந்தாள்?'' என்று எண்ணியதோடு மாலுவிற்கே கரப்பான் பூச்சி என்ற பெயரும் நிலைத்து விட்டது. அந்தப் பெயரையும் சுருக்கி "கபூச்சி' என்று வேறு அழைக்கத் தொடங்கி விட்டனர்.

 அந்தச் சம்பவம் நடந்து ஒரு சில நாள்களே ஆகி இருக்கும். அன்று மாலுவின் அம்மா காலையில் எழுந்திருக்கவும் நேரமாகிவிட்டது. மாலுவிற்குச் சிற்றுண்டி தயாரித்துக் கொடுத்து கையில் மதிய உணவுக்கும் ஏதேனும் செய்து கொடுக்கவும் நேரம் சரியாக இருந்தது. மாலுவும் பொறுமையில்லாமல், ""என்னம்மா நேரமாச்சும்மா. கேட்டைச் சாத்திடுவாங்கம்மா'' என்று நான்கைந்து தடவை புலம்பி விட்டாள். ஒருவழியாய் மாலுவைக் கிளப்பிவிட்ட திருப்தியில் அவள் அம்மா "அப்பாடி' என்று நிம்மதியாய் உட்கார்ந்தாள்.

""அம்மா, போய்ட்டு வரேன்'' என்று சொல்லிக்கொண்டே மாலு புறப்பட்டு வாசல் நடைக்குத்தான் சென்றிருப்பாள் அதற்குள் "அம்மா' என்று அவள் அலறும் குரல் மிகச் சத்தமாகக் கேட்டது. என்னடி என்று கேட்டுக் கொண்டே மாலுவின் அம்மா ஓடினாள். அங்கே மாலு ஏதோ பேயறைந்ததுபோல் நின்று கொண்டிருக்க  அவளது செருப்பின் மேல் ஒரு கரப்பான் பூச்சி மேய்ந்து கொண்டிருந்தது. அதற்குள் மாலுவின் பாட்டியும், ""என்னாடி ஏன் அவள் இந்தக் கத்துக் கத்தறா'' என்று வந்துவிட்டார். மாலுவின் அம்மாவோ சிரித்துக் கொண்டே, ""இதோ பாருங்கம்மா'' என்று அந்தப் பூச்சியைக் காட்டினாள்.

பாட்டியோ, ""என்னா பழைய கதையாடி கல்யாணம் செய்யற வயசாச்சு.  இன்னும் இந்தப் பூச்சிக்குப் பயந்தா எப்படிடி மாலு?'' என்று கேட்டுக்கொண்டே செருப்பைத் தட்டிவிட அது வீட்டுக்குள் ஓடியது. உடனே மாலு, ""அம்மா, அது வீட்டுக்குள் ஓடுது என்று கத்த, அதை நான் பாத்துக்கறேன்  நீ கௌம்புடி'' என்று அவள் அம்மா சொன்னாள். அதற்கப்புறம் ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. அவள் கண்ணில் அந்த ராட்சஸன் படாமல் பார்த்துக் கொண்டதுதான் முக்கியமான காரணம்.

 அன்று மாலுவின் வீடு ஒரே பரபரப்பாய் இருந்தது. மாலுவைப் பெண் பார்க்க வரப்போகிறார்கள். காலை முதலே மாலுவைவிட அவள் அம்மாவிற்குதான் அச்சம் அதிகமாக இருந்தது. இரண்டு நாள்களாகவே வீட்டைத் தினமும் ஒரு குப்பையும் சேராமல் டெட்டால் போட்டுத் துடைத்திருந்தாள். கை கழுவும் பேசின், குளியலறை, தண்ணீர் ஓடும் சாக்கடை எல்லாம் மிகச் சுத்தமாகவும், தெளிவாகவும் இருந்தன. காரணம் எல்லார்க்கும் தெரிந்ததுதான். எங்காவது ஒரு பூச்சி வந்து மாலு ஏதாவது களேபரம் செய்துவிடப் போகிறாளே என்ற பயம்தான். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. வந்தவர்கள் முகத்தைப் பார்த்தாலே மாலுவை அவர்களுக்குப் பிடித்துவிட்டது தெரிந்தது. இருந்தாலும் வழக்கமான முறைப்படி, ""நாங்கள் வீட்டுக்குப்போய் சொல்லி அனுப்புகிறோம்'' என்று கூறிப்போனார்கள்.

