முகப்பு
தினமணி கதிர்

கிராமியக் கலையில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு

Updated On : 15 பிப்ரவரி, 2015 at 3:32 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:14 AM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்கள் தேசிய அளவிலான கிராமிய நடனப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள்.

இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கு.குமாரசாமி, இசை ஆசிரியை பெ.முத்துராணி ஆகியோரிடம் கேட்டோம் :

""வேறு பள்ளிகளில் 5ஆம் வகுப்புவரை படித்துவிட்டு இப்பள்ளிக்கு 6ஆம் வகுப்பில் மாணவர்கள் சேருவார்கள். இப்படி 6ஆம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளில் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம்.

Advertisement

இந்தப் பயிற்சியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 9ஆம் வகுப்பு மாணவன், பத்தாம் வகுப்புக்குச் செல்லத் தயாராக வேண்டியதிருப்பதால் நாங்கள் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்போம்.

தேசிய  மக்கள் தொகை கல்வி ஆராய்ச்சி நிறுவனம் இதனை வலியுறுத்துகிறது.

அதன்படி நாங்கள் மாணவர்களைத் தேர்வு செய்தோம்.

சுற்றுச்சுழல் பாதுகாப்பு, முதியோர் பாதுகாப்பு, பாலியியல் பிரச்னை உள்ளிட்ட 5 பிரச்னைகளை மையமாக வைத்து விழிப்புணர்வு கிராமிய கலை

நிகழ்ச்சிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

நாங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் பாடல் தயாரித்து, அதற்கு ஏற்ப நடனப் பயிற்சி அளித்தோம்.

முதலில் பள்ளி அளவில் மாணவர்களைத் தேர்வு செய்து, அந்த மாணவர்களுக்கு தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும்.

இந்தப்போட்டி விருதுநகர் அருகே உள்ள பாலையம்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

அதில் எங்களது பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி சேலத்தில் மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான கிராமியக் கலை போட்டி நடைபெற்றது.

இதில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எங்கள் பள்ளி முதலிடம் பெற்றது.

இதையடுத்து தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள எங்கள் பள்ளி தகுதி பெற்றது. ஆறாம் வகுப்பில் கண்டறியப்பட்டு, சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்திய எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் எஸ்.ஜெயரூபினி, எல்.புவனேஸ்வரி,க.சிவசங்கரி, மு.முத்துப்பாண்டி, கா.கார்த்திக்முருகன், ஈ.பேச்சிமுத்து ஆகியோர் போட்டியில் பங்கு பெற்றனர்.

கிராமியநடனம், கரகாட்டம், பரதநாட்டியம், மயிலாட்டம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், சாட்டைகுச்சி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் ஆகிய பயிற்சிகளை இவர்களுக்கு அளித்தோம்.

தேசிய அளவிலான போட்டி நடத்தும் முன்னர் நாங்களே எழுதி மெட்டமைத்துள்ள தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தில்லியில் உள்ள தேசிய மக்கள் தொகை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பினோம். அவர்கள் அதனைப் பார்த்துவிட்டு நீங்கள் தேசிய போட்டியில் கலந்து கொள்ளலாம் என ஒப்புதல் கொடுத்தார்கள். 

கடந்த டிசம்பர் மாதம் 15, 16ஆகிய தேதிகளில்   புணேயில் போட்டி நடைபெற்றது.

இதில் 11 மாநிலங்களில் உள்ள  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு குழுவிற்கும் எட்டு நிமிடம் நடனத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்திற்குள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பாடல்களுடன்   நடனத்தை நடத்திக் காட்ட வேண்டும்.

எங்கள் குழுவினர் இந்த எட்டு நிமிடத்திற்குள் கரகாட்டம், மயிலாட்டம், காவடி, கோலாட்டம்,கும்மி ஆகியவற்றை ஆடி அசத்தினார்கள். கரகாட்டம் முடிந்ததும் நான் "தன்னானே' எனப் பாடுவேன். அதற்குள் மாணவர்கள் அந்த மயிலாட்டம் ஆடத் தயாராகிவிடுவார்கள்.

மற்ற பள்ளியினர் குறுந்தட்டு மூலம் பாடல்களை ஒலிக்க விட்டு நடனம் ஆடினார்கள். ஆனால் நான் மைக் பிடித்து மேடையிலேயே தமிழில் பாட, எங்கள் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் க.சரவணன் இடுப்பில் கட்டி அடிக்கும் தப்பு அடித்தார். இதனை நடுவர்கள் வெகுவாக ரசித்தனர்.

இந்த கிராமிய நடனப் போட்டியில் தேசிய அளவில் எங்கள் பள்ளி முதலிடம் பெற்றது. பாண்டிச்சேரியில்  உள்ள பள்ளி ஒன்று இரண்டாமிடம் பெற்றது.

எங்களின் மையக்கருத்து, மாணவர்களின் நளினமான நடனம், விறுவிறுப்பான காட்சி அமைப்பு, பாடலில் உள்ள வரிகள் இவையே எங்களது வெற்றிக்கு உதவியது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.