அம்மா வேடம்தான் என்பது கட்டாயமல்ல!
திருமணமாகி கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கையில் செட்டிலான பின்பு மீண்டும் நடிக்க வருவேன் என்று நான் நினைக்கவே இல்லை.
திருமணமாகி கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கையில் செட்டிலான பின்பு மீண்டும் நடிக்க வருவேன் என்று நான் நினைக்கவே இல்லை. என்னுடைய கணவரும், அவரது வீட்டினரும் சுதந்திரமான சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள் என்பதால், நான் மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்தபோது, ""இதைத்தான் செய்ய வேண்டும். இதைச் செய்யக் கூடாது என்று நான் உன்னை வற்புறுத்தியதே இல்லை. நீ என்னுடைய லைஃப் பார்ட்னர் மட்டுமல்ல, நல்ல சிநேகிதியும் கூட'' என்றார்.
என்னைப் பொறுத்த வரை எப்போதும் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க வேண்டுமென்று நினைப்பவள். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்பியபோது குறுகிய காலத்திற்குள் முடியக்கூடிய படங்களாகத் தேர்வுச் செய்வதென்று தீர்மானித்தேன்.
அதற்கேற்ப என்னைத் தேடி வந்த இயக்குநர்களும் ஐந்து முதல் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் போதும் என்று கூறினர். நான் கதாநாயகியாக நடித்து திரையுலகிலிருந்து விலகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். ஒரு முறை நடிகை என பெயரெடுத்துவிட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் நடிகைதான். மீண்டும் நடிக்க வருவதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.
திரும்ப நடிக்க வரும்போது ஒரு நடிகை, கதாநாயகனுக்கோ, கதாநாயகிக்கோ அம்மாவாகத்தான் நடிக்க வேண்டும் என்பது கூடக் கட்டாயமல்ல. அவர்களுக்கு உறவினர்களாக கதைக்கு முக்கிய பாத்திரமாகவும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கலாம். என்னைப் பொறுத்தவரை உடனடியாக அம்மா வேடம்தான் ஏற்க வேண்டுமென்பதில் விருப்பமில்லை. தற்போது கன்னடத்தில் நான் நடிக்கும் "ராணா'வில் முக்கிய பாத்திரமொன்று கிடைத்திருக்கிறது. இது எனக்கு திருப்தியாகவும் இருக்கிறது.
நான் கதாநாயகியாக நடித்த காலத்திலேயே நெகடிவ் ரோல்களிலும் நடித்ததுண்டு. "பெச்சன்' என்ற படத்தில் எந்த நடிகையும் ஏற்க மறுத்த பார் டான்சர் பாத்திரத்தை ஏற்று நடித்தேன். நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படம் இது. இதே போன்று ஒரு படத்தில் ஓரின சைகோ தெரபிஸ்ட் பாத்திரம் ஏற்று நடித்தபோது, இதுபோன்ற பாத்திரங்களில் நீ நடிக்கலாமா என்று பலரும் கேட்டனர். ஒரு பாத்திரத்தை நாமாக தாழ்த்தி பேசக்கூடாது ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை வேறு வகையில் வெளிபடுத்துவதை நாம் தவறு என்று சொல்லிவிட முடியாது.
"ரோஜா' படத்தில் உண்மையில் நான் நடிக்கவே இல்லை. மணிரத்னம் சார் எப்படி சொல்லி கொடுத்தாரோ அதன்படியே செய்தேன். அவரது இயக்கத்தில் எந்தவிதமான கேரக்டராக இருந்தாலும் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டது. அந்த கதாபாத்திரம் போன்று அழுத்தமான பாத்திரத்தை இதுவரை யாருமே எனக்கு கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன்'' என்றார்.