தரகர் போன மாதம் வந்து சொன்னவுடனேயே மாப்பிள்ளை வீட்டைப் பற்றிய எல்லா விவரமும் விசாரித்துவிட்டார்கள். தரகர் ஏமாற்றுபவர் இல்லை. நன்கு தெரிந்தவர்தான். அவர் அன்று அழகாகச் சொன்னார்.

""பேரு அரிச்சந்திரங்க''.

 உடனே மாலுவின் அம்மா கேட்டார்: ""அப்படியெல்லாம் கூடவா பேரு வைப்பாங்க?''

""இல்லீங்க  அவரு பேரு சந்திரன்.  அவரு அப்பா பேரு அரிராமன். அதானால பேரு முன்னால அப்பாவுடைய ரெண்டு எழுத்த போட்டு வச்சிருக்காரு.  அதனால எல்லாரும் அரிச்சந்திரன்னு கூப்பிட்டு அதுவே நெலச்சுடுச்சாம்''

""சரி, எங்க வேலை பாக்கறாரு?''

""கொஞ்சம் இருங்கம்மா.  நான் பூரா வெவரமும் சொல்லிடறேன்'' என்று தரகர் கூறத் தொடங்கினார். ""சென்னையில அரசாங்க வேலதான்.  பொதுப்பணித்துறையாமே அதுலதான்.  எனக்கு சரியா சொல்லத் தெரியல  ஆனா இவரு கையெழுத்துப் போட்டாதான் அதைப்பார்த்து மேலதிகாரி உத்தரவு போடுவாராம். இவருக்கும் கூடிய சீக்கிரம் அதிகாரி வேல வந்துடுமாம்.  ஆனா பேருக்கேத்த அரிச்சந்திரனாம். வேல வெஷயத்துல  சொந்த ஊரு கும்பகோணம் பக்கத்துல ஏதோ ஒரு கிராமம்  அப்பா அம்மா அங்கதான் இருக்காங்க  அங்க ஒரு சின்ன ஊடும் கொஞ்ச நெலமும் இருக்குதாம்.

அப்புறம் என்ன? எல்லாருக்கும் எல்லாமும் பிடித்துப்போகக் கும்பகோணத்தில் சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது. வழக்கம்போல மாலுவும் அவள் கணவன் அரியும்  நாமும் வழக்கம்போல் பெயரைச் சுருக்க வேண்டும் அல்லவா? தங்கள் முதலிரவில் தங்களுக்குள் எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பதெல்லாம் பேசி முடித்தனர். மாலு அரியிடம் தன்னைச் சிறு வயது முதலே துரத்திக்கொண்டு வரும் ராட்சஸனைப் பற்றிக் கூறினாள்.

""சின்ன வயசில் சரி, இப்போதுமா?'' என்று வியப்பு கலந்த குரலில் கேட்டான். அவள் முகமே மாறிவிட்டது. ""ஆமாங்க'' என்று வருத்தத்துடன் சொன்னாள்.

""சரி, போகப் போகப் பாத்துக்கலாம், எல்லாம் சரியாப் போயிடும்'' என்று பதில் சொன்னான் அவன்.

சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஓர் அடுக்ககத்தில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு மாலுவும் அரியும் தனிக்குடித்தனம் போனார்கள். புது வீடு என்பதால் எந்தப் பூச்சியும் வர வாய்ப்பில்லை. உண்மையில்  ஓட்டு வீடுகள் மறைந்தபோது காணாமல் போனவை எலிகளும் தேள்களும்தான். இப்போதைய நகரத்துப் பிள்ளைகள் தேளைப் பார்த்திருக்க மாட்டர்கள். திருமணமாகி ஓராண்டு கழிந்தவுடன் அனைவருக்கும் கேட்கும் ஒரு கேள்வி ஏதாவது விசேஷம் உண்டா? என்பதுதானே. அவர்களுக்கும் விசேஷம் வந்துவிட்டது. மாலுவிற்கு ஓர் ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வரதராஜன் என்று பெயர் வைத்து வரது என்று வழக்கம்போல் சுருக்கி அழைக்க ஆரம்பித்தனர். இப்போது காலம் ஓட நமது கதையும் ஓடுகிறது.

அன்று வரதுவின் நான்காம் ஆண்டு பிறந்த நாள். இது ஆங்கிலத் தேதிப்படி. இப்போதெல்லாம் நட்சத்திரப்படி ஒன்று, தமிழ்த் தேதிப்படி ஒன்று, ஆங்கிலத் தேதிப்படி ஒன்று என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதுசரி, கூந்தல் உள்ளவர்கள் முடிந்து கொள்கிறார்கள். நமக்கென்ன அதைப்பற்றி?

