தினமணி கதிர்

திரைக் கதிர்

திரை கல்வி குறித்து பல்வேறுவிதமான பயிற்சி வகுப்புகள் அரங்கேறி வரும் நிலையில், ஆன் லைன் மூலம் பாடம் நடத்த வருகிறார் இயக்குநர் பாண்டியராஜன்.

ஜி. அசோக்

திரை கல்வி குறித்து பல்வேறுவிதமான பயிற்சி வகுப்புகள் அரங்கேறி வரும் நிலையில், ஆன் லைன் மூலம் பாடம் நடத்த வருகிறார் இயக்குநர் பாண்டியராஜன். கற்பனை, படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள் ஒரு சினிமாவுக்கான முக்கிய காரணிகளாக இருந்தாலும் அதைக் காட்சிப்படுத்துவது எப்படி, இயக்குவது எப்படி என்கிற தொழில் சார்ந்த அடிப்படை அறிவு தேவை என்பதால், சினிமா கல்வி குறித்த பயிற்சிகளை அளிக்க கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன. அதற்கான பிரத்யேக வகுப்புகளை சினிமா ஆர்வமுள்ளவர்களுக்கு நடத்த முன் வந்துள்ளார் பாண்டியராஜன். வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ள இந்த சினிமா பயிற்சிப் பட்டறையின் மூலம் கதை உருவாக்கம் தொடங்கி படத்தை வெளியிடுவது வரை உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைன் மூலம் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். இப்பயிற்சிப் பட்டறையில் சேர ஆர்வம் மட்டுமே தகுதியாகக் கருதப்படுகிறது. திரையுலகில் நீண்ட நெடிய தன் அனுபவங்களைக் கொண்ட பாண்டியராஜன் அதை பாடமாகவும் நடத்த உள்ளார்.

"புலி' படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். "புலி' படப்பிடிப்பு முடிந்த சில நாள்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்புகளில் பங்கேற்பதில் தீவிரம் காட்டி வந்தார் விஜய். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் விஜய்யின் 59-ஆவது படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்துவரும் வேளையில் இப்படத்துக்கான தலைப்பை உறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. விஜய்க்கு போலீஸ் வேடம் என்பதால் படத்துக்கு "காக்கி', "வீரன்' உள்ளிட்ட பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. "வீரன்' என்ற பெயரை விஜய் தரப்பு ஏற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இதில் தயாரிப்பாளர் தாணு தரப்புக்கு சம்மதம் இல்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து "காக்கி' என்ற பெயர் இப்படத்துக்கு வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளி வந்தன. ஆனால் தற்போது அப்பெயரையும் படக்குழு ஒதுக்கி வைத்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து புது விதமான தலைப்பை யோசிக்க விஜய் தரப்பு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் "தாறுமாறு' என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார்.

கமல்ஹாசனின் "உத்தம வில்லன்' சர்வதேச அளவிலான பெருமை மிகு விருதுகளைக் குவித்துள்ளது. கமல்ஹாசனின் திரைக்கதை இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான படம் "உத்தம வில்லன்.' பூஜாகுமார், பார்வதி, நாசர், ஊர்வசி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் நடிகர் ஒருவரின் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. ஜிப்ரான் இசையமைப்பில் இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது. முக்கிய கதாபாத்திரம் ஏற்று இயக்குநர் கே.பாலசந்தர் நடித்திருந்தார். சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று வந்த இப்படம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்டது. அதன் பின் போட்டி பிரிவுகளில் பங்கேற்ற இப்படம், ஐந்து விருதுகளைக் குவித்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் விருதுகளை தட்டி சென்றது "உத்தம வில்லன்.' இதைத் தவிர ரஷ்யத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இப்படம் சிறந்த இசைக்கான விருதினையும் வென்றுள்ளது.

பாலியல் விவகாரம், நரபலி கொடுமை, அதிர்ச்சி உண்டாக்கும் வழக்குகள் என செய்திகளில் நாளுக்கு நாள் அடிபடும் பிரச்னைகளை முன் வைத்து சமீபகாலமாக படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் இடம் பிடிக்க வருகிறது "ருக்குமணி வண்டி'. சமீபமாக தமிழக மக்களிடையே பேரதிர்ச்சிகளை உண்டாக்கிய 5 விதமான பிரச்னைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. பத்து டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை பாலாஜி சண்முகம் எழுதி இயக்குகிறார். முஹம்மது ரிஷி வசனத்தில் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கோலப்பன், கிறிஸ்டோபர், செல்வகுமார், பூங்குன்றன், பானுகண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சினிமா பாடல்கள் போல்தான் பிரச்னைகளும். இன்றைக்கு ஹிட்டாகிற பாடலை அடுத்த வாரம் வருகிற இன்னொரு பாடல் வெளியேற்றி விடுகிறது. அது போல்தான் செய்திகளில் இடம் பிடிக்கும் பிரச்னைகளும். ஒரு முக்கிய பிரச்னை செய்தியாகி மக்களிடம் விவாதங்களை எழுப்பும் போது, அதை இன்னொரு செய்தியில் வேறொரு பிரச்னை வெளியேற்றி விடுகிறது. அப்படி வரும் செய்திகளால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் இதன் திரைக்கதை. சித்தர்காடு, மாப்படுகை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. "வட சென்னை' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் சென்னை மாநகரைப் பின்னணியாக கொண்டு உருவாகவுள்ளது. தனுஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா தேர்வாகியுள்ளார். தற்போது உருவாகி வரும் "தங்கமகன்' படத்துக்குப் பின் தனுஷுடன் இணைகிறார் சமந்தா. வட சென்னை கதை என்பதால் இக்கதையின் ஹீரோயினுக்கு மேக்கப் கிடையாது என்பது முதல் விதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதைக் காரணம் காட்டி பல ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்க அஞ்சினர். இதையடுத்து சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமந்தா இதில் குடிசைவாசியாக நடிக்கிறார். மேக்கப், ஃபேசியல் இன்றி தொடர் படப்பிடிப்பின் போது வெயிலால் உண்டாகும் முகக்கருமையைக் கூட நீக்காமல் அப்படியே நடிக்க இருக்கிறார் சமந்தா. கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து இதில் சொந்தக் குரலிலும் பேச இருக்கிறார் சமந்தா. இதற்காக சென்னைத் தமிழில் பேசுவதற்கான பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT