"ரோஜா வனம்', "நான் அவன் இல்லை' உள்ளிட்ட படங்களை இயக்கிய செல்வா தனது அடுத்த படத்தை இலங்கை யாழ்ப்பாண நகரின் பின்னணியில் படமாக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கையில் படப்பிடிப்பு நடக்கவுள்ள இப்படம் இயக்குநர் செல்வாவின் 26-ஆவது படமாக உருவாகிறது. யாழ்ப்பாணத் தமிழர்களின் வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்ட இப்படம், 1985-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு வரையிலான ஈழச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இலங்கை யாழ்ப்பாண நகரிலிருந்து அகதிகளாக இடம் பெயரும் தமிழர்களுக்கு நேரும் சம்பவங்களே கதைக் களம். யாழ்ப்பாணம், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மூன்று நிலப் பின்னணியை கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஹீரோக்கள் முதன்மை கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். ஜீவன் நடித்த "அதிபர்' படத்தை தயாரித்த டி.சிவகுமார் இப்படத்தின் திரைக்கதை பொறுப்பை ஏற்று பென் கன்ஸ்டோரரிடியம் படம் நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரிக்கிறார்.
பேய்ப் படங்களுக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகரித்து வருவதால் படப்பிடிப்புத் தளங்களைத் தேடிச் செல்லாமல் குறிப்பிட்ட வீடு, பங்களா என ஒரு சில இடங்களிலேயே படப்பிடிப்பை முடித்து விடுகின்றனர். இந்த பாணியில் இப்போது சேர்ந்திருக்கும் படம் "கிரிங் கிரிங்.' ஓர் இரவில் நடந்து முடியும் க்ரைம் த்ரில்லர் பாணி கதை என்பதால் ஒரு சில இடங்களிலேயே படப்பிடிப்பை முடித்து விட்டனர். சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பை நடத்தியதால் 8 நாள்களில் முழுப் படத்தையும் முடித்து விட்டனர். இரவு நேரத்தில் தன் நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திரும்பும் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்தக் கொலைக்கு யார் காரணம் என்று தெரியாமல் குழம்பி போகிறார் ஹீரோ. ஒரு கட்டத்தில் தன்னை கொலையாளியாக நினைத்துக் கொள்ளும் அவர், கொலைக்கான தடயங்களை அழிக்க முயற்சிக்கிறார். பின்னர், அந்தக் கொலையாளி தான் இல்லை என்று தெரிய வருகிறது. பிறகு அவர் என்ன செய்தார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதற்கான காரணங்களை அலசுவதுதான் திரைக்கதை. மாஷ்பா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராகுல். ரோஷன், காவ்யா நடிக்கின்றனர்.
ஹாலிவுட்டில் பிரபலமான டார்க் காமெடி பாணி படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வெளிவருவதுண்டு. ஏற்கெனவே இது போல் வெளிவந்த "சூது கவ்வும்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்த பாணியில் உருவாகி வரும் படம் "சிம்பா.' பரத், பிரேம்ஜி, பானு மெஹ்ரா, சுவாதி தீட்சித் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குநராகிறார் அரவிந்த் ஸ்ரீதர். எந்நேரமும் கஞ்சா போதை மயக்கத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வாலிபன், தனக்கென ஒரு கற்பனை உலகத்தை வடிவமைத்துக் கொள்கிறான். இயல்பாக இருக்கும் அவன் போதை பொழுதுகளில் அந்த உலகத்துக்குள் சென்று விடுகிறான். அங்கே இறந்து போன தன் மூதாதையர்களைச் சந்திக்கிறான். அதன் பின் அந்த மூதாதையர்களில் ஒருவர் அந்த வாலிபனின் வீட்டில் இருக்கும் நாய் மீது இறங்கி விடுகிறார். அதன் பின் நடப்பவற்றைக் காமெடியாக சித்திரிப்பதுதான் படம். கற்பனை உலகம், இயல்பான வாழ்க்கை என இரு வேறுபட்ட கதைக் களங்களில் நடிக்கிறார் பரத். மூதாதையர்களில் ஒருவராக பிரேம்ஜி நடிக்கிறார். வெங்கட்பிரபு, த்ரிஷா உள்ளிட்ட சிலர் சிறப்புத் தோற்றங்களை ஏற்று நடிக்கின்றனர். சென்னை, புதுச்சேரி, கொச்சின் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முக்கிய காட்சி ஒன்றுக்காக அமெரிக்கா செல்லவுள்ளது படக்குழு.
ரஜினியின் "கபாலி' பட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் நடைபெற்று வரும் முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழு வீச்சில் படமாகி வருகின்றன. வெண்ணிறத் தாடியில் கோட், சூட் அணிந்து ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தில் ரஜினிக்காக பிரத்யேக "பஞ்ச்' வசனங்கள் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரஞ்சித்... ""வட சென்னை என்றாலே அது ரவுடிகளின் உலகமாக இருந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் கெட்டவர்கள் அல்ல. சமுதாயத்திற்கும், மக்களுக்கும் நல்லது செய்வதற்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அது போன்ற கதாபாத்திரத்தில்தான் ரஜினி நடிக்கிறார். இதற்காக வெள்ளை தாடி வளர்க்க வேண்டும் என்றேன். கேட்டு கொண்டதன் பேரில் தன்னை வடிவமைத்து ரஜினி நடித்து வருகிறார். ரஜினி தனது உடல் எடையை குறைத்துள்ளார். "மெட்ராஸ்' படத்தில் நடித்த பெரும்பாலான நட்சத்திரங்கள் இதிலும் நடிக்கின்றனர். ரஜினியின் கதாபாத்திரத்தை வடிவமைக்க மகேந்திரனின் "முள்ளும் மலரும்' காளி கதாபாத்திரத்தைத்தான் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டேன். ரஜினிக்கென தனியாக பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார் ரஞ்சித்.
தென்னிந்திய அளவில் 30 லட்சம் ரசிகர்களை தன் டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர வைத்து சாதனை புரிந்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த மகிழ்ச்சியை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள செய்தி, ""என்னை 30 லட்சம் பேர் ஃபாலோ செய்வது மகிழ்ச்சியான விஷயம். ஒரு நடிகையாக இல்லாமல் ஒரு சக மனுஷியாக என்னை டுவிட்டர் பக்கத்தில் உணர முடியும். என் குரல்தான் என் அடையாளம். உலக சினிமாவில் மர்லின் மன்றோவின் குரல் அவரது டிரேட் மார்க் அடையாளம். வழக்கமான இந்தியக் குரல் போல் என் குரல் கிடையாது. ஆனாலும் இயக்குநர்களுக்குப் பிடித்திருக்கிறது. அதற்காகப் பெருமைப்படுகிறேன். அதே போல் எந்தவொரு முன்னணி நடிகைக்கும் குரல் அடையாளமாக இருப்பதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் கதைகளைக் கணிப்பதில் தவறு செய்து விடுகிறேன். ஹிந்தியில் "வெல்கம் பேக்' படத்தை பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். தற்போது படங்கள் பற்றிக் கணிப்பதை நிறுத்திக் கொண்டேன். தற்போது "வேதாளம்' படத்துக்காக டப்பிங் பேசி வருகிறேன். சிவகார்த்திகேயனுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காமல் போனதற்குக் காரணம், கால்ஷீட் இல்லாததே. தற்போது 5 படங்களில் நடிக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.