ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உட்புற வறட்சியால் ஏற்படும் உபாதை!
வயோதிகத்தில் உடலிலுள்ள உட்புற நெய்ப்பு குறைவதாலும், வாயு தோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி குளிர்ச்சி ஆகியவற்றால் நரம்பு,
என் வயது 82. நான் Cramp எனும் திடீர் தசை இழுப்பு, கைகால் விரல்கள் 20 முதல் 40 நொடிகள் வரை மடங்கிக்கொள்ளுதல், இடதுகால் முட்டி மற்றும் வலதுதோள் மடக்கி நீட்டும்போது சிறிது வலியுடன் மொடக் என்று சத்தம் ஏற்படுகிறது. இவை குணமாக வழி என்ன?
காஞ்சி சுந்தர், பெங்களூரு.
வயோதிகத்தில் உடலிலுள்ள உட்புற நெய்ப்பு குறைவதாலும், வாயு தோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி குளிர்ச்சி ஆகியவற்றால் நரம்பு, தசை, தோல், எலும்புகள், உட்புறச் சவ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் உட்புற வறட்சியால் தங்களுக்கு இதுபோன்ற உபாதைகள் ஏற்படுவது இயற்கையே. மறுபடியும் இழந்துபோன நெய்ப்பை சம்பாதித்துக் கொள்வதாலும் வாயுவினுடைய வறட்சி மற்றும் குளிர்ச்சியின் தாக்கத்தை குறைப்பதாலும் இதுபோன்ற உபாதைகளுக்கு நிவாரணம் காணலாம். இவற்றைப் பெறுவதற்கான ஒரு சில ஆயுர்வேத சிகிச்சைமுறைகள் கீழ்காணும் வகையில் தங்களுக்கு செய்யப்பட்டால் குணம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
Advertisement
ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய பலாஅஸ்வகந்தாதி, மஹாமாஷதைலம், வாதமர்த்தனம் குழம்பு, வாதாசினீ தைலம், ப்ரபஞ்சன விமர்த்தனம் குழம்பு, தான்வந்தரம் குழம்பு, பரிணதகேர்யாதி, ப்ரஸாரின்யாதி, மஞ்சிஷ்டாதி தைலம் போன்றவற்றில் உங்களுடைய உடல் தன்மைக்கேற்ப கலந்து ஒரு இரும்பு கடாயில் சூடாக்கி பஞ்சினால் பிழிந்தெடுத்து உடலிலிருந்து சுமார் 12 அங்குலம் மேலிருந்து உடல் முழுவதும் தாரையாக விடுதலும், இந்த சிகிச்சை செய்யும் தருவாயில் தலையில் க்ஷீரபலா, பலாகுடூச்யாதி, கார்பாஸாஸ்த்யாதி போன்ற தைலங்களில் ஒன்றிரண்டை வெதுவெதுப்பாக பொதிந்துவைத்தலும் நல்ல சிகிச்சைமுறையாகும்.
தைலதாரை சிகிச்சை முடியும் தருவாயில் பஞ்சமாம்ஸம் எனப்படும் ஒரு கிழிவைத்தியம் செய்வது அக்காலத்திய வழக்கம். உடும்பு, கோழி, ஆடு, பன்றி, முயல் ஆகியவற்றின் மாமிசத்தை நன்றாக வேகவைத்து சிற்றாமுட்டி வேர் கஷாயம் மற்றும் பாலுடன் கலந்து மூட்டை கட்டி வெதுவெதுப்பாக உடலெங்கும் ஒத்தடம் கொடுத்தல் அல்லது தேய்த்துவிடுதல் எனும் சிகிச்சைமுறை மேற்குறிப்பிட்ட தைலதாரைக்குப் பிறகு செய்வதால், உடலில் நெய்ப்பானது மறுபடியும் உருவாவதற்கு வாய்ப்பினை அது ஏற்படுத்தித் தரும். வாயுவினுடைய வறட்சி மற்றும் குளிர்ச்சி எனும் தன்மையானது நாடிநரம்புகளிலிருந்து விடுபடும்.
உணவில் வாயுவை அடக்கக் கூடிய, நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடிய இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச்சுவைகளை தங்களுடைய குடல் தன்மைக்கு ஏற்ப மிதமான அளவில் சேர்ப்பதும், வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக் கூடியதும், உட்புற தாதுக்களின் நெய்ப்பைக் குறைத்து வறட்சியை ஏற்படுத்தும் சுவைகளான காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை உணவில் குறைப்பதும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் சிரமத்தை பெருமளவு குறைத்திடச் செய்யும்.
வயோதிகத்தில் உடற்பயிற்சி செய்வதென்பது எல்லாராலும் சாதிக்கக் கூடியதல்ல. அதனால் தொலைக்காட்சியில் காட்டப்படும் உடற்பயிற்சி, மருத்துவருடைய ஆலோசனைகளையும் கேட்டு அவை ஏற்படுத்தும் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டு அதிக நடைபயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை உங்களால் தவிர்க்கப்படவேண்டியவை. நிறைய ஓய்வு, அது பகலாகட்டும் அல்லது இரவாகட்டும் வயோதிகத்தில் மிகவும் அவசியம். மனதை குடும்பப் பந்தத்துடன் இணைத்து அதன்மூலம் ஏற்படும் மனவருத்தம், பதற்றம் அவற்றை நீக்க முற்பட செய்யும் முயற்சிகள் போன்றவை தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகளுடன் மனஉபாதைகளையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் மனதை ஒருநிலைப் படுத்தும் தியானப்பயிற்சி, மனதினுடைய சாந்தம், மனதிற்கு இன்பம் தரும் நண்பர்களுடைய சேர்க்கை ஆகியவை தங்களுக்கு நீண்ட இன்பத்தைத் தரும் விஷயங்களாகும். நல்லோர் சேர்க்கை, இன்சொல், காருண்யம், பிறர் மனமறிந்து அவர்களுக்கு சுகம் ஏற்படும் வகையில் நடப்பது போன்றவை மறைமுகமான உடல் நெய்ப்பிற்கும், வாயுவினுடைய வறட்சியைப் போக்குவதற்கும் ஏற்புடைய செயல்களாகும்.
ஆயுர்வேத மருந்துகளாகிய ச்யவனப்ராஸம், அஸ்வகந்தாதி லேஹ்யம், விதார்யாதி க்ருதம், அப்ரக பஸ்மம், தான்வந்தரம் குளிகை, தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம், அமுக்கரா சூரணம், இந்துகாந்தம் பால் கஷாயம், சுகுமார ரஸாயனம், ஸ்வர்ண பஸ்மம், வெள்ளி பற்பம், அயஸ்ஸிந்தூரம் போன்ற உட்புற மருந்துகள் வயோதிகத்தில் சாப்பிடத் தகுந்தவை. மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் இவற்றில் எது தங்களுக்கு பொருத்தமானவையோ அவை பற்றிய விபரம் நன்கறிந்து குடலிலுள்ள பசித்தீயின் தன்மைக்கேற்ப கால அளவை நிர்ணயம் செய்து சாப்பிட்டால் எலும்புகளின் வலுவான தன்மை, நரம்புகளின் வலு, பூட்டுகளில் தேவைப்படும் நெய்ப்பு ஆகியவற்றை உங்களால் மறுபடியும் பெறமுடியும்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771