அரங்கேறிய பிரம்மாண்டம்!
சோழர்கால அரசியல் சம காலத்திலும் பொருந்திப் போவது போல இருக்கிறது என்பதுதான் பொன்னியின் செல்வனின் ரகசியம். அதானால்தான் ஆண்டுகள் கடந்தும்
சோழர்கால அரசியல் சம காலத்திலும் பொருந்திப் போவது போல இருக்கிறது என்பதுதான் பொன்னியின் செல்வனின் ரகசியம். அதானால்தான் ஆண்டுகள் கடந்தும் கல்கியின் எழுத்துகள் பேசப்படுகின்றன. அதன் நாடக ஆக்கத்திலும் பல குழுக்கள் முயன்று வருகின்றன.
பொன்னியின் செல்வனை முதல் முதலில் மேடை நாடகமாகவே 1999 ஆம் ஆண்டு கொண்டு வந்தது, மாஜிக் லான்டர்ன் நாடகக் குழு. இப்போது இவர்கள் சென்னை மியூசிக் அகாதெமியில் இம்மாதம் பொன்னியின் செல்வனை நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் மேடை நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர் பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகர் இளங்கோ குமரவேல் ஆகும். சென்னையில் தீவிரமான நாடக ஒத்திகையில் இருந்த குமரவேலிடம் கேட்ட சில கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
பொன்னியின் செல்வன் நாவலை நாடகமாக்கும் முயற்சி முதலில் எப்போது நடந்தது?
Advertisement
1992 ஆம் ஆண்டு முதல் மேஜிக் லாண்டர்ன் நாடகக் குழு சார்பாக ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தி வந்தோம். அப்போது நண்பர் ஒருவர் நீங்கள் ஏன் பொன்னியின் செல்வனை மேடை நாடகமாக நடத்தக் கூடாது? என்று கேட்டார்.
கல்கியின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம் அவருடைய நகைச்சுவையும் எளிமையும் கலந்த எழுத்துதான். கல்கியின் எழுத்தே அலங்கார மொழியாக இல்லாமல் பேச்சு மொழியாகத்தான் இருக்கிறது. அதனால் அவரது எழுத்தை அப்படியே பயன்படுத்தலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கெனவே 1999-இல் ஒய்.எம்.சி.ஏ வில் பொன்னியின் செல்வன் நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறோம். அப்போது திறந்த வெளியில் வானமே கூரையாக இருந்தது. இப்போதோ அரங்கத்தில். மூன்றரை மணி நேரத்துக்குள் நாடகத்தின் முக்கியப் பகுதிகளைக் கொண்டுவர வேண்டும். இப்போது இந்த நாடகம் 3 மணி நேரம் 45 நிமிடங்களாகச் சுருக்கியுள்ளோம்.
பொன்னியின் செல்வனை மேடையில் ஏற்றும் அளவுக்கு இடவசதிகள் உள்ளனவா?
இது ஒரு மிகப் பெரியச் சிக்கல் மற்றும் சவாலான விஷயமும் கூட. பெரும்பாலான நாடக மேடைகள் பொன்னியின் செல்வன் என்ற இந்த பிரம்மாண்டத்தை மேடையில் ஏற்றும் அளவுக்கு இடவசதியில்லாத சூழ்நிலையே உள்ளது. எனினும், இடத்துக்கு ஏற்ப சில மாறுதல்களை ஏற்படுத்தி நாடகத்தை நடத்தினோம். பொன்னியின் செல்வன் நாடகத்தை சிரமமில்லாமல் மேடையில் ஏற்றுவதற்கு போதிய இடவசதி சென்னை மியூசிக் அகாதெமியில் மட்டுமே உள்ளது. எனவே, இங்கு சிறப்பாக நாடக அரங்குகளை அமைக்க முடிகிறது.
உங்கள் நாடகக் குழுவில் புது முகங்கள் இருக்கிறார்களா? ஒரு நாடகத்துக்கு எத்தனை மாதம் ஒத்திகை பார்ப்பீர்கள்?
பொன்னியின் செல்வன் மேடை நாடகத்தில் எங்கள் குழுவைச் சேர்ந்த 70 பேர் நடிக்கின்றனர். இதில் ஒரு சிலர் 1999 ஆம் ஆண்டு முதலே எங்களுடன் நாடகத்தில் நடித்து வருகின்றனர். பலர் தானாகவே முன்வந்து நாங்கள் வைத்த நடிப்பு தேர்வுக்கு வந்தார்கள். அவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சின்ன டெஸ்ட் வைத்து தேர்வு செய்தோம். அதன் பின்பு அவர்களுக்கு குரல் பயிற்சி, உடல் பயிற்சி, கூத்துப் பயிற்சி, உச்சரிப்பு பயிற்சி, நடனப் பயிற்சின்னு எல்லாம் கொடுத்து நடிக்க வைத்தோம். 70 பேர் வரை நடித்த இந்த நாடகத்தில் பாதிக்குப் பாதி புது நடிகர்கள்தான். பொன்னியின் செல்வனை மேடையில் ஏற்றுவதற்கு முன்பு 6 மாத காலம் ஒத்திகை பார்க்கப்பட்டது. எங்கள் நாடகத்தில் நடிப்பவர்கள் பலரும் பல்வேறு துறையைத் தொழிலாகக் கொண்டவர்கள்.
பொன்னியின் செல்வன் என்றாலே பிரம்மாண்டம், அதனை எதிர்பார்த்து வரும் பார்வையாளர்களை எப்படி வசப்படுத்தினீர்கள்?
பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது முன்னேறி இருக்கிற எல்லா தொழில்நுட்பத்தையும் இதில் பயன்படுத்தினோம். அதனால் போர், வாள் சண்டை, அரண்மனைகள், காதல் காட்சிகள், கோட்டை மதிலில் குத்துச் சண்டை எல்லாமே இருக்கின்றன. எல்லாமே நிஜ சண்டை, நிஜ கத்திகள், நிஜ வாள்கள். வாள் சண்டையில் தீப்பொறி பறப்பதை பார்ûவாளர்கள் நேரடியாகவே கண்டு களிக்கலாம். அனைத்தும் மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்டவை.
இளைஞர்களை ஈர்க்குமா பொன்னியின் செல்வன்?
ஏன் ஈர்க்காது? மொத்தத்தில் இந்த நாவல் தியாகம் பற்றித்தான் பேசுகிறது. தியாகம் என்றைக்குமே தேவையான விஷயம்தானே. பொன்னியின் செல்வனை கடந்த ஆண்டுகளில் ரசித்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான்.
வரலாற்று நாடகங்களுக்கு இசையும், கலை இயக்கமும் முக்கியம், இதனை யார் கவனித்திருக்கிறார்கள்?
கலை இயக்குநர் தோட்டா தரணி பின்னணியை வடிவமைத்திருக்கிறார். உடைகள் வடிவமைப்பை நளினி ஸ்ரீராமும், ஒப்பனையை பானுவும் மேற்கொண்டார். இசையை பால் ஜேக்கப் மேற்கொண்டார். மிக முக்கியமாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓதுவார்கள் தேவாரம், திருமுறையை பாடினார்கள். மேலும் பல நாட்டுப்புற கலைஞர்களும் இதில் பங்கு கொண்டார்கள். வெளிநாடுகளில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய பிரவீன் பொன்னியின் செல்வனை இயக்கினார்.
படங்கள்: யு.கே.ரவி