காலையிலேயே கோவிலுக்குப்போக வேண்டும் என்று அரியிடம் சொல்லி வைத்திருந்தாள். ஆனால் இன்னும் அவன் வரவில்லை. அவள் காத்திருந்தாள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கமான நேரத்தைவிட ஒருமணிநேரம் கழித்து வந்தான் அவன். அடுத்த தெருவில் இருந்த கோயிலுக்குப் போய்விட்டு வந்தனர். ஆனால் கோயிலில் அவன் சரியான சகஜமாய் இல்லாததாய் மாலு உணர்ந்தாள். வரதுவிடம் கூட வழக்கமாய் விளையாடுபவன் ஒன்றுமே செய்ய வில்லை.

இரவு படுக்கையில் கேட்டேவிட்டாள்.

""என்னாங்க ஏன் வந்ததிலேந்து ஒரு மாதிரியாயிருக்கீங்க?''

அவனோ ""ஒண்ணுமில்ல மாலு'' என்றான்.

""இல்லீங்க எதுவாயிருந்தாலும் சொல்லுங்க'' என்று வற்புறுத்தினாள்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த அவன் சொன்னான்.

""ஆபீஸ்ல ஒரு பிரச்சனை''

""என்னாங்க?''

""ஒரு காண்ட்ராக்டரு  வேலையே இன்னும் முடிக்கல.  ஆனா பூரா பணமும் வேணுங்கறாரு. அதிகாரியும் போட்டு அனுப்பு அரிங்கறாரு. அவரு காண்ட்ராக்டருகிட்ட பணம் வாங்கிட்டாருன்னு நல்லாவே தெரியுது. நான் போட்டாதான் அவரு கையெழுத்து போட முடியும்.  முடியாதுன்னு சொல்ல எனக்கு தைரியமும் இல்ல. ஏன்னா இந்த அதிகாரி எழுதறத வச்சிதான்   எனக்கு இன்னும் ஆறு மாசத்துல பதவி உயர்வு வரும்''.

""பதவி உயர்வே வாணாங்க.  முடியாதுன்னு சொல்லிடுங்க'' என்றாள் மாலு.

""அந்த ஆளு ஏதாவது தொல்லை குடுத்தா என்ன செய்யறது? அவரு மூஞ்சிக்கு நேரே முடியாதுன்னு சொல்ற தைரியம் எனக்கு இல்லியே''

""அப்ப போட்டுடுங்க'' என்று சிரித்துக் கொண்டே மாலு கூற, ""என்னா மாலு என் மனச்சாட்சி எடம் குடுக்கலியே'' என்று அவன் சொன்னான்.

""சரி ஏதாவது செய்யுங்க.  எனக்கு தூக்கம் வருது'' என்றாள் அவள். குழம்பிக் கொண்டிருந்த அவன் ஒருமணி நேரம் கழித்துத்தான் உறங்க ஆரம்பித்தான்.

இரண்டு மூன்று நாள்கள் சென்றிருக்கும். அரி அலுவலகத்திலிருந்து வந்தவுடன் சாதாரணமாக இருந்தான்.

""நான் அதிகாரியிடம் கையெழுத்துப் போட மாட்டேன்னு சொல்லிட்டேன்''

""நடக்கிறது நடக்கட்டும். நீங்க செஞ்சதுதான் சரி. ஏங்க இன்னிக்கு வீட்ல என்ன நடந்தது தெரியுமா?''

""சொல்லும்மா''

அதற்குள் வரது பேசினான்.

""அம்மா இரு நான் சொல்றேன்.''

""சொல்லுடா கண்ணா'' என்றான் அரி.

""நான் படுத்திட்டிருந்தேனா? ரெண்டு கரப்பான் பூச்சி என்கிட்டே வந்துச்சா... நான் பயந்து போய்க் கத்துனேனா? அம்மா வந்து கரப்பான் பூச்சியைத் தைரியமா அடிச்சுத் தூக்கியெறிஞ்சுட்டாங்க''  என்று கூறிச் சிரித்தான் அவன்.

உடனே, ""பரவாயில்லயே  உனக்கும் தைரியம் வந்துருச்சு'' என்று சிரித்துக் கொண்டே கூறினான் அரி என்கிற அரிச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.